Published:Updated:

மெல்போர்னில் தொடங்கி சிட்னி வரை மூலிகைத் தேநீர் கடை... இந்தியப் பெண் உப்மாவின் சாதனைப் பயணம்!

டீ ( Pixabay )

மெல்போர்னில் களைகட்டும் மூலிகைத் தேநீர் வியாபாரம் - இந்தியப் பெண் உப்மாவின் வெற்றிக்கதை!

மெல்போர்னில் தொடங்கி சிட்னி வரை மூலிகைத் தேநீர் கடை... இந்தியப் பெண் உப்மாவின் சாதனைப் பயணம்!

மெல்போர்னில் களைகட்டும் மூலிகைத் தேநீர் வியாபாரம் - இந்தியப் பெண் உப்மாவின் வெற்றிக்கதை!

Published:Updated:
டீ ( Pixabay )

காபி ரசிகர்களுக்கு சமீபத்திய `காஃபி டே' விஷயம் கொஞ்சம் கசப்பாக இருந்திருக்கலாம். எத்தனையோ வெற்றிகளுக்கும் நினைவுகளுக்கும் சொந்தமான இதுபோன்ற `காஃபி டே'க்களின் தொடக்கம் நம் தெருவோர டீக்கடைகள்தான். அப்படியொரு டீக்கடையை ஆஸ்திரேலியாவில் ஆரம்பித்து, அதை ஒரு பெரிய நிறுவனமாக மாற்றி, வெற்றி பெற்ற ஒரு பெண்மணியின் கதைதான் இது.

Tea
Tea

சண்டிகரைச் சேர்ந்த உப்மா விர்தியின் குடும்பம் அவருக்கு ஒரு வயது இருக்கும்போதே ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது. `இந்தியாவிலிருந்து இந்தியன் வெளியேறினாலும் இந்தியனுக்குள்ளே இருக்கும் இந்தியாவை வெளியேற்ற முடியாது' என்பார்கள். அதைப்போல, உப்மா விர்தியின் அப்பா ஒரு தேநீர்ப் பிரியர் என்பதால், அவர் குடும்பத்தால் கைவிடமுடியாத விஷயங்களில் ஒன்றாகத் தேநீரும் இருந்தது. அதற்கு உப்மாவின் அம்மா தயாரிக்கும் தேநீரின் சுவையும் இன்னொரு காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அம்மாவின் சமையல் ஆர்வம் உப்மாவையும் தொற்றிக்கொண்டது. அத்துடன் அவரும் ஒரு தேநீர்ப் பிரியை என்பதால், தன் அம்மா போடுவதைவிட சுவையாக ஒருமுறை ஒரு டீ போட சிறுவயதில் முயன்றார். இதற்காக எங்கிருந்தோ இஞ்சியும் ஏலக்காயும் சேர்த்து டீ போடக் கற்றிருக்கிறார். சாதாரண இஞ்சி, ஏலக்காய் டீதான் என்றாலும் அதை வீட்டிலிருந்த எல்லோரும் பாராட்டினார்கள். அது முதல் வீட்டில் தேநீர் போடுவது இவரது வழக்கமான வேலையாகிப்போனது. விடுமுறை நாள்களில் இந்தியாவில் தாத்தா வீட்டுக்குப் போகும்போது, தாத்தாவுக்கும் தேநீர் தயாரித்து அசத்தியிருக்கிறார்‌ உப்மா.

இந்தியப் பெண்கள் இவருக்கு `சாய் வாலி' (தேநீர்க்காரி) என்று பட்டப்பெயர் வைத்துள்ளனர்.

உப்மாவின் தாத்தா ஓர் ஆயுர்வேத மருத்துவர் என்பதால், தான் அதிகம் குடிக்கும் தேநீரிலேயே ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் வித்தையாக வெவ்வேறு மூலிகைகளுடன், கபைன் இல்லாத தேநீர் தயாரித்து அருந்துவதன் பயனைச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து, உப்மா பல்வேறு மூலிகைகள் மூலம் எப்படிச் சுவையான தேநீர் தயாரிக்கலாம் என்று பல்வேறு முயற்சிகளைச் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விடுமுறை முடிந்து ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய உப்மா போட்ட தேநீரில் மிதமாக கலக்கப்படும் ஆயுர்வேத மூலிகைகளும் சேர்ந்துகொண்டன. அதற்கு அவரது வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் இருந்த சொந்தங்கள், இந்திய நண்பர்கள் எல்லோருமே அதற்கு அடிமையானார்கள். இதையடுத்து, அவர்கள் வீட்டுக்கு உறவினர்கள் யார் வந்தாலும், `உப்மா கையால் ஒரு டீ!' என்று கேட்பது வாடிக்கையாகவே மாறிப்போனது.

உப்மா - சாய் வாலி
உப்மா - சாய் வாலி

இப்படி ஆரம்பித்தவர் ஒருமுறை தன் சகோதரரின் திருமணத்துக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் விருப்பத்தை நிறைவேற்ற சமையல்காரர்களுடன் சேர்ந்து சமையலறையில் சுவையான தேநீர் தயாரித்து ஆயிரம் பேருக்குப் பரிமாறினார். அப்போது, `இதெல்லாம் பிற்காலத்தில் ஒரு தொழில் தொடங்க உதவும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை' என்கிறார் உப்மா.

உப்மா தனது இருபதுகளின் ஆரம்பத்தில் ஒரு வழக்கறிஞராகப் பட்டப்படிப்பு பயில்வதற்காகவே ஸ்காலர்ஷிப்பில் ஆஸ்த்ரியாவுக்குப் போனார். எங்கு போனாலும் ஆரோக்கியத்துக்காகத் தனது தேநீர் பாக்கெட்டுகளுடன் செல்பவர், அங்கேயும் வெவ்வேறு நாட்டிலிருந்து வந்த தனது அறைத் தோழிகள் அவரவர் பாரம்பர்ய உணவுகளைச் சமைத்து பரிமாறுவர். அப்போது தனது அறைத் தோழிகளுக்காக நமது நாட்டு பெருமை மிகுந்த உணவாகப் பகிர்ந்தது இந்தத் தேநீரைத்தான். அப்போதே அந்த தேநீரின் சுவைக்கு அடிமையான தோழிகளில் இருந்த இந்தியப் பெண்கள் இவருக்கு `சாய் வாலி' (தேநீர்க்காரி) என்று பட்டப்பெயர் வைத்தனர்.

Tea Leaves
Tea Leaves

ஒருமுறை வார இறுதிநாளில் தோழிகள் ஒன்றுசேர்ந்து தேநீர்க்கடையைத் தேடியிருக்கிறார்கள். இத்தனை பேர் இருக்கும் இடத்தில் ஒரு தேநீர்க்கடை இல்லையே என்றபோது `நாமே ஒரு கடையை ஆரம்பித்தால் என்ன?' என்ற யோசனை எழுந்தது. அதை ஆஸ்திரேலியா திரும்பியதும் செயல்படுத்திப் பார்த்தார் உப்மா. இவரது யோசனையைச் சொன்னபோது வீட்டில் உள்ள எல்லோரும் சிரித்தார்கள். `வக்கீலுக்குப் படிச்சுட்டு டீ ஆத்தப் போறியா?' என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ஆனால், உப்மா அதில் உறுதியாக இருந்தார்.

வழக்கறிஞர் வேலை பார்த்தபடியே, தோழிகள் தன்னை செல்லமாக அழைக்கும் `தேநீர்க்காரி' (சாய் வாலி) என்ற பெயரிலேயே மெல்போர்ன் நகரில் 2014-ம் ஆண்டு முதலில் மாலைநேர ஒரு சிறிய தேநீர்க் கடையை ஆரம்பித்தார். டீ சாப்பிட வந்தவர்கள் போக, ஆன்லைன் ஆர்டர்களுக்கும் சப்ளை செய்யத் துவங்கியவர், இரண்டே வருடத்தில், அதாவது 2016-ம் ஆண்டு இந்திய ஆஸ்திரேலிய கலை வியாபாரச் சங்கம் வழங்கிய ஆஸ்திரேலியாவின் சிறந்த பெண் தொழிலதிபர் விருதைத் தனது 26 வயதிலேயே பெற்றார்.

டீ பேக்
டீ பேக்

`என்னால் எது முடியும், எது முடியாது என்பதை நான் மிகத்தெளிவாகப் புரிந்துகொண்டேன். அத்துடன் எனது சவாரியின் தாம்புக் கயிறு என்னிடம்தான் இருக்கிறது என்று முழுமையாகப் புரிந்திருக்கிறேன். பிரச்னை ஏற்படும்போது, அவற்றைச் சவாலாக நினைக்காமல், அதை வாழ்க்கை முறையாகவே ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு என்னைவிட பெரிய சவால் இல்லையென்பதே உண்மை' என்று சொல்பவர், தற்போதுதான் தனது வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு முழு நேர வர்த்தகராக மாறியிருக்கிறார்.

2017-ம் ஆண்டு டீ உலகின் பெருமை மிகுந்த `ராயல் ஹோபர்ட் ஃபைன் ஃபுட் அவார்ட்ஸ்' வாங்கியிருந்தாலும் இன்றைக்கும் அசாம் மற்றும் தமிழகத்தில் ஏழ்மையான நிறுவனங்களில் மட்டுமே தேயிலை கொள்முதல் செய்கிறார். இவரது நிறுவனத்தில், தேயிலையை அடிப்படையாக வைத்து செய்து விற்கப்படும் பொருள்களின் பெயர்களைக் கேட்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

தேநீர் மூலம் இந்தியக் கலாசாரத்தை ஆஸ்திரேலியாவுக்குள் பரப்புகிறேன்
உப்மா

தேயிலைகள், மூலிகைத் தேயிலைகள், கபைன் அற்ற தேயிலைகள், டீ கெட்டில், டீக்கடை கண்ணாடி டம்ளர்கள், விதவிதமான டீ வடிகட்டிகள், மன அமைதிக்கு உதவும் தேயிலை, மணம் கமழும் மெழுகுவத்திகள், தேயிலை குளியல் சோப்கள், பாடி லோஷன்கள், தேயிலை சிரப், தேயிலைச் சாக்லெட்டுகள் என `சாய்வாலி'யின் ஆச்சர்யமூட்டும் விஷயங்கள் நீள்கின்றன.

இவ்வளவு இளம்வயதில் இந்த உயரத்தை அடைய எது காரணம் என்று உப்மாவிடம் கேட்டபோது, "தொழில் நிர்வாகம் என்ற மாபெரும் அனுபவப் பயணத்தில், உங்களது எல்லைகள் வரம்பில்லாதவை என்பதை நன்கு உணர்வீர்கள். தனித்திருக்கும் நிலையிலும், கைவிடப்பட்ட நிலையிலும் உங்களுக்கு உள்ளே இருக்கும் அசைக்க முடியாத தன்னம்பிக்கை உங்களை நிச்சயம் முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்லும்..." என்று உறுதிபடச் சொல்கிறார்.

உப்மா - சாய் வாலி
உப்மா - சாய் வாலி

`தேநீர் மூலம் இந்தியக் கலாசாரத்தை ஆஸ்திரேலியாவுக்குள் பரப்புகிறேன்' என்று பெருமைபடச் சொல்லும் இவர், இன்றும் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடத்தும் `ஆர்ட் ஆஃப் ச்சாய் வொர்க்சாப்!' பயிலரங்கம் மூலம் எண்ணற்ற தேநீர்க் கலைஞர்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.

சமீபத்தில் திருமணம் முடிந்து புதுக்கணவருடன் வந்த உப்மா விர்தியிடம் ஒரு நிருபர், இந்த இளம்வயதிலேயே சிஎன்என், ஃபோர்ப்ஸ், ஐஏபிசிஏ, ஹிந்த் ரத்தன் என்ஆர்ஐ என விருதுகள் வாங்கிக் குவித்தாகிவிட்டது. இன்னும் சாதிக்க வேறு எதும் பாக்கி இருக்கிறதா?' என்று கேட்டபோது, `இருக்கிறது. இந்தத் தேநீரிலேயே இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை தேநீர் என்பது பெண்களுக்கான பானம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது வாடிக்கையாளர்களிலேயே 80 சதவிகிதம் பெண்கள்தான். இனி ஆண்களையும் இந்தியர்கள்போல நல்ல தேநீரின் சுவையை அறியச் செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்போகிறேன். மெல்போர்னைத் தொடர்ந்து சிட்னியில் ஒரு கிளை ஆரம்பித்ததுபோல ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் நிறுவனத்தின் கிளைகளைப் பரப்ப வேண்டும்!' என்றிருக்கிறார் நம்பிக்கையுடன்.

இவை எல்லாவற்றையும்விட தனது பெயரைக் கேட்கும்போதெல்லாம் `ஏன் இந்தத் தமிழர்கள் சிரிக்கிறார்கள்?' என்று வெள்ளந்தியாகக் கேட்கும் உப்மா, தனது பெயருக்கான அர்த்தம், குர்முகி மொழியில் `இறைவனைத் தொழுவதால் கிடைக்கும் அமைதி' என்கிறார். அந்த அமைதி அவர் வாழ்வில் என்றென்றும் நிலவட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism