Published:Updated:

திருச்சி - ஊர்ப்பெருமை: இளநீர் தெரியும்... இளநீர் குருத்து ஜூஸ் தெரியுமா? எப்படிச் செய்கிறார்கள்?

திருச்சி - இளநீர் கடை
News
திருச்சி - இளநீர் கடை

இளநீருடன் இளநீர் குருத்து ஜூஸ் அப்படி ஒரு சுவையில் இருந்தது. சிறிது இளநீர் ஜூஸில் சப்போட்டா பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்தாற்போன்று ஒரு சுவை!

இப்பொழுதுதான் குளிர்பானங்கள். அப்போதெல்லாம் நம்மைக் குளிர்விக்கும் பானம் இளநீர் மட்டும்தான். சைக்கிளில் அல்லது தெருமுனைகளில் இருக்கும் இளநீர் கடைகளில், "நல்ல வழுக்கையா பார்த்து இரண்டு கொடுங்க அண்ணா" என்று நம் அப்பா வாங்கிக் கொடுக்க, பெரும்பாலும் ஸ்ட்ரா இல்லாமல் அதனை அப்படியே குடிப்பதை பெருமையாக கருதி வாய் பத்தாமல், மேல் எல்லாம் சிந்தி திட்டு வாங்கி கொண்டே குடிப்போம்.

கூடவே குடித்த இளநீரை இரண்டாக வெட்டி அதனின் உள் இருக்கும் வழுக்கையை தேங்காய் ஓட்டின் ஒரு சிறு பகுதியை வெட்டி எடுத்து ஸ்பூன் போல பயன்படுத்தி சாப்பிடுவதில் உள்ள சுகம் இப்பொதும் கூட எந்தப் பானத்திலும், தின்பண்டத்திலும் கிடைக்காது. தற்போதும் முன்புபோலவே அங்கங்கே இளநீர் கிடைத்தாலும் மனதை அங்கே நிறுத்தி அதனை வாங்கி குடிக்கவிடாமல் மற்ற பானங்கள் நம்மை தடுத்துவிடும். ஆனால் திருச்சியில் உள்ள இப்ராஹிம் அண்ணா இளநீர் கடைக்கு சென்றால் அவர் இளநீரை கொடுக்கும் விதத்திலேயே மறுபடியும் அவரின் கடைக்கு நாம் சென்றுவிடுவோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இளநீரில் பாயசம், சர்பத், ஜூஸ் எனப் பலதையும் சாப்பிட்டு இருப்போம். ஆனால் நல்ல நீர் உள்ள இளநீரை சரசரவென வெட்டி, உள்ளிருக்கும் நீரை அப்படியே மிக்ஸியில் கவிழ்த்து, அப்படியே அதில் இளநீரின் உள்ளே இருக்கும் மிருதுவான வழுக்கையையும், அதனின் பிஞ்சு ஓட்டையும் (இளநீர் குருத்தை) பக்குவமாக எடுத்து சீவி போட்டு மொத்தமாக அடிக்க அப்படியே சாக்லேட் கலரில் ஒரு ஜூஸ் கிடைக்கிறது. அதனுடன் ஏற்கெனவே தயாராக இருக்கும் இளநீரும், இளம் தேங்காயும் கலந்த ஜூஸை சேர்த்து, சர்க்கரை வேண்டுமா வேண்டாமா எனக் கேட்க நாம் வேண்டாம் என்றதும் அப்படியே மொத்தத்தையும் கலந்து ஒரு ஜூஸாகக் கொடுத்தார்.

இப்படி ஓர் அமிர்தத்தை நாம் சாப்பிட்டு இருப்போமா என்ற கேள்வி எழுந்தது. சந்தேகம்தான்! இளநீருடன் இளநீர் குருத்து ஜூஸ் அப்படி ஒரு சுவையில் இருந்தது. சிறிது இளநீர் ஜூஸில் சப்போட்டா பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்தாற்போன்று ஒரு சுவை! துவர்ப்பும், சிறிய இனிப்பும் என 250 மில்லி கண்ணாடி டம்பளரில் கெட்டியாகவும் இல்லாமல், ரொம்ப நீராகவும் இல்லாமல் ஜில்லென கிடைக்கும் அந்த ஜூஸால் கண்டிப்பாக நம் வயிறு சந்தோஷப்பட்டிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சியின் மிக முக்கிய கட்டடமான தேவர் ஹால் எதிரில் உள்ளது இவரின் கடை. 60 வருடமாக மூன்றாம் தலைமுறையாக இதே இடத்தில் இளநீர் கடை நடந்து வருகிறது. தள்ளுவண்டியில் உள்ள இவரின் கடை, காலை 8 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணி வரை இயங்குகிறது. 60 வருடங்களாக இருந்தாலும் தற்போது நான்கு வருடங்களாக இப்ராஹிமால் கொடுக்கப்படும் இந்த இளநீர் குருத்து ஜூஸிற்கும், இளநீரும் சாத்துக்குடி கலந்து கொடுக்கும் ஜூஸிற்கும், இளநீர் மில்க்க்ஷேக்கிற்கும்தான் ரசிகர்கள் பலர் உண்டு. அதனால்தான் எப்போதும் பரபரவென இருக்கிறது இவரின் கடை.

இப்ராஹிம்
இப்ராஹிம்
DIXITH

"இளநீர் விக்குறதைத்தான் ரொம்ப வருஷமா என்னோட அப்பா பண்ணிட்டு இருந்தார். நானும் தொடர்ந்து அதைத்தான் பண்ணிட்டு இருந்தேன். ஆனா, ஏதோ ஒரு மன திருப்தியின்மை கடைக்கு வர, எல்லாருக்கும் ஒரே அளவுல, ஒரே சுவைல கொடுக்க முடிலன்னு தோனிச்சு. சரி, ஜூஸா அடிச்சி எல்லாருக்கும் ஒரே மாதிரி கொடுக்கலாம்னு நினைச்சப்பதான் இந்தக் குருத்து ஐடியா வந்துச்சு.

எங்க அப்பா சின்ன வயசுல இருந்து வயித்துக்கு பிரச்னைன்னு சொன்னாலே இந்தக் குருத்தைத்தான் சாப்பிட கொடுப்பாரு. அப்படியே அதை சரி பண்ணிடும். அதை தனியா மக்களுக்கு சாப்பிட கொடுக்கலாம். ஆனா அதை மென்னு சாப்பிடுறது ரொம்ப கஷ்டம்ங்கறதுனால இப்படி ஜூஸா குடுத்துட்டு இருக்கேன். இப்படிக் கொடுப்பதன் மூலம் இளநீரின் பக்கம் மக்களைத் திருப்பவும் முடிகிறது, ஆரோக்கியமாகவும் இருக்கிறது" என்கிறார் கடையின் உரிமையாளரான இப்ராஹிம்.

தினமும் 200 பேர் வரை இளநீருக்காக இவர் கடைக்கு வந்துவிடுகின்றனர்.

"ரொம்ப பதமான இளநியையும் அதன் குருத்தையும் எடுத்து கொடுக்கறது கஷ்டமா இருந்தாலும், ஆரோக்கியத்தை கொடுக்குறோம்ங்கிற சந்தோஷம் இருக்குது. அது போதும்" என்றவரிடம், "அண்ணே ஒரு மில்க்ஷேக்" எனக் கேட்க மகிழ்ச்சியுடன் தனது வேலைய தொடர ஆரம்பித்தார்.

இளநீரின் நன்மைகள் நாம் அறிவோம், ஆனால் இளநீரின் மேல் ஓட்டின் (குருத்தின்) நன்மைகள் குறித்து திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் சா. காமராஜ் அவர்களிடம் பேசினோம்.
திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் சா. காமராஜ்
திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் சா. காமராஜ்

"இளநீரை எந்த வகையில் எடுத்துகொண்டாலும் அது உடலுக்கு நண்மை பயக்கக்கூடிய விஷயமே. நுங்கின் தோலை சாப்பிடுவதுபோல தேங்காயின் தோலை சாப்பிடுவது வயிற்று புண்ணிற்கும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் மிகவும் நல்லது. தாராளமாக அவற்றை சாப்பிடலாம். அவற்றில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின்கள் அனைத்துமே உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவைதான். அதனால் நமக்குக் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை உணவாக எடுத்து கொள்ளலாம்" என்று கூறினார்.