Published:Updated:

திருச்சி ருசி: வாயில் கரைந்த முட்டை லாப்பா, காரமான கோழி மிளகுக்குழம்பு... மணக்கும் மணி டிபன் கடை!

மணி டிபன் கடை

கடையின் ரொம்ப ஸ்பெஷலான முட்டை லாப்பாவும், கோழி மிளகுக்குழம்பும், சிக்கன் வறுவலும் ஆர்டர் செய்தோம். இரண்டே நிமிடத்தில் ஆவி பறக்க பறக்க, கை பொறுக்காச் சூட்டில் நம் மேசைக்கு வந்தது.

திருச்சி ருசி: வாயில் கரைந்த முட்டை லாப்பா, காரமான கோழி மிளகுக்குழம்பு... மணக்கும் மணி டிபன் கடை!

கடையின் ரொம்ப ஸ்பெஷலான முட்டை லாப்பாவும், கோழி மிளகுக்குழம்பும், சிக்கன் வறுவலும் ஆர்டர் செய்தோம். இரண்டே நிமிடத்தில் ஆவி பறக்க பறக்க, கை பொறுக்காச் சூட்டில் நம் மேசைக்கு வந்தது.

Published:Updated:
மணி டிபன் கடை
வாழ்க்கையில் எந்த விஷயத்தில் நாம் திருப்தி அடைந்தாலும், நம்மைத் திருப்தியே படுத்தமுடியாமல் இருக்கும் விஷயங்களில் முதன்மையானது உணவுதான். வீட்டில் செய்து சாப்பிட்டாலும் புதுசு புதுசாகத்தான் மனது தேடும். அப்படிப் புதிதாகச் சாப்பிட வேண்டும் என நினைத்து நாம் சென்ற உணவகம்தான் திருச்சி திருவானைக்கோவிலில் உள்ள 'மணி டிபன் கடை'. அங்கு முட்டை லாப்பாவும், கோழி மிளகுக் குழம்பும் அருமையாக இருக்கும் எனச் சில நண்பர்கள் புகழ்ந்து பேசியது நமக்கு நினைவுக்கு வர, கடைக்கு வண்டியைவிட்டோம்.
மணி டிபன் கடை
மணி டிபன் கடை

மதியம் ஒரு மணியளவில்தான் இந்த உணவகம் செயல்பட ஆரம்பிக்கும் என்பதால், ஒரு மாலை நேரத்தில் கடைக்குள் நுழைந்தோம். ரொம்பவே சிறிய கடை பத்துக்கு பத்து அளவுக்கொண்டது என்றாலும் கூட்டத்திற்குக் குறைவில்லாமல் இருந்தது. ஆனாலும், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி, பலருக்கும் பார்சல் மட்டுமே வழங்கி கொண்டிருந்தனர். நாம் கடையின் உள்ளே சென்று அமர்ந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூடவே கடையின் ரொம்ப ஸ்பெஷலான முட்டை லாப்பாவும், கோழி மிளகுக்குழம்பும், சிக்கன் வறுவலும் ஆர்டர் செய்தோம். இரண்டே நிமிடத்தில் ஆவி பறக்க பறக்க, கை பொறுக்காச் சூட்டில் நம் மேசைக்கு வந்தது. மிளகு வாசனையுடன், சூடாக வாழை இலையில் பரப்பப்பட்ட அந்த பஞ்சு போன்ற முட்டை லாப்பாவை சிறிது வாயில் வைக்கையில் அப்படியே கரைந்தது.

காரமான கோழி மிளகுக் குழம்பு
காரமான கோழி மிளகுக் குழம்பு

கூடவே அவர்களின் அடையாள உணவான கோழி மிளகுக் குழம்பு உண்மையிலேயே எங்குமே சாப்பிடாத சுவையில், பெரிய அளவில் மசாலாக்கள் எதுவுமே சேர்க்காமல், ரொம்பவே சிம்பிளாக மிளகின் காரசுவையுடன் இருந்தது. நிறத்திற்காகக் கூட எதையும் செயற்கையாகச் சேர்க்காமல் வேற லெவல் டேஸ்டில் நம்மை கிறங்கடித்தது. கூடவே அவர்களின் குஸ்கா, தோசையுடன் சாப்பிட சைவக் குழம்பு என அனைத்துமே டேஸ்டில் அள்ளியது. பணியாளர்களின் உபசரிப்பும் நம்மை நம் வீட்டில் சாப்பிட்டது போன்ற உணர்வைத் தந்தது. சாப்பிட்டு வயிறு நிறைந்தபின், பில்லை கொடுத்துவிட்டு நம் மனதும் நிறைந்தது. அந்த அளவிற்கு விலை குறைவாகவே இருந்தது.

சைவ கடையாக இருந்து எப்படி அசைவமாக மாறியது, மக்கள் எவ்வாறு கடையைத் தேடி வர ஆரம்பித்தார்கள் எனக் கடையின் உரிமையாளரான சுப்பிரமணி அவர்களிடம் பேசினோம்.

"கும்பகோணம் அருகேயுள்ள சூரியனார்கோவில்தான் எனக்குச் சொந்த ஊரு. வேலைக்காகத் திருவானைக்கோவிலுக்கு வந்தேன். ஆனா, நான் பாத்துட்டு இருந்த வேலை எனக்குப் பிடிக்காததுனால ரெண்டு வருசத்துல வேலையை விட்டு நின்னுட்டேன். 1978-ல முதல்ல டிபன் கடையை ஆரம்பிச்சேன். நைட்ல மட்டும் இயங்கி வந்துச்சு.

கடையின் உரிமையாளர்  சுப்பிரமணி - மணி டிபன் கடை
கடையின் உரிமையாளர் சுப்பிரமணி - மணி டிபன் கடை

ஆரம்பத்துல முழுசா சைவம் மட்டும்தான். எங்க குடும்பத்துல பொதுவாவே யாரும் அசைவம் சாப்பிட மாட்டோம். ஆனா கடைக்கு ரெகுலரா வர்ற கஸ்டமரெல்லாம் நான்வெஜ் செஞ்சிச் தரச் சொல்லி கேட்டதுனாலதான் அசைவ சாப்பாட்டுக் கடையா மாத்தினோம். முடிஞ்ச அளவுக்கு மசாலா, செயற்கையான பொருள்ன்னு எதுவுமே சேர்க்காமதான் சமையல் செய்யணும்னு அப்பவே முடிவெடுத்தோம். நம்ம கடையில எல்லாரும் விரும்பி கேக்குறது கோழி மிளகு குழம்புதான்.

அதுலயும் பெருசா மசாலா சேர்க்கறதே இல்ல. மிளகை மட்டும்தான் முழுக்க முழுக்கப் பயன்படுத்தி இந்தக் குழம்பு செய்றோம். கிட்டத்தட்ட 30 வருசமா இந்த குழம்ப நான் மட்டும்தான் செய்றேன். மத்தவங்க பண்ணணுனா நம்ம டேஸ்ட் வராம போய்டுமோனு பயம்தான்.

முட்டை லாப்பா - மணி டிபன் கடை
முட்டை லாப்பா - மணி டிபன் கடை

30 வருசத்துக்கு முன்ன முட்டை லாப்பா பத்தி பெருசா யாருக்கும் தெரியல. நம்ம கடையில கொடுக்க ஆரம்பிச்சதும் எல்லாருக்கும் புதுசாவும் டேஸ்டு வித்தியாசமா இருந்ததனாலயும் மக்கள் விரும்ப ஆரம்பிச்சாங்க. அதுனாலயே நம்ம கடையை தேடி பலரும் நெறைய ஊர்ல இருந்து வர ஆரம்பிச்சாங்க. நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன், மறைந்த காடுவெட்டி குரு உள்ளிட்ட சிலர் திருச்சி வந்தாங்கன்னா கண்டிப்பா இங்க சாப்பிட்டுத்தான் போவாங்க.

மாஸ்டர் - மணி டிபன் கடை
மாஸ்டர் - மணி டிபன் கடை

அவுங்களால வரமுடியல்லைன்னா இங்கிருந்துதான் பார்சல் போகும். இன்னும் நெறைய பிரபலங்கள் நம்ம கடையில சாப்பிட்டு இருகாங்க. ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 200 பேர்வரை சாப்பிடுவாங்க. ஆனா பெரும்பாலும் கூட்டம் சேர்க்கக் கூடாதுனு பார்சல் பண்ணி கொடுத்துடுவோம்" என முடித்தார்.

கடையில் உணவருந்திக் கொண்டிருந்த மாதவனிடம் பேசினோம், ”என் பிரெண்ட்ஸ்ங்க நெறைய பேர் சொன்னதுனாலதான் இந்தக் கடைக்கு வந்தேன். கடையோட அமைப்பை பாத்ததும் பெருசா ஏதும் நல்லா இருக்காதுன்னு தோணுச்சு. ஆனா சாப்பிட்டு பாத்தப்புறம்தான் தெரிஞ்சிது இதோட டேஸ்ட். நிஜமாவே வேற லெவல் போங்க.

மணி டிபன் கடை
மணி டிபன் கடை

நெறைய கடையில பெப்பர் சிக்கன், சிக்கன் குழம்புன்னு சாப்பிட்டுருக்கேன். ஆனா இந்தக் கடையில் கிடைக்கிற கோழி மிளகுக் குழம்போட டேஸ்ட் வேற மாதிரி நல்லா இருந்துச்சி. மிளகோட வாசமும், சிக்கனோட டேஸ்டும் கலந்து நாக்குக்கு ஒரு ருசி கொடுத்தது பாருங்க, அது நாம் சாப்பிட்டு முடிகிற வரைக்கும் வந்துட்டே இருந்தது" என்றார்.