Published:Updated:

விதவிதமாக... ரகம்ரகமாக... ஈரோட்டில் ஆவி பறக்கும் இட்லி கடைகள்!

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி

விடியற்காலை 4 மணிக்கு அடுப்பில் இட்லிப் பானைகளை வைத்து, இரவு 10 மணிவரை சுடச்சுட இட்லிகளை இறக்கிக்கொண்டே இருக்கின்றனர்.

Idly
Idly ( ரமேஷ் கந்தசாமி )

‘இட்லி’ வார்க்கும் அளவிலும் வார்த்தையளவிலும் சிறிதாக இருந்தாலும், அதன் மவுசும் வரலாறும் அவ்வளவு பெரியது. கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இட்லி உணவாக இருந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. அப்படி, பச்சிளம் குழந்தைகள் முதல் பல் போன தாத்தா பாட்டி வரை அனைவராலும் விரும்பி உண்ணத்தக்க ஓர் உணவாக இருக்கிறது, இட்லி. அப்படிப்பட்ட இட்லிக்காக, ஈரோட்டில் ஒரு மினி சந்தையே இயங்கிவருகிறது.

Hot Idly Preparation
Hot Idly Preparation
ரமேஷ் கந்தசாமி

ஈரோட்டிலிருந்து கருங்கல்பாலையம் செல்லும் சாலையில் இருக்கிறது, சின்னப்பா வீதி. எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இந்தச் சாலையில், கூடுதல் பரபரப்போடு இயங்கிவருகின்றன, சுமார் 10-க்கும் மேற்பட்ட இட்லிக் கடைகள். இங்கு, விடியற்காலை 4 மணிக்கு அடுப்பில் இட்லிப் பானைகளை வைத்து, இரவு 10 மணிவரை சுடச்சுட இட்லிகளை இறக்கிக்கொண்டே இருக்கின்றனர். மதியம் சில மணி நேரம் மட்டும், இடைவெளி விடுகின்றனர். அந்த நேரத்திலும் இட்லி தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகள்தான் அதிகமிருக்கிறது. சுடச்சுட புஸுபுஸுவென இங்கு தயாரிக்கப்படும் இட்லிதான் ஈரோட்டிலுள்ள பெரும்பாலான உணவகங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

அதுபோக, இந்த இட்லியை ஒருபிடி பிடிப்பதற்கு காலை, மாலை வேளைகளில் ஒரு பெரும் கூட்டம் கடைகளில் வரிசைகட்டுகிறது. அதுபோக திருமண நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்களுக்கும் இங்கிருந்து இட்லி அனுப்பிவைக்கப்படுகிறது. முகூர்த்த நாள்களில், இந்தப் பகுதியிலுள்ள ஒவ்வொரு கடையிலும் 5 ஆயிரத்திற்கும் குறைவில்லாத இட்லிகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Idly supply to hotels
Idly supply to hotels
ரமேஷ் கந்தசாமி

உணவகங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு வெறும் இட்லி மட்டும் அதிக அளவில் வேண்டுமென்றால், 3 ரூபாய்க்கு கொடுக்கின்றனர். சட்னி, சாம்பாரோடு வேண்டுமென்றால், ஒரு இட்லியின் விலை 6 ரூபாய். அரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து அரைத்து மாவாக்கி, இட்லி செய்வதால் கூடுதல் நேரமாவதுடன் அதிக செலவும் ஏற்படுமென்பதால், பலரும் இந்த மினி இட்லி மார்க்கெட்டை அணுகுகின்றனர்.

இட்லிக் கடைக்கென வெப்சைட் ஆரம்பித்து, வியாபாரத்தில் பட்டையைக் கிளப்பிவரும் ‘பிரவீன் இட்லீஸ்’ கடையின் உரிமையாளரான பிரவீன் குமாரை சந்தித்துப் பேசினோம்.

“1983-ல் எங்க பாட்டி இந்தக் கடையை ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் அம்மா, இப்போ நான் என இந்த இட்லி வியாபாரத்தை சிறப்பாகச் செஞ்சிக்கிட்டு இருக்கோம். தரமான அரிசி, உளுந்து போன்றவற்றைப் பயன்படுத்தி, வீட்டு இட்லியைப் போல் நாங்க கொடுக்கிறோம். எங்களுடைய இட்லியை சாப்பிட்டா, உடல்நலக் கோளாறு எதுவும் ஏற்படாது.

‘பிரவீன் இட்லீஸ்’ உரிமையாளர் பிரவீன் குமார்
‘பிரவீன் இட்லீஸ்’ உரிமையாளர் பிரவீன் குமார்
ரமேஷ் கந்தசாமி

எங்ககிட்ட சாப்பிட்டுப் போறவங்க, அவங்களுக்குத் தெரிஞ்சவங்ககிட்ட சொன்ன விதத்துலயே எங்களுக்கு நிறைய கஷ்டமர்ஸ் வந்திருக்காங்க. அந்த வகையில் பெங்களூரு, சென்னை எனப் பல பகுதிகளிலும் எங்களுடைய இட்லிக்காக வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வெளியூர் வாடிக்கையாளர்களுக்காகவே வெப்சைட் ஆரம்பித்து, அதன்மூலம் ஆர்டர் பெறுகிறோம்.

தினமும் சாதாரண இட்லிகளை மட்டும்தான் தயாரிக்கிறோம். ஆனால், ஆர்டருக்கு ஏற்றாற்போல் அந்த இடத்திற்கே சென்று மினி இட்லி, ரவா இட்லி, ராகி இட்லி, நெய் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, வெஜிடபிள் இட்லி போன்றவற்றையும் செய்து கொடுக்கிறோம். 20 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் நடைபெற்ற செந்தமிழ் மாநாட்டில், என்னுடைய பாட்டி இட்லி செய்து கொடுத்திருக்கிறார்.

Student buying Idly
Student buying Idly
ரமேஷ் கந்தசாமி

ஈரோட்டிற்கு வந்திருந்த மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு ஒருமுறை இட்லி செய்து கொடுத்திருக்கிறோம். அதுபோக, கட்சி மாநாடுகள் பலவற்றிற்கும் இட்லி தயாரித்துக் கொடுத்துவருகிறோம். தரமான பொருளைக் கொடுத்தால் மக்கள் எங்கிருந்தாலும் தேடி வருவார்கள் என்பது 100 சதவிகிதம் நிதர்சனம். அடுத்தகட்டமாக, எங்களுடைய இட்லி மாவை பாக்கெட் செய்து மார்க்கெட் செய்யவிருக்கிறோம்” என்றார்.