Published:Updated:

திருச்சி ருசி: வாரம் ஒரு நாள், 2 மணி நேரம் மட்டுமே விற்பனை... செவத்தகனி பிரியாணியில் என்ன ஸ்பெஷல்?

இனாம்குளத்தூர் செவத்தகனி பிரியாணி
News
இனாம்குளத்தூர் செவத்தகனி பிரியாணி

50 வருடங்களுக்கு முன், செவத்தகனி என்பவர் ஆரம்பித்து வைத்த பிரியாணி கடையில் தற்போதும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் திருவிழா போல் களைகட்டுகிறது. அப்படி என்ன ஸ்பெஷல் இங்கே?

ட்ரீட் என்றாலே பிரியாணி என்றாகிவிட்ட இந்தச் சூழல் நமக்கு பழகிவிட்டது. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்கள், உறவினர்கள் என யார் வீட்டில் எந்த விசேஷம் வந்தாலும் அங்கு பிரியாணி கேட்கும் யாரவது ஒருவராவது கண்டிப்பாக இருப்பார்கள். அந்த அளவிற்கு கறியும், மசாலாவும், அரிசியும் ஒருசேர கலந்து ஒன்றாக பரிமாறப்படும் பிரியாணியின் சுவை சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைத்துவிடும். ஆன்லைன் வழியே உணவு வீட்டிற்கு வர ஆரம்பித்துள்ள இந்தக் காலத்தில், தினம் ஒரு பிரியாணி சாப்பிட்டாலும் சலிக்காத நமக்கு, 50 வருடங்களுக்கு முன்பு, ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு பிரியாணி கிடைக்கும் நாள் கண்டிப்பாகத் திருவிழா மாதிரிதான்.

அதை உணர்ந்தவரான திருச்சி இனாம்குளத்தூரை சேர்ந்த செவத்தகனி என்பவர் ஆரம்பித்து வைத்த பிரியாணி கடை, தற்போதும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் திருவிழா போல் களைகட்டுகிறது. 100 அல்ல 200 அல்ல 1500 பேர், அதுக்கும் மேலே என அன்றைய நாளில் மட்டும் பிரியாணி சாப்பிட வந்துவிடுகிறார்கள். வாரம் இறுதி நாளான ஞாயிறு மட்டுமே இயங்கும் கடை என்பதால் நாமும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இனாம்குளத்தூர் செல்ல ஆயத்தமானோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திருச்சியின் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் சாலையில் 18 கிலோமீட்டர் சென்றால் சாலையின் இடதுபுறத்தில் 'இனாம்குளத்தூர் செவத்தகனி பிரியாணி செல்லும் வழி' என்ற போர்டு கண்டிப்பாக நம் வாகனத்தை அந்தப் பக்கம் செல்ல வைக்கும். பிரியாணியை தேடிய பயணத்தில் நாம் இன்னும் 3 கிலோமீட்டர் செல்ல வேண்டும் என மேப் காட்ட, பயணிக்க ஆரம்பித்தோம். மர நிழலில் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக் கூட்டமாக வாகனத்தில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே 5 நிமிடத்தில் அந்தத் தூரத்தை கடந்து இனாம்குளத்தூர் செவத்தகனி பிரியாணி கடையை அடைந்துவிட்டோம். 54 வருடமாக ஒரே கட்டடத்தில் இயங்கி வரும் கடை என்பதாலும், சிறிய கடையாக இருப்பதாலும், கடையின் வெளியே வரை மக்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தனர். இப்போது புரிந்தது வரும் வழியில் நாம் பார்த்த காட்சி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பரபரப்பாக உபசரிப்பில் கவனம் செலுத்தி கொண்டிருந்த, மூன்றாவது தலைமுறையாக கடையை நிர்வாகித்து வரும் இர்ஷாத் அகமது, இஸ்தியாக் அகமது சகோதர்களிடம் பேசினோம்.

"எங்க தாத்தா அப்துல் ரகுமான் ஆரம்பிச்ச கடை இது. ரொம்ப சின்ன வயசுலேயே சமையல் தொழிலுக்கு வந்த எங்க தாத்தா பிரியாணியோட பக்குவத்தை த்தெரிஞ்சிக்கிட்டு அதை இங்க கிராமத்து மக்களுக்கு செஞ்சி கொடுக்கணும்னு நினைச்சாரு. அதுனாலதான் இந்தக் கடையை ஆரம்பிச்சாரு. அவருக்கு அப்பறம் எங்க அப்பா பீர் முகமது நிர்வகிச்சாரு, இப்போ நாங்கனு தொடர்ந்து இந்தக் கடையை நடத்திட்டு வர்றோம். நாங்க ரெண்டு பேரும் இன்ஜினியரா இருந்தாலும், முழுசா கடைய பாத்துக்க வந்துட்டோம்.

தாத்தா காலத்துல கிராம மக்களுக்கு பிரியாணி கொடுக்கணும்னு ஆரம்பிச்ச கடையை வெச்சு, இப்போ கிராமத்தையும் தாண்டி நெறைய பேரை சாப்பிட வச்சி சந்தோசப்படுத்திட்டு இருக்கோம். நிறைய ஊருல இருந்து மட்டும் இல்லாம மாநிலங்கள் தாண்டியும் இங்க வந்து சாப்பிட்டு போவாங்க" என்றவர், "கூட்டம் அதிகமாகிடும் முதலில் சாப்பிடுங்கள்" எனக் கூற மேசையில் அமர்ந்தோம்.

தொடர்ந்து இலையை போட்ட சில நிமிடங்களிலேயே மட்டன் பிரியாணி நம் இலைக்கு வந்தது. கூடவே, சைட் டிஷ் என்ன வேண்டும் எனக் கேட்க அங்கு மட்டுமே ஸ்பெஷலாக கிடைக்கும் பிச்சுப்போட்ட மிளகு கோழிக்கறி, வஞ்சிரம் மீன், மட்டன் கோலா மற்றும் மட்டன் சுவரொட்டியும் ஆர்டர் செய்தோம். அவை அடுத்தடுத்து நம் மேசைக்கு வர பிரியாணியை சுவை பார்த்தோம். தல்சாவுடன் ஒரு வாய், தால்சா இல்லாமல் ஒரு வாய் எப்படிச் சாப்பிட்டாலும் சுவை அருமையோ அருமை! மட்டன் நன்றாக வெந்து இருந்ததால் சாப்பிட சாப்பிட இன்னும் வேண்டும் என கேட்டுக்கொண்டே இருந்தது வயிறு. எல்லாமே பிரெஷ்ஷாக இருந்ததை உணர முடிந்தது. அதுவும் அவர்களின் பிச்சுப்போட்ட மிளகு சிக்கன் வேற லெவல்தான். மட்டன் கோலா உருண்டையில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடுகின்றனர்.

எல்லாமே சாப்பிட்டு பில் கொடுத்ததுடன் பிரியாணியின் இந்த ஸ்பெஷல் சுவைக்குக் காரணம் என்ன என்று கேட்க, "தாத்தா செய்த அந்த பிரியாணி ரெசிபிதான் இப்போதும்! அதுதான் சுவைக்கு முதல் காரணம். அப்பறம் மசாலா எல்லாமே நம்மளே ரெடி பண்ணிடுவோம். வெளிய இருந்து வாங்குறதே இல்ல. கொப்பம்பட்டி ஆலைல இருந்து நேரிடையா சீராக சம்பா அரிசியை இறக்கிடுவோம். பண்ணையில நமக்காக சொல்லி வெச்சு வளர்க்குற இறைச்சிகளைத்தான் பயன்படுத்துறது. முக்கியமா சண்டே மட்டும்தான் கடை, அதுவும் மதியம் 12 மணில இருந்து 2 மணி வரை மட்டும்தான் இருக்கும். அதனால அன்னைக்கு காலையிலதான் எல்லாத்தையும் ஃப்ரெஷ்ஷா ரெடி பண்ணுவோம். முக்கியமா விறகடுப்புலதான் பிரியாணி செஞ்சி தம் வைக்குறது. இதுதான் நம்ம கடைக்கு மக்களைத் தேடி வர வைக்குது" என்கிறார்.

ஏன் ஞாயிற்று கிழமை மட்டும் என்றால், "அது எங்க தாத்தா உழைக்குறவங்களுக்குக் கிடைக்குற ஒருநாளை நிம்மதியா, சந்தோஷமா பிடிச்சதை சாப்பிட்டு திருவிழாவா மாத்தணும்னு நினைச்சாரு. அதுக்காகதான் பிரியாணியை போட ஆரம்பிச்சாரு! அதை நாங்க இன்னமும் மதிச்சு மாத்தமா இருக்கோம்" என்கிறார்.

திருச்சியில் பல பிரியாணிகள் கிடைத்தாலும், மக்களின் ஆல்டைம் ஃபேவரைட்களில் ஒன்றாக, இந்த இனாம்குளத்தூர் செவத்தகனி பிரியாணி இருக்கிறது. வாரத்தில் ஒரே நாள்தான், அதுவும் இரண்டே மணி நேரங்கள்தான் கிடைக்கும் என்பதால் காலை முதலே கூட்டம் ஆரம்பித்துவிடுவதால் பார்சல் வாங்கி கொள்வது உத்தமம்.