Published:Updated:

திருச்சி ருசி: காலை கிச்சடி, இரவு இடியாப்ப கொத்து, கார கலக்கி - அசத்தும் கார்த்திக் டிபன் சென்டர்!

திருச்சி ருசி: கார்த்திக் டிபன் சென்டர்
News
திருச்சி ருசி: கார்த்திக் டிபன் சென்டர்

காரம் அதிகமாகாமல், ஆவி பறக்கும் சூட்டில் நமக்கு வந்தது கொத்து இட்லி! சுவையுடன் கூடவே அளவும் அதிகம். தாராளமாக ஒரு கொத்து இட்லி சாப்பிட்டால் இரவு டிபன் போதும் என்னும் அளவிற்கு இருந்தது.

ரவை உப்புமாவா, கிச்சடியா ஏன் இதை செஞ்சீங்க எனக் கேட்காதவர்களே இருக்க மாட்டோம். ஏன் என்றே தெரியாமல் ரவையின் மீது நமக்கிருக்கும் வெறுப்பு, பாவம் உயிர் இருந்தால் ரவை கண்டிப்பாகக் கதறியிருக்கும். அப்படி நம்மில் பலரால் வெறுத்து ஒதுக்கப்படும் இந்த ரவா கிச்சடியை விரும்பி சாப்பிடுவதற்கு எனக் கூட்டமே இருப்பதால், காலை 7 மணிக்கு செய்யப்படும் ரவா கிச்சடி இரண்டே மணி நேரத்தில் தீர்ந்து விடுகிறது திருச்சியில் இருக்கும் கார்த்திக் டிபன் சென்டரில்.
கார்த்திக் டிபன் சென்டர்
கார்த்திக் டிபன் சென்டர்
DIXITH

காலையில் ரவா கிச்சடி என்றால் இரவு பூண்டு, மிளகாய் சேர்த்து அரைத்த கலவையை வைத்து செய்யப்படும் முட்டை கலக்கியும், இட்லியை வெறும் சாம்பாருடன் மட்டுமல்லாது, வெங்காயம், கறிவேப்பிலை, பொடி சேர்த்து பொடி இட்லியாகவும், முட்டை, குருமாவுடன் முட்டை கொத்து இட்லியாகவும் தருவதால் இரவில் நிற்க இடமில்லாமல் மக்கள் கூட்டம் சேர்கிறது இந்த டிபன் செண்டரில்!

கொத்து இட்லியை சுவைக்கலாம் என இரவில் சென்ற நமக்கு, காலையில் கிடைக்கும் ரவா கிச்சடியை சாப்பிட ஆர்வமும் அதிகரிக்க, காலையிலும் ஒருமுறை சென்றுவிட்டோம். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் கண்டோன்மெண்ட் பகுதியில், பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிரில் உள்ளது இந்தக் கடை. சாலையோர கடையான இங்கு, அவ்வளவு சுத்தம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் மக்கள் நிறைந்திருந்தனர். ஒரு கொத்து இட்லியின் விலை 70 ரூபாய், இரண்டு முட்டை, வெங்காயத்துடன் இட்லியை துண்டாக்கித் தருகிறார்கள். காரம் அதிகமாகாமல், ஆவி பறக்கும் சூட்டில் நமக்கு வந்தது. சுவையுடன் கூடவே அளவும் அதிகம். தாராளமாக ஒரு கொத்து இட்லி சாப்பிட்டால் இரவு டிபன் போதும் என்னும் அளவிற்கு இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொடி இட்லிக்காக விருதுநகரில் இருந்து வீட்டுமுறை பொடியை நேரிடையாக வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர். பொடியின் காரம், சூடாகச் சாப்பிடும் போது கிடைத்த அந்தத் திருப்தி உண்மையிலேயே அருமை. சரி, காரத்தைக் குறைக்கலாம் என இடியாப்பம் கேட்கையில், இடியாப்பத்தில் கொத்து இருக்கு சாப்பிடுறீங்களா எனக் கேட்க, வேண்டாம் எனச் சொல்லிவிட முடியுமா என்ன? அதையும் வாங்கி சாப்பிட, அவர்களின் ஸ்பெஷல் டிஷ்ஷான கார கலக்கியையும் இணைப்பாகச் சேர்த்துக் கொண்டோம். அதனின் சுவை சில வருடங்களுக்கு முன்பு மதுரை அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் நான் எப்போதோ சாப்பிட்டுருந்த முட்டை வடியலின் சுவையை நினைவுபடுத்தியது. ரொம்ப நாள்களாக அதன் சுவையை தேடி கொண்டிருந்த எனக்கு இந்தக் கலக்கி ஆறுதலாக இருந்தது என்றே சொல்லலாம்.

இவர்களின் வெஜ் குருமாவும் வேற லெவல்தான். இங்கு வேறு எந்த அசைவ உணவும் இல்லாத குறையை போக்கும் அளவிற்கு அந்த சைவ குருமா இருந்தது. பொடி இட்லியை தவிர மற்றவற்றில் காரம் சரியான அளவில் இருந்ததில் பெரும் மகிழ்ச்சி.

குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்க்க நமக்கே ஆசை வந்துவிட்டது. நண்பர்களுடனோ, குழந்தைகளுடனோ, குடும்பத்தினருடனோ சாப்பிட ஏற்ற இடமான இந்த கார்த்திக் டிபன் சென்டரில் விலையும் மிக குறைவே. நம் பட்ஜெட் பேமிலி டின்னருக்கு சரியான சாய்ஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பணியாளர்களின் உபசரிப்பு இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். என்னதான் உணவு சுவையாக இருந்தாலும் அவர்களின் உபசரிப்புதான் மறுபடி மறுபடி அங்கு நம்மைத் தேடி செல்ல வைக்கும். பணியாளர்கள் குறித்தும், கடையின் சுவை குறித்தும் டிபன் சென்டரின் நிர்வாகி நம்மிடம் கூறுகையில்,

"இங்க இந்தக் கடை ஆரம்பிச்சு 12 வருசத்துக்கு மேல ஆகுது. ஆரம்பத்துல எல்லாரையும் போல நார்மலாதான் போயிட்டு இருந்துச்சு. அப்பறம் கஸ்டமரோட ஆசை, அவங்க கேக்குறாங்கனுதான் இட்லி, இடியாப்பம், தோசைன்னு எல்லாத்துலயும் வெரைட்டிஸ் கொடுக்க ஆரம்பிச்சோம். அதுலயும் டேஸ்ட்ல எதுவும் கூட, கம்மின்னு விடறதில்லை. அதனால கஸ்டமர்ஸ் தொடர்ந்து வர ஆரம்பிச்சாங்க. அவங்க விருப்பத்தாலதான் இப்போ இந்த அளவுக்கு இருக்கோம். விலையும் பெருசா ஏத்துறது இல்ல. ரொம்ப வருசமா இப்படியேதான் தொடருது.

மசாலால இருந்து மாவு வரை... எல்லாமே பிரெஷ்தான்! காலையில 7 மணிக்கு மக்கள் கடைக்கு வர ஆரம்பிச்சிடுவாங்க. 12 மணி வரைக்கும் போகும். அப்புறம் சாயந்திரம்தான். நைட் 11 வரைக்கும் கடை இருக்கும். எங்களுக்குச் சாப்பிட சமைச்சா எப்படி இருக்கணும்னு நினைப்போமோ அப்படித்தான் எல்லாருக்கும் சமைப்போம். குழந்தைங்க எல்லாம் சாப்பிடுவாங்க பாருங்க அதுனால முடிஞ்ச அளவுக்கு இயற்கையான பொருள்களைத்தான் பயன்படுத்துறது" என்கிறார்.

காலையில் ரவா கிச்சடி சாப்பிட சென்ற நமக்கு ஆச்சரியம்தான். கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் எல்லாம் போட்டு கிளறிய ரவா கிச்சடி அதற்கு கொடுத்த சட்னி எனப் பார்க்கையில் வீட்டில் செய்வதை ஞாபகப்படுத்தியது. ஆனாலும், சுவை அதற்கு நேர்மாறாக அமிர்தமாக இருந்ததால் நம்மால் மிச்சம் வைக்காமல் சாப்பிட முடிந்தது. கூடவே பொங்கல், பூரி அதற்கான மசாலா என அனைத்துமே அருமையாக இருந்தன. இவர்களின் வீட்டு முறை டிபன் சுவையை உணர முடிவதால் வெளியூரிலிருந்து இங்கு வந்து தங்கிப் படிக்கும், வேலைக்குச் செல்லும் பலரின் பேவரைட் உணவகங்களில் இது முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலேயே இருப்பதால் நீங்களும் ஒரு எட்டு போயிட்டு வாங்க!