Published:Updated:

வத்தக்குழம்பு

வத்தக்குழம்பு
பிரீமியம் ஸ்டோரி
News
வத்தக்குழம்பு

சுவையோவியம்

சிவன் கோயிலின் ராஜ கோபுர வாசலில் நின்று கிழக்கே பார்த்தால் கீழ்வானம் தெரிகிறதோ இல்லையோ... அந்த ஹோட்டல் தெரியும்.

மூன்று அறைகள், நான்கு ஏசிகள், ஸ்டார் ஹோட்டல் விலை என்றான பின்பும் அந்த ஹோட்டலின் பெயரோடு இன்னும் மெஸ் ஒட்டிக் கொண்டிருக்கிறது. உள்ளே போய் அமர்ந்து `என்ன இருக்கிறது...’ என்று கேட்டபோது சர்வர் வாசித்த பட்டியலில் நல்லெண்ணெய் தோசை, நெய் தோசை, வெண்ணெய் தோசை என்று பாதிக்குமேல் தோசை வகைகள்.

அடப்பாவிகளா, ஒரு சாதா தோசைன்னு சொன்னமா, அதிலே அவன் எண்ணெய் ஊத்துனானா இல்லையான்னுகூடத் தெரியாம சாப்பிட்டமான்னு வருவதுதானேடா நம்ம பண்பாடு... இது என்ன இப்படி எண்ணெய்வாரியா ஒரு பட்டியல்... அந்தப் பட்டியல் கடைசியாக, வத்தக்குழம்பு சாதம் என்று முடிந்தது.

``என்னது வத்தக்குழம்பு சாதமா...’’

``ஆமாம் சார்... இங்கே ஸ்பெஷல் அயிட்டம்” என்றார் சர்வர் பெருமை பொங்க. ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தேன்.

அம்மா சமைக்க மூடில்லை என்றால் வத்தக்குழம்புதான் வைப்பாள். வாரத்தில் ஓரிரு நாள்களாவது அம்மாவுக்கு மூடில்லாமல் போய்விடும். ஆனால், அவள் அலுத்துக்கொண்டே வைக்கும் வத்தக் குழம்புக்குத்தான் நாங்கள் அடித்துக் கொள்வோம். வெங்காய வடக வத்தக்குழம்பு, சின்ன வெங்காயம், பூண்டு போட்ட வத்தக்குழம்பு, மணத்தக்காளி, சுண்டவத்தல் போட்ட வத்தக்குழம்பு, சில நாள்கள் வெறும் அப்பளம் போட்டு வத்தக்குழம்பு என்று அம்மா வெரைட்டியாக வத்தக்குழம்பு வைப்பாள். சுண்டவத்தல், மணத்தக்காளி சமாசாரங்களை நானோ தம்பியோ அதிகம் ஆர்வம்காட்டுவதில்லை. இடக்கையால் கரண்டியை நன்றாகப் பாத்திரத்தில் அடிவரைவிட்டு பாத்திரத்தின் ஓரமாக எடுத்துக் கிடைக்கும் வத்தல்களைப் போட்டுக்கொள்ளும் உரிமையை அப்பாவுக்கே கொடுத்திருக்கிறோம். ஆனால், வெங்காய வடாம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவை போடப்பட்டிருந் தால், ஸாரி... பாத்திரம் அவர் பக்கம் போகவே போகாது. அதில் முருங்கைக்காயும் போட்டிருந்தால் அவ்வளவுதான். புளிப்பு எவ்வளவு அற்புதமான சுவை என்பது அப்போதுதான் தெரியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கீரை மசியலும் வத்தக்குழம்பும்தான். இப்போதெல்லாம் அம்மா கீரை வாங்கும்போதே இரண்டு கட்டுகளாக வாங்கிவிடுகிறாள். அம்மாவும் அப்பாவும் சீரியல் பார்த்துக்கொண்டே கீரையை முன்தினமே ஆய்ந்துவிடுவார்கள். அதைப் பார்க்கும்போதே மறுநாள் மெனு தீர்மானமாகி நாவில் வத்தக்குழம்பின் புளிப்பு சுரக்கும். கீரையை நன்கு பொடிப்பொடியாக நறுக்கி வேகவைத்து அதில் தேங்காய், சீரகம், மிளகாய் அரைத்துப் போட்டு நன்கு மசித்து அம்மா செய்யும் கீரை மசியல் ஏறக்குறைய அல்வாதான்!

வத்தக்குழம்பு

சாதத்துக்கு முன் சாதத்துக்குப் பின் என எல்லாவற்றிலும் கீரை மசியல் உண்டு. குறிப்பாகத் தயிர் சாதத்துக்கு விட்டுக்கொள்ள என்று அம்மா கீரையையும் வத்தக் குழம்பையும் கொஞ்சம் தனியாக எடுத்துக் கலந்துவைத்திருப்பாள். தயிர்சாதத்தை உருட்டி அதில் குழிசெய்து கை நீட்டினால் அதில் அம்மா விடும் அந்தக் கீரைக்குழம்பு தேவாம்ருதமாக இருக்கும்.

அம்மா எப்படிதான் இவ்வளவு சுவையாக சமைக்கிறாளோ... அப்படியே பாட்டியின் கைப்பக்குவம். அம்மா கையால் சாப்பிட்டுப் பழகிவிட்டதால் ஹோட்டல்களுக்குச் செல்லும் எண்ணமே வராது. அம்மாவும் அதை விரும்புவதில்லை. எப்போதாவது அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போக நேர்ந்துவிட்டால் அப்போதுதான் திண்டாட்டம். ஹோட்டல் சாப்பாடு இறங்கவே இறங்காது. நானாவது பரவாயில்லை கடமைக்குச் சாப்பிட்டு விடுவேன். தம்பி திண்டாடுவான். அம்மா ஊருக்குப் போய்விட்ட நாள்களில் பிரெட், பழங்கள் என்று ஆரம்பித்துவிடுவான். எனக்கு அதெல்லாம் உதவாது. தட்டு நிறைய சுடச்சுட சாதம்போட்டு எண்ணெய் ஊற்றி சூட்டோடு பிசைந்து அதில் குழம்பு விட்டுச் சாப்பிடும் ஆனந்தம் பிரெட்டில் கிடைக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ருசிக்காகப் பல ஹோட்டல்களை முயற்சி செய்தாயிற்று. ஒன்றும் தேறவில்லை. சோறு நன்றாக இருந்தால் குழம்பு சுவைக்காது. குழம்பு நன்றாக இருந்தால் கூட்டு, பொரியல் சொதப்பிவிடும். இவை அனைத்தும் சுவையாக இருந்தால் சாப்பிட்டு முடித்த மறுகணமே வயிற்றுவலி வந்துவிடும். என்ன கலந்து தொலைப்பார்களோ...

வத்தக்குழம்பு

ஆனாலும், ஆசை யாரைவிடுகிறது... நேற்று நண்பனின் வீட்டுக்குச் சாப்பிட வரச்சொன்னான். போனேன். நானெல்லாம் எவ்வளவு இரக்கமற்ற ஈனப்பிறவி என்று அப்போதுதான் தெரிந்தது. சாப்பாடு மிகவும் சுமார். முதல் வாய் வைத்ததுமே தெரிந்துவிட்டது. ஆன்ட்டி கொஞ்சம் உப்பு கொடுங்களேன்... ஆன்ட்டி கொஞ்சம் நல்லெண்ணெய்... ஆன்ட்டி ரசத்தைக் கொஞ்சம் சூடுபண்ண முடியுமா... ஒரு மனிதன் தன் சுவை உரிமைக்காக வெட்கமில்லாமல் போராடிக்கொண்டிருக்க, பக்கத்தில் அமர்ந்த அந்தப் பையன் குனிந்த தலைநிமிராமல் சாப்பிட்டு முடித்து எழுந்தே விட்டான்.

எந்த உபாயத்திலும் அந்தச் சாப்பாடு கடைசிவரை ருசிக்கவேயில்லை. `அம்மா, தாயே... இப்படி சோத்துக்குத் தவிக்க விட்டு விட்டாயே’ என்று மனம் புலம்பியது. வழக்கமாகச் சாப்பிடும் அளவில் பாதிகூட சாப்பிடாமல் எழுந்து கொண்டேன்.

“எப்படி இருந்தது தம்பி சாப்பாடு...”

“சூப்பர்... மிக்க நன்றி” என்று சொல்லி நண்பனைப் பார்த்தேன்.

அவன், “நான் சொல்லல, எங்கம்மா சூப்பரா சமைப்பாங்கன்னு. இப்பவாவது நம்புறியா...”

“கட்டாயமா...’’ என்று சொல்லித் தெறித்து வீடு வந்து சேர்ந்தேன்.

ஆர்டர் செய்திருந்த வத்தக்குழம்பு சாதம் வந்துவிட்டது. சூடாகவும் இருந்தது. முதல் ஸ்பூன் வாயில் வைத்ததும் சாம்பார் பொடி வாடை முகத்தில் அடித்தது. அடுத்தடுத்து இரண்டு மூன்று ஸ்பூன்கள் சாப்பிட்டதும் அது உறுதியானது. இவன் குழம்பைக் கொதிக்கவே விடவில்லை. அந்த சர்வரைக் கூப்பிடலாம் என்று நினைத்துத் திரும்பிப் பக்கத்து டேபிளைப் பார்த்தால் அவர்களும் அதே வத்தக்குழம்பு சாதம்.

``எப்படியிருக்கு வத்தக்குழம்பு சாதம். இங்கே ஸ்பெஷல்...”

“வாவ் கிரேட். இந்த மாதிரி யுஎஸ்ல யாராவது சமைச்சுப் போட்டா மாசம் 3000 டாலர் சம்பளம் தருவேன்.”

அடேய் என்.ஆர்.ஐகளா... இந்த வத்தக்குழம்புக்கா மாசம் 3000 டாலர் சம்பளம். அப்படியென்றால் அம்மா நீயெல்லாம் அந்த வேலைக்குப் போனால் நிச்சயம் 5000 டாலர் கிடைக்கும். 5000 டாலர் என்றால் மூன்றரை லட்சம். என்னோட ஒரு வருஷ சம்பளம்.

`அம்மா எவ்வளவு வொர்த் நீ... எங்களுக் காக நீ உன்னை நம் சிறிய வீட்டுக்குள் முடக்கிக்கொண்டாயா...’ நினைக்கும்போதே கண்கள் பனித்தன. இதயம் கனத்தது. ஆனால், இந்தப் பாழாய்ப்போன வத்தக் குழம்புதான் தொண்டையில் கரித்தது.

120 ரூபாய் கொடுத்துவாங்கிய உணவை இப்போது நன்றாக இல்லை என்று தரவும் முடியாது... இந்த மடையன்களே சப்போர்ட்டுக்கு வருவார்கள். சாப்பிட்டுத் தொலைக்கவும் முடியாது. இன்று யார் முகத்தில் முழித்தோமோ... அப்படியே சாப்பாட்டை வைத்துவிட்டு வீடு வந்தேன். குக்கரை அடுப்பிலேற்றி ஒரு சாதம் வைத்தேன். ஃபிரிட்ஜில் புளிக்காய்ச்சல் இருக்கும் என்று தெரியும்.

பேசாமல், நாமே இன்று வீட்டில் வத்தக் குழம்பு செய்தால் என்ன... அம்மாவுக்கு போனைப் போட்டேன்!

வத்தக்குழம்பு

வத்தக்குழம்பு

சின்ன எலுமிச்சை அளவுக்குப் புளி எடுத்து உருட்டி ஊறவைக்கவும். முருங்கைக்காய், சின்ன வெங்காயம், பூண்டு, வடகம், சுண்ட வத்தல் என எதைப் போட்டு வைக்க விரும்புகிறோமோ அதைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலி ஏற்றி காய்கள் அல்லது வத்தல் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணெயை (நல்லெண்ணெய் சுவையை அதிகரிக்கும். பிற எண்ணெய்களிலும் செய்யலாம்) விட்டு தாளித்து அதில் காய்கள் அல்லது வத்தலைப் போட்டுப் பொரிக்கவும். அப்படியே அதில் தேவையான அளவு சாம்பார் பொடிபோட்டு இரண்டு நிமிடங்கள் நுரை வரும்வரை பொரிய விடவும். பின்பு அதில் ஊறவைத்த புளியைக் கரைத்து ஊற்றித் தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். ஒன்றுக்குப் பாதியாகும் அளவுக்கு நன்கு கொதித்து சுருங்கும் போது ஒரு துண்டு வெல்லம் போட்டு இறக்கி வைத்தால் சுவையான வத்தக்குழம்பு ரெடி.