Published:Updated:

திருச்சி ஊர்ப்பெருமை: நெய் வாசம் வீசும், வாயில் கரையும் - பூரிக்க வைக்கும் யானை மார்க் பூந்தி!

"சிறிய மூங்கில் கூடையில் வைத்துதான் இன்றளவும் விற்பனை செய்துட்டு வர்றோம். இதற்காகவே தனியாக மூங்கில் கூடைகளைச் செய்யச் சொல்லி வாங்கி பயன்படுத்துறோம்." - யானை மார்க் பூந்திக் கடை கண்ணன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'யானை மார்க் பூந்தி'க் கடைக்கும், திருச்சிக்கும் 100 ஆண்டுகளுக்கும் மேல் நீண்ட நெடிய பந்தம் இருந்து வருகிறது. இந்தக் கடையில் எப்போதும் மக்களின் கூட்டமும், நெய்யின் வாசமும் இருந்துகொண்டே இருக்கிறது. தினமும் 100 கிலோ வரை இவர்களின் கடையில் பூந்தி விற்பனை ஆகிக்கொண்டு உள்ளது. திருச்சியில் இந்தக் கடையைப்பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. பெருந்தலைவர் காமராஜர் முதல் திரை பிரபலங்கள் வரையிலும் இந்தக் கடையின் பூந்தியை சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதுதான் கூடுதல் சிறப்பு என்கிறார்கள் திருச்சி மக்கள்.
யானை மார்க் பூந்தி'க் கடை
யானை மார்க் பூந்தி'க் கடை

இத்தனை பெருமைகள் வாய்ந்த யானை கடை பூந்தியை சாப்பிட்டே தீர வேண்டும் என வண்டியை நேராக 'யானை மார்க்' நெய் மிட்டாய்க் கடைக்கு விட்டோம். திருச்சி, பெரிய கடை வீதியில் யாரிடம் கேட்டாலும் கடையின் வழியை காண்பித்து விடுவார்கள். பெரிதாக நாமும் கடையைத் தேடத் தேவையில்லை.

யானை மார்க் பூந்தி'க் கடை
யானை மார்க் பூந்தி'க் கடை

காரணம் என்னவென்றால், பெரிய கடை வீதியின் மிகப்பெரிய அடையாளங்களில் இந்த 'யானை மார்க்' பூந்திக்கடையும் ஒன்று. கடைக்குச் சென்ற போது கடையின், தற்போதைய நிர்வாகி, கண்ணனிடம் முதல் கேள்வியாக இந்தக்கடைக்கு ஏன் 'யானை மார்க்' என பெயர் வைத்தீர்கள் என்று கேட்டோம்.

"எங்க தாத்தா 100 வருஷத்துக்கு முன்பு இந்த இடத்தில் கடையை ஆரம்பித்தபோது, அனைவருக்கும் பிடித்த வித்தியாசமான அதேசமயம் குழந்தைகளை கூட வெகுவாக கவர்கின்ற மாதிரி பெயர் வைக்க வேண்டும் என யோசித்து வைத்த பெயர்தான் 'யானை மார்க்' என்ற பெயர். மூன்று தலைமுறை முடிந்து தற்போது நான்காவது தலைமுறையினரும் கடையை கவனிக்க ரெடியாக உள்ளனர். இருந்த போதும், கடையின் பெயரை எங்களில் யாருக்கும் மாற்றத் தோணவில்லை" என்றவர், கடையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

கண்ணன்
கண்ணன்

"1916-வருஷம் எங்கள் தாத்தா நடேசன் பிள்ளையால் ஆரம்பிக்கப்பட்டது இந்தக் கடை. கடை ஆரம்பிச்சு 105 வருஷம் முடிஞ்சுட்டு. அப்போ ஆரம்பிச்ச அதே இடத்துலதான் இப்போ வரைக்கும் தொடர்ந்து நடத்திட்டு வர்றோம். அவர் ஆரம்பித்தபோது மக்களுக்கு வித்தியாசமாகவும், சுவையாகவும், ஆரோக்கியமாகவும் உணவுப்பொருள் கொடுக்க வேண்டும் என நினைத்தார். அதற்காக வீட்டிலேயே தயார் செய்யப்படும் நெய்யினை கொண்டு 'பூந்தி' செய்யலாம் என யோசித்தார். வழக்கமான சைஸ் பூந்தியாக இல்லாமல், பெருவெட்டாகச் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்களிடமும் பெரிய வரவேற்பு இருந்ததால், இன்று வரையிலும் நாங்களும் அப்படியே பூந்தியைத் தயார் செய்து விற்பனை செய்துட்டு வர்றோம். இதுல இன்னொரு சிறப்பம்சம் என்னன்னா, எங்க தாத்தா காலத்துல வாழை இலையைக் காய வச்சு, அதுலதான் தின்பண்டங்களை வைத்து நாரில் கட்டிக் கொடுப்போம். இதற்காக மதுரையில் இருந்து வாழை இலை வரும்.

யானை மார்க் பூந்தி'க் கடை
யானை மார்க் பூந்தி'க் கடை

தற்போது, அதுபோன்று கிடைக்காத காரணத்தினால் சிறிய மூங்கில் கூடையில் வைத்துதான் இன்றளவும் விற்பனை செய்துட்டு வர்றோம். இதற்காகவே தனியாக மூங்கில் கூடைகளைச் செய்யச் சொல்லி வாங்கி பயன்படுத்துறோம். இது போன்ற 'பெரிய சைஸ் பூந்தி' முதன் முதலில் தமிழ்நாட்டில், அதுவும் திருச்சியில் ஆரம்பித்தது நம்ம கடையிலதான்" என்றார் பெருமையாக.

தொடர்ந்து பேசிய அவர், "எங்க தாத்தாவைத் தொடந்து எங்க அப்பா கடையை நடத்திட்டு வந்தார். இப்போ, நானும் என்னோட சகோதரர், ரவிச்சந்திரனும் நடத்திட்டு வர்றோம். நாளுக்குநாள் கடையின் கஸ்டமர்கள் அதிகமாக, அதிகமாக 'வேறு கிளைகள் ஆரம்பிக்கலாமே, இல்லேன்னா பெரிய இடமா மாற்றலாமே'ன்னு நிறையப் பேரு கேட்டாங்க.

பூந்தி கடை
பூந்தி கடை

ஆனால், பெரிய கடைகளை நோக்கி போனால் பணம் மட்டும் நோக்கமாக வச்சி ஓட வேண்டும். மக்களுக்கு எங்களுடன் இருக்கும் அந்தத் தொடர்பு குறைஞ்சிடும்ங்கிற எண்ணத்தால சின்னக்கடையா இருந்தாலும் இங்கேயேத் தொடரலாம்னு முடிவெடுத்தோம். அந்த நிம்மதியே எங்களுக்கு போதுமானது" எனக் கூறி நெகிழ வைத்தார்.

இவர்களின் 'யானை மார்க் பூந்திக்கடை'யில் சராசரியாக தினமும் 100 கிலோவிற்கும் மேல் பூந்தி விற்பனை ஆகிறது. தொடர்ந்து பேசியவர், "வீட்டில் தயாராகும் நெய்யுடன் அரிசிமாவு, கடலை மாவு கலந்து சீனியுடன் செய்யப்படும் பெருவெட்டுப் பூந்திக்கு பல ஊர்களில் இருந்து வாடிக்கையாளர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட காற்று உட்புகும்படி வைத்தால் ஏழு நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.

பூந்திக் கடை
பூந்திக் கடை

இங்கிருந்து வருடாவருடம் அமெரிக்கா செல்லும் வயதான வாடிக்கையாளர் ஒருவர் ஒவ்வொரு முறையும் அவர்களின் குடும்பத்தினருக்கும், அமெரிக்காவில் உள்ள மற்றவர்களிடம் எடுத்து சென்று காட்ட வேண்டும் என்றே 15 கிலோ வரைக்கும் வாங்கி செல்வார்.

கூடை
கூடை

மேலும் காமராசர், கருணாநிதி, நடிகர் சிவாஜி கணேசன், வைகோ எனப் பல அரசியல் தலைவர்கள், பல சினிமா பிரபலங்கள் என யார் திருச்சிக்கு வந்தாலும் நம்ம கடை பூந்தியை சாப்பிட்டு விட்டுதான் செல்வார்கள்" என ஆச்சர்யப்படுத்தினார்.

திருச்சி - ஊறும் வரலாறு: காலத்தின் கையில் கல்லணை - கரிகாலன் முதல் காட்டன் வரை!

அங்கு பூந்தி வாங்க வந்திருந்த ராமநாதன் என்பவரிடம் பேசினோம், "நான் கிட்டத்தட்ட 8 வருசத்துக்கு மேல இந்த கடையில பூந்தி வாங்கிட்டு இருக்கேன். வாயில போட்டா நெய்மணத்தோடக் கரையும். எங்க குடும்பத்துல இருக்குற குழந்தைகளுக்கு இவங்க கடை பூந்தினா ரொம்பப் பிடிக்கும். அதே போலத்தான் இவங்க கடை முந்திரி அல்வாவும்! டேஸ்ட்டும், வாசமும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கும்.

விலையும் ரொம்ப கம்மியா இருக்கும்ங்கிறனால என்னோட பிரெண்ட்ஸ், சொந்தக்காரங்கனு இந்தக் கடையோட பூந்தியின் டேஸ்டைப் பத்திச்சொல்லி அவங்களையும் சாப்பிட வச்சிடுவேன். இங்க யாரு வந்தாலும் சும்மா சாப்பிட்டு பாருங்கன்னு இந்த கடை ஓனர் கொஞ்சமா பூந்தியை ஒரு கை அள்ளிக் கொடுப்பாரு. அதைச் சாப்பாடும் போதே நமக்கு வீட்டுக்கு வாங்கிட்டு போகணும்னு ஆசை வந்துடும். எல்லாமே ரொம்ப சுத்தமா செய்றதுனால குழந்தைகளுக்குப் பயப்படாம கொடுக்கலாம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு