Published:Updated:

திருச்சி ஊர்ப் பெருமை: கமகமக்கும் மணம், நாக்கில் இனிக்கும் சுவை, கூட்டம் மொய்க்கும் முரளி காபி கடை!

திருச்சி முரளி காபி

திருச்சி முரளி காபி கடை: "பிரபல எழுத்தாளர் சுஜாதா நம்ம கடையை பற்றி எழுதி இருக்காங்க. மூப்பனார் தொடங்கி கலைஞர், வைகோ, விஜயகாந்த், கவிஞர் வாலி, எனப் பலரும் நம்ம கடை காபியை குடித்துள்ளனர் என்றால் பெருமைதானே!"

திருச்சி ஊர்ப் பெருமை: கமகமக்கும் மணம், நாக்கில் இனிக்கும் சுவை, கூட்டம் மொய்க்கும் முரளி காபி கடை!

திருச்சி முரளி காபி கடை: "பிரபல எழுத்தாளர் சுஜாதா நம்ம கடையை பற்றி எழுதி இருக்காங்க. மூப்பனார் தொடங்கி கலைஞர், வைகோ, விஜயகாந்த், கவிஞர் வாலி, எனப் பலரும் நம்ம கடை காபியை குடித்துள்ளனர் என்றால் பெருமைதானே!"

Published:Updated:
திருச்சி முரளி காபி
'காபி' என்றவுடனே 'கும்பகோணம் டிகிரி காபி’யைத்தான் அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால், ஸ்ரீரங்கத்தில் உள்ள ’முரளி காபி’க்கும் திருச்சிக்கும் 40 ஆண்டுகள் பந்தம் இருக்கிறது. திருச்சியில் இக்கடையைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சினிமா பிரபலம் முதல் அரசியல் பிரபலம் வரை இந்தக் கடையின் ’ரெகுலர்’ கஸ்டமர்களாக இருக்கிறார்கள். இளசுகள் முதல் பெருசுகள் வரை கையில் ஒரு கப். கம... கம... காபியுடன் சந்தித்துப் பேசும் ’ஹாட்'ஸ்பாட் ஆகவும் இருக்கிறது முரளி காபி கடை.

காபியின் பூர்வீகம் இந்தியா கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? காபியைப் பூர்வீகமாகக் கொண்டது எத்தியோப்பியாதான் எனப், பலரும் சொல்கிறார்கள். அங்கு, ’கால்டி’ என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது காபிச் செடியின் இலைகளை ஆடுகள் மேய்ந்திருக்கிறது அப்படி மேய்ந்த ஆடுகள் வழக்கத்தை விட மிகச் சுறுசுறுப்பாகத் துள்ளிக் குதித்து ஓடியிருக்கிறது. அதன்பிறகுதான் ’காபி’ என்ற சூடான பானம் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவில் முதன் முதலாக ’பாபாபுதின்’ என்பவர் மெக்காவிற்குப் புனிதயாத்திரை சென்று வரும் பொழுது காபிக் கொட்டைகளை அவரது தாடியில் மறைத்துக் கொண்டு வந்து பயிரிட்டுள்ளார் எனவும் ஒரு வரலாற்றைச் சொல்கிறார்கள். இன்று நம் உணவுப் பழக்கவழக்கத்தில் காபி தவிர்க்க முடியாத பானமாகவே மாறியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொள்ளிடம், காவிரி எனத் தமிழ்நாட்டிற்கே வளம் சேர்க்கும் இரு ஆறுகளையும், தன் இரு கரையாகக் கொண்டு நடுவிலே தீவு போல அமைந்திருக்கிறது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க வருபவர்கள் 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள ’பஞ்சபூதத் தல’ங்களில் ஒன்றான, ’திருவானைக்கோயில் ஜம்புக்கேசுவரர்’ ஆலயத்திற்கும் செல்வதை மறப்பதில்லை.

காவிரி பாலம்
காவிரி பாலம்

அப்படி இங்கு வரும் ஆன்மீக அன்பர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக ராஜகோபுரம் முன்பு இருக்கும் ’முரளி காபி’க் கடையில் அருமையான ஒரு ’ஃபில்டர் காபி’யை குடித்துக்கொண்டே ரெங்கநாதரின் கோபுரத்தின் அழகைத் ரசிப்பது தனி சுகம் என்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறது அந்தக் காபிக்கடையில்? ஸ்ரீரங்கத்திலுள்ள ’முரளி காபி’ கடை முன்பே வண்டியை நிறுத்தினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்ரீரங்கத்துப் பெருமானைத் தரிசிப்பது மனதிற்குப் புத்துணர்ச்சி என்றால் கோபுர வாசலில் இருக்கும் முரளி கஃபேவில் கிடைக்கும் காபி நம் உடம்பிற்குப் புத்துணர்ச்சி. நல்ல சூடான காபி மனமும், சுவையும் நிறைந்து கிடைப்பது என்பது எல்லாம் தற்போதைய காலகட்டத்தில் அரிது. அதை நாற்பது வருடங்களுக்கு மேல் நிகழ்த்திக் காட்டிக் கொண்டுள்ளனர் முரளி கபே உரிமையாளர்கள்.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

காபியே நமக்கு மிகப் பெரிய உற்சாகம் என்றால் இவர்கள் தருவதோ டிகிரி காபி என்றால், சொல்லவே வேண்டாம். பத்துக்கு பத்து சதுர அடியுள்ள சிறிய கடைதான் இருந்தாலும், முரளி கஃபேவில் இவ்வளவு சுவையான காபியா என்பது ஆச்சர்யம் தானே? நாம் சென்ற நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்குமோ என்று பயந்து கொண்டே செல்ல கொரோனா கட்டுப்பாடுகளினால் முரளி கஃபே சற்றே களையிழந்து காணப்பட்டது. முதலில் நாம் காபியை குடித்து பார்த்துட்டு செய்திக்கான தகவல்களைப் பெறலாம் என காபி ஆர்டர் செய்தோம்.

ஆர்டர் செய்த மூன்றாவது நிமிடத்திலே நல்ல சூடாக, மினு மினுக்கும் பித்தளை டபராவில் கொஞ்சமும், டம்பளரில் நிறையவும் நல்ல நறுமணத்துடன் நுரை தெரிய நம் கையில் காபி கொடுக்கப்பட்டது. வெளியே நின்றிருந்த சிலர் பேசிக்கொண்டே காபி குடிக்க, நமக்கோ பேசுவதை விட காபியை ரசித்துக் குடிக்கவே தோன்றியது. சிறிய டம்பளரில் இருந்த காபியை முகத்தினருகே கொண்டு செல்லும்போதே அப்படியொரு மணம். கண்முன்னே தெரிய அப்படியே பருக ஆரம்பித்தோம்.

முரளி காபி
முரளி காபி

அப்பப்பா என்ன சுவை? இனிப்பு குறைவாகக் காபியின் கசப்பு சிறிதாக வர, தண்ணீர்க் கலப்படமில்லாத பசும்பாலில் காபி, வேற லெவலில் இருந்தது. எழுத்தாளர் சுஜாதா ஏன் இந்தக் கடையைப் பற்றி இவ்வளவு சிலாகித்து எழுதினார் என்பது நன்கு புரிந்தது. ஆமாம், புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதை ஒன்றில் முரளி கஃபேவை பற்றிப் புகழ்ந்து எழுதியிருப்பார். அந்த அளவிற்குச் சுவையில் தனித்துவமாக இருக்கிறது இந்தக் கடை. அத்தோடு டூரிஸ்ட் கைடுகளிலும் இக்கடையைப்பற்றி சுற்றுலாப் பயணிகள் காபி சுவையில் மெய்மறந்து பாராட்டி எழுதியிருக்கிறார்கள்.

’முரளி கஃபே’ காபியின் சுவை குறித்து நிர்வாகியான முரளியிடம் பேசினோம், "1989-க்கு முன்னால வரைக்கும் எங்க சித்தப்பா நடத்திட்டு வந்த இரவு நேர டிபன் கடைதான் இது. இப்போ ’முரளி கஃபே’வா மாறியிருக்கு. எங்க அப்பாகூட பிறந்த தம்பிகள்ல ஒருத்தர், 1927-ல இருந்து 1954வரை ஸ்ரீரங்கம் கோபுரத்துக்குள்ளே பெரிய டிபன் கடை வச்சிருந்தாங்க. அப்பறம் ஒருசில காரணத்துனால அதை மூடிட்டோம். அதுக்கு பிறகு, இப்போ இருக்குற இடத்துல நைட் மட்டும் டிபன் கடை வச்சிருந்தாரு.

கடையின் உரிமையாளர் முரளி
கடையின் உரிமையாளர் முரளி

நான் அப்போ 10-வது படிச்சிட்டு, வீட்ல இருந்தேன். எங்க சித்தப்பாவோடக் கடையிலேயே காலையில, நான் காபிக் கடையை ஆரம்பிச்சேன். மொத ஆறு மாசம் காபி குடிக்க யாருமே பெருசா வரல. திடீர்னு நைட் கடையை எடுக்குறதா முடிவு பண்ணிட்டேன். எனக்கும் காபி சரியா போட தெரியல. அப்போ ஒரு 3 நாள் கடைக்கு லீவு விட்டுட்டு என் கண்ணுல ஏற்பட்டிருந்த பிரச்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தப்போ, என் கடைக்கு அடிக்கடி வரும் வயசானவர் ஒருவர் இப்படியே கடைய மூடிடுப்பா, காபியும் ஒண்ணூம் நல்லா இல்ல, உடம்பையும் பாத்தமாதிரி இருக்கும்னு சொல்ல எனக்கு ரொம்ப கோவம் வந்திருச்சி. நையிட்டு முழுக்க தூக்கம் சரியா வரல. என்னடா மனுஷன் இப்புடி சொல்லிட்டாரேன்னு ஆத்து ஆத்து போனுச்சி மனசு. இவர எப்படியாது நம்ம கடையில காபி குடிக்க வச்சிரணும்னு தோணுச்சு.

ஒவ்வொரு கடையா காபி குடிச்சிட்டு அலைஞ்சேன், அவங்களோட டேஸ்ட்க்கு என்ன காரணமா இருக்கும்னு தேட ஆரம்பிச்சேன். எங்க தாத்தா காபி போடுறதுல்ல கில்லாடி. அப்பறம் கடையை திறந்து நேரிடையா நானே போயி, பாலைக் கறந்து எடுத்துட்டு வந்து, நைட்லாம் டிகாசன் போடாம உடனுக்குடன் டிகாசன் போட்டு காபி கொடுக்க ஆரம்பிச்சேன்.

பசும் பால்
பசும் பால்

நான் எதுக்குடா பால் கறக்கனும்னு நீங்க யோசிக்கலாம். பாலை, மத்தவங்கக் கறந்தா கண்டிப்பா தண்ணி ஊத்திடுவாங்க. நான் கறந்தா அது எதுவும் நடக்காதுல்ல. அப்படி என்னைத் தூங்க விடாம, நான் உருவாக்கின கடைதான் இந்த ’முரளி கஃபே" என அவர் சொல்லும்போதே அவ்வளவு நெகிழ்ச்சியா இருந்தது.

"தொடர்ந்து கூட்டம் அதிகமா வர ஆரம்பிச்சது. காலையில 4 மணிக்கு தொடங்குற எங்க காபி கடை இரவு 7 மணி வரை இருக்கும். மக்கள் வந்துகிட்டே இருப்பாங்க. ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி டிகாசன் போட்டு பித்தளை பாத்திரத்துல எடுத்து வச்சிடுவோம்” என்றவர் காபியின் சுவை குறித்து பிரபலங்கள் பாராட்டியதைப் பற்றி பேசினார்.

"பிரபல எழுத்தாளர் சுஜாதா நம்ம கடையை பற்றி எழுதி இருக்காங்க. அரசியல்வாதிகள், திரைப்பட நடிகைர்கள் எனப் பல பிரபலங்கள் திருச்சி வந்தா நம்ம கடை காபிதான் அவங்களுக்கு கொடுப்பாங்க. மூப்பனார் தொடங்கி இன்று இருக்கும் அரசியல்வாதிகள் வரை நம்ம கடையின் காபியை ருசிக்காமல் இருந்தது இல்லை. கலைஞர், வைகோ, விஜயகாந்த், கவிஞர் வாலி, எனப் பலரும் நம்ம கடை காபியை குடித்துள்ளனர் என்றால் பெருமைதானே! பா.ஜ.கவோட மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி அவர்கள் சாமி தரிசனம் முடிச்சிட்டு நம் கடைக்கே வந்து காபி குடிச்சி பார்த்துட்டு அவர் பி.ஏ விடம், 'கடையில காபி நல்லா இருக்குனு சொல்லிட்டு வா' என்று காரில் உட்கார்ந்திருந்தார்.

காபி
காபி

அவரை பார்த்துட்டு நான் வெளியே வந்தபோது ’வெல்டன், நல்ல காபி குடிச்ச பீல் இருக்குப்பா’ன்னு அவரது கட்டவிரலை உயர்த்திக் காட்டி எங்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார். பல டூரிஸ்ட் கைடுகளிலும் எங்களைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். வடமாநிலத்தில் உள்ளவர்கள் முதல் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வரை எங்களது கடைக்குத் தேடி வந்து காபியை சுவைப்பதோடு புகழ்ந்து பேசுகிறார்கள் என்றால் சந்தோஷம் தானே?” என்றார்.

அங்கு காபி அருந்தி கொண்டிருந்த இளைஞர்களிடம் பேசினோம், ”எங்க டீன் ஏஜில் ஆரம்பிச்ச பழக்கம் இது. பல இடத்துல காப்பி குடிப்போம். ஆனா, இங்க குடிக்கிறமாதிரியான பீலிங் எங்குமே இல்லங்க.

முரளி காபி கடை வாடிக்கையாளர்
முரளி காபி கடை வாடிக்கையாளர்

வாரத்துல மூணு முறையாவது முரளி கஃபே வந்துடுவோம், ரொம்ப டேஸ்டியான இந்த காபி மாறி நாங்க எங்க வீட்ல கூட சாப்பிட்டது இல்லை. கிட்டத்தட்ட மூணு வருசமா இங்க வந்துட்டு இருக்கோம். அந்த ஸ்ரீரங்கம் கோபுரத்தை ரசிச்சிக்கிட்டு, நண்பர்களோட பேசிகிட்டு தூரத்துல எங்காவது பாட்டு ஓடுச்சுன்னா இன்னும் சிறப்பா இந்தக் காபியை குடிக்கும் போது வர சுகம் இருக்கே... அது வேற லெவல்லுங்க!” என, முரளி கஃபே குறித்து உணர்வு பொங்கப் பேசினார்கள்.

திருச்சி முரளி காபி
திருச்சி முரளி காபி
காபி பிரியர்களுக்கு மட்டுமல்ல, ஆன்மீகவாதிகள், மனதை லேசாக்க நினைப்பவர்கள் என அனைவரின் உடலுக்கும், மனதிற்கும் உற்சாகமூட்டும் சிறந்த மீட்டிங் ஸ்பாட்டாக, திருச்சி முரளி கஃபே இருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. முடிந்தால் இல்லை கண்டிப்பாக ஒரு முறையேனும் முரளி கஃபேவில் காபி குடித்து விடுங்கள். கண்டிப்பாக உற்சாகமாகிவிடுவீர்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism