Published:Updated:

வித்தியாசம் காட்டி வியக்கவைக்கும் முட்டை மிட்டாய்

முட்டை மிட்டாய்
பிரீமியம் ஸ்டோரி
News
முட்டை மிட்டாய்

மணம்... வடிவம்... சுவை...

ரு ஞாயிற்றுக்கிழமை இரவு. சென்னை, ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையின் வழியே சென்றுகொண்டிருந்தோம். பொதுவாகவே கூட்டம் நிரம்பிக் காணப்படும் அப்பகுதி, விடுமுறை நாளிலும் அதீத வாகன நெரிசலுடன் இருந்தது. சாலையின் இருபுறங்களிலும் பல்வேறு கடைகள். ஒரு பக்கம் சுடச்சுட எண்ணெயில் குளித்துக் கொண்டிருந்தன பஜ்ஜிகள். மற்றொரு பக்கம் தீயில் வாட்டப்பட்டுக்கொண்டிருந்தன கோழிகள். லேசாகப் பசியெடுக்க ஆரம்பிக்க... பஜ்ஜியா, கோழியா என்று குழம்பிக்கொண்டிருந்தபோதுதான் கண்ணில்பட்டது ‘முட்டை மிட்டாய்’க் கடை!

முட்டை மிட்டாய்
முட்டை மிட்டாய்

‘முட்டையில் மிட்டாயா?’ என்று பெயரே சுவாரஸ்யப்படுத்த, அதைச் சுவைத்தே பார்த்தாக வேண்டும் என்கிற ஆவலுடன் கடைக்குள் நுழைத்தோம். சாம்பிளுக்கு முட்டை மிட்டாயிலிருந்து ஒரு சின்ன துண்டை வெட்டியெடுத்து சுவைக்கக் கொடுத்தார்கள். மஞ்சள் மற்றும் பொன் நிறங்கள் கலந்து காணப்பட்ட அந்த முட்டை மிட்டாயைத் தயக்கத்துடனேயே வாயில் வைத்த நாம், ருசியில் அப்படியே சொக்கி நின்றோம். கிட்டத்தட்ட சர்க்கரைப் பாகில் ஊறிய கேக்கின் சுவை. சிறிதுகூட முட்டையின் வாசனை வரவில்லை. இந்த ருசியில் வேறு ஒரு ஸ்வீட்டை இதுவரை சுவைத்ததில்லை.

‘முட்டை மிட்டாய்’ கதையைக் கேட்க, கடையில் உரிமையாளர் சையத் உஸ்மானிடம் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘`அந்தக் காலத்துல எல்லாம் ‘முட்டை மிட்டாய்’ என்ற இனிப்பு வகை ‘அண்டே கே மிட்டாய்’ என்ற பெயர்ல இஸ்லாமியர் வீடுகள்ல பண்டிகைகளின்போது செய்யப்பட்டு வந்தது. எங்க அப்பா சையத் அப்துல் ஹப்பார், கடையில் அதை விற்பனை செய்ய ஆரம்பிச்சார். விழுப்புரம் மாவட்டம், அப்பம்பட்டு கிராமத்துல சிறிய அளவில் உணவகம் நடத்திவந்த எங்க அப்பாவும் அவர் நண்பர் பியரேஜானும் இணைந்து, 1970-ம் வருஷத்துலேருந்து வீட்டிலேயே முட்டை மிட்டாய் தயாரிச்சு தங்களோட உணவகத்தில் விற்பனை செய்தாங்க. இதுவரை சாப்பிடாத ருசியில இந்த இனிப்பு இருந்ததால, கொஞ்சம் கொஞ்சமா முட்டை மிட்டாயின் புகழ் அந்தப் பகுதி முழுக்கப் பரவ தொடங்கிச்சு. அந்த ஊர் மக்களின் வீட்டு விசேஷங்களின் போது நடக்கும் விருந்துகள்ல முட்டை மிட்டாய் தவறாமல் இடம்பிடிக்க ஆரம்பிச்சது.

வித்தியாசம் காட்டி வியக்கவைக்கும் முட்டை மிட்டாய்

அடுத்ததா, ‘முட்டை மிட்டாய்’ என்ற பெயரிலேயே ஒரு சின்னக் கடையைத் தொடங்கினாங்க. ‘இந்தப் பெயர் நல்லாவே இல்ல, மாத்துங்க’ன்னு பலர் சொன்னாலும், எங்கப்பா மாற்றவேயில்லை. ‘அதென்ன முட்டை மிட்டாய்னு தெரிஞ்சுக்கவே மக்கள் வருவாங்க’னு சொல்லுவார் எங்கப்பா. அவரோட நம்பிக்கை வீண் போகலை. முட்டை மிட்டாயின் புகழ் விழுப்புரத்தைத் தாண்டி விரிவடையத் தொடங்கிச்சு. செஞ்சிக்கு அருகில் கடை இருந்ததால, செஞ்சிக்குப் படப்பிடிப்புக்கு வரும் பிரபலங்கள் எல்லாம் முட்டை மிட்டாயைச் சுவைக்க வரத்தொடங்கி னாங்க’’ என்று தங்கள் கடையின் முதல் வெற்றியை ஆர்வத் துடன் சொல்கிறார் சையத் உஸ்மான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1970-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2020-ல் தனது 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘முட்டை மிட்டாய்’க் கடையின் கிளைகள் இப்போது செஞ்சி, சென்னை, விஷாரம், காஞ்சிபுரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இந்தக் கடையைத் தொடங்கிய சையத் அப்துல் ஹப்பாரின் இளைய மகன் சையத் உஸ்மான். இவர்தான் இப்போது இவற்றை நிர்வகித்து வருகிறார்.

“விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க அமைச்சரான பொன்முடி, ஒவ்வொரு முறை சென்னைக்குக் கிளம்பும் போதும், `கலைஞர் கருணாநிதிக்குப் பிடிக்கும்’னு முட்டை மிட்டாய் வாங்கிட்டுப் போவார். கிருத்திகா உதயநிதி ஒருமுறை செஞ்சிக்கு வந்திருந்தபோது முட்டை மிட்டாயை ருசிச்சிட்டு, ‘ரொம்ப டேஸ்ட்டா இருக்கு’னு பாராட்டினாங்க. நடிகர் நெப்போலியன் முட்டை மிட்டாயை விரும்பிச் சாப்பிடுவார்” என்கிறார் சையத் உஸ்மான் பெருமையுடன்.

முட்டை மிட்டாய்
முட்டை மிட்டாய்

அனைவரையும் தன் சுவையால் கட்டிப் போட்டிருக்கும் இந்த முட்டை மிட்டாய் பால், வெள்ளைச் சர்க்கரை, நெய், முட்டை ஆகியவற்றை மட்டுமே கொண்டு செய்யப்படுகிறது.

முட்டை மிட்டாய் செய்வதற்குக் கிட்டத்தட்ட 8 மணிநேரம் தேவைப்படுகிறது. ஒரு பேட்ச்சில் 40 கிலோ முட்டை மிட்டாய் தயார் செய்கின்றனர். முதலில் பசும்பாலை ஆறு மணிநேரம்வரை நன்றாகச் சுண்டக் காய்ச்சிக்கொண்டு பால்கோவா தயார் செய்துகொள்கின்றனர். பால்கோவாவை ஆறவைத்து பின்பு அதனுடன் சர்க்கரை, முட்டை, நெய்யைக் கலந்து நன்றாகக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, அவனில் வேகவைத்து, சரியான பதம் வந்தவுடன் வெளியில் எடுக்கும்போது கேக் போன்ற முட்டை மிட்டாய் தயாராகிவிடுகிறது. முட்டை சாப்பிடாதவர்களுக்குக்கூட நாவில் எச்சில் ஊறவைக்கும் இந்த முட்டை மிட்டாய் சூடாக இருக்கும்போது ஒரு சுவையிலும், ஆறிய பிறகு மற்றொரு ருசியிலும் அசத்துகிறது.

‘`முட்டை மிட்டாயைப் பதப்படுத்த நாங்க ரசாயனங்கள் எதுவும் சேர்க்கிற தில்லை. முட்டை மிட்டாய் கிட்டத்தட்ட ஐந்து நாள்கள்வரை கெடாமல் இருக்கும். அதனால, அன்றைக்கு விற்பனையாகும் அளவில் மட்டுமே மிட்டாய்களைச் செய்வோம். போக்குவரத்துச் செலவு அதிகமா இருந்தாலும்கூட, தினம் தினம் புதிய மிட்டாய்களைத்தான் எங்க கிளைகளுக்கு அனுப்பிக்கிட்டிருக்கோம்.வாடிக்கையாளர்கள் எங்க முட்டை மிட்டாயின் தரம் மற்றும் சுவை மேல வெச்சிருக்கும் நம்பிக்கையை நிலைநிறுத்தணும் என்பதே எங்க ஆசை” என்கிறார் சையத் உஸ்மான்.

பால்கோவாவின் மணத்திலும் கேக்கின் வடிவிலும் திரட்டுப்பாலின் சுவையிலும் ஈர்க்கும் இந்த முட்டை மிட்டாயை இதுவரை சுவைக்காதவர்கள் சுவைத்து விடுங்கள்!

பால்கோவாவின் மணத்திலும் கேக்கின் வடிவிலும் திரட்டுப்பாலின் சுவையிலும் ஈர்க்கிறது முட்டை மிட்டாய்!

முட்டை மிட்டாய் செய்வது எப்படி?

தேவையானவை:

  • பசும்பால் - 5 லிட்டர்

  • சர்க்கரை - ஒரு கப்

  • முட்டை - 6

  • நெய் - ஒரு கப்

  • குங்குமப்பூ - இரண்டு டீஸ்பூன்

முட்டை மிட்டாய்
முட்டை மிட்டாய்

செய்முறை:

முதலில் 5 லிட்டர் பசும்பாலை நன்றாகக் காய்ச்சி பால்கோவா தயார் செய்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு, சர்க்கரை, நெய், குங்குமப்பூ (அல்லது வெண்ணிலா எசென்ஸ்) ஆகியவற்றுடன் நாம் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் கோவாவையும் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும். இந்தக் கலவையை நெய் தடவிய ஒரு பாத்திரத்தில் கொட்டி ஓவனில் பொன்னிறம் வரும்வரை வைத்திருந்து எடுத்தால் சுவையான `முட்டை மிட்டாய்’ தயார். சூடான இந்த முட்டை மிட்டாயை வாழையிலையில் வைத்துப் பரிமாறும் போது அதன் சுவை மேலும் கூடும்.