Published:Updated:

`இதெல்லாம் பண்ணா கறிவேப்பிலை வீணாகாம தடுக்கலாம்!' - நிபுணரின் கிச்சன் டிப்ஸ்

Curry Leaves
Curry Leaves ( Photo: Vikatan / Rajendran.L )

`கறிவேப்பிலை இல்லேன்னா அது எப்படிங்க சரி ஆகும்' என நினைப்பவர்களுக்கு டிப்ஸ் தருகிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.

`யாரையாவது இனி வெங்காயம்னு திட்டுவியா' எனும் அளவுக்கு ஒரு காலத்தில் வெங்காயத்துக்குத் திடீர் மவுசு எகிறியிருந்தது. முதல் இடத்தைத் தக்கவைத்து இன்னும் மவுசிலேயே இருக்கும் வெங்காயத்துக்குப் போட்டியாகக் களம் இறங்கியிருக்கிறது கறிவேப்பிலை. `இவனுக்கு வந்த வாழ்வைப் பார்த்தியா' எனத் திடீரென பெரிய ஆள் ஆனவர்களைப் பற்றிப் பேசக்கேட்டிருப்போம்.

அப்படியாக, கொசுறாக மதிக்கப்பட்ட கறிவேப்பிலை ஓவர் நைட்டில் பெரிய ஆளாகிவிட்டது. ருசித்துச் சாப்பிடும்போது `அட இது என்ன' என வாயில் தட்டுப்பட்டு தட்டின் ஓரத்துக்குச் சென்றுவிடும் கறிவேப்பிலையை அதன் அருமையைப் புரிந்துகொண்டு ஒவ்வோர் இணுக்காகக் கிள்ளிப்போடும் அளவுக்கு நிலை மாறிவிட்டது.

vegetables
vegetables

வெங்காயம் விலை ஏறியதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று போக்குவரத்துச் செலவு. பெட்ரோல் டீசல் விலை எகிறியதன் விளைவு நிச்சயம் காய்கறி விலையில் ஒரு காட்டு காட்டும் என எதிர்பார்த்தது சரிதான். ஆனால், அது சந்தையில் கொசுறாகத் தரப்பட்டுவந்த கறிவேப்பிலையின் தலையெழுத்தையே ஓவர் நைட்டில் மாற்றியிருப்பதுதான் இங்கே `ட்விஸ்ட்.' கோயம்பேடு சந்தையில் கறிவேப்பிலை கிலோ ரூபாய் 100-ஐ தாண்டிவிட்டது. இனிமேல் கொசுறாகக்கூட கறிவேப்பிலையைக் கேக்காதீங்க எனச் சொல்லும் நிலையும் வந்துவிட்டது.

தட்டில் கண்டதும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிபவர்கள்கூட கறிவேப்பிலை தொக்கை விரும்பிச் சாப்பிடுவார்கள். காய்கறி விலை ஏறியது சோகமான செய்திதான். இருந்தாலும், பிடித்த விஷயத்துக்காகச் செலவு செய்வதுதானே சரி! காய்கறி வாங்கச் செல்லும்போது கிலோ கணக்கில் காய்கறிகள் வாங்கும் நேரம் தொக்கு செய்வதற்கும் தேவையான அளவு கறிவேப்பிலையையும் வாங்கிக்கொள்ளலாம்.

சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்
சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்

பல்க்காக கறிவேப்பிலை வாங்குவதால் கவலைப்பட வேண்டாம். தொக்காக மட்டும் செய்யாமல் தாளிப்பதற்கும் தேவைக்கேற்றது போலச் சமையலில் சேர்த்துக்கொள்ளவும் ப்ரிசர்வ் செய்து வைத்துக்கொள்ளலாம். மணத்துக்காகத்தானே சேர்க்கிறோம், சேர்த்தால் என்ன சேர்க்காவிட்டாலென்ன என நினைப்பவர்களுக்குப் பிரச்னை இல்லை. `கறிவேப்பிலை இல்லேன்னா அது எப்படிங்க சரி ஆகும்' என நினைப்பவர்களுக்கு டிப்ஸ் தருகிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.

``வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்க கறிவேப்பிலையை அரைத்து வைக்கலாம், பொடியாக்கி வைக்கலாம். இலையை அரைத்து ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்துக்கொண்டால் ஏறக்குறைய 10 நாள்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். பொடியாக்கி வைத்தால் வாரக்கணக்கில் ப்ரிசர்வ் செய்து வைக்கலாம். பொடியாக்குவதற்கு லேசான வெயிலில் காற்றுபட வைக்கலாம், மைக்ரோ வேவ் அவனிலும் லேசாகச் சூடுபடுத்தி பின் பொடியாக்கிக்கொள்ளாம். ஆனால், அரைத்து வைத்துப் பயன்படுத்தும்போது வரும் அதே மணமும் வாசனையும் பொடியாக்கி வைக்கும்போது நீண்ட நாள்கள் கிடைக்காது.

என்னதான் அரைத்து வைத்தாலும் பொடியாக்கி வைத்தாலும் தாளிக்கும்போது இரண்டு தழை சேர்த்துப் போடுகிறபோது கிடைக்கும் மணமும் ருசியும் தனிதானே! நல்ல மணமும் ஃப்ளேவரும் கறிவேப்பிலையை சூடான எண்ணெய்யில் போடும்போது கிடைப்பதுபோல வேறு என்ன செய்தாலும் கிடைக்காது. தாளிக்கும்போது கறிவேப்பிலையை அரைத்த கலவையாகவோ பொடியாகவோ சேர்ப்பதைவிட இலைகளாகச் சேர்ப்பதுதான் பெஸ்ட்.

கொத்து கறிவேப்பிலையை கவரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் மாதக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்கும். இலைகளாக உதிர்த்தும் டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இப்படி எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது உடனேயே எடுத்து தாளிப்பதற்கும் வசதியாக இருக்கும்.

Curry Leaves
Curry Leaves
Photo: Vikatan / Dixith
விண்ணை முட்டிய கறிவேப்பிலை விலை... பின்னணி என்ன?

கறிவேப்பிலையை `கரு கரு' என முடி வளர தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்யில் மட்டுமல்லாமல் சாப்பாட்டிலும் சேர்த்துக் கொள்ளச் சொல்வார்கள். அதனாலேயே கொசுறாகக் கிடைக்கும் கறிவேப்பிலையை முடி வளரணுமே என வேண்டா வெறுப்பாகச் சாப்பிடுவோம். இப்போது காசு வேற கொடுத்து வாங்குகிறோமே, இன்னும் பயபக்தி வரத்தானே செய்யும்!"

அடுத்த கட்டுரைக்கு