Published:Updated:

ஆரோக்கிய உணவுகள் - பெண்கள் ஸ்பெஷல்

ஆரோக்கிய உணவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கிய உணவுகள்

ரெசிப்பிஸ்: அம்பிகா சேகர்

`அஞ்சறைப் பெட்டியில் ஒரு பார்மஸியே வைத்திருக்கிறீர்களே’ என்று பலரும் நம்மைப் பார்த்து வியக்கும் அளவுக்கு நாம் உணவில் சேர்க்கும் பாரம்பர்யமான பொருள்கள் சுவையூட்டுவது மட்டும் அல்லாமல், மருத்துவ குணங்களும் கொண்டு, பல்வேறு உடல் உபாதைகளுக்கும் அருமருந்தாக அமைகின்றன. தாய்மை எனும் தவத்தை மேற்கொள்ளும் பெண்களில் பலர் ரத்தச்சோகை, நீர்க்கட்டி, பால் சுராப்பு சார்ந்த பிரச்னை, வாயுத்தொல்லை, பருமன் போன்ற உபாதைகளுக்கு ஆளாகின்றனர். நாம் உண்ணும் உணவிலேயே அவற்றுக்கான தீர்வுகளும் இருக்கின்றன. இவற்றுடன் முடி உதிர்வதைத் தடுப்பது, இருமல், சளியைக் குறைப்பது ஆகியவற்றுக்கும் நாம் காலம் காலமாகப் பின்பற்றி வரும் பல்வேறு உணவு வகைகளை இங்கே அக்கறையுடன் வழங்குகிறார், டயட்டீஷியன் அம்பிகா சேகர். இவர் கூறிய செய்முறைகளின்படி அனைத்தையும் நமக்குச் செய்துகாட்டியிருக்கிறார் சமையற்கலைஞர் ராஜகுமாரி. உடல்நலமும் மனநலமும் சிறக்க வாழ்த்துகள்!

ஆரோக்கிய உணவுகள் - பெண்கள் ஸ்பெஷல்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிம்ளி உருண்டை

தேவையானவை:

 • கேழ்வரகு மாவு - 200 கிராம்

 • வேர்க்கடலை - 50 கிராம்

 • கறுப்பு எள் - 25 கிராம்

 • தேங்காய் - ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்)

 • கருப்பட்டி - 200 கிராம்

 • நெய் - 2 டீஸ்பூன்

 • ஏலக்காய் - 2 (பொடிக்கவும்)

 • உப்பு - ஒரு சிட்டிகை

ஆரோக்கிய உணவுகள் - பெண்கள் ஸ்பெஷல்

செய்முறை:

கேழ்வரகு மாவுடன் சிறிதளவு தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்துகொள்ளவும். சூடான தவாவில் அந்த மாவை அடை போல் தட்டி நெய்விட்டு சுட்டெடுத்துக்கொள்ளவும். கல் உரல் அல்லது மிக்ஸியில் எள், வேர்க்கடலையை முதலில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும். ஆறிய அடையைச் சிறிது சிறிதாகப் பிய்த்து, அதையும் போட்டு பொடித்துக்கொள்ளவும். அத்துடன் பொடித்த கருப்பட்டி, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து உருண்டையாக உருட்டிக்கொள்ளவும். இதை மாலை நேர சிற்றுண்டியாகப் பரிமாறலாம். ஒரு வாரம் வரையிலும் கெடாமல் வைத்திருக்கலாம். இரும்புச்சத்து மிகுந்த இந்த உருண்டை முடி உதிர்தலைக் குறைக்கும்.

ராகி முதலில் இந்தியாவில் தோன்றி, பின்னர் அரேபியா, ஆப்பிரிக்கா வழியாக உலகெங்கும் பரவியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெல்லிப்பழச்சாறு

தேவையானவை:

 • நெல்லிக்காய் - 4

 • கறிவேப்பிலை - ஒரு கொத்து

 • புதினா - ஒரு கொத்து

 • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 • தேன் - 2 டீஸ்பூன்

ஆரோக்கிய உணவுகள் - பெண்கள் ஸ்பெஷல்

செய்முறை

நெல்லிக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியுடன் சேர்த்து சிறிதளவு நீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். தேவையான அளவு நீர்சேர்த்து வடிகட்டிக்கொள்ளவும். அத்துடன் தேன் சேர்த்துப் பரிமாறவும். இந்த நெல்லிப்பழச் சாறு உடனடி புத்துணர்ச்சி அளிப்பதுடன் ரத்தச் சோகை யையும் சரிசெய்கிறது.

கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் நெல்லிக்கனிகளில் நிறைந்துள்ளன.

புரோட்டீன் அடை

தேவையானவை:

 • முட்டை - ஒன்று

 • முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு

 • பொட்டுக்கடலை - 150 கிராம்

 • வெங்காயம் - ஒன்று (பெரியது)

 • பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப

 • பூண்டு - 4 பல்

 • இஞ்சி - சிறிதளவு

 • கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

 • உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

ஆரோக்கிய உணவுகள் - பெண்கள் ஸ்பெஷல்

செய்முறை

பொட்டுக்கடலையுடன் உப்பு, முட்டை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டுப் பல் சேர்த்து நீர்விட்டு அரைக்கவும். தோசை செய்யும் பதத்துக்கு மாவைக் கரைத்துக்கொண்டு அத்துடன் சிறிதளவு எண்ணெயில் வதக்கிய முருங்கைக்கீரை, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழையைச் சேர்த்து, அடை செய்து கொள்ளவும்.

பற்கள், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியமான பாஸ்பரஸ் முட்டையில் உள்ளது.

பூண்டுக்குழம்பு

தேவையானவை:

 • பூண்டு (உரித்தது) - 25 பல்

 • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

 • வெங்காயம் (சிறிய சாம்பார் வெங்காயம்) - 50 கிராம்

 • தக்காளி - 2 (பெரியது)

 • புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்)

 • கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்தூள்) - தேவைக்கேற்ப

 • கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - சிறிதளவு

 • உப்பு - தேவைக்கேற்ப

 • நல்லெண்ணெய் - 50 கிராம்

ஆரோக்கிய உணவுகள் - பெண்கள் ஸ்பெஷல்

செய்முறை:

வாணலி அல்லது மண்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் அடுத்து நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்களைப் போட்டு மிருதுவாகும் வரை வதக்கவும், அத்துடன் அரைத்த தக்காளியைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். குழம்பு பதம் வந்ததும், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிப் பரிமாறலாம். முழுப் பூண்டு பற்களைச் சேர்த்து சாப்பிடும்போது பால் சுரப்பு கூடும். இந்தக் குழம்பு பாட்டி வைத்தியங்களில் முக்கியமானது.

அளவில் பெரியதாக உள்ள மரபுமாற்ற பூண்டு இந்தியாவில் விளைவிக்கப் படுவதில்லை. சீனா, தைவான் போன்ற நாடுகளிலிருந்தே இங்கு வருகிறது.

உளுந்துக்கஞ்சி

தேவையானவை:

 • கறுப்பு உளுந்து - 100 கிராம்

 • கவுனி அரிசி - 50 கிராம்

 • ஒமம் - 10 கிராம்

 • சீரகம் - 10 கிராம்

 • உப்பு - தேவைக்கேற்ப

ஆரோக்கிய உணவுகள் - பெண்கள் ஸ்பெஷல்

செய்முறை:

மேற்கண்ட அனைத்து பொருள்களையும் வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுக்கவும். அனைத்தையும் ஆறவிட்டு உப்பு சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். ஒன்றரை டம்ளர் தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் பவுடர் போட்டு கரைத்து கஞ்சி வைத்து சாப்பிடவும்.

இது வாயுத் தொல்லையைக் குறைக்கக் கூடிய கஞ்சியாகும். கவுனி அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அடங்கியது. கறுப்பு உளுந்து வாயுத்தொல்லையைக் குறைக்கும் நார்ச்சத்து அடங்கியது.

உளுந்து தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது.

பாதாம் பழக்கூழ்

தேவையானவை:

 • பாதாம் பால் - 150 மில்லி

 • சியா விதை - அரை டீஸ்பூன்

 • கிர்ணிப் பழ விதை - 5 கிராம்

 • பாதாம் பருப்பு - 5 கிராம்

 • உலர்திராட்சை - 5 கிராம்

 • அக்ரூட் - 5 கிராம்

 • ஓட்ஸ் - 5 கிராம்

 • ஸ்ட்ராபெரி / வாழைப்பழம் / ஆப்பிள்/ கிர்ணிப் பழம் இவற்றில் ஏதாவது ஒன்று - ஒரு நாளைக்கு ஒன்று

ஆரோக்கிய உணவுகள் - பெண்கள் ஸ்பெஷல்

செய்முறை:

பாதாம் மற்றும் அக்ரூட்டைப் பொடியாக நறுக்கவும். முந்தைய நாள் இரவே, காய்ச்சிய பால் அல்லது பாதாம் பாலில் நறுக்கிய பாதாம், அக்ரூட் மற்றும் தேவையானவற்றில் உள்ள அத்தனை பொருள்களையும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். மறுநாள் காலையில் வெளியே எடுத்து, அறை வெப்பநிலைக்கு வந்ததும் நறுக்கிய பழங்களைத் தூவி சாப்பிடவும். அனைத்து சத்துகளும் நிரம்பிய காலை உணவு இது. பெண்களுக்கான நீர்க்கட்டிக்குத் தீர்வாக அமையும்.

ரத்த அணுக்களைப் பெருக்கும் சக்தி பாதாம் பருப்புக்கு உண்டு.

பீட்ரூட் பழப்பச்சடி

தேவையானவை:

 • பீட்ரூட் - 2

 • கனிந்த வாழைப்பழம் - 2

 • பாதாம், முந்திரி, அக்ரூட் - தலா 15 கிராம்

 • தேங்காய் - கால் மூடி

 • பனை வெல்லம் - 50 கிராம்

ஆரோக்கிய உணவுகள் - பெண்கள் ஸ்பெஷல்

செய்முறை

பீட்ரூட்டைச் சுத்தம் செய்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும், வாழைப்பழத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காயைச் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பாதாம், முந்திரி, அக்ரூட்டைப் பொடியாக உடைத்து வைத்துக்கொண்டு ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். அடுப்பில் வைக்கக் கூடாது. பச்சையான பீட்ரூட் மற்றும் பனை வெல்லம் போன்றவற்றில் இருக்கும் சத்துகள் கேன்சர் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.

ரத்தத்தில் கலந்துள்ள கழிவுகளை நீக்கி உடலுக்குக் குளிர்ச்சியை தரும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு.

முருங்கைக்கீரை கஷாயம்

தேவையானவை:

 • முருங்கைக்கீரை - 5 கொத்து

 • இஞ்சி - ஒரு துண்டு (துருவிக்கொள்ளவும்)

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • உப்பு - ஒரு சிட்டிகை

ஆரோக்கிய உணவுகள் - பெண்கள் ஸ்பெஷல்

செய்முறை:

மேற்கண்ட அனைத்துப் பொருள்களையும் 2 டம்ளர் தண்ணீர்விட்டுக் கொதிக்க விடவும். 10 நிமிடங்களுக்கு மேல் கொதிக்கவிட வேண்டாம். பின்னர் வடிகட்டி அருந்தலாம். தினமும் வழக்கமாகக்கொண்டால் இந்தக் கஷாயம், படிப்படியாக மூட்டுவலியைக் குறைக்கும்.

முருங்கைக்கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

கொள்ளு சுரைக்காய் கஞ்சி

தேவையானவை:

 • கொள்ளு - கால் கிலோ

 • கைக்குத்தல் அரிசி அல்லது சிவப்பரிசி - 100 கிராம்

 • பார்லி - கால் கிலோ

 • சுரைக்காய் - 200 கிராம்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

ஆரோக்கிய உணவுகள் - பெண்கள் ஸ்பெஷல்

செய்முறை:

கொள்ளு, பார்லி, அரிசி மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். அத்துடன் சீரகம் சேர்த்து பாட்டிலில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது சுரைக்காயைப் பொடியாக நறுக்கி வேகவைத்து, 3 டீஸ்பூன் அரைத்துவைத்த பொடியைச் சேர்த்து, உப்பு போட்டு கஞ்சி செய்துகொள்ளலாம்.காலை உணவுக்குப் பதில் இந்தக் கஞ்சியை எடுத்துக்கொண்டால் பருமன் குறையும்.

கொள்ளுவில் உடலுக்குத் தேவையான இரும்பு, பொட்டசியம் ஆகிய தனிமங்கள் நிறைந்திருக்கின்றன.

முசுமுசுக்கைக் கீரை தோசை

தேவையானவை:

 • முசுமுசுக்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு

 • பூண்டு - 3 பல்

 • இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)

 • மிளகு - அரை டீஸ்பூன்

 • புழுங்கல் அரிசி - 100 கிராம்

 • உளுந்து - 50 கிராம்

 • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 • உப்பு - தேவைக்கேற்ப

ஆரோக்கிய உணவுகள் - பெண்கள் ஸ்பெஷல்

செய்முறை

அரிசி, உளுந்தை 2 மணி நேரம் ஊறவைக்கவும். அத்துடன் பூண்டு, இஞ்சி, முசுமுசுக்கைக் கீரை, உப்பு, மிளகு சேர்த்து, அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். மாவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. உடனே தோசை வார்க்கலாம். இந்த தோசை சளித் தொந்தரவு, இருமல் ஆகியவற்றுக்கு ஏற்ற மருந்தாகச் செயல்படுகிறது.

முசுமுசுக்கை நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.