Published:Updated:

திருச்சி ஊர்ப்பெருமை: பெப்பர் தூக்கலா வாழைப்பூ வடை, சமோசா; தொட்டுக்க மல்லி, புதினா கலந்த சட்னி!

வாழைப்பூ வடை, சமோசா

திருச்சியில் இருக்கும் முகமது பாயின் கடையில் கிடைக்கும் வாழைப்பூ வடை, 20 வருடங்களுக்கு மேலாக ரொம்பவே பிரசித்தம்.

திருச்சி ஊர்ப்பெருமை: பெப்பர் தூக்கலா வாழைப்பூ வடை, சமோசா; தொட்டுக்க மல்லி, புதினா கலந்த சட்னி!

திருச்சியில் இருக்கும் முகமது பாயின் கடையில் கிடைக்கும் வாழைப்பூ வடை, 20 வருடங்களுக்கு மேலாக ரொம்பவே பிரசித்தம்.

Published:Updated:
வாழைப்பூ வடை, சமோசா

மனிதன் தோன்றிய காலம் முதல் ஒவ்வொன்றிலும் புதிது புதிதான விஷயங்கள் தோன்றி கொண்டேதான் இருக்கின்றன. உணவு வகைகளும் அடுத்தடுத்து புதிதாக மாறி கொண்டே இருக்கின்றன. பிழைப்பு தேடியோ அல்லது அபகரிக்கும் நோக்கிலோ ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் சென்று வாழ நேரும் சந்தர்ப்பத்தில், நம் உணவுக் கலாசாரமும் விரிவடைந்தது. ஆனால், தற்போது அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் அளவிற்கு உலகம் நவீன மயமாக்கப்பட்டு விட்டதால் எந்தப் பகுதி உணவாக இருந்தாலும் அது நம் கைகளில் உடனே கிடைத்துவிடுகிறது.

அப்படித் தற்போது கிடைக்கும் பல உணவு வகைகளின் வரலாறு தெரிந்திருந்தாலும், சில உணவுகளின் வரலாறு தெரியாமலே நாம் அவற்றின் ருசிக்கு அடிமையாகிருப்போம். அப்படி வரலாற்றை யோசிக்கவே முடியாத அளவிற்கு நமக்கு மிகவும் பிடித்த மாலை நேர உணவாக, அதாவது ஸ்நாக்ஸாக மாறியிருப்பது பருப்பில் செய்யப்படும் வடை வகைகள்தான். வெறும் பருப்பு மட்டுமில்லாமல் தற்போது பல காய்கறிகளும் சேர்த்து வாழைப்பூ வடை, கீரை வடை, முட்டைகோஸ் வடை என விதவிதமாக கிடைக்கின்றன. அந்த வகையில் திருச்சியில் இருக்கும் முகமது பாயின் கடையில் கிடைக்கும் வாழைப்பூ வடை, 20 வருடங்களுக்கு மேலாக ரொம்பவே பிரசித்தம்.

சாதாரணமாகவே வாழைப்பூவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல சத்துகள் உள்ளன. ஆனால் அதனை சுத்தம் செய்வது என்பது ரொம்பவே மெனக்கெட வேண்டியது என்பதால் பல வீடுகளில் அதனை எப்போதாவதுதான் சமைப்போம். ஆனால், இவரின் கடையில் தினமும் 20க்கும் மேற்பட்ட வாழைப்பூக்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட வாழைப்பூ வடையும், வாழைப்பூவில் செய்யப்படும் சமோசாவும் விற்பனையாகின்றன. மொறுமொறுவென கிடைக்கும் வாழைப்பூ வடையில், வெட்டி சேர்க்கப்பட்ட வாழைப்பூவும் சேர்ந்து பொரிந்திருக்க அதனை சேர்த்து சாப்பிடுகையில் கிடைக்கும் சுவை அபாரமாக இருக்கிறது.

தன் மாமனார் இந்தக் கடையை 40 வருடத்திற்கு முன்பு ஆரம்பித்தபோது சாதாரண பருப்பு வடையும், சமோசாவும் மட்டுமே கிடைத்து கொண்டிருந்திருக்கிறது. பின்பு 20 வருடத்திற்கு பின் முகமது பாய் கடையை நடத்த ஆரம்பிக்க, சுவையில் மாற்றத்தையும், ஆரோக்கியத்தையும் சேர்க்க நினைத்தவர் வடையிலும், சமோசாவிலும் வாழைப்பூவை சேர்த்தது மட்டுமல்லாமல், அவற்றின் மேல் மிளகு, சீரகம் உப்பை கலந்த பொடியையும் தூவுவதோடு, மல்லி, புதினா கலந்த சட்னியையும் கொடுக்கிறார்கள். ஏற்கெனவே ருசியாக இருக்கும் வடைக்கு இந்த சட்னி ரொம்பவே ஏற்புடையதாகவும், அடுத்தடுத்து சாப்பிட சொல்லித் தூண்டி கொண்டே இருக்கிறது. காரமும் அதிகமாக இல்லாததால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவதை அங்கிருக்கும் நம்மால் பார்க்க முடிந்தது.

திருச்சி இப்ராஹிம் பார்க் எதிரில் உள்ள முகமது பாய் அவர்களின் கடை மாலை 3.30 மணியளவில் ஆரம்பிக்கும் கடை இரவு 9 மணி வரை நடக்கிறது. மக்கள் கூட்டமும் வந்து கொண்டே இருக்கிறது. "எங்க மாமனார் ஆரம்பிச்ச கடை இது, அவர் இறந்ததுக்கு அப்பறம், நான் எடுத்து நடத்த ஆரம்பிச்சேங்க. எனக்கு புதுசா ஏதாவது கொடுக்கணும்னு ஆசை, அப்போ சின்ன வயசுல இருந்து எங்க அம்மா எனக்கு செஞ்சி கொடுத்த வாழைப்பூ வடையை மக்களுக்கும் கொடுக்க ஆரம்பிச்சேன்.

அம்மா கூட இருந்து சொல்லி கொடுத்தாங்க. அவங்களோட ரெசிபி தான் இப்போ வரைக்கும் கொடுக்குறோம். அது மக்களுக்கு ரொம்ப பிடிச்சி போய்ட்டதுனால, தொடர்ந்து ஆதரவு கொடுத்துட்டே இருக்காங்க. முக்கியமா எண்ணெய்யில சமரசம் செஞ்சிக்க மாட்டோம். தினமும் புதுசு புதுசா பயன்படுத்துறோம். அதுக்கேத்த மாதிரி அளவாதான் பயன்படுத்துறது" என்கிறார் முகமது.

மாலை நேரத்தில் மனதுக்கு நிறைவான, ஆரோக்கியமான ஸ்நாநக்ஸை சாப்பிட நினைப்பவர்கள் ஒரு முறையாவது முகமது பாய் கடையில் வாழைப்பூ வடையை ருசித்துவிடுங்கள்.