Published:Updated:

திருச்சி ருசி: பட்டணம் பக்கோடா, ரவா பொங்கல், அவியல், டிகிரி காபி - அசத்தும் ஆதிகுடி காபி கிளப்!

ரவா பொங்கல்

"எங்க கடையில பல பிரபலங்கள் சாப்பிட்டிருக்காங்க. குறிப்பா சினிமாத் துறையைச் சேர்ந்த சிவாஜி சார், எம்.ஆர். ராதா, ஜெமினி கணேசன் சார்னு பலரும் சாப்பிட்டிருக்காங்க. திருச்சிக்கு யாரு வந்தாலும் நம்ம கடையில இருந்து பார்சல் போய்டும்."

திருச்சி ருசி: பட்டணம் பக்கோடா, ரவா பொங்கல், அவியல், டிகிரி காபி - அசத்தும் ஆதிகுடி காபி கிளப்!

"எங்க கடையில பல பிரபலங்கள் சாப்பிட்டிருக்காங்க. குறிப்பா சினிமாத் துறையைச் சேர்ந்த சிவாஜி சார், எம்.ஆர். ராதா, ஜெமினி கணேசன் சார்னு பலரும் சாப்பிட்டிருக்காங்க. திருச்சிக்கு யாரு வந்தாலும் நம்ம கடையில இருந்து பார்சல் போய்டும்."

Published:Updated:
ரவா பொங்கல்

ரவா பொங்கல், பட்டணம் பக்கோடா ஆகியவற்றை ருசித்துவிட்டு ஒரு டிகிரி காபியையும் குடித்தால் எப்படியிருக்கும் என்பது அவற்றை சுவைத்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அதுவும் திருச்சி ஆதிகுடி காபி கிளப்பில் இவற்றை ருசித்தவர்கள், எளிதில் அச்சுவையை மறந்துவிட முடியாது. அதனால்தான் 105 ஆண்டுகளைக் கடந்தும் திருச்சியில் கோலோச்சி நிற்கிறது, ஆதிகுடி காபி கிளப்.

ஆதிகுடி காபி கிளப்
ஆதிகுடி காபி கிளப்

திருச்சி WB ரோட்டில் உள்ளது ஆதிகுடி காபி கிளப். இக்கடையைத் தேடி அலைய வேண்டியதேயில்லை. யாரிடம் கேட்டாலும் வழி சொல்வார்கள். திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் இக்கடையின் வாடிக்கையாளர்கள். அப்படி என்னதான் இருக்கிறது அக்கடையில் என்று பார்ப்பதற்காக, இல்லையில்லை, ருசிப்பதற்காக ஒரு மாலை நேரத்தில் போடோகிராபருடன் ஆஜரானேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆடம்பரமில்லாத எளிமையான பெயர்ப் பலகை. தகரம் வேய்ந்த ஓடுகள். பழைமையான தூண்கள் என வீடு என்றும் சொல்ல முடியாமல் ஹோட்டல் என்றும் சொல்ல முடியாமல் வித்தியாசமாக பழைமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. தரைப்பகுதியில் மட்டும் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பட்டணம் பக்கோடாவையும் டிகிரி காபியையும் ருசிப்பதற்காகக் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. நாங்கள் ஆளுக்கொரு வெண்ணெய் அடை ஆர்டர் செய்தோம்.

பட்டணம் பக்கோடா
பட்டணம் பக்கோடா

ஆவி பறக்க, வெண்ணெய் அடையையும், காய்கறிகளால் செய்த அவியலையும் கொண்டுவந்து டேபிளில் வைத்தனர். வெண்ணெய் மணம் நம்மைச் சுண்டியிழுத்தது. வேறு எந்த யோசனையும் வராதபடி, அடையின் சுவை நம்மை மயக்கியது. அடுத்த ரவுண்டுக்கு பட்டணம் பக்கோடா, காபியை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். உண்மையிலேயே அவற்றின் சுவை வேற லெவல்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளியே மொறுமொறுவெனவும், உள்ளே மென்மையாகவும் இருந்தது பக்கோடா. காபிச்சுவை நாவை விட்டு அகலாத நிலையில், கடையின் தற்போதைய நிர்வாகி கண்ணனிடம் பேசினோம்.

கடையின் தற்போதைய நிர்வாகி கண்ணன்
கடையின் தற்போதைய நிர்வாகி கண்ணன்

"1916-ம் வருஷம் 'வெங்கடராம ஐயர்'ங்கிறவர் ஆரம்பிச்ச கடை இது. அவரால கடையைத் தொடர்ந்து நடத்த முடியாததால, அங்க வேலை செய்த எங்க அப்பா ராமகிருஷ்ண ஐயர், 1967-ம் வருஷத்துல இருந்து நடத்த ஆரம்பிச்சார். நாங்க சகோதரர்கள் அஞ்சு பேரும், அப்பாகிட்ட கத்துக்கிட்ட கைப்பக்குவத்தை வெச்சு தொடர்ந்து நடத்திட்டு வர்றோம்.

ஆதிகுடி காபி கிளப்
ஆதிகுடி காபி கிளப்

ஆரம்பக் காலத்தில் இருந்த சுவை கொஞ்சம்கூட மாறாமல் உணவுகளைத் தயாரிக்கிறோம். ஆரம்பத்துல இருந்தே மாலை நேரத்தில் நாங்க தயாரிக்கிற ’பட்டணம் பக்கோடா’வும், ’வெண்ணெய் அடை’யும் ரொம்ப ஃபேமஸ்.

அந்தக்காலத்தில், பட்டணம்னா மெட்ராஸுக்கு அடுத்து திருச்சிதான். அதனாலதான் பட்டணம் பக்கோடானுன் பேர் வெச்சாங்க. ரொம்ப உதிரியா இல்லாம பெரிய சைஸ்ல இருக்கும் எங்க பக்கோடா. காலை நேரத்தில், ரவையில மிளகு, சீரகம், பருப்புன்னு குழைவா ரவா பொங்கல் தயாரிச்சுக் கொடுக்கிறோம். இதைச் சாப்பிட பல ஊர்களிலிருந்து வாடிக்கையாளர்கள் வர்றாங்க. அதேபோல வடையும் சாம்பாரும் இங்க ஃபேமஸ். நாலஞ்சு வருஷங்களா பிரெட் அல்வாவும் தயாரிக்கிறோம்.

ஆதிகுடி காபி கிளப்
ஆதிகுடி காபி கிளப்

எல்லா உணவுகளையும் மக்கள் விரும்பிச் சுவைக்கிறதுக்குக் காரணம், மளிகைப் பொருள்களின் தரத்தில் நாங்க சமரசம் பண்றதேயில்லை. அதே போல எங்க சமையல் மாஸ்டர்களின் கைப்பக்குவமும் முக்கியக் காரணம்.

பிரெட் அல்வா
பிரெட் அல்வா

எங்க கடையில பல பிரபலங்கள் சாப்பிட்டிருக்காங்க. குறிப்பா சினிமாத் துறையைச் சேர்ந்த சிவாஜி சார், எம்.ஆர். ராதா, ஜெமினி கணேசன் சார்னு பலரும் சாப்பிட்டிருக்காங்க.

அந்தக் காலத்துல நெறைய நாடகக் கம்பெனி இருந்ததனால திருச்சிக்கு யாரு வந்தாலும் நம்ம கடையில இருந்து பார்சல் போய்டும். அரசியல் தலைவர்கள்ல முன்னாள் முதல்வர்கள் பலருக்கு நம்ம கடையின் பட்டணம் பக்கோடா அவ்ளோ விருப்பம்.

ரவா பொங்கல்
ரவா பொங்கல்

இதுமட்டுமல்லாம நம்ம கடையில தினமும் ஒரு ஸ்பெஷலா கேசரி, பாதாம் அல்வா, அக்காரவடிசில், வெள்ளைக் கேசரி, கோதி அல்வா, ஜாங்கிரின்னு ஸ்வீட் வகைகளைச் செய்றோம். மதிய சாப்பாடும் உண்டு. இதெல்லாம்தான் மக்கள் மத்தியில எங்க கடைக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கு” என்றார்.

அங்கு உணவருந்திக்கொண்டிருந்த தமிழ்மணியிடம் பேசினோம். "நான் மதுரையைச் சேர்ந்தவன். இப்போ திருச்சியில் வேலை பார்க்கிறேன். பல நேரங்கள்ல நான் ஹோட்டல்லதான் சாப்பிடுறேன். சாப்பிட கடைகளைத் தேடினப்போதான் இந்தக் கடை பத்திக் கேள்விப்பட்டு வந்தேன். இங்க கிடைக்கிற பட்டணம் பக்கோடா, அடை அவியல் ரெண்டும் எனக்குப் பிடிச்சுப் போனதால ரெகுலர் கஸ்டமர் ஆகிட்டேன்.

ஆதிகுடி காபி கிளப்
ஆதிகுடி காபி கிளப்

மெனுவில் ஐட்டங்கள் கம்மியா இருந்தாலும் கிடைக்கிற உணவுகள் எல்லாமே பாரம்பரியம் மாறாத சுவையில் இருக்கு. திருச்சியில் எனக்கு ரொம்பப் புடிச்ச ஹோட்டல் இதுதான். உள்ள நுழையும்போதே வீட்டுக்குள்ள நுழையுற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும்.

அப்படியே அந்தக் கால செட்டப், சாப்பாடுன்னு யாருமே மிஸ் செய்ய கூடாத ஒரு விஷயமா இந்த ஹோட்டல் இருக்கு" என்று அவர் சொல்ல, நமக்கும் அவரின் கருத்தில் மாறுபாடு இல்லை என்பதைச் சொல்லி நகர்ந்தோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism