Published:Updated:

திருச்சி ருசி: பார்த்தசாரதி விலாஸ் ஸ்பெஷல் - சுண்டி இழுக்கும் நெய்தோசை, மணக்கும் வெங்காய சாம்பார்!

திருச்சி நெய் தோசை

"காவேரி தண்ணியும், அதை வார்த்தெடுக்குற இரும்பு தோசைக் கல்லும்தான் எங்க தோசையோட ருசிக்குக் காரணம். எல்லாக் கடையிலும் நெய் தோசை போடுறாங்க. ஆனா எங்க கடையில போடுற தோசைக்கு மவுசு அதிகமா இருக்க காரணமே விறகடுப்புதான்."

திருச்சி ருசி: பார்த்தசாரதி விலாஸ் ஸ்பெஷல் - சுண்டி இழுக்கும் நெய்தோசை, மணக்கும் வெங்காய சாம்பார்!

"காவேரி தண்ணியும், அதை வார்த்தெடுக்குற இரும்பு தோசைக் கல்லும்தான் எங்க தோசையோட ருசிக்குக் காரணம். எல்லாக் கடையிலும் நெய் தோசை போடுறாங்க. ஆனா எங்க கடையில போடுற தோசைக்கு மவுசு அதிகமா இருக்க காரணமே விறகடுப்புதான்."

Published:Updated:
திருச்சி நெய் தோசை
திருச்சிக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் செல்பவர்கள் திருச்சி ரெங்கநாதரை தரிசித்துவிட்டு, திருவானைக்கோயில் ஜம்புக்கேசுவரரை வழிபடாமல் வருவதில்லை. அப்படி இரு கோயிலையும் வழிபடுபவர்கள் 'பார்த்தசாரதி கடை' நெய் தோசையைச் சுவைக்காமல் வருவதில்லை என்று தம்பட்டம் அடிக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள்.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

இந்தக் கடையைப் பற்றித் தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவருமே எங்களது கஷ்டமர்கள்தான் என்கிறார்கள் கடை உரிமையாளர்கள். திருச்சி மக்களும் இக்கடையைப் பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள். அப்படி என்னதான் விசேஷம் இந்தக் கடையில்... வாங்க ஒரு ரவுண்டு போவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொள்ளிடம், காவிரி எனத் தமிழ்நாட்டிற்கே வளம் சேர்க்கும் இரு ஆறுகளையும் தன் இரு கரையாகக் கொண்டு நடுவிலே தீவு போல் அமைந்திருக்கும் ஸ்ரீரங்கத்திற்கு ரெங்கநாதரை தரிசிக்க வருபவர்கள் கண்டிப்பாக இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாக இருக்கும் திருவானைக்கோயில் ஜம்புக்கேசுவரர் ஆலயத்திற்கும் செல்வதைத் தவிர்ப்பதில்லை. காரணம், இந்தச் சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது என்பதால் மட்டுமல்ல, திருவானைகோயில் கோபுரச் சுவரின் எதிரில் பார்த்தசாரதி விலாஸ் ஹோட்டலில் கிடைக்கும் நெய்தோசைகாகவும்தான்.

பார்த்தசாரதி விலாஸ்
பார்த்தசாரதி விலாஸ்

'பார்த்தசாரதி விலாஸ்'னு கேட்டவுடன் எல்லோரும் சொல்வது, நெய் தோசைதான். நெய் தோசைக்குச் சின்னவெங்காய சாம்பார், காரச் சட்னி, தேங்காய் சட்னியை சைட் டிஷ்ஷாகக் கொடுத்தாலும், வெறும் தோசையாகச் சாப்பிட்டாலே சுவை அள்ளும் என்ற விவரம் நமக்குள் ஆர்வத்தைத் தூண்டிவிட, வண்டியை நேராக திருவானைகோயிலுக்கு விட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜம்புக்கேசுவரர் ஆலய கோபுரத்தின் வலதுபக்கம் சென்றபோதே நெய் மனம் நம்மைச் சுண்டியிழுக்க, பார்த்தசாரதி விலாசில் நுழைந்தோம். கொரோனா கட்டுப்பாடு காரணமாக 50 சதவீதம் பேர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, மற்றவர்கள் பார்சல் வாங்கிக் கொண்டிருந்தனர். ஒருசில கெடுபிடிகளுக்கு மத்தியில் நாமும் ஒரு டேபிளைப் பிடித்து அமர்ந்தோம்.
பார்த்தசாரதி விலாஸ்
பார்த்தசாரதி விலாஸ்

"அண்ணே நல்ல மொருகலா ஒரு நெய் தோசை..." என ஆர்டர் சொல்ல, "அண்ணணோட சேர்த்து மொருகலா ரெண்டு லைன்னுக்கு..." எனச் சொன்னார்கள் சப்ளையர்கள். 60 வருடமாகத் தோசை வார்த்துக் கொண்டிருக்கும் இரும்புக் கல்லில், மாவை எடுத்து மொறு மொறுவென வார்த்து, கணக்கே இல்லாமல் இரண்டு மூன்று கரண்டி நெய் எடுத்து ஊற்றுகின்றனர். ரொம்ப மெல்லிதாகத் தகடு போல வார்க்கப்பட்ட தோசையை மயக்கும் நெய் வாசத்துடன், ரேகைகள் தெரிய எடுத்துவந்துக் கொடுத்தனர். சாம்பாருடன் தொட்டுச் சாப்பிடுகையில் தோசை வெகு வேகமாக வாயில் கரைந்தது.

தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமல் சாப்பிட்டாலும் தோசையின் ருசி நம்மை மெய்மறக்க வைக்கின்றது. சாப்பிடச் சாப்பிட, பசியுணர்வு மறந்து தோசை கரைந்து கொண்டே இருந்தது. இங்கு நெய் தோசையும் சாம்பாரும் ரொம்பவே ஸ்பெஷல். இது மட்டும் இல்லாமல் சாம்பார் வடை, ரவா பொங்கல் என எல்லாமே ஸ்பெஷல்தான். கூடவே இங்குக் குடிப்பதற்குக் காபியுடன் மோரும் தருவது சிறப்பு.

நெய் தோசை
நெய் தோசை

"78 வருஷமா இருக்கும் மிகப் பிரபலமான இந்தக் கடையில் 60 வருஷத்துக்கு முன்னாடி கச்சேரிக்குத் திருச்சிக்கு வந்தவங்கத் தொடங்கி, மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராசர், பிற அரசியல்வாதிகள் வரை பல்வேறு பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக இருந்தாங்க, இன்னும் இருக்குறாங்க" எனும் கடையின் உரிமையாளர் வைத்தியநாதன், இந்த நெய் தோசையின் மொறு மொறு சுவை, நெய் மணம் மற்றும் சாம்பாரின் பிரத்யேகச் சுவைக்கான காரணம் குறித்தும் பேசுகிறார்.

”1943ல எங்க அப்பா அனந்த நாராயண அய்யர்தான் இந்தக் கடையை ஆரம்பிச்சாங்க. 78 வருசமா இந்த ஹோட்டலை நடத்திட்டு வர்றோம். நான் 1987ல இருந்து இப்போவரை நடத்திட்டு வர்றேன். எனக்கு அடுத்தப்படியா ஜெர்மனியில் வேலை பார்க்கும் என்னுடைய மகன் இந்த ஹோட்டலை நடத்துறதுக்கு பயிற்சி எடுத்துட்டு இருக்கான்.

கடையின் உரிமையாளர் வைத்தியநாதன்
கடையின் உரிமையாளர் வைத்தியநாதன்

எல்லாக் கடையிலும் நெய் தோசை போடுறாங்க. ஆனா எங்க கடையில போடுற தோசைக்கு மவுசு அதிகமா இருக்கக் காரணமே விறகு அடுப்புதான். நீங்க என்னதான் கேஸ், ஸ்டவ்ன்னு விதவிதமா அடுப்பு வச்சி சுட்டாலும் விறகு அடுப்புக்கு இணையா எதுவுமே கிடையாது. ஒரு கரண்டி மாவைக் கல்லுல ஊத்துனா எல்லாபக்கமும் சரியா வேகும். அதேபோல, நெய்யையும் நாலு பக்கமும் ஊத்தனும்.

நல்ல அனுபவமுள்ள மாஸ்டர், அவங்களோட மாவு அரைக்குற பதமும், காவேரி தண்ணியும், அதை வார்த்தெடுக்குற இரும்பு தோசைக் கல்லும்தான் எங்க தோசையோட ருசிக்குக் காரணம். ஒரு நல்ல பணியாளர் கிடைச்சா கண்டிப்பா தொழில் எவ்ளோ பெருசா வேணாலும் மாறும்" என்கிறார் உறுதியாக.

நெய் தோசை
நெய் தோசை

"தோசைக்கான மாவை ஒரு படி அரிசிக்குக் கால்படி உளுந்து போட்டு எல்லாரும் அரைக்குற மாதிரிதான் அரைக்குறோம். 'நெய் தோசை' மட்டும் இல்லை எங்க கடையில கிடைக்குற 'ரவா பொங்கலு'ம் ரொம்ப பேமஸுங்க! பாசிப்பருப்பை வேகவைச்சு, ரவையை வறுத்து, பாசிப்பருப்புல தண்ணியை ஊத்திட்டு, மிளகு, சீரகம், நெய் கொஞ்சமா விட்டு இறக்குன்னா 'ரவை பொங்கல்' ரெடி ஆகிடும்" என அவர் சொல்லி கொண்டு இருக்கும்போதே 'ஏன்டா 10 மணிக்கு வந்தோம், 6 மணிக்கே வந்துருக்கலாமே' என நம் மனது ஏங்கத் தொடங்கியது.

"எங்க கடையில காலையில 5.15க்கு ஆரம்பிக்குற ரவா பொங்கல் சாம்பாரின் டேஸ்ட்டுனால காலையில 6.15குள்ள அது வித்து தீந்துடும்" எனச் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார் வைத்தியநாதன்.

அவர் பேச்சை முடித்தபிறகு நெய் தோசையைச் சாப்பிட்டுக்கொண்டிருந்த கோவிந்தசாமி என்ற வாடிக்கையாளர், ”இவங்க கடை சாம்பார் ருசி வேற லெவல்ல இருக்குங்க. சாம்பாரின் ருசிக்குக் கடையில் சாம்பார் வைக்கும் கைப்பக்குவம்தான் காரணம். மற்ற ஹோட்டல் சாம்பாரை விடச் சுவை அதி அற்புதமாகவும், சாப்பிட்டு கொண்டே இருக்கவைக்கும்" என்றார்.

நெய் தோசை
நெய் தோசை

சாம்பாரின் ருசியைப் பற்றி அறியவில்லை என்றால் எப்படி என்று அவரிடம் செய்முறை கேட்க அதையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

கடையின் சுவை மட்டுமல்ல, அதனின் பாரம்பர்யமிக்க கட்டடமும், பழங்கால தூண்களும் கண்டிப்பாக நம்மை ஆச்சர்யப்படுத்தும். உணவின் சுவையில் நம்மை ஆச்சர்யப்பட வைத்தவர்கள், அதனின் விலையிலும் நம்மை அதிசயிக்க வைக்கின்றனர். இவ்வளவு சுவையுள்ள நெய் தோசையின் விலை 40 ரூபாய் மட்டுமே!

"நெய்யின் சுவையில் சமரசம் செய்ய நாங்க எப்போதும் விரும்ப மாட்டோம். கடை ஆரம்பிச்ச காலத்துல இருந்து இப்போ வர வீட்ல வெண்ணை எடுத்து, அதை நெய்யா உருக்கிப் பயன்படுத்துறோம். வெளி கடைகள் பத்தியோ, வேறு பிராண்ட பத்தியோ நாங்க யோசிச்சி கூட பாக்கல. எல்லாரும் இப்படிப்பட்ட தோசையை சூப்பர் சூப்பர்ன்னு சொல்லியே, இப்போ யாரும் நெய் தோசைனு கேக்குறது இல்லை. சூப்பர் வேணும்னுதான் ஆர்டரே கொடுக்குறாங்க" எனச் சொல்லிச் சிரிக்கிறார் வைத்தியநாதன்.

திருச்சி நெய் தோசை
திருச்சி நெய் தோசை

திருச்சி மற்றும் திருச்சியைச்சுற்றி ஆன்மிகப் பயணம், அல்லது சுற்றுப்பயணம் மேற்கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாக ஒரு முறையேனும் பார்த்தசாரதி விலாஸில் சாப்பிட்டுப் பார்த்து கமென்ட்ஸ் சொல்லுங்கள்.

ஆனா, திங்கள்கிழமை மட்டும் போகாதீங்க. அன்னைக்கு மட்டும் கடை லீவுங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism