Published:Updated:

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - மாதுளை - பகுதி-2

மாதுளை
பிரீமியம் ஸ்டோரி
மாதுளை

தமிழர்களும் மாதுளையும்

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - மாதுளை - பகுதி-2

தமிழர்களும் மாதுளையும்

Published:Updated:
மாதுளை
பிரீமியம் ஸ்டோரி
மாதுளை
சங்ககாலத்தில் தமிழர்கள் விரும்பி உண்ட கனிகளில் மாதுளையும் ஒன்று. மாதுளம் பிஞ்சும் மாதுளங்காயும் சங்ககாலச் சமையலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பெரும் பாணாற்றுப்படையின் பாடல் ஒன்று இப்படி ஒரு சமையல் குறிப்பைத் தருகிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்

துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து…

`மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும் கறிவேப்பிலையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து சமைத்த கறி' என்பது இதற்குப் பொருள். அதேபோல மாதுளங்காய் ஊறுகாயும் அன்று புழக்கத்தில் இருந்திருக்கிறது. அன்றைக்கு முல்லை நிலப்பகுதிகளில் தோட்டங்களில் மாதுளை விளைவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று வகை மாதுளைகள் இருந்திருக்கின்றன. இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, துவர்ப்பு மாதுளை.

கி.பி 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழில் மாதுளை குறித்த ஒரு பாடல் இருக்கிறது.

… ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளம் கனியை

ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா.

அதாவது, பார்வதி விநாயகரின் கையில் மாதுளைக்கனியைக் கொடுத்ததாகப் பாடுகிறார். அதேபோல 16, 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிலைகள், ஓவியங்கள் சிலவற்றில் அவர் கையில் மாதுளை இருப்பதையும் பார்க்க முடியும். மாதுளம் பூக்களும், மாதுளை இலைகளும் விநாயகருக்கு அர்ச்சனை செய்ய உகந்தவையாகக் கருதப்படுகின்றன.

நவராத்திரி காலத்தில் எங்கெங்கும் ஒலிக்கும் அபிராமி அந்தாதியின் முதல் பாடலிலும் இறுதிப் பாடலிலும் மாதுளை மின்னுகிறது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதியின் முதல் பாடல் வரிகள் இவை.

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை...

`உதயசூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுளை மொட்டைப் போலவும் விளங்கும் வடிவுடையவள் அபிராமி' என்று உருகும் அபிராமி பட்டர்,

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை…

என்று கடைசிப் பாடலில் வர்ணித்துப் பாடுகிறார். பெரியாழ்வாரும் கண்ணனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டும்போது இப்படிப் பாடுகிறார்.

உடையார் கனமணியோடு ஒண்மா

துளம்பூ இடைவிரவிக் கோத்த...

– அதாவது பெருஞ்செல்வம் உடையவர் களிடம் மட்டுமே இருக்கக் கூடிய சிறப்பு வாய்ந்த மணிகளோடு அழகிய மாதுளம்பூவையும் அரைஞாண் கயிற்றில் கோத்திருந்ததாகச் சொல்கிறார்.

சிலப்பதிகாரத்தில் கொலைக்களக்காதையில், மாதவி வீட்டுக்கு அடைக்கலமாகச் சென்ற நேரத்தில் கண்ணகி, கோவலனுக்கு உணவு சமைக்கிறாள். அதற்காக மாதவி, கண்ணகியிடம் முதிர்ந்த பலாக்காய், வளைந்த வெள்ளரி, மாம்பழம், வாழைப்பழம்,

செந்நெல் அரிசி, பால், நெய் உடன் மாதுளையின் இளங்காயையும் தந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய்

வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்

மாவின் கனியொடு வாழைத் தீங்கனி

சாலி யரிசி தம்பால் பயனொடு…

ஆக, மாதுளை அயல் தேசத்திலிருந்து வந்த கனிதான் என்றாலும் பண்டைக் காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டது என்று சொல்லலாம். `மாதுள்ளம் போல மயக்கும் மாதுளை' என்பது தமிழறிஞர் கி.வா.ஜ-வின் கூற்று. மாது என்றால் பெண். அவள் உள்ளத்தில் உள்ளதை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. மாதுள்ளத்தைப் போன்ற பழம் மாதுளம்பழம். இதனுள் இருக்கும் முத்துகள் வெளியில் இருந்து பார்க்கும்போது தெரியாது என்பது போன்ற ஒரு விளக்கமும் மாதுளையின் பெயருக்கு உண்டு.

ஆரோக்கியத்தில் மாதுளை

மாதுளையின் பழம், பூ, பட்டை, பிஞ்சு ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மாதுளைக்கு இருமலை, வறட்டு இருமலைக் குணப்படுத்தும் சக்தி உண்டு. நோயால் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமானவர்கள், அதற்குப் பிறகு உடல் தேற மாதுளைச்சாற்றில் தேன் கலந்து தினமும் சாப்பிட்டால் சில நாள்களிலேயே ஆரோக்கியமும் தெம்பும் மீளும். மாதுளைச்சாறு ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், புதிய ரத்தம் ஊறவும் உதவுகிறது.

ஆயுர்வேதத்திலும் சித்த வைத்தியத்திலும் மாதுளம்பூ அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. தலைவலி, உடல் சூடு, இருமல், பெண்களுக்கான பிரச்னைகள் என்று பல நோய்களைத் தீர்க்க மாதுளம்பூ மருந்தாக உபயோகப்படுகிறது. மாதுளம்பழத் தோலும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

மாதுளங்க ரசம் அல்லது மாதுளங்க ரசாயனம் (மாதுளை மணப்பாகு என்றும் சொல்வார்கள்) பசியைத் தூண்டும், ஹீமோகுளோபினை அதிகரிக்கும், உடல் எடையை அதிகரிக்கும், கர்ப்பப்பையை வலுவாக்கும். கர்ப்பிணிகளுக்கு மசக்கை வாந்தியைக் கட்டுப்படுத்தும் பாரம்பர்யமான மருந்து இது. இளமையைக் கட்டிக் காக்கும் தன்மை மாதுளைக்கு உண்டு. மாதுளை நம்மை மார்க்கண்டேயனாக வைக்கும் என்பது முக்கியமான தகவல்.

மாதுளை
மாதுளை

மாதுளையும் கலாசாரமும்

ஐரோப்பாவின் கிழக்கே, ஆசியக் கண்டத்தில் மேற்கே அமைந்துள்ள நாடு அசர்பைஜான். இங்கே ஒவ்வோர் அக்டோபர் மாதமும் மாதுளைக்கென தேசியத் திருவிழா கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகல ஊர்வலத்துடன் இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. மாதுளைச்சாறு குடிக்கும் போட்டி, மாதுளை உரித்து உண்ணும் போட்டி, அளவில் பெரிய மாதுளையை விளைவித்த விவசாயிகளுக்கான போட்டி என்று விதவிதமாக நடத்துகிறார்கள். மாதுளை கொண்டு தயாரிக்கப்படும் ஒருவிதமான சாற்றை Narsharab என்று அழைக்கிறார்கள். இதை கபாப் உணவுகளுடன் சேர்த்துப் பரிமாறுகிறார்கள்.

மாதுளை சார்ந்த நம்பிக்கைகள், குறிப்பாகத் திருமணச் சடங்குகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. பெர்சியர்கள் திருமணத்தில் மணமக்கள் முன்பாக ஒரு கூடை நிறைய சிவந்த மாதுளைகளை வைக்கிறார்கள். அதற்கு ‘இனிமையான வருங்காலம் அமையட்டும்’ என்று வாழ்த்துவதாகப் பொருள். சீன மக்கள் திருமணத்துக்குப் பரிசாக, மாதுளை முத்துகள் சிதறிக் கிடப்பதாகப் புகைப்படங்களைப் பரிசளிக்கிறார்கள். அதற்கு ‘மாதுளை முத்துகள் போன்ற குழந்தைகளைப் பெற்று நீடூழி வாழ்க’ என்று அர்த்தம். துருக்கியில், திருமணம் முடிந்ததும் மணமகள் தன் கையால் மாதுளையை எடுத்துத் தரையில் வீச வேண்டும். அப்போது மாதுளை உடைந்து எத்தனை முத்துகள் சிதறுகின்றனவோ, அத்தனை குழந்தைகள் அந்தத் தம்பதிக்குப் பிறக்கும் என்று ஒரு நம்பிக்கை. மத்திய தரைக்கடலில் அமைந்திருக்கும் கிரீட் தீவில், திருமணத்துக்குப் பின் மணமகன், மணமகளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றதும் ஒரு கைப்பிடி நிறைய மாதுளை முத்துகளை அவள் கையில் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. ‘நம் வாழ்க்கையும் இதுபோல வளமையாக, இனிமையாக இருக்க வேண்டும்’ என்று இதற்கு அர்த்தம்.

உணவாக மாதுளை

Super Fruit என்பதே மாதுளைக்கு இடப்பட்டிருக்கும் நவீன உணவியல் பெயர். உலக அளவில் மாதுளை, சாறு வடிவில்தான் அதிகம் உட்கொள்ளப்படுகிறது. குறிப்பாக இந்தியர்கள், அர்மெனியர்கள், பெர்சியர்கள், இஸ்ரேலியர்கள் தங்கள் உணவில் மாதுளைச் சாற்றை அதிகம் சேர்த்துக்கொள்கிறார்கள். மாதுளைகொண்டு தயாரிக்கப்படும் அடர்த்தியான Grenadine சிரப், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் காக்டெயில் மற்றும் இதர பானங்களில் கலந்து உண்ணப்படுகிறது.

Fesenjn - இது பெர்சிய பாரம்பர்ய உணவு. வாத்து அல்லது கோழிக்கறியுடன் வால்நட்ஸ் சேர்த்து, மாதுளைச் சாற்றில் அதை வேக வைத்துச் சமைக்கும் பதார்த்தம். Ash-e anar என்ற மாதுளை சூப்பும் பாரசீக உணவில் முக்கியமானது. தவிர, அவர்கள் தங்களின் பல்வேறு உணவுகளில் மாதுளை முத்துகளைத் தூவிப் பரிமாறுகிறார்கள்.

மாதுளை முத்துகளின் சதையை நீக்கி, அதன் விதைகளை மட்டும் காயவைத்து எடுத்தால் அதன் பெயர் அனார்தனா

(Anardana). இது பாகிஸ்தானிய உணவுகளில் சுவைக்காகச் சேர்க்கப்படுகிறது. இந்தியாவில் வடமாநிலங்களில், சட்னி மற்றும் கறி தயாரிப்புகளில் இந்த அனார்தனாவைக் கூடுதல் சுவைக்காகச் சேர்க்கிறார்கள். மிக்ஸர், சாக்லேட், ஐஸ்க்ரீம், உலர் பருப்பு கலவை, சாலட் போன்றவற்றிலும் கூடுதல் சேர்மானமாக அனார்தனா பயன்படுத்தப்படுகிறது.

துருக்கியர்கள், மாதுளை கொண்டு தயாரிக்கப்படும் சாஸை, சாலட்களிலும் இறைச்சி சமைக்கும்போதும் சேர்த்துக் கொள்கிறார்கள். இஸ்ரேலில் Tabbouleh என்ற சாலட்டில் மாதுளைதான் பிரதானமானது. Chiles en nogada - இது மெக்ஸிகோவின் பாரம்பர்ய உணவு. மெக்ஸிகோவின் தேசியக் கொடியைப் பிரதிபலிக்கும் விதமாகச் செய்யப்படும் பதார்த்தம். இதில் சிவப்பு நிறத்தைப் பிரதிபலிக்க மாதுளை முத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. Kollivozoumi என்ற கோதுமை கொண்டு தயாரிக்கப்படும் கிரேக்கத்தின் பாரம்பர்ய உணவில் மாதுளை முக்கியமான சேர்மானமாக இருக்கிறது. ஐரோப்பிய கத்தோலிக்கர்கள் புனித உணவாகக் கருதும் Koliva என்ற கோதுமை பதார்த்தத்திலும் மாதுளை சேர்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் உலகில் மாதுளையின் தொட்டில் என்ற பெருமை ஆப்கானிஸ்தானுக்கு இருந்தது. இன்றைக்கு உலகில் அதிக அளவில் மாதுளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். இந்தியாவின் மொத்த மாதுளை உற்பத்தியில் சுமார் 60 சதவிகிதத்துக்கும் மேல் மகாராஷ்டிராவில் விளைகிறது. அடுத்த இடங்களில் கர்நாடகம், ஆந்திரம், குஜராத் மாநிலங்கள் இருக்கின்றன.

இந்தியாவிலிருந்துதான் அதிக அளவில் மாதுளை ஏற்றுமதி பல நாடுகளுக்கும் வருடம் முழுவதும் நடைபெறுகிறது. இந்தியா – மாதுளையின் தேசமும்கூட.

மாதுளைச் சொற்கள்

Lythraceae என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்த மாதுளையின் தாவரவியல் பெயர், Punica granatum. Pomegranate என்ற ஆங்கில வார்த்தையின் மூலம், பண்டைய லத்தீன் வார்த்தையான Pmum Grntum என்பதில் இருந்து தோன்றியது. Pmum என்றால் ஆப்பிளைக் குறிப்பது. Grntum என்றால் விதைகள். விதைகள் கொண்ட ஆப்பிள் என்பதே இதற்குப் பொருள். இதுவே பழைய பிரெஞ்சு மொழியில் Pomme-grenade என்று குறிக்கப்பட்டது. இதுதான் ஆங்கிலச் சொல்லான Pomegranate ஆக மருவியது.

Raktakusuma, Dadimi, Dhalimba, Shukapriya, Dantabija - இவையெல்லாம் மாதுளையைக் குறிக்கும் சம்ஸ்கிருதச் சொற்கள். இந்தியில் Anra. தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம், கழுமுள், மாதளை, கொடிமாதுளை, மாதுளங்கம் - இவையெல்லாம் மாதுளையைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொற்கள்.