பிரீமியம் ஸ்டோரி

டுத்தடுத்து வந்த பண்டிகைகளுக்கு வழக்கமான பலகாரங்கள் எல்லாம் பண்ணியாச்சு... ஆனாலும், குழந்தைகள் வேறு ஏதாவது புதுசா வேணும் என்று கேட்கிறார்களே!

ஃப்யூஷன் ஸ்பெஷல்
ஃப்யூஷன் ஸ்பெஷல்

ஆமாம்... அதற்குத்தான் வழிகாட்டுகிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையற்கலைஞர் அகிலா விமல். குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளோடு, சிறப்புமிக்க நம் பாரம்பர்ய உணவுகளையும் கலந்து ஒரு ஃப்யூஷன் கொண்டாட்டம் நடத்தியிருக்கிறார். ஜிகர்தண்டாவோடு சீஸ்கேக், ஷாஹி துக்கடாவோடு ஸ்விஸ் ரோல், பீனட் பட்டர் சாக்கோ சிப்போடு குஜியா, ஃப்ரூட் சந்தேஷ் ஆப்பிளோடு டோனட், பட்டர்ஸ்காட்ச்சோடு கேசரி... இப்படி ஒவ்வொன்றும் ‘அடடே’ என அசத்துபவை.

 அகிலா விமல்
அகிலா விமல்

ஐடியாவில் மட்டுமல்ல... அருமையான சுவையிலும்தான்!

ஜிகர்தண்டா சீஸ்கேக்

தேவையானவை:

 • க்ரீம் சீஸ் - 400 கிராம்

 • நன்னாரி சிரப் - கால் கப் + 2 டேபிள்ஸ்பூன் + அலங்கரிக்க

 • பாதியாக சுண்டக்காய்ச்சிய பால் - அரை கப்

 • வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

 • உப்பு - ஒரு சிட்டிகை

 • ஜெலட்டின் - 2 டீஸ்பூன்

 • டைஜஸ்ட்டிவ் பிஸ்கட் - 12

 • உருக்கிய வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

ஜிகர்தண்டா சீஸ்கேக்
ஜிகர்தண்டா சீஸ்கேக்

செய்முறை:

பிஸ்கட்டை மிக்ஸியில் பொடித்து, வெண்ணெய் கலந்து பிசிறி வைக்கவும். 6 இன்ச் ஸ்பிரிங் ஃபார்ம் கேக் பேனில் (pan), பிஸ்கட்டைத் தூவி, சமப்படுத்தி, அழுத்தி 20 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைக்கவும். க்ரீம் சீஸுடன் நன்னாரி சிரப், பால், உப்பு, வெனிலா எசென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும். ஜெலட்டினை 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் இதை சீஸ் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். ஃப்ரீசரில் இருந்து கேக் பேனை வெளியில் எடுத்து சீஸ் கலவையை ஊற்றி, 6 - 8 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்யவும். பரிமாறும் முன்னர், சிறிதளவு நன்னாரி சிரப்பை மேலே ஊற்றவும். கத்தியைக் கொதிக்கும் நீரில் முக்கி எடுத்து கேக்கை வெட்டிப் பரிமாறவும்

நன்னாரி சாறு இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப் படுகிறது. ஆயுர்வேதத்தில் இதன் பெயர் அனந்தமூலா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஷாஹி துக்கடா ஸ்விஸ் ரோல்

தேவையானவை:

 • பிரெட் ஸ்லைஸ் - 12

 • நெய் - கால் கப்

 • கோவா - முக்கால் கப்

 • பால் - கால் கப்

 • ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

 • குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

 • சர்க்கரை - ஒரு கப்

 • தண்ணீர் - முக்கால் கப்

 • ரோஸ் வொயிட் எசென்ஸ் - சில துளிகள்

 • அலுமினியம் ஃபாயில்

ஷாஹி துக்கடா ஸ்விஸ் ரோல்
ஷாஹி துக்கடா ஸ்விஸ் ரோல்

செய்முறை:

சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு பதத்துக்குக் கொதிக்கவிடவும். இதில் ரோஸ் வொயிட் எசன்ஸ் கலக்கவும். சாப்பிங் போர்டில் அலுமினியம் ஃபாயில் விரித்து வைக்கவும்.

பிரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களை நீக்கிவிடவும். நான்-ஸ்டிக் தோசைக்கல்லைக் காயவைத்து, நெய்விட்டு பிரெட் ஸ்லைஸ்களை இருபுறமும் சுட்டெடுக்கவும். இதைச் சர்க்கரைப் பாகில் முக்கி எடுத்து அலுமினியம் ஃபாயிலில் அடுக்கவும். கோவாவுடன் பால், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். இதை பிரெட் துண்டுகள் மீது பரப்பி மெதுவாக பாய் போல் சுருட்டவும். ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருந்து பின் ரோல்களாக நறுக்கிப் பரிமாறவும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

பீனட் பட்டர் சாக்கோ சிப் குஜியா

தேவையானவை:

 • மைதா - 2 கப்

 • பால் - 1/3 கப்

 • கோவா - ஒரு கப்

 • பீனட் பட்டர் - 5 டேபிள்ஸ்பூன்

 • சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

 • சாக்கோ சிப்ஸ் - 6 டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் + பொரிக்கத் தேவையான அளவு

 • உப்பு - ஒரு சிட்டிகை

பீனட் பட்டர் சாக்கோ சிப் குஜியா
பீனட் பட்டர் சாக்கோ சிப் குஜியா

செய்முறை:

மைதாவுடன் உப்பு, 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசிறிவிடவும். சிறிது சிறிதாக பால் தெளித்து மாவைக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். கோவாவுடன் சர்க்கரை, பீனட் பட்டர், சாக்கோ சிப்ஸ் கலந்து வைக்கவும். சிறிய உருண்டைகளாக மாவை எடுத்துத் தேய்க்கவும். உள்ளே ஒரு டேபிள்ஸ்பூன் அளவு கோவா கலவையை வைத்து, ஓரங்களில் தண்ணீர் தடவி மூடிவிடவும். எண்ணையைக் காயவைத்து, பொன்னிறமாகப் பொரித்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

ஆசியாவில்தான் மைதா அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஃப்ரூட் சந்தேஷ் ஆப்பிள் டோனட்

தேவையானவை:

 • ஆப்பிள் - 2

 • துருவிய பனீர் - ஒரு கப்

 • மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் - 4 டீஸ்பூன்

 • சீரக மிட்டாய் - 2 டீஸ்பூன்

ஃப்ரூட் சந்தேஷ் ஆப்பிள் டோனட்
ஃப்ரூட் சந்தேஷ் ஆப்பிள் டோனட்

செய்முறை:

ஆப்பிளைச் சுத்தம் செய்து அரை செ.மீ வட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு சிறிய மூடியைக்கொண்டு நடுவில் வட்டமாகத் துளையிடவும். துருவிய பனீருடன் ஜாம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதை ஆப்பிள் துண்டுகள் மீது தடவி, சீரக மிட்டாய் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாமுக்குப் பதிலாக ஆரஞ்சு, பைனாப்பிள், ஸ்ட்ராபெர்ரி, மேங்கோ ஜாம் பயன்படுத்தி வெரைட்டியான ஃபிளேவர்களில் செய்யலாம்

மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதன்முதலில் பயிரிடப்பட்டது.

பட்டர்ஸ்காட்ச் கேசரி

தேவையானவை:

 • ரவை - ஒரு கப்

 • பிரவுன் சுகர் - ஒன்றரை கப்

 • தண்ணீர் - இரண்டரை கப்

 • வெண்ணெய் - 2 டீஸ்பூன்

 • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • முந்திரி ­- 12 (உடைக்கவும்)

 • உலர்திராட்சை - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

பட்டர்ஸ்காட்ச் கேசரி
பட்டர்ஸ்காட்ச் கேசரி

செய்முறை:

ஒரு நான்-ஸ்டிக் கடாயில், நெய்யைக் காயவைத்து முந்திரி, உலர்திராட்சையை வறுத்து தனியே எடுத்துவைக்கவும். அதே கடாயில் ரவையைச் சேர்த்து, வாசனை வரும் வரையில் வறுக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் பிரவுன் சுகரைப் போட்டு, மிக சன்னமான தீயில் அடுப்பை வைத்து, கைவிடாமல் கிளறவும். நன்றாக இளகி வரும் சமயத்தில், வெண்ணெய் சேர்த்துக் கிளறி, வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். இதை நன்றாக உடைத்துக்கொள்ளவும், அல்லது மிக்ஸியில் பொடிக்கவும். இதுவே பட்டர்ஸ்காட்ச் ஆகும். ரவையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஊற்றி, மிதமான தீயில் கட்டியில்லாமல் வேகவிடவும். வெந்தவுடன், பட்டர்ஸ்காட்சைப் போட்டு மேலும் 2 நிமிடங்கள் கிளறி, முந்திரி, உலர்திராட்சை சேர்த்து இறக்கவும்.

100 கிராம் ரவையில் 12 கிராம் புரதச்சத்து உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு