Published:Updated:

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா... ருசிக்குக் காரணம் என்ன?

Palkova
Palkova ( Indiamart )

பாரம்பர்ய முறைப்படி ஒரே சுவை, ஒரே தரத்துடன் தயாரிக்கப்பட்டு வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு, சமீபத்தில் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியிருக்கிறது.

ஒவ்வோர் ஊருக்கும் ஏதாவது ஓர் உணவோ அல்லது பொருளோ அந்த ஊரின் அடையாளமாக இருக்கும். அந்த வகையில் ருசிக்கு ஶ்ரீவில்லிபுத்தூரின் அடையாளம் பால்கோவா. ஆண்டாளுக்கு அடுத்தபடியாக, செலிபிரிட்டி அந்தஸ்து ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்குத்தான். நம் நண்பர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் ஊருக்குக் கிளம்பும்போதெல்லாம், 'பால்கோவா வாங்கிட்டு வராம சென்னையில கால் வெச்சிடாதே...' என்று செல்ல மிரட்டலுடன் அனுப்பி வைப்போம். பாரம்பர்ய முறைப்படி 75 ஆண்டுகளாக ஒரே சுவை, ஒரே தரத்துடன் தயாரிக்கப்பட்டு வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு, சமீபத்தில் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியிருப்பது கூடுதல் இனிப்பான விஷயம்.

Palkova
Palkova

ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயாரிப்பதை நேரில் பார்த்தோம். அடுப்பு எரிந்துகொண்டிருக்க, இரும்பு வாணலியில் சரியான அளவில் பாலும் சீனியும் சேர்த்து, கொதிக்கவிடுகிறார்கள். பால் கொதிக்க ஆரம்பித்ததும், கைகளுக்கு நொடி நேரமும் ஓய்வுகொடுக்காமல் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள், பால்கோவா தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள். இந்தமுறையில் சுமார் 20 நிமிடங்கள் பாலை சுண்டக்காய்ச்சினால், சூடான ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயார். இதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி, ஆற வைத்து, பின் எடை போட்டு பேக்கிங் செய்கிறார்கள். இதன்பிறகு, தன் இனிப்பான பயணத்தை ஆரம்பிக்கிறது ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. இங்கு தயாரிக்கப்படும் பால்கோவாவை விற்பனை செய்வதற்காக நகர் முழுவதும் ஏராளமான கடைகள் உள்ளன. தவிர, வெளியூர், வெளிநாடு என ஏற்றுமதியும் ஆகின்றன.

1945-ம் ஆண்டு முதலே பால்கோவா உற்பத்தி செய்து வருகிறோம். அன்று முதல் இன்று வரை, கிட்டத்தட்ட 75 வருடங்களாக இங்கே தயாராகும் பால்கோவா ஒரே சுவையுடன் இருப்பதற்குக் காரணம், பாரம்பர்ய முறைப்படி விறகு அடுப்பில் தயார் செய்வதுதான். தயாரித்த நாளிலிருந்து 15 நாள்கள் வரை எங்கள் ஊர் பால்கோவா கெடாது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மேலாளர் சிவநாதன்

ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மேலாளர் சிவநாதன், ``இந்தக் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்ட 1945-ம் ஆண்டு முதலே பால்கோவா உற்பத்தி செய்து வருகிறோம். அன்று முதல் இன்று வரை, கிட்டத்தட்ட 75 வருடங்களாக இங்கே தயாராகும் பால்கோவா ஒரே சுவையுடன் இருப்பதற்குக் காரணம், பாரம்பர்ய முறைப்படி விறகு அடுப்பில் தயார் செய்வதுதான். தயாரித்த நாளிலிருந்து 15 நாள்கள் வரை எங்கள் ஊர் பால்கோவா கெடாது.

Palkova making
Palkova making
Vikatan

2013-ம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழக டீன், ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா குறித்து ஆய்வுசெய்து சென்னையில் உள்ள புவிசார் குறியீடு மையத்துக்குப் பரிந்துரை செய்தார். பின்னர் இந்தப் பொறுப்பு வழக்கறிஞர் சஞ்சய்காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Palkova making
Palkova making
Vikatan

புவிசார் குறியீடு கிடைத்துவிட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு உலகளவில் இன்னும் நல்ல வரவேற்பு கிடைக்கும். இதனால், இந்தத் தொழில் இன்னும் அதிகளவில் நடக்கும். எங்கள் சங்கத்தின் மூலம் புவிசார் குறியீடு பெற்றிருப்பது பெருமையாக உள்ளது” என்றார்.

தற்போது சுமார் ஆயிரம் பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயாரிப்பை குடிசைத் தொழிலாக செய்துவருகிறார்கள். புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், இன்னும் நிறையபேர் இந்தத் தொழிலைச் செய்ய முன்வருவார்கள். உள்ளூரில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தவிர, மற்ற ஊர்களில் யாரும் எங்கள் ஊர்ப்பெயரை பயன்படுத்தி பால்கோவா தயாரிக்க முடியாது!
முத்துக்குமார் - அம்மன் பால்பண்ணை பால்கோவா உற்பத்தியாளர்

ஆண்டாள் கோயில் அரையரான வடபத்ரசாயி , ''பழங்காலத்தில் இங்கே நிறைய பசுக்கள் இருந்தன. அதன் பாலைக் கறந்து அக்கார அடிசில் தயாரித்து, ஆண்டாள் கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்றும் அந்தப் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பால்கோவாவுக்குப் புவிசார் குறியீடு வழங்கியதற்கு அரசுக்கு நன்றி” என்கிறார்.

Geographical Indications
Geographical Indications
Vikatan

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுடன் சேலம் மாம்பழம், திண்டுக்கல் பூட்டு, ஓசூர் ரோஜா, ராஜபாளையம் நாய், காரைக்குடி கண்டாங்கி சேலை, கோடாலிகருப்பூர் சேலை ஆகியவற்றுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு