Published:Updated:

திருச்சி ருசி: அம்மிக்கல் ரெஸ்டாரன்ட்... இந்த உணவகத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?!

பலரும் நம்மிடம் இந்த ரெஸ்டாரன்டைப் பற்றிக் கூற, ஒரு மதிய நேரமாகப் பார்த்து கடையில் ஆஜரானோம்.

நம் தமிழ்நாட்டில் பல ஊர்களில் பல்வேறு உணவுகளை நாம் சுவைத்திருப்போம். அதன் ருசியில் மயங்கியிருப்போம். அவற்றை அப்போதே மறந்திருப்போம். ஆனால் செட்டிநாடு உணவு வகைகளின் சுவையை எப்போது சுவைத்தாலும், சில காலங்களுக்கு நாம் நாக்கை விட்டு அகலாமல் அப்படியே நிற்கும். அதிலும் செட்டிநாடு அசைவத் தொக்குகள் என்றால் நம் மனம் மறுபடியும், மறுபடியும் சுவைத்துப் பார் என நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.

அம்மிக்கல் ரெஸ்டாரன்ட்
அம்மிக்கல் ரெஸ்டாரன்ட்

கூடவே மதுரைப் பகுதிகளில் கிடைக்கும் கறிதோசை, தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் கிடைக்கும் நல்லி பாயா, இடியாப்பம் தொடர்ந்து, தற்போது அனைவருக்கும் பிடித்த உணவாக மாறி நிற்கும் குடுமி பரோட்டா என அனைத்தையும் தங்கள் உணவகத்தில் கொடுத்து மக்கள் மனதில் அமைதியாக இடம் பிடித்திருக்கிறது திருச்சியில் உள்ள அம்மிக்கல் ரெஸ்டாரன்ட். பலரும் நம்மிடம் இப்படியாக இந்த ரெஸ்டாரன்டைப் பற்றிக் கூற, ஒரு மதிய நேரமாகப் பார்த்து கடையில் ஆஜரானோம்.

சாய்ந்துகொள்ள வசதியாக சோபாவுடன் அமைந்த மேசையாகப் பார்த்து அமர்ந்தோம். இங்கு அசைவ சாப்பாடு நன்றாக இருக்கும் என நண்பர் கூறி அனுப்பியிருந்தது நினைவுக்கு வர அசைவ சாப்பாடை ஆர்டர் செய்தோம். கூடவே மட்டன், நாட்டுக்கோழி சுக்காவையும். ஆர்டர் செய்த ஐந்து நிமிடத்தில் சூடாக சாப்பாடு, காடை, சிக்கன், இறால் என மூன்று வகையான தொக்கு, சிக்கன், மட்டன், மீன் என மூன்று வகையான குழம்புகளுடன் நம் மேஜைக்கு வந்தது. கைபொறுக்கும் சூட்டில் அந்தத் தொக்குகளை சாப்பிடுகையில், உண்மையிலேயே வேற லெவல் டேஸ்ட்டாக இருந்தது. மட்டன் சுக்காவில் குட்டி குட்டியாக இருந்த மட்டன் பீசும், அதன்மேல் இருந்த மிளகும் நம்மை அப்படியே கட்டிப்போட்டது.

நாட்டுக்கோழி உணவு அருமையாக, சாப்ட்டாக இன்னுமின்னும் சாப்பிடத் தோன்றுமளவுக்கு இருந்தது. 'மட்டன் கோலா உருண்டை சாப்பிடுங்க நல்லாருக்கும்' எனப் பணியாளர் கூற, அதையும் எடுத்து வரச் சொல்லி ருசி பார்த்தோம். மேலே செம கிரிஸ்பியாக உள்ளே ரொம்பவே சாப்டாக சூப்பராக இருந்தது.

அடுத்து அவர்களின் பிரியாணி, மசாலா அதிகமாக இல்லாமல், லைட்டாக இருந்தது. அதே சமயம் ஆங்காங்கே கிடைத்த மசாலாவும் நாவிற்கு சுவையளிக்க, சாப்பிட்டு முடிக்க வயிறு நிறைவாகி இருந்தது. இளநீர்ப் பாயசமும், கறுப்பு கவுனிப் பாயசமும் கிடைக்க அதையும் சுவைக்கத் தயாரானோம். காரமும் சூடும் கலந்து ஹாட்டாக இருந்த நமது சுவை மொட்டுகள் இளநீர்ப் பாயசத்தின் குளுமையிலும், தித்திப்பிலும் சொர்க்கத்தை அடைந்தன என்றே சொல்லலாம்.

தொடர்ந்து, சாப்பிட்டதற்கான பில்லைக் கொடுத்துவிட்டு உணவகத்தின் நிர்வாகிகளில் ஒருவரான முகமதுவிடம் பேசினோம். ”நாங்க பிரெண்டஸ் மூணு பேரு இருக்கோம். காலேஜ்ல நாங்க எல்லாரும் ஒண்ணாதான் படிச்சோம், பேசிக்கா நாங்க நல்லா சாப்பிடுவோம், இன்ஜினீயரிங் முடிச்ச நாங்க எங்க பீல்டுல பிசினஸ் பண்ண ஆரம்பிச்சோம், ஆனாலும் சாப்பாட்டு மேல இருந்த ஆர்வம் போகல. தேடித் தேடிப் போய் சாப்பிட்ட நாங்க ஒரு கட்டத்துல நாம சாப்பிடத மக்களுக்குக் கொடுக்கணும் நினைச்சோம், அதே சமயம் அதை ஒரு பிசினஸ் மாறி பண்ணிட்டா நல்லாருக்கும்னு தோணுச்சு. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த ரெஸ்டாரன்ட், எங்க எல்லாருக்கும் செட்டிநாடு ஸ்டைல் சாப்பாடு ரொம்பவே பிடிக்கும். அதனாலதான் அந்த ஸ்டைல்ல சாப்பாடு கொடுத்தோம். பேரும் அதேபோலதான் பாரம்பரிய டச் இருக்கணும்னு அம்மிக்கல் என வச்சோம்.

திருச்சி ருசி: "மகன் ஞாபகமா 35 வருஷமா கடை நடத்தறேன்!" `அடை'க்குப் பெயர்போன நைனா கடைக்கு ஒரு விசிட்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி எங்களோட ஆர்வம், கனவு இதுதாங்கிறனால ஒவ்வொன்னையும் பாத்து பாத்து பண்ணினோம், அதான் மக்கள் தேடி வர ஆரம்பிச்சாங்க. நாங்களும் அவங்களுக்கு ஏத்த மாதிரி, அவங்க கேக்குற மாதிரி புதுசு புதுசா உணவுகளைக் கொடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம். முக்கியமா ரொம்ப பிரெஷ்ஷா கொடுக்கணும்னு நினைப்போம், அதனால எதையும் ஸ்டோர் பண்றது, அடுத்த நாள் கொடுக்குறதுன்னு நாங்க பண்றதே இல்லை, கூடவே இங்க அசைவத் தொக்குகளுக்கான இடம் கம்மியா இருக்குறதனால தொக்கு வகைகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறோம். மக்களும் அதைத்தான் விரும்புறாங்க. எங்க மீனையும் விரும்பிச் சாப்பிடுவாங்க. மீன், இறைச்சின்னு எதுவுமே ஸ்டோர் பண்றதே கிடையாது” எனக் கூறி முடித்தார்.

இதனையடுத்து அங்கு குடும்பத்துடன் வந்திருந்த சரவணன் அவர்களிடம் பேசினோம், "நாங்க சென்னையைச் சேர்ந்தவங்க, மதுரைக்கு ஒரு வேலை விஷயமா வந்தோம். திரும்பி ஊருக்குக் கிளம்பும் போது எங்க உறவுக்காரங்க இங்க சாப்பிட்டிருந்ததனால எங்களையும் ட்ரை பண்ணச் சொல்லியிருந்தாங்க. அதனால நாங்களும் ட்ரை பண்ணலாம்னு நினைச்சோம். நல்லாருந்துச்சு சாப்பாடு எல்லாம்.

குழந்தைகளுக்கும் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. சிக்கன் லாலிபாப் நல்லா ஜூஸியா, காரம் கரெக்டா இருந்ததனால ரொம்பவே பிடிச்சிருச்சு அவங்களுக்கு. அதுகூடவே கோலா உருண்டையும் ருசிச்சு சாப்பிட்டாங்க. நாங்க மீல்ஸ், அப்புறம் பிரியாணி சாப்பிட்டோம். ரெண்டுமே ரொம்ப நல்லா இருந்துச்சு. டேஸ்ட் எல்லாம் எங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது" எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு