பஸ்பவுசா கேக் (Basbousa Cake)
தேவையானவை:
ரவை - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
கடைந்த தயிர் - ஒரு கப்
காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப்
உருக்கிய வெண்ணெய் - அரை கப்
வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் (கேக் டின்னில் தடவ) - சிறிதளவு
மைதா (கேக் டின்னில் தடவ) - சிறிதளவு
லேசாக வறுத்த பாதாம் துண்டுகள் - ஒரு டீஸ்பூன் (அலங்கரிக்க)
சுகர் சிரப் செய்யத் தேவையானவை:
தண்ணீர் - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
பட்டை - ஒரு துண்டு
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசெய்முறை:
ஒரு பவுலில் ரவை, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் கடைந்த தயிர், பால் சேர்க்கவும். இவற்றுடன் அரை கப் உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கலவையை ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பின்னர் கேக் டின்னை எடுத்துக்கொள்ளவும். அதில் வெண்ணெய் தடவி, பின்னர் சிறிது மைதாவை எடுத்து கேக் டின்னில் மெலிதாகத் தடவிவிடவும். பிறகு மாவுக் கலவையை கேக் டின்னில் ஊற்றவும். அவனை (oven) 180 டிகிரி செல்சியஸில் 15 நிமிடங்கள் பிரீஹீட் செய்யவும். பிறகு கேக் டின்னை அவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸில் 45 - 60 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றவும். அதில் சர்க்கரை, பட்டை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும். பின்னர் அடுப்பை அணைத்து, இந்தக் கலவையில் ரோஸ் எசென்ஸ் சேர்க்கவும். கலவையை அறை வெப்பநிலைக்கு ஆறவைத்து ஒரு பவுலில் வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
செய்துவைத்துள்ள கேக்கின் மேல் இந்த சுகர் சிரப்பை ஊற்றி, ஒரு மணி நேரம் அப்படியேவிடவும். பின்னர் லேசாக வறுத்த பாதாம் துண்டுகளால் அலங்கரிக்கவும். பஸ்பவுசா கேக் தயார்.