Published:Updated:

திருச்சி ருசி: 6 வகை தோசை, 4 வகைச் சட்னி... ஸ்ரீரங்கத்தைக் கலக்கும் சிவில் இன்ஜினியரின் டிபன் கடை!

தோசை

சிறிய வீட்டில், மிக மிகச் சுத்தமாக நடத்தப்படும் இந்த ஹோட்டலில் இத்தனை வகை தோசை கிடைக்கிறதா என ஆச்சர்யத்துடனே கடைக்குள் நுழைந்தோம்.

திருச்சி ருசி: 6 வகை தோசை, 4 வகைச் சட்னி... ஸ்ரீரங்கத்தைக் கலக்கும் சிவில் இன்ஜினியரின் டிபன் கடை!

சிறிய வீட்டில், மிக மிகச் சுத்தமாக நடத்தப்படும் இந்த ஹோட்டலில் இத்தனை வகை தோசை கிடைக்கிறதா என ஆச்சர்யத்துடனே கடைக்குள் நுழைந்தோம்.

Published:Updated:
தோசை

எப்போதும் இட்லி, தோசையா என அலுத்துக்கொள்பவர்கள், யாராக இருந்தாலும், ஏ.ஆர்.டிபன் கடைக்குப் போனால் அந்த வார்த்தையைச் சொல்லமாட்டார்கள்.

"காளான், நெய் தோசைக்குப் புதினா சட்னி வச்சி சாப்பிட்டு பாருங்க அப்போ தெரியும் தோசையின் சுவை" என்கிறார்கள் உணவுப்பிரியர்கள். ஆறுவகை தோசை, நான்கு வகை சட்னி கொடுத்து அசத்துகிறார்கள் இந்தக் கடையில்!

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

திருச்சிக்கு வரும் ஆன்மிகப் பயணிகள் தவறாமல் செல்லும் இடம் வரலாறும், ஆன்மிக ஸ்தலங்களும் நிறைந்து கிடக்கும் ஸ்ரீரங்கம்தான். மிகப்பெரிய கோபுரங்களையும், கட்டடக் கலை அமைப்பையும், வரலாற்றையும் தன்னுள்ளே வைத்துக் கொண்டு மிகப் பெருமையுடன் இருக்கும் ஸ்ரீரங்கத்திற்கு ஆன்மிகப் பயணிகள் மட்டுமல்ல... திருச்சி மாநகரின் நெரிசல் மிகுந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிறிது நேரமாது ரிலாக்ஸ் செய்யலாம் என்று நினைக்கும் திருச்சி வாழ் மக்களும் அவ்வப்போது செல்கின்றனர்.

அனைவருக்கும் பிடித்த ஆர்ப்பாட்டமில்லாத அழகிய ஆற்றுத் தீவில், நாவில் கரையும் சுவையில் பத்துக்கும் அதிகமான தோசை வகைகளை மக்களுக்குப் பிடித்த வகையில், வீட்டுச் சுவையில் தருகிறார் எனக் கேள்விப்பட நம் மனது அமைதியாக இருக்குமா? ஒரு மாலை நேரமாகப் பார்த்து வண்டியில் புறப்பட்டுவிட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியே மிக ரம்மியாக இருக்க, காவிரி ஆற்றில் இருக்கும் தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலிக்க, கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் அந்தக் காட்சியை மனதில் பதிய வைத்துக் கொண்டே ஸ்ரீரங்கம் நோக்கிக் கிளம்பினோம். ஒரு கிலோமீட்டருக்கு முன்னவே ஸ்ரீரங்கத்தின் 'பெரிய கோபுர தரிசனம்' கிடைக்க ஆரம்பித்தது. தரிசித்துக் கொண்டே கோயிலின் வாயிலை அடைந்தோம்.

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

அங்கிருந்து சில கடைகளைத் தொடர்ந்து நாம் தேடிச் சென்ற 'ஏ.ஆர்.டிபன் கடை'யை அடைந்தோம். சிறிய வீட்டில், மிக மிகச் சுத்தமாக நடத்தப்படும் இந்த ஹோட்டலில் இத்தனை வகை தோசை கிடைக்கிறதா என ஆச்சர்யத்துடனே கடைக்குள் நுழைந்தோம். பத்துக்கு பத்து அளவு கொண்ட இடத்தில் ஐந்தாறு பேர் மட்டுமே என அமரக்கூடிய வகையில் மேசை போடப்பட்டிருக்க, நாம் சென்ற நேரத்தில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஆனாலும், கொரோனா காலகட்டம் என்பதால் பலரும் பார்சல் பெற அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

நமக்கான மேசையை வசமாக்கி அமர்ந்தோம். அந்தக் கடையில் வேலை பார்க்கும் ஒருவர், "அண்ணே... இங்கு காளான் தோசை, பூண்டு, புதினா தோசை ரொம்ப பேமஸ்ன்ணே" எனச் சொல்ல, "சரிங்க... கொண்டு வாங்க ஒரு கை பார்ப்போம்" என நினைத்து ஆர்டர் செய்தோம். கூடவே இவர்களின் சைவ பரோட்டா, ரொம்பவே மென்மையான இட்லி என ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம்.

தோசை கடை
தோசை கடை

சில நிமிடங்களில் மொறு மொறுவென அவர்கள் பரிமாறிய தோசையைப் பார்க்க மனது ரொம்பவே தடுமாற, வேகமாகச் சாப்பிட ஆரம்பித்தோம். பூண்டின் வாசமும், சாம்பாரின் சுவையும் அடுத்தடுத்த தோசைகளைச் சாப்பிட வைக்க, தொடர்ந்து புதினா தோசை, இட்லி, கூடவே கெட்டிச் சட்னி எனச் சாப்பிட்டோம். சுவை உண்மையிலேயே நம்மைக் கட்டிப்போட, மனத் திருப்தியுடன் சாப்பிட்டு முடித்தோம்.

தொடர்ந்து சாப்பிட்டதற்கான விலையை கேட்டு கொடுத்துவிட்டு கடையின் உரிமையாளர் முத்துவிடம் பேச ஆரம்பித்தோம், "நான் அடிப்படையில ஒரு சிவில் இன்ஜினியர். சொந்தமா பிசினஸ் செய்துட்டு இருந்தேன். ஆனாலும், எனக்கு ஹோட்டல் வைக்கணும்ன்னுங்கிறது ஆசை.

டிபன் கடை
டிபன் கடை

அதனால பத்து வருசமா கல்யாண ஆர்டர், திருவிழா அப்படினு ஆர்டர் எடுத்து சமைச்சி கொடுத்துட்டு இருந்தேன். நம்ம ஆர்டர் எடுத்து சாப்பிடுறவங்க ரொம்ப நாளாவே கடை வைக்கச் சொல்லி கேட்டுட்டே இருந்தாங்க. அதை தொடர்ந்துதான் இந்தக் கடையை வச்சேன். நார்மலா எல்லா ஹோட்டல்ல கொடுக்கறத விட வித்தியாசமா கொடுக்கணும்ன்னு நினைச்சோம்.

கடையின் உரிமையாளர் முத்து
கடையின் உரிமையாளர் முத்து

அதுனாலதான் ஆறு வகையில தோசையை கொடுக்க ஆரம்பிச்சோம். மக்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போகவே நம்ம கடையைத் தேடி வர ஆரம்பிச்சாங்க. நிறைய சினிமாப் பிரபலங்கள், அரசியவாதிகள் எனப் பலரும் வந்து எங்க கடையில சாப்பிட்டுட்டுப் போயிருக்காங்க.

மசாலா, இட்லிப்பொடி எல்லாமே நம்ம கைப்பட வீட்டுல அரைச்சிதான் பயன்படுத்துறோம். அதுவும் உடனே உடனே அறைக்கிறதுதான். எதுமே ஸ்டோர் பண்ணி வச்சுலாம் யூஸ் பண்ண மாட்டோம்.

புதினா தோசை
புதினா தோசை

எந்தக் கலப்படமும் இல்லாத எண்ணெய்யைத்தான் பயன்படுத்துறோம், டால்டா, கலப்பட எண்ணெய் எதுமே யூஸ் பண்றது இல்லை. வாங்குற காசுக்கு நல்ல சாப்பாடு கொடுக்கனும்ங்க... காசு முக்கியமில்லை மன நிறைவுதான் முக்கியம்" என்றார் உணர்வு பொங்க!

கடையின் வாடிக்கையாளர்களில் ஒருவரான நாகநாதனிடம் பேசினோம். ”நான் கடந்த நாலு மாசமா இந்தக் கடையிலதான் சாப்பிட்டுட்டு இருக்கேன். என் ஃபிரெண்ட்தான் இந்த கடையை பத்தி சொன்னாரு. எனக்கும் சாப்பிட ஆரம்பிச்சதுக்கு அப்பறம் டேஸ்ட் புடிச்சிடுச்சி.

மாஸ்டர்
மாஸ்டர்

கூடவே ஓனர், கடைல இருக்குறவங்கன்னு எல்லாருமே ரொம்ப நல்லா பழகுவாங்க. ரொம்ப முக்கியமா கடை ரொம்ப சுத்தமா இருக்கும். இங்க கொடுக்குற சாப்பாடு மட்டும் இல்ல, இவங்க கடையே நமக்கு வீட்ல இருக்குற மாதிரியான ஓர் உணர்வைத் தரும்.

வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர்கள்

முக்கியமா கஸ்டமோரோட எதிர்பார்ப்பை கேட்டு அதுக்கு ஏத்த மாதிரி எல்லாத்தையும் மாத்தி கொடுப்பாங்க. பூண்டு, புதினா, பன்னீர், பொடி, மசால் என ஆறுவகைகளில் தோசையும் வெரைட்டி வெரைட்டியா கிடைக்கும். ரொம்பவே சுத்தமா, மசாலா ஏதும் சேக்காம செய்றதுனால உடம்புக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம இருக்குது, கண்டிப்பா பயம் இல்லாம சாப்பிடலாம்" என்றார்.

திருச்சி ஸ்ரீரங்கம் வருபவர்கள், குறிப்பாகத் தோசைப் பிரியர்கள் இந்தக் கடையை மிஸ் பண்ணிடாதீங்க!