Published:Updated:

"சிவாஜி சார் திருச்சி வந்தா இங்கதான் ஜிகர்தண்டா குடிப்பார்!" - 3 தலைமுறைகளாக இயங்கும் ஜிகர்தண்டா கடை

திருச்சி ஜிகர்தண்டா | முகம்மது அலி

"90'ஸ் கிட்ஸ் பசங்களுக்கு எங்க கடைதான் மீட்டிங் பாய்ண்டே. இது வரலாறுதானே? எங்களைத் தேடி வரும் மக்களுக்குத் தரமான, சுவையான ஜிகர்தண்டாவைக் கொடுக்குறது முக்கியம்!"

"சிவாஜி சார் திருச்சி வந்தா இங்கதான் ஜிகர்தண்டா குடிப்பார்!" - 3 தலைமுறைகளாக இயங்கும் ஜிகர்தண்டா கடை

"90'ஸ் கிட்ஸ் பசங்களுக்கு எங்க கடைதான் மீட்டிங் பாய்ண்டே. இது வரலாறுதானே? எங்களைத் தேடி வரும் மக்களுக்குத் தரமான, சுவையான ஜிகர்தண்டாவைக் கொடுக்குறது முக்கியம்!"

Published:Updated:
திருச்சி ஜிகர்தண்டா | முகம்மது அலி
'ஜிகர்தண்டா' என்றாலே, 'மதுரை'யைத்தான் அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால், திருச்சிக்கும், ஜிகர்தண்டாவுக்கும் மூன்று தலைமுறை பந்தம் இருக்கிறது. திருச்சி, பாலக்கரையில் உள்ள 'ஏ.ஒன் ஸ்டார் ஜிகர்தண்டா கடை'யைப்பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. முக்கியமாக திருச்சியின் 90-ஸ் கிட்ஸ்களுக்கு இந்தக் கடைதான் 'பேவரைட் ஹாட்ஸ்பாட்' எனச் சொல்கிறார்கள்.
திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

'ஜிகர்தண்டா' என்ற வார்த்தை தமிழ் மொழி கிடையாது. இது ஒரு இந்தி வார்த்தை. 'ஜிகர்' என்றால் 'இதயம்' அல்லது 'நெஞ்சு' எனப் பொருள்படும். 'தண்டா' என்றால் 'குளிர்ச்சி' என்று பொருள். இதயத்தைக் குளுமைப்படுத்தும் எனப் பொருளுடையதால்தான் அதற்கு 'ஜிகர்தண்டா' என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். தற்பொழுது கோடை காலத்தில் மக்கள் அனைவரும் விரும்பி அருந்தும் குளிர்பானங்களில் ஒன்றாகிவிட்டது இந்த ஜிகர்தண்டா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சி தமிழகத்தின் மையப் பகுதியாக மட்டுமில்லாமல், மிகப்பெரிய மாநகரமாகவும், புகழ்பெற்ற கோயில்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதாலும், இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். மாநகரின் மையப் பகுதியான பாலக்கரையில், மூன்று தலைமுறையையும் கடந்து 63 ஆண்டுகளுக்கும் மேலாக ஜிகர்தண்டா தயாரிப்பு மற்றும் விற்பனையில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார்கள் முகம்மது அலி குடும்பத்தினர்.

திருச்சியில ஜிகர்தண்டா விற்பனை செய்யும் நிறைய கடைகள் இருந்தாலும், "ஜிகர்தண்டான்னா அது 'ஏ.ஒன் ஜிகர்தண்டா’கடை தான்" எனச் சொல்கிற பெரும்பாலான மக்களின் கருத்துக்குச் செவிசாய்த்து, அந்தக் கடைக்கு ஒரு விசிட் அடித்தோம்.
ஜிகர்தண்டா கடை
ஜிகர்தண்டா கடை
DIXITH

உச்சி வெயில் தாளாத மதிய வேளையில் ஜில்லென ஒரு ஜிகர்தண்டாவை போட்டு கையில் கொடுத்தப்படி பேச ஆரம்பித்தார் அக்கடையின் உரிமையாளரான முகம்மது அலி.

”காரைக்குடி பக்கத்துல உள்ள நாட்டரசன்கோட்டைதான் எங்களோட பூர்வீகம். எங்கப்பா, அவருக்குப் பதினஞ்சு வயசா இருக்கும் போதே வேலை தேடி திருச்சிக்கு வந்துட்டுறாரு. அப்போதான் மும்பையிலிருந்து இங்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த சில குடும்பத்தினர்கள், ஜிகர்தண்டா கடையை ஆரம்பிச்சாங்க. அவுங்கிட்டதான் எங்க அப்பா வேலைக்குச் சேர்ந்து தொழிலைக் கத்துக்கிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு, 1962-ம் ஆண்டு இதே இடத்துலதான் கடையை ஆரம்பிச்சாரு. ஜிகர்தண்டா தயாரிப்புல, அப்பாவோட கைப் பக்குவம், அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. 'பாய் ஜிகர்தண்டான்னா அது வேற லெவல்'ன்னு சொல்லி, பலரும் ரசிகர்களாக இருந்தாங்க. வியாபாரம் செய்யற நேரம் போக, மீதி நேரத்துல பால், சர்பத், பாதாம் பிசின் கலந்து அப்பா ஏதாவது செஞ்சு கொடுப்பாங்க. வித்தியாசம் வித்தியாசமா செஞ்சிக்கொடுப்பாரு. அவரு எடுத்து வச்ச நல்லபேருதான் இதுநாள் வரைக்கும் எங்களுக்குக் கைகொடுக்குது. அந்தப் பெயரையும் அவுங்க கத்துக்கொடுத்த கைப் பக்குவத்தையும் கொஞ்சமும் மாற்றாமல் அதே மாதிரியான தரத்தில் செஞ்சிகிட்டு இருக்கேன்.

ஜிகர்தண்டா கடை
ஜிகர்தண்டா கடை
DIXITH

எங்க அப்பாவுக்குப் பிறகு, நான் கடையை நடத்துறேன். எனக்கு பிறகு என்னோட மகன் இந்தத் தொழிலைக் கவனிக்க ஆரம்பிச்சிட்டான். முன்னாடி, வியாபாரம் செய்ய நின்னுக்கிட்டிருந்த நினைவுகள் இன்னும் கண்ணுக்கு முன்னாடி வந்து போகுது. இப்போ அதே கடையில் தினமும் நூற்றுக்கணக்கான கஸ்டமர்களைச் சந்திக்கிறோம். திருச்சி மட்டுமில்லாம வெளியூர் மக்களுக்கும் இப்போ எங்களோட ஜிகர்தண்டா ஃபேவரைட் ஆகிட்டதுனால, எப்போதும் கடையில கூட்டமாத்தான் இருக்கும். மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திருச்சிக்கு வரும்போதெல்லாம் எங்க கடையின் ஜிகர்தண்டாவை குடிச்சிட்டுதான் போவாருன்னு எங்க அப்பா அடிக்கடி சொல்லுவார். அதே போல நடிகர் எஸ்.வி.சேகர் திருச்சி வந்தாலும், எங்கிருந்தாலும் எங்க ஜிகர்தண்டாவை கேட்டு வாங்கிக் குடிச்சிட்டுதான் போவாரு.

ஜிகர்தண்டா கடை
ஜிகர்தண்டா கடை
DIXITH

அதே போல அரசியல் பிரபலங்கள், வி.ஐ.பிக்களுக்கும் எங்ககிட்ட இருந்துதான் பார்சல் போகும். இவ்வளவு கடைகள் இருந்தும் உங்க கடை டேஸ்ட்டு வித்தியாசமா இருக்கே, நீங்க என்ன ஃபார்முலா யூஸ் பண்றீங்கன்னு பல பேரு கேட்டுட்டு போய் லால்குடி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர்ன்னு பல ஊர்கள்ல கடைய போட்டுருக்காங்க. நாங்க எதையும் மறைச்சி வைக்கறது இல்ல. எல்லோருமே வளருனும்ல!

காலையில 10 மணிக்கு ஆரம்பிச்சா, ராத்திரி 9 மணிக்குதான் வீட்டுக்கு போவோம். தினமும் ஜிகர்தண்டாவிற்கான பால் மட்டுமே 50 முதல் 60 லிட்டர் வரை தேவைப்படும். குறைந்த பட்சம் ஒரு நாளுக்கு 12 முதல் 15 ஆயிரம் வரை வருமானமாக கிடைக்கிறது. ரம்ஜான் நோன்பு காலங்களில் வருமானம் இன்னும் அதிகமாக இருக்கும். கொரோனாதான் எங்களோட வாழ்கையைவே தலைகீழா மாத்திப்போட்டுருச்சி" என்கிறார்.

முகமது அலியின் மகன் ரியாஜூதீன்
முகமது அலியின் மகன் ரியாஜூதீன்

முகமது அலியின் மகன் ரியாஜூதீன், ”திருச்சியில ஆரம்பத்துல ஜிகர்தண்டாவுக்குன்னு ஒண்ணு ரெண்டு கடைமட்டும்தான் இருந்துச்சு. ஆனா, இன்னைக்கு நிறைய கடைகள் முளைச்சிருச்சு. இத்தனை கடைகளை பார்க்குறப்போ, எங்க தாத்தாவோட நினைப்புதாங்க வருது. ஜிகர்தண்டாவுக்குத் தேவையான அத்தனை பொருள்களையும் நாங்களே சொந்தமாகத் தயாரிக்கிறோம்.

முகம்மது அலியின் தந்தை
முகம்மது அலியின் தந்தை

தாத்தா சொல்லிக்கொடுத்த அந்த ரெசிபி மாறாம பாலாடை, பாசந்தி சுவையைக் கூட்டி விற்பனை செய்யறோம். வீட்டிலேயே சீனி சேர்க்கப்படாத பசும்பாலை குறைந்தது எட்டு மணி நேரத்துக்கும் மேல நல்லா சுண்டவிட்டு காய்ச்சி பால்கோவா போல எடுக்கணும். ஜிகர்தண்டா சர்பத்ல இயற்கையான சந்தன பவுடர், மகாகாளி மூலிகை, நன்னாரி வேர், சீனி போன்றவற்றை சேர்த்து தயாரிக்கிறதால இயற்கையான டேஸ்ட் கிடைக்கிறது. இது உடம்புக்கும் நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது.

அதேபோல ஜிகர்தண்டாவின் சுவையை அதிகப்படுத்தி காட்டுறதற்காக சிலர் விதவிதமான ஐஸ்கிரீம் பயன்படுத்துகிறாங்க. நாங்க அதுமாதிரி செய்றதில்லை. பளிச்சுன்னு நிறம் வர்றதுக்காகச் சேர்க்கப்படுற செயற்கையான எசன்ஸையும் நாங்க சேர்க்கறதில்லை. அதோட ஒரிஜினல் சுவை என்னவோ அதை அப்படியே கொடுக்கிறோம், கூடுதலாக எந்த பொருள்களையும் சேர்ப்பதில்லை. கல்யாணம் மட்டுமில்ல வீட்டுல நடக்ககூடிய எல்லா நல்ல காரியங்களுக்கும் எங்களோட ஜிகர்தண்டாவைதான் வாங்கிட்டு போறாங்க.

ஜிகர்தண்டா கடை
ஜிகர்தண்டா கடை
DIXITH

இதில் நல்ல வருமானம் வந்தாலும் எங்க தாத்தா ஆரம்பிச்ச இந்த இடத்தை விட்டு நகர, எங்களுக்கு மனசு இல்லை. எங்க கடைக்குனு நாங்க தனியா விளம்பரம் எதுவும் பண்றதில்லை. கடைக்கு வர்ற கஸ்டமர்ஸே பத்துப் பேர்கிட்ட சொல்லி பிரபலப்படுத்திடுறாங்க. 90'ஸ் கிட்ஸ்பசங்களுக்கு எங்க கடைதான் மீட்டிங் பாய்ண்டே. இது வரலாறு தானே? எங்களைத் தேடி வரும் மக்களுக்குத் தரமான, சுவையான ஜிகர்தண்டாவைக் கொடுக்குறதுதான் எங்களுக்கு முக்கியம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism