Published:Updated:

சப்பாத்தி சப்பாத்திதான்!

சப்பாத்தி
பிரீமியம் ஸ்டோரி
சப்பாத்தி

டாக்டர் ஜெ.பாஸ்கரன்

சப்பாத்தி சப்பாத்திதான்!

டாக்டர் ஜெ.பாஸ்கரன்

Published:Updated:
சப்பாத்தி
பிரீமியம் ஸ்டோரி
சப்பாத்தி
 டாக்டர் ஜெ.பாஸ்கரன்
டாக்டர் ஜெ.பாஸ்கரன்
சப்பாத்தி சப்பாத்திதான்!

இப்போதெல்லாம் `இரவில் என்ன சாப்பிடுகிறீர்கள்?’ என்கிற கேள்விக்கு, `இரண்டு சப்பாத்திதான்’ என்கிற `ரெடிமேட்’ பதில்தான் அதிக அளவில் கிடைக்கிறது. தமிழகத்து இட்லி, தோசை, உப்புமா வகையறாக்கள் பின்னால் தள்ளப்பட்டுவிட்டன. நீரிழிவு உள்ளவர்களும், `எடைக் குறைக்கும்’ உணவில் உள்ளவர்களும் இரவில் சப்பாத்தியையே விரும்புகிறார்கள். அரிசியைவிட கோதுமையில் கார்போஹைட்ரேட் குறைவு என்பதாலும், கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிவிட்ட உணர்வு வந்துவிடுவதாலும் இந்த மாற்றம் நடைமுறையில் வந்துள்ளது. அரிசியைவிட கோதுமையில் நார்ச்சத்து கொஞ்சம் கூடுதலாக இருப்பதும் ஒரு காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சப்பாத்தி சப்பாத்திதான்!

ரோட்டி (ரொட்டி, பொதுவாக பேக்கரிகளில் விற்கப்படும் பிரெட் வகைகளைக் குறிக்கும்!) என்று வடக்கிலும், சப்பாத்தி என்று தெற்கிலும் நாமகரணம் சூட்டப்பட்ட இது, இந்திய துணைக்கண்டத்தின் கண்டுபிடிப்புதான்! கோதுமை மாவும் தண்ணீருடன் கொஞ்சம் உப்பும் கலந்து செய்யப்படும் மாவில் தட்டையாக வட்டமாகவோ, முக்கோணமாகவோ அல்லது என்ன ஷேப் என்று சொல்ல முடியாத வடிவிலோ செய்யப்படும். வாயில் போட்டால் நல்ல மிருதுவான கோதுமைப் பண்டம், சப்பாத்தி அல்லது ரோட்டி!

சப்பாத்தி சப்பாத்திதான்!

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ரோட்டி விரும்பி உண்ணப்படுகிறது. இன்று உலகின் எல்லா பகுதிகளிலும் வாழும் இந்தியர்கள், சப்பாத்தியையும் உடன் கொண்டு சென்றுவிட்டார்கள். இதனால், ஏதோ ஒரு வகையில் சப்பாத்தி உலகமெங்கும் கிடைக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சப்பாத்தி சப்பாத்திதான்!

`ரோடிகா’ என்னும் சம்ஸ்கிருதச் சொல் `ரோட்டி’யானது! சப்பாத்தியும் ரோட்டியும் ஒன்றே!

சப்பாத்தி சப்பாத்திதான்!

கடைகளில் நல்ல வெள்ளைக்கோதுமை (மொட்டைக்கோதுமை) வாங்கி, மெஷின்களில் அரைத்துவந்த காலம் உண்டு. இப்போது நல்ல கோதுமை மாவு ரெடியாகக் கிடைக்கிறது. இன்னும் அவசரம் என்றால், ரெடிமேட் சப்பாத்திகள் கிடைக்கின்றன. தவாவில் போட்டு எடுக்கவேண்டியதுதான்.

நேரமும் பொறுமையும் உள்ளவர்கள், சப்பாத்தி மாவு பிசைவதை ஒரு கலையாகவே செய்கின்றனர். அளவான நீர் ஊற்றி, கைவிரல்களால் பதமாக சப்பாத்தி மாவு, தேங்காய்ப்பால், எண்ணெய், நெய் தேவைக்கேற்ப சேர்த்துச் செய்வார்கள். கோபமாக இருப்பவர்கள் மாவு பிசைந்தால், உருட்டி அடித்துப் பிசையும் சத்தம், ஹாலில் கேட்கும் வாய்ப்புகளும் உண்டு.

மிருதுவான மாவுக்கு, கடைகளில் ஈஸ்ட் அல்லது பேக்கிங் சோடா சேர்ப்பார்கள். இது இல்லாமல் வீடுகளில் சாஃப்டான சப்பாத்தி மாவு பிசைவது, அவர்கள் செய்யும் முறையைப் பொறுத்தது.

சப்பாத்தி சப்பாத்திதான்!

தவா அல்லது தோசைக்கல்லில் சப்பாத்தி போட்டு எடுப்பார்கள். தோசையைப்போல சுற்றி எண்ணெயோ, நெய்யோ ஊற்றிச் செய்வதும் உண்டு. `ஃபுல்கா’ என்பது எண்ணெய், நெய் ஏதுமின்றி, வெறும் தவாவில் போட்டு எடுப்பது. அந்தக்கால குமுட்டி அடுப்புகளின் தணல் இதற்கு மிகவும் உகந்தது. `ருமாலி ரோட்டி’ மெல்லியதாக, பெரிய அளவில் செய்வது. சப்பாத்தி மாவை கைகளில் தட்டி, ஓர் அளவுக்குப் பிறகு கைவிரல்களில், கோவர்த்தனமலையை கிருஷ்ணன் பிடித்துக்கொண்டாற்போல வைத்துக்கொண்டு சுழற்றுவார்கள். பெரிய குடைத் துணிபோல ருமாலி ரோட்டி ரெடி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சப்பாத்தி சப்பாத்திதான்!

`நான்’ போன்ற தந்தூரி ரோட்டிகள், சூடான பெரிய மண்பானைகளின் (தந்தூரி ஓவன்) உட்புறத்தில் ஒட்டிச் செய்யப்படுபவை. ரோட்டிகளைப்போல அல்லாமல் இவை சற்று தடிமனாகவும், பிரிப்பதற்குக் கொஞ்சம் கடினமாகவும் இருக்கும். சுவைப்பதற்குள், தாடைத் தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைப்பது உறுதி.

சப்பாத்தி சப்பாத்திதான்!

கோதுமை தவிர சிறுதானியங்கள், சோளம், ஜவ்வரிசி மாவுகளிலும் ரோட்டி செய்வதுண்டு.இரானில் கபூஸ், லவாஷ் என்ற ரோட்டி வகைகள் கிடைக்கின்றன. ஸ்ரீலங்காவில் தேங்காய் சேர்த்து, `போல் ரோட்டி’ (தேங்காய் ரோட்டி) என்று கிடைக்கிறது. பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்தும் இவை செய்யப்படுகின்றன.

சப்பாத்தி சப்பாத்திதான்!

வீடுகளில் செய்யப்படும் சப்பாத்தியில் உருளை, வெங்காயம், மிளகாய் சேர்த்து அரைத்த மசாலாவை வைத்து, மடித்து மீண்டும் தவாவில் இட்டு, மசாலா ரோட்டியும் சிலர் செய்வர். ரோட்டியை இப்படிப் பலமுறை மடித்துச் செய்யப்படும் வீட்டு பரோத்தாக்கள், சாலையோரக் கடைகளில், ஹோட்டல்களில் கிடைக்கும் பரோத்தாக்களிலிருந்து வித்தியாசமானவை. கடைகளில், மைதா மாவை நன்கு பிசைந்து, நீளமான துணிபோல இழுத்து, முறுக்கிச் சுருட்டி, கைகளில் வட்டமாகத் தட்டிச் செய்யப்படுபவை பரோட்டாக்கள். இதற்கென ஸ்பெஷல் `மாஸ்டர்கள்’ இருக்கிறார்கள். பரோட்டா மாவு, பரோத்தாவாக உரு மாறுவதைப் பார்ப்பதற்கே, ஆயிரம் கண்கள் வேண்டும். செய்த பரோத்தாக்களை சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்து தவாவில், மசாலா எல்லாம் சேர்த்து, பரோத்தா துண்டுகளை, இரண்டு இரும்பு தோசைத்திருப்பிகளால் (`கொத்தும்’ ஓசை தனித்துவமானது) `கொத்து பரோத்தா’ ரெடி!

சப்பாத்தி சப்பாத்திதான்!

பெரிய அளவில் செய்யப்படும் ரோட்டிகளில் மசாலா, காய்கறிகள், இலை தழைகள், சாஸ் எல்லாம் சேர்த்துவைத்து, அப்படியே சுருட்டி (நம்ம ஊரில் பார்சல் செய்யும் தோசையைச் சுருட்டுவதுபோல) கொடுத்துவிடுவார்கள். `ரோட்டி ராப்’ - கை நனையாமல், போகிறபோக்கில் தின்பதற்கு வசதியாக. அசைவப் பிரியர்களுக்கு சிக்கன், மட்டன் துண்டுகள் சேர்த்துச் சுருட்டிவிடுவார்கள். அவசரமான உலகில் அவசரமான உணவு - ஃபாஸ்ட் ஃபுட்!

1940-களில் பிரபலமான இந்த வகை ரோட்டிகள், மேலைநாடுகளில் மிகவும் பிரசித்தம்.

சப்பாத்தி சப்பாத்திதான்!

குல்சா, பதூரா, பராத்தா, தந்தூரி ரோட்டி போன்றவையும் ரோட்டி வகையைச் சேர்ந்தவையே!

சப்பாத்தி சப்பாத்திதான்!

இட்லி, தோசைகளைப்போல இல்லாமல், ரோட்டிக்கு பல சைடிஷ்கள் உண்டு. சாதாரண பருப்பு (தால்) முதல் பலவகையான `க்ரேவி’யுடன்கூடிய சைடிஷ்கள், பனீர், குடமிளகாய், உருளை, பட்டாணி, சென்னா, கீரை (வீட்டில் கீரைக்கு முகம் சுளிக்கும் இன்றைய தலைமுறையினர், ஹோட்டல்களில் அதே கீரையை பனீருடன் சேர்த்து `பாலக் பனீர்’ என்ற பெயரில் விரும்பிச் சாப்பிடுவது வியப்புக்குரியது!) எனத் தேர்ந்தெடுக்க ஏராளமான வகைகள் உள்ளன. சாம்பார், சட்னி வகைகள் ரோட்டிகளுடன் கூடா நட்புகள்!

சப்பாத்தி சப்பாத்திதான்!

பெரிய ஹோட்டல்களில் சாப்பாட்டுடன் இரண்டு சப்பாத்திகளை `ஸ்டார்டர்’ போல கொடுப்பது இப்போது வழக்கமாகிவிட்டது.

சப்பாத்தி சப்பாத்திதான்!

ஆங்காங்கே கருகி, கடினமாகவோ, அப்பளம்போல உடைக்கும்படியோ இருந்தால், அது சப்பாத்தி அல்ல! கல்லூரி நாள்களில், என் நண்பன் ஒருவன் (பீயூஷ்குமார் - நார்த் இண்டியன் - சிந்தி) மதியவேளை சாப்பாட்டுக்கு சப்பாத்தி எடுத்து வருவான். அவ்வளவு மிருதுவாக, சுவையாக இருக்கும். ஒரு நாள்கூட அவனுக்குக் கிடைக்காது. எங்களிடையே அந்தச் சப்பாத்திக்கு அவ்வளவு டிமாண்டு!

சப்பாத்தி சப்பாத்திதான்!

60-களில், சிறிய கடையாக பாண்டிபஜாரில் இருந்த `சாந்தா பவன்’ மிகவும் பிரபலம். மாலை 7 மணிக்குமேல் பூரி, சப்பாத்தி கிடைக்கும். மஞ்சளாக, ஓடுகின்ற பதத்தில் ஒரு தாலும், `சாகு’ என்ற சிறு துண்டுகளாக நறுக்கிப் போடப்பட்ட உருளைக்கிழங்குடன். பழுப்பு நிறத்தில் ஓடும் சைடிஷும் சூடான சப்பாத்தியுடன் நம்மை வேறு `லெவலுக்கு’ இழுத்துச் செல்லும்! இரவு 12 மணி வரையிலும் காத்திருந்து சப்பாத்தி தின்ற நாள்கள் வெகு சுவையானவை!

சப்பாத்தி சப்பாத்திதான்!

இப்போதெல்லாம் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படும் சப்பாத்தி, நீரிழிவு உள்ளவர்களின் இரவு நேர உணவாகிவிட்டது. இரவில் இரண்டு `சுக்கான்’ ரோட்டி சாப்பிடுங்கள் (எண்ணெய், நெய் தவிர்ப்பதற்காக) என்பது எழுதாத விதி! என் உறவினர் ஒருவர், கல்யாணத்தில் நன்றாக டின்னர் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து, `சுக்கான்’ ரொட்டி செய்யத் தொடங்கினார். விவரம் கேட்டபோது, `இரவில் இரண்டு சுக்கான் ரோட்டி சாப்பிடச் சொல்லி டாக்டர் உத்தரவு’ என்றார். எனக்கு மயக்கமே வந்துவிட்டது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism