லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கேழ்வரகு

கேழ்வரகு
பிரீமியம் ஸ்டோரி
News
கேழ்வரகு

‘அரிசியாகிய நானே உயர்ந்தவன். சிறந்தவன். கடவுளுக்குப் படைக்கக் கூடிய தகுதி கொண்டவன். உயரிய என்னைத் தேர்ந்தெடுக்காமல் ராகியைத் தேர்ந்தெடுப்பது எந்த விதத்தில் நியாயம்?’

ஆடி மாதம் - அம்மன் கோயில் - திருவிழா - கூழ் ஊற்றுதல்... இவை தொட்டுத் தொடரும் தமிழர் பாரம்பர்யம். இதற்குப் பின் உள்ள கலாசாரக் காரணம் என்ன?

அந்தக் காலத்தில் நம் முன்னோர் பருவ நிலைகளைப் பொறுத்து, தம் வாழ்க்கை முறையைத் தகவமைத்துக் கொண்டார்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் கோடை வெயில் வாட்டி எடுக்கும். அந்தப் பருவத்தில் கடும் வெப்பத்திலும் அதிக தண்ணீர் இன்றி, தாக்குப்பிடித்து வளரும் கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை வயலில் விதைத்தார்கள்.

ஆடி மாதம் வரும்போது, அந்தச் சிறுதானியங்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும். ஆனால், அப்போது நெல்லோ, பிற தானியங்களோ இருக்காது. வறுமை சூழ ஆரம்பிக்கும். பருவத்தே நன்றாக மழை பெய்தால்தான் பயிர் செய்ய முடியும். ஆடிப்பட்டம் தேடி விதை. அப்படி ஆடிப்பட்டத்தில் விதைப்பதற்கு முன், மாரியம்மனின் மனத்தைக் குளிரவைக்க வேண்டும். அப்போதுதான் மாரி, மாரியால் மண்ணைக் குளிர வைப்பாள். அதனால் அம்மன் கோயில்களில் ஊர் மக்கள் கூடுவார்கள். அம்மனுக்கு விழா எடுப்பார்கள். கோடையில் விளைந்த சிறுதானியங்களை வைத்து கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். அம்மன் மனமும், மக்கள் வயிறும் நிறைய மழையும் மண்ணை நிறைக்கும் என்பது மக்களின் பக்தி சார்ந்த நம்பிக்கை.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கேழ்வரகு

யாழ்ப்பாணத்தில் ‘குரக்கன்’ என்றும், தமிழ்நாட்டில் சேலம் பகுதியில் ‘ஆரியம்’ என்றும், தென்தமிழ்நாட்டில் ‘கேப்பை’ என்றும், திருச்சி வட்டாரத்தில் ‘ராகி’ என்றும் அழைக்கப்படும் கேழ்வரகு, நம் மண்ணோடும், மக்களின் கலாசாரத்தோடும் இரண்டறக் கலந்த உணவு. ஆனால், நம் மண்ணைப் பூர்வீகமாகக்கொண்ட பயிரல்ல.

Eleusine coracana - இது கேழ்வரகின் தாவரவியல் பெயர். இது ஒரு பூக்கும் தாவரம். ஆண்டுக்கொரு முறை விளைவது. சுமார் 5000 வருடத்துக்கும் முற்பட்ட பழைமையான தானியப் பயிர். கேழ்வரகின் பூர்வீகமாகச் சொல்லப்படுவது, கிழக்கு ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலைப்பகுதிகள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் எத்தியோப்பியா மற்றும் உகாண்டாவின் மேட்டு நிலங்கள். இந்தப் பிரதேசங்களில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே கேழ்வரகு பயிரிடப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன. இன்றைக்கும் ஆப்பிரிக்க நாடுகளில், குறிப்பாக உகாண்டாவில் கேழ்வரகை மையமாகக்கொண்ட பல சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஆப்பிரிக்காவிலிருந்துதான் இந்தியத் துணைக் கண்டத்துக்குள் கேழ்வரகு நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கி.மு 2000-க்கும், கி.மு 1500-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த கேழ்வரகுப் பரவல் நடைபெற்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எப்படி?

ஆப்பிரிக்காவின் வடகிழக்குக் கடல் பகுதியையும், இந்தியாவின் மேற்குக் கரைப் பகுதியையும் இணைக்கும் வணிகப் பாதையின் பெயர் Sabaean Lane. இதன் வழியாக நடந்த கப்பல் வணிகத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து தங்கம், மரகதம், தந்தம் போன்றவற்றை நாம் இறக்குமதி செய்தோம். அப்படியே தானியப் பொக்கிஷமான கேழ்வரகும் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம். கேழ்வரகு மட்டுமின்றி, காராமணி, கம்பு உள்ளிட்ட வேறு சில தானியங்களும் ஆப்பிரிக்க மண்ணிலிருந்து இந்திய மண்ணுக்குள் இவ்விதம் விதையூன்றின.

வடகர்நாடகாவில், துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள ஹல்லூர் என்ற பகுதியில் கி.மு 2300-ம் ஆண்டைச் சேர்ந்த பழைமையான கேழ்வரகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள மிகப் பழைமையான கேழ்வரகு இதுவே. இந்தப் பிரதேசத்தின் காட்டுப் பகுதிகளில் கேழ்வரகு விளைந்ததற்கும், வயல்களில் பயிரிடப்பட்டதற்கும் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. கர்நாடகப் பகுதிகளில் இருந்துதான், இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு கேழ்வரகு பரவியது. அதனால்தான் இன்றும் கேழ்வரகு உற்பத்தியில் கர்நாடகம் முன்னணியில் இருக்கிறது. கர்நாடக உணவுக் கலாசாரத்தில் கேழ்வரகு முதன்மையானது.

கர்நாடக மக்கள் மத்தியில் ராகி பற்றிய புராணக் கதை ஒன்று புழக்கத்தில் இருக்கிறது.

14 வருட வனவாசம் முடிந்த பிறகு, ராமர் ஜம்மென புஷ்பக விமானம் புக் செய்து அதில் அயோத்திக்கு வந்திறங்கினார். அயோத்தி மக்கள் அதைக் கோலாகலமாகக் கொண்டாடி னார்கள். அந்த வைபவங்கள் எல்லாம் முடிந்தபிறகு, அனுமன் கிஷ்கிந்தைக்குச் செல்ல விரும்பினார். அதற்கு முன்பாகக் கொஞ்சம் ராகியைக் கையில் எடுத்துக்கொண்டு செல்ல நினைத்தார். உடனே, அது அரிசியின் ஈகோவைத் தூண்டியது.

‘அரிசியாகிய நானே உயர்ந்தவன். சிறந்தவன். கடவுளுக்குப் படைக்கக் கூடிய தகுதி கொண்டவன். உயரிய என்னைத் தேர்ந்தெடுக்காமல் ராகியைத் தேர்ந்தெடுப்பது எந்த விதத்தில் நியாயம்?’

என்று அனுமனிடம் சண்டைக்கு வந்தது அரிசி.

ராகிக்கும் கோபம் வந்துவிட்டது. ‘மக்கள் அதிகம் விரும்புவது என்னைத் தான். நீங்கள் என்னையே கொண்டு செல்லுங்கள்’ என்று அனுமனிடம் சொன்னது ராகி. என்ன செய்வதென்று புரியாமல் தவித்த அனுமன், பிரச்னையை ராமரிடம் கொண்டு சென்றார். கொஞ்சம் யோசித்த ராமர், ‘இந்தப் பிரச்னையை இந்திரன் தீர்த்து வைப்பதே சரியாக இருக்கும். அதுவரை அரிசியும் ராகியும் காத்திருக்கட்டும்’ என்று இரண்டு தானியங்களையும் ஓர் இடத்தில் சிறை வைத்தார்.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கேழ்வரகு

இந்திரன் மற்ற வேலைகளில் படு பிஸியாக இருந்ததால் இந்த அரிசி, ராகி பஞ்சாயத்துக்கு உடனே கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்து இந்திரன் அயோத்திக்கு வந்தார். அப்போது ராமர் அரிசியையும் ராகியையும் விடுதலை செய்தார். அந்தத் தானியங்களுக்கிடையேயான ஈகோ மோதலை இந்திரன்முன் வைத்தார். ‘நீங்களே சொல்லுங்கள். அரிசியா, ராகியா... எது உயர்ந்தது?’

இந்திரன் யோசிக்கவே இல்லை, பட்டெனத் தீர்ப்பைச் சொன்னார். ‘என்றைக்கும் அரிசியைவிட ராகியே உயர்ந்தது!’

காரணம், இந்திரனுக்காகக் காத்திருந்த காலத்தில் அரிசி புழுத்துப் போய்விட்டது. வண்டுகள் அரிக்க, பொலிவு இழந்து நின்றது. ஆனால், ராகி தன்னுடைய பொலிவும் வளமும் மாறாமல் அப்படியே இருந்தது. இதுவே இந்திரத் தீர்ப்பின் பின்னணியில் இருந்த நியாயம்.

இது, செவிவழிக் கதையோ, புராணக் கதையோ... இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இந்தக் கதை மூலம் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் 100 சதவிகிதம் உண்மையானது.

ராகி, பத்து வருடங்கள் ஆனாலும் கெட்டுப்போகாமல், பூச்சி அரிக்காமல் அப்படியே இருக்கும். வரலாற்றில் பதிவாகியிருக்கும் பல பஞ்சங்களில் கேழ்வரகு தான் மக்களுக்கான முக்கியமான உணவாக இருந்திருக்கிறது. எண்ணிலடங்கா உயிர்களைக் காத்திருக்கிறது.

குப்தர் காலத்தில், அதாவது கி.பி நான்கு - ஆறாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட Bower Manuscript என்ற சம்ஸ்கிருத மருத்துவ நூலில் கேழ்வரகு பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. தவிர, நம் சங்க இலக்கியங்களிலும் வரகு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் குறித்த செய்திகள் காணப்படுகின்றன.

ஆடு, மாடு மேய்ச்சல் தொழிலை மையமாகக் கொண்ட முல்லை நில மக்கள் கேழ்வரகு, சோளம், அவரை, துவரை, சாமை, கடலை ஆகியவற்றைப் பயிரிட்டனர்.

எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற

சில் விளை வரகின்...

போர் வீரனின் பரிதாப நிலையைச் சொல்கிறது இந்த புறநானூற்று அடிகள். `சிறிய நிலம்தான். எருது கொண்டு உழ அவசியமின்றி, அந்த வீரன், வெறும் காலாலேயே உழுது கேழ் வரகு விதைக்கிறான்' என்பது இதன் பொருள்.

வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்

இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன...

`அந்த வீட்டில் இருந்த வரகு, தினை எல்லாம் பரிசிலர்கள் உண்டதால் தீர்ந்து போயின.' இந்தப் புறநானூற்று அடியில் வரகு என்பது வரகு, கேழ்வரகு இரண்டையும் பொதுவாகக் குறிக்கிறது.

விளைந்த கேழ்வரகுக் கதிர் காற்றில் அசைந்து ஆடும் அழகைக் கண்ட கவியுள்ளம் கொண்ட ஒரு பிரகஸ்பதி அதற்கு, ‘நடனமாடும் தானியம்’ என்ற அற்புதமான பெயரை வைத்துள்ளார். அதைக் குறிக்கும் சம்ஸ்கிருதச் சொல் Nrtta-Kondaka. தவிர Rajika என்ற சம்ஸ்கிருதப் பெயரும் இதற்கு உண்டு. இதன் பொருள் சிவந்த தானியம். இந்த Rajika என்ற வார்த்தைதான் பேச்சு வழக்கில் ‘ராகி’ என்று மாறியிருக்கலாம்.

கன்னடத்தில் ராகிக்கு இன்னொரு பொருள், ‘மக்களால் விரும்பப்படுகிற தானியம்.’ ஆப்பிரிக்காவின் ஆதிகால பண்டு மொழிகளில் கேழ்வரகுக்கான சொல், De`gi. இந்த வார்த்தைகூட ராகியின் மூல வார்த்தையாக இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.

வரகு என்பது இன்னொரு சிறுதானிய வகை. இது வெள்ளை நிறம் கொண்டது. கேழ்வரகு சிவந்த நிறம் கொண்டது. ‘கேழ்’ என்றால் தமிழில் ‘நிறம்’ என்றொரு பொருள் உண்டு. நிறம் கொண்ட வரகு என்ற அர்த்தத்தில் கேழ்வரகு என்ற வார்த்தை உண்டானது. விளைந்து நிற்கும் ராகிக்கதிர்கள், மனிதனின் கைவிரல்கள்போல இருப்பதால் இதற்கு ஆங்கிலத்தில் Finger Millet என்னும் பெயர் வந்தது.

கேழ்வரகின் உணவுக் கலாசாரம் குறித்து அடுத்த அத்தியாயத்தில்...

(சரித்திரம் சுவைக்கலாம்!)