Published:Updated:

திருச்சி ருசி: மல்லிகைப்பூ இட்லி, 22 வகை சட்னிகள்... நினைவில் நிற்கும் `நினைவூட்டும் இட்லிக்கடை!'

மல்லிகைப்பூ இட்லி, மணக்கும் 22 வகைச் சட்னிகள்

4 மணி நேரத்தில் கிட்டத்தட்ட, 300 பேர் வரை இங்கு சாப்பிட வருகின்றனர். இந்த இட்லிக்கடை இரவு நேரத்தில் மட்டுமே இயங்கக்கூடியது. அதுவும் மாலை 6.30 மணி முதல், இரவு 9 வரை மட்டுமே இயங்கிவருகிறது.

திருச்சி ருசி: மல்லிகைப்பூ இட்லி, 22 வகை சட்னிகள்... நினைவில் நிற்கும் `நினைவூட்டும் இட்லிக்கடை!'

4 மணி நேரத்தில் கிட்டத்தட்ட, 300 பேர் வரை இங்கு சாப்பிட வருகின்றனர். இந்த இட்லிக்கடை இரவு நேரத்தில் மட்டுமே இயங்கக்கூடியது. அதுவும் மாலை 6.30 மணி முதல், இரவு 9 வரை மட்டுமே இயங்கிவருகிறது.

Published:Updated:
மல்லிகைப்பூ இட்லி, மணக்கும் 22 வகைச் சட்னிகள்

'எப்போதும் இட்லியா?’ என அலுத்துக்கொள்பவர் யாராக இருந்தாலும், ’நினைவூட்டும் இட்லிக் கடை’க்குப் போனால் அந்த வார்த்தையை இனி சொல்லமாட்டார்கள். ஒரு இட்லிக்கு 22 வகையான சட்னிகளைக் கொடுத்து அசத்திக்கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக, அந்தக் கடையில் சாப்பிடும்போது நிலவின் ஒளியில், சூடாக இருக்கும் இட்லியைப் பிட்டு சட்னியைத் தொட்டு வாயில் வைக்கும்போது நம் மனமும் இதமாக மாறுவதோடு, நாம் சிறுவயதில் சாப்பிட்ட நிலாச்சோற்றை ஞாபகப்படுத்துவதுபோல் உணர்வதாக உணவுப் பிரியர்கள் வியந்து பேசுகிறார்கள். பலரும் இக்கடைப்பற்றிக் கூறக் கேட்க, மனது நம்மையும் அறியாமல் கடையை நோக்கி வண்டியை விட வைத்தது.

நினைவூட்டும் இட்லிக் கடை
நினைவூட்டும் இட்லிக் கடை
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவெறும்பூரில் உள்ள பர்மா காலனியில் அமைந்துள்ளது ’நினைவூட்டும் இட்லிக் கடை.’ நல்ல சிஸ்டமேடிக்காக வடிவமைக்கப்பட்ட கம்பெனிபோல் இயங்குகிறது இந்தக் கடை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இட்லி - நினைவூட்டும் இட்லிக்கடை
இட்லி - நினைவூட்டும் இட்லிக்கடை

வீட்டின் கீழ்ப்பகுதியில் உரிமையாளர் வசிக்க, மேலே உள்ள வீட்டை அப்படியே இட்லிக் கடையாக மாற்றியுள்ளனர். மொட்டை மாடியை சாப்பிடும் இடமாகவும், வீட்டின் ஒவ்வொரு அறையையும் இட்லிக்குத் தனியாக, பார்சலுக்குத் தனியாக, சட்னி தயார் செய்வதற்குத் தனியாக எனப் பிரித்து, அங்கு பணிபுரிபவர்களுக்கு ஐ.டி கார்டு எனப் பார்த்துப் பார்த்து இயங்கி வருகிறது இந்தக் கடை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு இட்லி ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோசை, சப்பாத்தி, ஆப்பம் என அனைத்தும் குறைவான விலையில் கிடைக்கின்றன. இட்லியை ஆர்டர் செய்துவிட்டு நாம் காத்திருந்தோம். சில நொடிகளில் கையில் பொறுக்க முடியாத சூட்டுடன் ஆவி பறக்க, தட்டில் இட்லியை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்குச் சென்றால் 22 வகையான சட்னிகள். கூடவே குருமா, சாம்பாருடன் எல்லாமே நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப நாம் எடுத்துக் கொள்ளலாம். எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. நம் விருப்பத்துக்கு ஏற்ப சாப்பிடலாம்.

நினைவூட்டும் இட்லிக்கடை பணியாளர்கள்
நினைவூட்டும் இட்லிக்கடை பணியாளர்கள்

எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் இட்லி வாய்க்குள் கரைந்துகொண்டே இருந்தது. நாம் எங்குமே சுவைத்திடாத கத்திரிக்காய், கேரட், முந்திரிச் சட்னியுடன், பொட்டுக்கடலை, தக்காளி, பூண்டு, தேங்காய், புதினா, கொத்தமல்லி என எல்லாமே வேற லெவல் டேஸ்டில் இருந்தன. கூடவே சிறியவர்கள், முதியவர்களுக்குத் தேவைப்படும் என நாட்டுச் சர்க்கரை, இட்லிப்பொடி, நல்லெண்ணெயும் இருக்கின்றன.

அனைத்தும் சாப்பிட்டுப் பார்க்க ஒரு வாரத்திற்கு அந்தக் கடைக்குச் செல்ல வேண்டும்போல இருந்தது. சாப்பிட்டு முடித்து பில்லைக் கொடுத்துவிட்டு, கடையின் உரிமையாளர் முகமது ஸரீஸ் அவர்களிடம் பேசினோம்.

நினைவூட்டும் இட்லிக்கடை உரிமையாளர் முகமது ஸரீஸ்
நினைவூட்டும் இட்லிக்கடை உரிமையாளர் முகமது ஸரீஸ்

"இதைக் கடைன்னு சொல்லாதீங்க. இது எங்க வீடு. வீட்டுக்கு வர்றவங்க வயிறாரச் சாப்பிடணும்னுதானே எல்லாரும் நினைப்போம். என்னோட எண்ணமும் அதான். அதுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தக் கடை. இங்க வந்து ஒரு தடவை சாப்பிட்டுப் போனாலும் எங்களை நினைவுல வச்சிருக்கணும்னுதான், ’நினைவூட்டும் இட்லிக் கடை’ன்னு பேரு வச்சோம். என்னோட பூர்வீகம் திண்டுக்கல்தாங்க.

நினைவூட்டும் இட்லிக்கடை பணியாளர்கள்
நினைவூட்டும் இட்லிக்கடை பணியாளர்கள்

அங்க இருந்து பெல் நிறுவனத்துல பணிபுரிவதற்காகத் திருச்சிக்கு வந்தோம். கிட்டத்தட்ட 60 வயசு வரை அங்க வேலை பார்த்தேன். அதுக்கு அப்புறம் ஓய்வுக்காலத்துல என்ன பண்ணலாம்னு யோசிச்ச போதுதான் இந்த மாதிரி ஒரு கடையை ஆரம்பிக்கலாம்னு தோணுச்சு. ஆனா, அது நார்மலான ஹோட்டல் மாதிரி இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். நாம வெளியில போய் சாப்பிடும்போது நிறைய அனுபவம் கிடைச்சிருக்கு.

அதுல எத்தனை வருஷம் ஆனாலும் சில நினைவில் இருக்கும். எனக்கு சின்ன வயசுல குடிச்ச ஒரு காபியின் நினைவு இப்பவரை இருக்கு. அப்படி இருக்குற சில கடைங்க மாதிரி நம்ம கடையும் எல்லாரோட நினைவுலேயும் இருக்கணும்னு நினைச்சேன். திண்டுக்கல்லுல ஒரு ஹோட்டல்ல நான்கு ரூபாய் இட்லி, நான்கு வகையான சட்னி எனக் கொடுத்தாங்க.

நினைவூட்டும் இட்லிக்கடை சட்னி வகைகள்
நினைவூட்டும் இட்லிக்கடை சட்னி வகைகள்

ஐந்து ரூபாய் இட்லி, ஐந்து வகையான சட்னின்னு முதல்ல ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல நான் மட்டும் தனியாதான் வேலை செஞ்சேன். இட்லிக்கு வரவேற்பு கிடைக்கவும், ஒருத்தரை வேலைக்கு வச்சேன். இப்போ 12 பேர் வேலை செய்றாங்க. 5 வகைச் சட்னி படிப்படியா இருபதா மாறுச்சு. இப்போ இருபத்தி இரண்டா வளர்ந்து நிக்குது.

ஆரம்பத்துல இட்லியை மட்டுமே செஞ்சு கொடுத்துட்டிருந்தேன். தோசை, சப்பாத்தின்னு கஸ்டமர்கள் கேட்க ஆரம்பிச்சாங்க. அவங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி ஆப்பம்வரை கொடுக்க ஆரம்பிச்சோம்” என்றார். மாறி மாறி சட்னி அரைப்பது, சுடச் சுட இட்லி ரெடி பண்ணுவது என்று எப்போதுமே பரபரப்பாக இருக்கிறது கடை.

நினைவூட்டும் இட்லிக்கடை வாடிக்கையாளர்கள்
நினைவூட்டும் இட்லிக்கடை வாடிக்கையாளர்கள்

"63 வயசுலயும் இப்படிச் சுறுசுறுப்பா இருக்கீங்களே எப்படி?" எனக் கேட்டோம், “உங்க வீட்ல ஒரு விசேஷம் நடந்தா எப்படி நீங்க ஓடியாடி வேலை செய்வீங்க. அதைத்தான் நானும் செய்றேன். இது என் வீட்டு விசேஷம். தினம் தினம் விசேஷம்தான். வர்றவங்க எல்லாரும் என்னோட சொந்தக்காரங்க. அவங்களை நல்லபடியா உபசரிச்சி அனுப்புறதுதானே நம்மோட கடமை?!” என நெகிழ்கிறார்.

’மொட்டை மாடி கான்செப்ட்’ பற்றிக் கேட்டதற்கு, “நாங்க குடும்பமா ஒண்ணுபோல அடிக்கடி மொட்டை மாடியில உட்கார்ந்துதான் சாப்பிடுவோம். அப்போ கிடைக்குற சந்தோமே வேற மாதிரி இருக்கும். அதை மக்களும் அனுபவிக்கணும்னு நினைச்சேன். அதான் சாப்புடுற இடத்தை மொட்டைமாடில வச்சிட்டோம். விலை குறைவாக் கொடுக்குறதுக்குக் காரணமும் மக்கள்தான்.

நினைவூட்டும் இட்லிக்கடை வாடிக்கையாளர்கள்
நினைவூட்டும் இட்லிக்கடை வாடிக்கையாளர்கள்

இந்தக் கடையை நான் லாபத்துக்காக நடத்தல. எங்களைத் தேடி வர்ற மக்களோட திருப்திக்காக நடத்துறேன். அதுல எனக்கு ஆத்ம திருப்தியா இருக்கு. எனக்கு இந்த வருமானமே போதுமானதாவும், மனசுக்கு நிறைவாகவும் இருக்கு. என் உடம்புல தெம்பு இருக்குற வரை இட்லிக்கடையைத் தொடர்ந்து நடத்துவேன்” என்கிறார்.

இட்லி சாப்பிடக் குழந்தைகளை அழைத்து வந்திருந்த ஸ்ரீலட்சுமியிடம் பேசினோம், “எனக்கு எப்போதும் வெளில சாப்புடுறதுல ஒரு அலர்ஜியா இருக்கும். சுத்தமா இருக்கா, நாம் தனியாப் போய் சாப்பிட முடியுமா எனப் பல கேள்வி இருக்கும். ஆனா, இங்க வந்ததும் எல்லாமே க்ளியர் ஆகிடுச்சு.

நினைவூட்டும் இட்லிக்கடை வாடிக்கையாளர்கள்
நினைவூட்டும் இட்லிக்கடை வாடிக்கையாளர்கள்

எங்காவது வெளில போய் சாப்பிடணும்னு நினைச்சா கண்டிப்பா இங்கதான் வர்றது. அதும் 22 வகைச் சட்னி அஞ்சு ரூபாய்க்குத் தருவாங்க. எல்லாமே தனித் தனி டேஸ்ட்ல சூப்பரா இருக்கும். என் குழந்தைங்க வீட்ல இட்லி செஞ்சா சாப்பிடவே மாட்டாங்க. ஆனா இங்க வந்தா போதும், இட்லி சாப்புட்டுருவாங்க. மனசே சந்தோஷமாகிடும்” எனச் சொல்லி மகிழ்கிறார்.

நினைவூட்டும் இட்லிக்கடை வாடிக்கையாளர்கள்
நினைவூட்டும் இட்லிக்கடை வாடிக்கையாளர்கள்

4 மணி நேரத்தில் கிட்டத்தட்ட, 300 பேர் வரை இங்கு சாப்பிட வருகின்றனர். குழந்தைகள், பெண்கள் எனப் பலரும் விரும்பிச் செல்லும் உணவகங்களில், இந்தக் கடை முக்கிய இடம் வகிக்கிறது. இந்த இட்லிக்கடை இரவு நேரத்தில் மட்டுமே இயங்கக்கூடியது. அதுவும் மாலை 6.30 மணி முதல், இரவு 9 வரை மட்டுமே இயங்கிவருகிறது.

எந்த ஊர்க்காரர்களும் மிஸ் பண்ணக் கூடாத ஹோட்டல் இது. ’நினைவூட்டும் இட்லிக் கடை’யை நினைவு வச்சுக்கோங்க!