Published:Updated:

திருச்சி ருசி: "மகன் ஞாபகமா 35 வருஷமா கடை நடத்தறேன்!" `அடை'க்குப் பெயர்போன நைனா கடைக்கு ஒரு விசிட்!

திருச்சி ருசி: நைனா கடை

மாலை 7.30 மணியளவில் ஆரம்பிக்கும் இவரின் கடை, இரவு பதினொரு மணி வரை இருக்கும். தற்போது கொரோனா காலம் என்றாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக் குறைவில்லாமலே இருக்கிறது.

திருச்சி ருசி: "மகன் ஞாபகமா 35 வருஷமா கடை நடத்தறேன்!" `அடை'க்குப் பெயர்போன நைனா கடைக்கு ஒரு விசிட்!

மாலை 7.30 மணியளவில் ஆரம்பிக்கும் இவரின் கடை, இரவு பதினொரு மணி வரை இருக்கும். தற்போது கொரோனா காலம் என்றாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக் குறைவில்லாமலே இருக்கிறது.

Published:Updated:
திருச்சி ருசி: நைனா கடை

திருச்சியின் பல உணவகங்களைத் தேடி சென்ற நம் சுவை மொட்டுகள், தினமும் புதிதாக, சுவையாகவே வேண்டும் எனக் கேட்டு கொண்டிருந்தன. தேடல்தானே நம் வாழ்வின் ஆக சிறந்த சுவாரஸ்யம்! அப்படி சுவாரஸ்யத்தைத் தேடியபோது நாம் கண்டடைந்ததுதான் திருச்சி தில்லை நகரின் உட்பகுதியில் இருக்கும் நைனா தோசை கடை. கடையின் இந்தப் பெயர், கடையின் உரிமையாளரால் வைக்கப்பட்டது இல்லை, கடையின் வாடிக்கையாளர்களால் வைக்கப்பட்டது என்பதை கேள்விப்பட்டோம். கூடவே 40க்கும் அதிகமான சுவையில் தோசை, அடை, சப்பாத்தி கிடைக்கும் என்பதையும் பலர் நமக்கு தெரியப்படுத்த, நம்மை காத்திருக்கவிடாமல் வயிறும், மனதும் நச்சரித்து கொண்டிருந்தன. மாலை நேரத்தில் மட்டுமே இயங்கும் கடை என்பதால், இரவு ஏழு மணி போல் கடையில் ஆஜரானோம்.

நைனா கடை
நைனா கடை

ரொம்பவே சிறிய சாலையோர கடைதான் நைனா கடை. சாலையோர கடை என்றாலே நமக்கு ஏற்படும் சுத்தம், தரம், உபசரிப்பு குறித்தான தயக்கங்கள் அனைத்தும் நைனா கடைக்குச் சென்றால் தீர்ந்துவிடும், அத்தனை சுத்தம். தன் கடைக்கு வரும் ஒவ்வொருக்கும் மிக பொறுமையாக உபசரிக்கும் உரிமையாளரால் வாடிக்கையாளர்கள் பொறுமையாகக் காத்திருந்து சாப்பிட்டு செல்கின்றனர். நாம் சென்று நம்மை அறிமுகப்படுத்தி கொண்டு சாப்பிட அமர்ந்தோம். பூண்டு பொடி தோசை, வெங்காய அடை, வெண்ணெய் மசாலா தோசை, சப்பாத்தி ரோல் என வகைகள் பலவும் சாப்பிட்டு முடித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடலை எண்ணெய், நெய், வெண்ணைய் மட்டுமே பயன்படுத்துகிறார். அதனின் வாசமும் சுவையும் நம்மை அப்படியே கட்டிவைத்தன. முக்கியமாக அவரின் அடை... சூடான கல்லில் அடை மாவை ஊற்றி, வெண்ணையை அதன் மேல் இஷ்டத்திற்கு விட்டு வெங்காயம், அல்லது மசாலா, பொடி என நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து மொறு மொறு என அவர் கொடுக்க, அந்த அடையின் சுவையை இன்னமும் நம்மால் உணர முடிகிறது. நைனா கடையின் அடையை சுவைத்தவர்கள் கண்டிப்பாக மற்றவர்களையும் சுவைக்க வைத்து சந்தோஷப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

மாலை 7.30 மணியளவில் ஆரம்பிக்கும் இவரின் கடை, இரவு பதினொரு மணி வரை இருக்கும். தற்போது கொரோனா காலம் என்றாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக் குறைவில்லாமலே இருக்கிறது. சளைக்காமல் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையை உணர்ந்து பரிமாறி கொண்டிருக்கும் உரிமையாளரான 72 வயது மூத்த இளைஞரான கேசவன் அவர்களிடம் பேசினோம். தன் மகன் விபத்தில் இறந்துவிட அவர் ஆரம்பித்த கடையை அவரின் நினைவாக 35 வருடங்களுக்கும் மேலாக தான் நடத்திவருவதாகக் கூறி பேச்சை ஆரம்பிக்கிறார்.

நைனா கடை
நைனா கடை

"எனக்கு சொந்த ஊர் திருவாரூர். அரசு வேலை கிடைக்கவும் திருச்சிக்கு வந்தோம். வேலை, குடும்பம், ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு இருந்தோம். 30 வருசத்துக்கு முன்னாடி என் பையன் படிச்சிட்டு இருக்கும்போதே சாயந்திரம் நேரத்துல இந்தக் கடையை வச்சி நடத்திட்டு இருந்தான். வித்தியாசமா கொடுக்கணும்னு வகை வகையா தோசை அடைன்னு கொடுத்துட்டு இருந்தாப்ல. அப்போதான் ஒரு விபத்துல சிக்கி இறந்துட்டாப்ல. அதுக்கப்புறம் விஆர்எஸ் வாங்கிட்டு கடைய நான் எடுத்து நடத்த ஆரம்பிச்சேன். கடைல ஒருத்தர், வீட்ல ரெண்டு பேருன்னு வேலைக்கு இருக்கோம்.

தினமும் பொடி அரைக்குறது, மசாலா அரைக்கிறதுனு காலையில 5.30க்கு ஆரம்பிக்கிற வேலை இரவு பதினோரு மணி வரைக்கும் இருக்கும். வீட்ல என் மனைவியும் அவங்க கூட ரெண்டு பேரும் சேர்ந்து இந்த வேலையெல்லாம் பாத்துப்பாங்க. அன்னனைக்கு மாவு அரைச்சி அன்னைக்கு மட்டும்தான் பயன்படுத்திடுவோம். மீதி இருந்தாக்கூட வேலை செய்றவங்ககிட்ட கொடுத்து அனுப்பிடுவோம். எண்ணையை பொறுத்தவரை எந்தக் கலப்படமும் இல்லாம கடலை எண்ணெய், ரொம்ப தரமான வெண்ணெய், நெய் இதுமட்டும்தான் யூஸ் பண்றோம். சுத்தத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம்" என்றவரிடம், நிறைய வாடிக்கையாளர்கள் வரும் பட்சத்தில் பெரிய கடையாக மாற்றலாமே எனக் கேட்டால், "பெருசா கடை வச்சா, கடைக்கு வர கஸ்டமர் கூட நேரிடையா இப்போ மாதிரி பேச முடியாது பாருங்க. நமக்கு லாபம்லாம் முக்கியம் இல்ல, நானும் என் மனைவியும் மட்டும்தான் இருக்கோம், இருக்குறவரை சந்தோசமா, மன நிம்மதியோடு இருந்துடலாம்னு நினைக்குறோம்" என்கிறார்.

"குழந்தைக்கு வல்லாரை பொடி தோசை கொடுங்க உடம்புக்கு நல்லது, வெண்ணெய் போட்டு இன்னொரு அடை சாப்புடுறீங்களா?" என தன் கடையின் வாடிக்கையாளரை உபசரிக்கிறார் அந்தப் பெரியவர். அந்தக் கவனிப்பும், அவர் கடையின் விதவிதமான தோசையும், 15க்கும் அதிகமான சுவையில் கிடைக்கும் அடையும் சப்பாத்தியும் நம்மை கவரவில்லை என்றால்தான் ஆச்சர்யம்!

நைனா கடையின் தோசை, அடையை குறித்து தனது குழந்தையுடன் வந்திருந்த சசிகலா அவர்களிடம் பேசினோம். "என்னோட தம்பி சொல்லித்தான் இந்த இடத்துக்கு வந்து சாப்பிட்டோம், அவர் அடிக்கடி இங்க சாப்பிட்டு இருக்காரு. நெறைய வெரைட்டில தோசை, அடை என எல்லாமே இங்க வந்து சாப்பிட்டதுக்கு அப்பறம்தான் இத்தனை நாளா வராம விட்டுட்டோம்ன்னு தோணுச்சு. டேஸ்ட் ரொம்பவே நல்ல இருந்துச்சு. எங்க குழந்தைங்க கூட விரும்பி சாப்பிடறாங்க.

நைனா கடை தோசை
நைனா கடை தோசை

நெறைய கடையில டேஸ்ட் அதிகமா இருக்கணும்னு காரம், மசால் எல்லாமே கொஞ்சம் தூக்கலா போடுவாங்க, ஆனா இங்க எல்லாமே அளவா குழந்தைங்க விரும்பி சாப்பிடுற மாதிரி இருக்கு. முக்கியமா இவங்க மசால் தோசை, இந்த மாதிரி மசாலா எந்த ஹோட்டலேயும் கிடைக்காது. இனிப்பும், காரமும் கலந்து இவங்க தர சப்பாத்தி பிள்ளைங்களுக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு. சுத்தமா, அதே சமயம் விலையும் சரியா இருக்கறதால நிம்மதியா சாப்பிட முடியுது" என்றார்.

திருச்சி மக்களோ, திருச்சிக்கு வரும் மக்களோ... மறந்தும் கூட நைனா கடையை மிஸ் பண்ணிடாதீங்க!