Published:Updated:

`46 வருஷம்; ஒருத்தரும் ஆப்பம் சரியில்லன்னு சொன்னதில்லை!' - கமலம் பாட்டியின் கமகம கருப்பட்டி ஆப்பம்

கமலம் பாட்டியின் கருப்பட்டி ஆப்பத்து ருசிக்கு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாகக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள் அந்தத் தெருவாசிகள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``அந்தக் காலத்துல சொந்தமா வீட்டுல தறி இருந்துச்சு. என் வீட்டுக்காரரு தறி போடுவாரு. அவரு கூட சேர்ந்து நானும் தறி போடுவேன். சாயப்பட்டறையிலதான் அவருக்கு வேலை. கொஞ்ச வருசத்துல புற்றுநோய் வந்து இறந்துட்டாரு. தறி தொழிலும் கைகொடுக்கல. யாருகிட்டயும் கையேந்தி நிக்கக் கூடாதுனு மனசுல ஒரு வைராக்கியம். என் பாட்டிகிட்ட கொஞ்சம் யோசனை கேட்டுட்டு, பணியாரமும் ஆப்பக்கடையும் போட்டு ஒரு கடைய ஆரம்பிச்சேன்” - மதுரை, முனிச்சாலை சாலையிலிருந்து காமராஜர் சாலையை இணைக்கும் பத்தடி அகல சந்துக்குள் நுழைந்து, ஆர்.எஸ்.கமலம் பாட்டியிடம் ரெண்டு கருப்பட்டி ஆப்பம் சாப்பிட்டுக்கொண்டே அந்த முதிய உயிரின் உழைப்பை கொஞ்சம் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், சோர்ந்து கிடக்கும் உங்கள் மனதுக்குள் நிச்சயம் மீண்டும் நம்பிக்கை ஒளி பாயலாம். 46 வருடங்களாக ஒரே இடத்தில் ஆப்பக்கடை நடத்திவரும் கமலம் பாட்டிக்கு இப்போது வயது 79. கமலம் பாட்டியின் கருப்பட்டி ஆப்பத்து ருசிக்கு, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாகக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள் அந்தத் தெருவாசிகள். இளஞ்சூட்டு ஆப்பத்தைச் சாப்பிட்டபடியே பாட்டியிடம் பேச்சுக்கொடுத்தோம்.

கமலம் பாட்டி
கமலம் பாட்டி

``தறி வேலையிலிருந்து எப்படி சமையலுக்கு வந்தீங்க..?"

``வேறென்ன, வறுமைதான். தறிய தவிர வேற வேலை எதுவும் தெரியாது. வீட்டுக்காரரும் இல்ல. மூணு புள்ளைகளாச்சு. புள்ளைகள வளர்க்கணுமே... அதனால எங்க பாட்டிதான் இந்த யோசனை சொல்லுச்சு. இப்போ வரை இந்த தோசைச் சட்டிதான் சோறு போடுது. யாருகிட்டயும் கையேந்தல. நாம உழைச்சாதான் நமக்கு சோறு. சொந்தமா உழைச்சு சாப்பிடுறேன், இதவிட சந்தோசம் எனக்கு என்ன வேணும்.

ரெண்டு பொம்பளப் புள்ளையையும் கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ஒரு பையன் இருக்கான், அவனுக்கு கல்யாணம் அமையல. அந்தக் குறையிலேயே சித்தம் கலங்குன மாதிரி ஆகிட்டான். காலையில மாவு கொண்டு வருவான். இப்போ அவனும் நானும்தான் இருக்கோம். அவனுக்கும் சேர்த்துதான் நான் உழைக்கிறேன்.''

ஆப்பம்
ஆப்பம்

``46 வருஷத்துல நீங்க என்னென்ன மாற்றத்த பார்த்திருக்கீங்க?"

``அப்போ இருந்து இப்போ வரைக்கும் எனக்கு கடைன்னு எதுவும் கிடையாது. காலையில் 6 மணிக்கு இந்த வீட்டு முன்னால வியாபாரத்த ஆரம்பிப்பேன். 9, 10 மணிக்கெல்லாம் முடிச்சிட்டுக் கெளம்பிருவேன். கடை ஆரம்பிச்சப்போ ஒரு ஆப்பம் அஞ்சு பைசான்னு வித்தேன். இப்போ ஏழு ரூபாய்க்கு விக்குறேன். அப்போ வயசு இருந்துச்சு, சாயங்காலத்துல பணியாரம் சுட்டு விப்பேன். இப்போ உடம்பு ஒத்துழைக்கல, ஆப்பம் மட்டும் விக்குறேன். குடிசை வீடெல்லாம் மாடி வீடா மாறிடுச்சு. ஆனாலும் இப்போ வரைக்கும் இந்தத் தெரு சனங்க அதே பாசத்தோடதான் என்கிட்ட இருக்காங்க. இந்தத் தெரு பேரு பூந்தோட்டத் தெரு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெருமுனை வரைக்கும் பூந்தோட்டமா இருக்கும். இப்போ எல்லாம் காலி இடமா கெடக்கு. அப்போ எல்லாம் வெள்ளக்காரவுக வர்றாகனு தெரிஞ்சா நாங்க எல்லாம் பயந்துகிட்டு வீட்டுக்குள்ள ஓடிப்போயிருவோம். இப்போ இருக்குற மதுரைய பார்க்கவே மலைப்பா இருக்கு. ஊரே மாறிப்போச்சு. ஆனாலும் நான் இதே இடத்துலதான் இருக்கேன். தெனம் மனுச மக்கள பார்க்குறது கண்ணுக்கு நல்லா இருக்கு. சின்ன வயசுல பார்த்த புள்ளைக எல்லாம் வளர்ந்து நிக்குறதப் பார்க்கப் பூரிப்பா இருக்கு.''

``கொரோனா காலத்தை எப்படி சமாளிச்சீங்க?"

``கடையெல்லாம் போடக் கூடாதுன்னு சொன்னாங்க. வீட்டுக்குள்ளயேதான் முடங்க வேண்டியதா போச்சு. அப்பப்போ யாராச்சும் வந்து அரிசி, வீட்டுக்குப் பலசரக்குனு கொடுத்துட்டுப் போனாக. அவுக எல்லாம் நல்லாருக்கணும்.''

``உங்க கடை ஆப்பத்துல அப்படி என்ன ஸ்பெஷல்..?"

``எல்லாரும் சுடுற அதே அரிசி மாவுலதான் நானும் சுடுறேன். நான் கொஞ்சம் வெந்தயம் போடுவேன். மண்டவெல்லம் போட மாட்டேன். அதுக்குப் பதிலா கருப்பட்டி போடுவேன். கூடக் கொஞ்சம் வெண்ணெயும் சேர்த்துக்குவேன். இந்த ருசி எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட, ஆப்பம் சரியில்லையேனு யாரும் சொன்னதே இல்ல. அதுதான் நான் சம்பாதிச்ச பேரு!"

ஓய்வறியாத மனுஷியின் கைமணத்தில் கமகமக்கிறது கருப்பட்டி ஆப்பம். தட்டுக்கு வந்ததும், நாக்குக்குச் செல்லும் முன்னரே நாசியும் கண்ணும் சாப்பிடத் தொடங்கிவிடுகின்றன. மதுரைக்கு ஒரு எட்டு வருபவர்கள் பாட்டி கடைக்கு ஒரு நடை சென்று பாருங்களேன்!

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு