Published:Updated:

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - காபி

காபி
பிரீமியம் ஸ்டோரி
காபி

இப்போதெல்லாம் எங்கு திரும்பினாலும் கும்பகோணம் டிகிரி காபி கடைகள் தென்படுகின்றன...

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - காபி

இப்போதெல்லாம் எங்கு திரும்பினாலும் கும்பகோணம் டிகிரி காபி கடைகள் தென்படுகின்றன...

Published:Updated:
காபி
பிரீமியம் ஸ்டோரி
காபி

ன்றைக்கு, வழக்கத்தைவிட ஆடுகள் உற்சாகமாக இருந்தன. வீட்டுக்குத் திரும்பும் வேளையிலும் துள்ளிக்குதித்தபடியே வந்தன. இரவில் பல ஆடுகள் தூங்கவேயில்லை. `ம்ம்ம்மே...’ என்று உற்சாகமாகக் கத்தியபடியே இருந்தன. ஆடுகளின் சொந்தக்காரரான கல்டிக்கு ஒன்றுமே புரியவில்லை. அடுத்த நாள் ஆடுகளை மேயவிடும்போது அவை குறிப்பிட்ட ஒரு தாவரத்தில் காணப்பட்ட சிவப்பு நிற பெர்ரி பழங்களை விரும்பி உண்பதைக் கண்டார். அந்தப் பழங்களே ஆடுகளின் அதீத உற்சாகத்துக்குக் காரணம் எனப் புரிந்துகொண்டார்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - காபி

கல்டி, அந்த பெர்ரி பழங்களைத் தனக்குத் தெரிந்த துறவி ஒருவரிடம் கொடுத்தார். விஷயத்தைச் சொன்னார். துறவியும் பழங்களை உண்டார். அன்றைக்கு இரவு முழுக்க உறக்கமே இல்லாமல் கடவுளை உற்சாகமாகப் பிரார்த்தனை செய்ய பழங்கள் உதவின. அந்தத் துறவி மூலமாக மற்ற துறவிகளும் அந்த பெர்ரி பழங்களின் அருமையை உணர்ந்துகொண்டனர். அவைதாம் காபி தாவரத்தின் பழங்கள். கி.பி.700 காலகட்டத்தில் எத்தியோப்பியாவில் கல்டி என்பவரின் ஆடுகள் காபியைக் கண்டுபிடித்ததாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. இதே கதையின் சற்றே மாறுபட்ட வடிவமும் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கல்டி கொடுத்த பெர்ரி பழங்களை உண்டு பார்த்த துறவி, அவற்றின் உற்சாகமூட்டும் தன்மை கண்டு பயந்தார். `சீச்சீ... இந்தப் பழங்களை உண்பது பாவம்’ என்று அவற்றை நெருப்பில் எறிந்தார். சிறிது நேரத்தில் காபியின் நறுமணம் அந்தக் காற்றில் பரவியது. பழங்கள் நெருப்பின் சூட்டில் காபிக்கொட்டைகளாக மாறி இருந்தன. உலகின் முதல் காபிக்கொட்டை உருவான கதை இதுதான் என்றும் சொல்லப்படுவதுண்டு. காபிப்பழத்தையோ, செடியையோ உண்ணும் பழக்கம் எப்போதோ ஆரம்பித்திருந்தாலும், காபியை பானமாக மாற்றிப் பருகும் பழக்கமானது 13-ம் நூற்றாண்டில்தான் உருவானது.

மொராக்கோவில் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி ஞானியான அபுல் ஹஸன் அஸ்-ஸஹத்திலி என்பவர், எத்தியோப்பியாவுக்குச் சென்றார். அங்கே வனப்பகுதி ஒன்றில் பறவைகள் காபிச்செடியின் சிவப்பு பெர்ரி பழங்களை விரும்பி உண்பதையும், சுறுசுறுப்பாக இயங்குவதையும் கவனித்தார். தானும் அந்தப் பழங்களை உண்டு பார்த்தார். உடலெங்கும் உற்சாகத்தை உணர்ந்த அந்த சூஃபிதான், காபிப்பழத்தை காபி பானமாக உருவாக்கினார் என்றும் ஒரு கதை உண்டு.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - காபி

மேற்சொன்ன சூஃபி ஞானியின் சீடராக வந்தவர் ஒமர். இவர், ஏமனின் மோக்கா (Mocha) என்ற ஊரில் வசித்துவந்தார். தனது பிரார்த்தனைகளின் மூலம் நோய்களைக் குணமாக்கும் வல்லமை அவரிடமிருந்தது. அசாதாரணமான ஒரு சூழலில் ஒமர், மோக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார் (கி.பி 1258 ஆக இருக்கலாம்). அவுஸப் (இன்றைய ஓமனின் Wusab) என்ற மலைப்பகுதியில் ஒரு குகையில் ஒமர் தங்கி வாழ ஆரம்பித்தார். எந்த உணவும் கிடைக்கவில்லை. பசி. அங்கே முளைத்துக் கிடந்த காபிப் பழங்களைக் கண்டார். பறித்துச் சுவைத்தார். கசப்புச் சுவை தூக்கலாகத் தெரிந்தது. இந்தப் பழங்களைச் சுட்டுச் சாப்பிட்டால் கசப்புச் சுவை குறையும் என்று நினைத்து நெருப்பில் நன்றாக வாட்டினார். அவை கடினமான கொட்டைகளாக மாறின. என்ன செய்யலாம் என்று யோசித்த ஒமர், அந்தக் கடினத்தன்மையைப் போக்குவதற்காக, அவற்றை சூடான நீரில் போட்டுக் கொதிக்கவைத்தார். சிறிது நேரத்தில் நல்ல நறுமணம் பரவியது. நீரின் நிறமும் காபி வண்ணத்தில் மாறியிருந்தது. ஒமர், அந்த நீரைச் சுவைத்தார். அற்புதமாக இருந்தது. பசி குறைந்தது. உற்சாகம் பெருகியது. ஒமர் கண்டறிந்த பானத்தை, சகல நோய்களையும் தீர்க்கும் சக்திகொண்ட `அற்புத பான’மாக மோக்கா மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர். மீண்டும் அவரை மோக்காவுக்கு அழைத்துக்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரேபிய அறிஞரான Abd-Al-Kadir என்பவர், கி.பி. 1587-ல் எழுதிய கையெழுத்துப் பிரதியில் ஒமர் காபி பானம் கண்டறிந்த சம்பவம் விவரிக்கப்பட்டிருக்கிறது. காபி பானம் தயாரிக்கப்பட்டது குறித்த முதல் வரலாற்றுக் குறிப்பு இதுவே. காபி தாவரத்தின் தாயகம் எத்தியோப்பியா. அந்தத் தேசத்தின் பழங்குடியினரான ஒரோமோ மக்கள்தாம், முதன்முதலில் காபிப் பழங்களையும் அதன் இலைகளையும் உணவாகப் பயன்படுத்தியவர்கள். அவற்றுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும் தன்மை இருக்கிறது எனக் கண்டறிந்தவர்கள், காபிக்கொட்டையையும் நெய்யையும் கலந்து கட்டிகளாக்கி வைத்துக்கொண்டார்கள். போர்களுக்கோ, வேட்டைகளுக்கோ செல்லும்போது உடனடி சக்தி தரும் இந்தக் கட்டிகளை உண்டார்கள். இப்போதும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதி மக்கள், இதுபோன்ற காபிக்கட்டிகளை சக்தி தரும் மிட்டாய்களாகக் கொறித்துக்கொண்டிருக்கின்றனர்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - காபி

எத்தியோப்பியாவுக்கு வந்து சென்ற அரேபிய வணிகர்கள் மூலமாக ஏமனுக்கும் பிற அரபு நாடுகளுக்கும் காபி பரவியது. `எத்தியோப்பியா, காபியின் தாயகமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், காபியை முதன்முதலாக பானமாக்கிப் பருகியவர்கள் எங்கள் தேசத்தவர்களே’ என்று ஏமன் மக்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். காபியை விரும்பிப் பயிரிட்ட ஏமன் மக்கள், காபிக்கொட்டைகொண்டு தயாரித்த பானத்தை `Qahwa’ என்றழைத்தார்கள். மோக்காவில் விளைந்த காபிக்கு தனி மவுசு இருந்தது. 15-ம் நூற்றாண்டிலிருந்து 17-ம் நூற்றாண்டு வரை மோக்காவில் காபி வணிகம் சிறப்பாக நடைபெற்றது. செங்கடலுக்குள் நுழையும் கப்பல்கள் எல்லாம் மோக்கா காபிக்கொட்டைகளுக்காகவே அந்த நகரத்தின் துறைமுகத்துக்கு வந்து சென்றதாக குறிப்புகள் உண்டு.

11-ம் நூற்றாண்டில் பாரசீகத்தில் வாழ்ந்த மருத்துவரும் பல்துறை அறிஞருமான அவிசென்னா புகாரா என்பவர், காபியின் மருத்துவப் பயன்கள் குறித்து எழுதிவைத்திருக்கிறார். காபி குறித்த பழைமையான வரலாற்றுப் பதிவு மற்றும் மருத்துவக் குறிப்பாக இதைச் சொல்லலாம். முதன்முதலில் காபியை பல்சுவை பானமாக மாற்றிப் பருகியவர்கள் துருக்கியர்களே! அன்றே கான்ஸ்டாண்டிநோபிளில் கிராம்பு, ஏலம், லவங்கம், சோம்பு போன்ற மசாலாக்கள் சேர்க்கப்பட்ட கமகம கார காபி மணமணத்தது.

உலகின் முதல் காபிக்கடைகள் மெக்காவில்தான் தோன்றின. அவை `Kaveh Kanes’ என்றழைக்கப்பட்டன. காபிக்கான அரேபியச் சொல் Kahwah. அதிலிருந்தே காபிக்கடைகளுக்கான இந்தப் பெயர் உருவானது. ஆரம்பத்தில் மதக்கூட்டங்களை நடத்துவதற்காக காபிக்கடைகள் உருவாக்கப்பட்டன. பிறகு, அந்த இடங்களை இஸ்லாமியர் ஒன்றுகூடி அரட்டையடிப்ப தற்கும், பாடி ஆடிக் களிப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டனர்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - காபி

Kahwah என்ற சொல்லுக்கு `ஒயின்’ என்ற பொருளும் உண்டு. காபிக்கும் ஒயின் போன்று மயக்கும் தன்மை இருக்கிறது. அது இஸ்லாமிய மதத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்று என்று மெக்காவில் சர்ச்சை கிளம்பியது. விளைவாக, காபிக்கடைகள் மூடப்பட்டன. ஹக்கிமானி சகோதரர்கள் என்பவர்கள் காபிக்கு எதிராகக் குரல் எழுப்பினர். பல நோய்களுக்கு காபியே மருந்து எனக் கருதி பலரும் அதைக் குடித்துவந்ததால், அவர்களது மருத்துவத் தொழில் பாதிப்படைந்திருந்தது. ஆனால், மெக்காவின் மத நீதிபதி, காபிக்கு ஆதரவாக இருந்தார். எனவே, சர்ச்சை ஆறிப்போனது. மீண்டும் மெக்காவில் காபி கொதிக்க ஆரம்பித்தது.

1595-ம் ஆண்டில் மோக்காவுக்கு வந்த ஸ்பானிய பாதிரியாரான பெட்ரோ பயஸ், காபி குடித்தார். காபியைச் சுவைத்த முதல் ஐரோப்பியர் இவரே. வெனீஸிய வணிகர்கள் மூலமாக காபி ஐரோப்பியக் கண்டத்தில் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது. ஆரம்பத்தில் காபியின் சுவையில் மிரண்டுபோன சிலர், அதை `சாத்தானின் பானம்’ என்றெல்லாம் விமர்சித்தார்கள்.

17-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போப்பாக இருந்த 8-ம் கிளமெண்டுக்கு, காபியின் சுவை மிகவும் பிடித்துப்போனது. `காபி என்பது, ஞானஸ்நானம் செய்யப்பட்ட கிறிஸ்துவ பானமே!’ என்று அவர் சான்றிதழ் கொடுக்க, ஐரோப்பியர் விரும்பும் உன்னத பானமாக மாறிப்போனது. 17, 18-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய தேசங்களில் காபிக்கடைகள் பல்கிப் பெருகின. ஐரோப்பியரின் காபித் தேவை பெருகவே, அவர்கள் தாங்கள் காலனி அமைத்த ஆசிய தேசங்களில் காபியைப் பயிரிடத் தொடங்கினார்கள்.

ஆரம்பத்தில் டச்சுக்காரர்கள், ஏமனிலிருந்து காபியைக் கடத்திக்கொண்டு சென்று ஹாலந்தில் பயிரிட்டுப் பார்த்தார்கள். அதீத குளிரில் காபி விளையவில்லை. மீண்டும் மீண்டும் தோல்வி. பின்னாளில்தான் டச்சுக்காரர்கள் தங்களுக்கான காபி விளைவிக்கும் பிரதேசமாக ஜாவாவைத் தேர்ந்தெடுத்தனர். ஜாவாவுக்கு, காபி இலங்கை வழியாகச் சென்றிருந்தது. அரேபிய நாடுகளிலிருந்து இஸ்லாமிய வணிகர்கள் மூலமாகத்தான் ஆசியாவின் பல்வேறு கண்டங்களுக்கு காபி பரவியிருந்தது.

1505-ம் ஆண்டிலேயே இஸ்லாமிய வணிகர்கள், இலங்கைக்கு காபிக்கொட்டைகளை அறிமுகப்படுத்திவிட்டனர். இலங்கையில் விளைந்த காபியை, சிலர் இந்தோனேஷியா வுக்கு அனுப்பிவைத்தனர். 18-ம் நூற்றாண்டில் டச்சுக்காலனியாக இருந்த ஜாவாவில் காபித் தோட்டங்கள் தோன்றியது இப்படித்தான்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - காபி

காபியை ஒரு பயிராக இந்தியாவுக்குக் கொண்டுவந்தவர் சூஃபி ஞானியான பாபா புடன். 16-ம் நூற்றாண்டில் மெக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொண்ட பாபா, அங்கே காபியின் சுவையில் மயங்கினார். திரும்பும்போது காபிக்கொட்டைகளை அள்ளிக்கொண்டு வர ஆசை. ஆனால், அரேபியர்கள் தங்கள் வணிகத்தில் கறாரானவர்கள் வறுத்த காபிக்கொட்டைகளை மட்டுமே வணிகத்துக்காக வெளியே அனுப்பிக்கொண்டிருந்தார்கள். வேறு எங்கும் காபி விளைய ஆரம்பித்துவிட்டால், ஏமனின் வணிகம் படுத்துவிடுமல்லவா! பாபா, ஏழு காபிப் பழங்களை தனது நீண்ட, அடர்ந்த தாடிக்குள் மறைத்து வைத்துக்கொண்டார் (இஸ்லாமியர்கள் விரும்பும் எண் 7 என்பதால் அந்த எண்ணிக்கை). பத்திரமாக இந்தியா வந்தடைந்தார். தன் சொந்தப் பிரதேசமான சிக்மக்ளூரின் சந்திரகிரி மலைப்பகுதியில் அந்தக் காபிப் பழங்களை விதைத்தார். அவை முளைத்தன. காய்த்தன. பரவின. இந்தியாவின் முதல் காபித் தோட்டம் கர்நாடகாவில் உருவானது. இன்றைக்கும் அந்த மலைப்பகுதி பாபா புடன்கிரி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இப்படியாக இந்தியாவுக்குள் காபிப்பயிர் வேரெடுத்து வைத்தது.

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் காலத்தில் (கி.பி 1616) இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயப் பாதிரியாரான எட்வர்டெ டெர்ரி, தனது அனுபவங்களை `A Voyage to East-India’ என்ற புத்தகமாக எழுதினார். அதில் கமகமத் தகவல் ஒன்று கிடைக்கிறது. `இந்தியர்கள் பலரும் நறுமணமிக்க காபி என்ற பானத்தைப் பருகுகிறார்கள். கறுப்புக் கொட்டைகளை நீரில் கொதிக்கவைத்தால், நீரும் அதே நிறத்துக்கு மாறுகிறது. சுவையில் சற்றே வித்தியாசம் தெரிகிறது. இந்தப் பானம், செரிமானத்துக்கு உதவுகிறது; ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது; சுறுசுறுப்பையும் அளிக்கிறது.’ - இந்தியர்களின் காபி குடிக்கும் பழக்கம் குறித்த முதல் வரலாற்றுக் குறிப்பு இதுவே.

1670-களில் இந்தியாவில் சிலர் தனியே காபி பயிர் செய்து, தங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டனர். மலபார் பகுதியில் டச்சுக்காரர்களும் சில காபித் தோட்டங்களை வைத்திருந்தார்கள். ஆனால், இந்தியாவில் வணிகரீதியாக காபி பயிரிட ஆரம்பிக்கப்பட்டது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில்தான். 19-ம் நூற்றாண்டில் மத்தியில் குளுமையான தட்பவெப்பநிலைகொண்ட சிக்மக்ளூர், வயநாடு, ஊட்டி, சேர்வராயன் மலைப்பகுதிகளில் காபித் தோட்டங்கள் பிரிட்டிஷாரால் பெருக்கப்பட்டன. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், J.H.Jolly என்ற பிரிட்டிஷ் அதிகாரி, சந்திரகிரி மலைப்பகுதியில் விளைந்த காபியைக் கண்டு அசந்துபோனார். மைசூர் சமஸ்தானத்தின் மகாராஜாவிடம் விண்ணப்பம் வைத்து அனுமதி வாங்கினார். 40 ஏக்கர் பரப்பளவில் பிரிட்டனின் பாரி அண்டு கோ நிறுவனத்துக்காக அங்கே காபி பயிரிட ஆரம்பிக்கப்பட்டது.

1910-12 காலகட்டத்தில் தென்னிந்தியாவில் மட்டும் 2,03,134 ஏக்கர் பரப்பளவில் காபி பயிரிடப்பட்டிருந்தது. பிரிட்டிஷார் பெரும்பாலும் பயிரிட்டது `அரேபிகா’ என்ற காபி ரகத்தைத்தான். அதுவும் கர்நாடக மலைப்பகுதிகளில்தாம் 70 சத விகிதத்துக்கும்மேல் காபி பயிர்த்தொழில் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் விளைந்த காபியின் பெரும்பகுதியை பிரிட்டிஷார் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தனர்.

காலனியாதிக்க இந்தியாவில் இரவு உணவுக்குப் பிறகு காபி அருந்தும் பழக்கம் பிரிட்டிஷாரிடம் இருந்தது. அவர்களது விருந்துகளில் ஒயினுடன் காபியும் பரிமாறப்பட்டது. இந்தியாவின் முதல் காபி கிளப், 1827-ல் கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது. 1832-ல் மெட்ராஸிலும், 1863-ல் பெங்களூரிலும் காபி கிளப்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், அவை ஆங்கிலேயர்களுக்கு மட்டுமான காபிக் கடைகளாகவே இருந்தன. இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் விளைவாகத்தான் இந்தியர்களுக்கான காபிக்கடைகள் திறக்கும் அவசியம் உண்டானது.

1920-களில் சென்னை மாகாணத்தில் காபிக்கடைகள் பிராமணாள் ஹோட்டல்களாகவே இயங்கின, பசும்பால் காபிக்கடைகள். கடுங்காபியோ, எருமைப்பால் காபியோ இழிவாகக் கருதப்பட்டன. தவிர, அந்த ஹோட்டல்களில் எல்லோரும் சென்று காபி அருந்த முடியாது என்பதே நிலை. அல்லது ஹோட்டல்களில் பிராமணர்கள் காபி அருந்துவதற்கு என்று சிறப்புப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. தவிர, காபிக்கான விளம்பரங்கள் அனைத்தும் உயர்தட்டு மக்களை குறிவைத்தே எழுதப்பட்டன. தேநீர் என்பதே, பாட்டாளி மக்களின் பானமாக அடையாளப்படுத்தப்பட்டது. இந்தப் பாகுபாடுகளுக்கெல்லாம் எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு, சமூகநீதி நிலைநாட்டப்பட்டது தனி அரசியல் வரலாறு.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - காபி

காபி, எல்லோருக்கும் பொதுவானது. அதில் வர்க்கபேதமெல்லாம் கூடாது என்பதற்காகவே `இந்தியன் காபி ஹவுஸ்’ என்ற பெயரில் காபிக்கடைகளும் ஹோட்டல்களும் உருவாக்கப்பட்டன. காபி வணிகத்தை முறைப்படுத்துவதற்காக இந்தியாவில் இயங்கிக்கொண்டிருந்த Coffee Cess Committee, இந்தக் கடைகளைத் திறந்தது. 1936, செப்டம்பர் 28 அன்று, முதல் இந்தியன் காபி ஹவுஸ் பம்பாயின் சர்ச்கேட் தெருவில் தொடங்கப்பட்டது. அடுத்து பல்வேறு நகரங்களிலும் தொடங்கப்பட்டது. 1950-ல் இவற்றை மூடும் முடிவு எடுக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் தலைவரான ஏ.கே.கோபாலனின் தலைமையில், இந்தியன் காபி ஹவுஸ் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் முயற்சியால், இந்திய காபி தொழிலாளர்கள் கூட்டுறவு அமைப்பு உண்டானது. இந்தியன் காபி ஹவுஸ்கள் தொடர்ந்து இயங்க ஆரம்பித்தன. வெவ்வேறு நகரங்களிலும் புதிதாகத் தொடங்கப்பட்டு, இன்று வரை இயங்கிவருகின்றன. அதிகபட்சமாக கேரளாவில் 51 இந்தியன் காபி ஹவுஸ்கள் அமைந்துள்ளன.

`களைப்பை நீக்கும் ஜீவசத்து, காபி. ஊக்கமும் உற்சாகமும் தருவது, காபி’ என்று 1947-ல் வந்த விளம்பரம் ஒன்று குரல் எழுப்புகிறது. வருடங்கள் ஓடினால் என்ன... இன்றைக்கும் அதேதான். காலையில் காபி கிடைக்காத நாளை நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா?

கும்பகோணம் டிகிரி காபி:

ப்போதெல்லாம் எங்கு திரும்பினாலும் கும்பகோணம் டிகிரி காபி கடைகள் தென்படுகின்றன... அதுவும் நெடுஞ்சாலைகளில் கிலோமீட்டருக்கு ஒன்று என பித்தளை டபராவுக்குள் டம்ளரைக் கவிழ்த்துப்போட்டிருக் கிறார்கள். கும்பகோணம் டிகிரி காபியின் சிறப்பம்சம் என்ன?

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - காபி

அடர்த்தியான டிக்காக்‌ஷன் - சொட்டு தண்ணீர்கூட கலக்காத பசும்பாலில் தயாரிப்பதுதான். காலையில் குடிக்கும் காபியின் சுவை நாக்கில் நான்கு மணி நேரத்துக்காவது தங்கினால்தான் அது சிறப்பான, தரமான டிகிரி காபி. அந்தக் காலத்தில் கும்பகோணத்தில் வீடுகளில் மட்டுமன்றி, காபி ஹோட்டல்களிலும் பசு மாடுகள் வளர்த்தார்கள். பால் கறந்த சூடு ஆறாமல் அதைக் கொதிக்கவைத்து, சிக்கரி கலக்காத காபிப்பொடியில் அடர்த்தியான டிக்காக்‌ஷன் எடுத்து, பித்தளை டம்ளர் டபராவில் காபி ஆற்றிக்கொடுப்பார்கள். டபரா சூடு கைதாங்காவிட்டாலும், காபியின் சூடு நாக்கு தாங்காவிட்டாலும், கசப்பின் புத்துணர்வு கலந்த அந்தச் சுவை நாக்கில் படரும்போது கிடைக்கும் இன்பமே அலாதியானது!

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - காபி

சரி, `டிகிரி காபி’ என்ற பெயர் வந்த காரணம்? அந்தக் காலத்தில் பசும்பாலில் நீர் கலந்திருக்கிறதா இல்லையா எனத் தெரிந்துகொள்ள லாக்டோ மீட்டர் கொண்டு பரிசோதித் திருக்கிறார்கள். பாலின் தரத்தை டிகிரி பார்த்து வாங்கித் தயாரிக்கும் காபி என்பதால் `டிகிரி காபி’ என்ற பெயர் நிலைத்துவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism