Published:Updated:

திருச்சி ஊர்ப்பெருமை: குங்குமப்பூ, பாதாம், முந்திரி, பிஸ்தா... தித்திக்கும் பாம்பே பாதாம் பால்!

திருச்சி பாதாம் பால்

பாலைப் பருகும்போதே பாலில் மிதந்து கொண்டிருந்த உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகள் பாலின் சுவையைக் கூட்டின. ரசித்து ருசித்து குடித்து முடித்த பிறகும் பாலின் தித்திப்பு நாவை விட்டு அகலவில்லை.

திருச்சி ஊர்ப்பெருமை: குங்குமப்பூ, பாதாம், முந்திரி, பிஸ்தா... தித்திக்கும் பாம்பே பாதாம் பால்!

பாலைப் பருகும்போதே பாலில் மிதந்து கொண்டிருந்த உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகள் பாலின் சுவையைக் கூட்டின. ரசித்து ருசித்து குடித்து முடித்த பிறகும் பாலின் தித்திப்பு நாவை விட்டு அகலவில்லை.

Published:Updated:
திருச்சி பாதாம் பால்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு எதிரேயுள்ள 'பாம்பே பாதாம் பால் கடை' யைப்பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. திருச்சியில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த பாதாம் பால் கடைதான் ஓப்பன் கான்பரன்ஸ் ஹால்! குறிப்பாக 90-ஸ் கிட்ஸ்களின் ஸ்பெஷல் இடம்.
பாதாம் பால்
பாதாம் பால்

திருச்சிதான் தமிழ்நாட்டின் மையப்பகுதி. இங்குள்ள மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனால், எப்போதுமே இப்பேருந்து நிலையம் பரபரப்பாகவே இருக்கும். பேருந்து நிலையத்துக்கு அருகில் இருப்பதால், பாம்பே பாதாம் பால் கடையிலும் கூட்டம் அலைமோதும். காலைநேரத்திலிருந்து நள்ளிரவு வரை இக்கடை இயங்கும். காலை நேரத்தில் லெஸ்ஸி, பாதாம்கீர், ரோஸ் மில்க் ஆகியவை ருசிக்கக்கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாலையிலிருந்து நள்ளிரவு வரை சூடான பாதாம் பால் கிடைக்கும். தற்போது ஊரடங்கு காரணத்தால் நேரக்கட்டுப்பாடு அமலில் இருப்பதால், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இக்கடை இயங்குகிறது.

பாதாம் பால்
பாதாம் பால்

இரவு 8 மணி சுமாருக்கு அக்கடையில் ஆஜரானோம். இரும்பினாலான பெரிய வட்டவடிவச் சட்டியில் கிட்டத்தட்ட 20 லிட்டர் பாதாம் பால் கொதித்துக் கொண்டிருந்தது. அதை லாகவமாக ஒருவர் கிண்டிக்கொண்டிருந்தார். அக்காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டே சூடான பாதாம் பாலை பலர் ருசித்துக் கொண்டிருந்தனர். நாமும் இரண்டு பாதாம் பால் ஆர்டர் செய்தோம். ஒரு நிமிடத்திற்குள் கமகம பாதாம் வாசனையுடன், சூடாக டம்ளரில் பாதாம் பால் கைக்கு வந்தது.

பாலைப் பருகும்போதே பாலில் மிதந்து கொண்டிருந்த உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகள் பாலின் சுவையைக் கூட்டின. ரசித்து ருசித்து குடித்து முடித்த பிறகும் பாலின் தித்திப்பு நாவை விட்டு அகலவில்லை.

பாதாம் பால்
பாதாம் பால்

கடையின் மேற்பார்வையாளர் பிரகாஷிடம் பேசினோம். "எங்க கடையின் உரிமையாளர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். பல சிரமங்களுக்கு இடையில் முப்பது வருஷத்துக்கு முன்னால இந்தக் கடையை ஆரம்பிச்சார். ஆரம்பத்துல சாலையோரக் கடையாத்தான் இருந்தது.

பிரகாஷ்
பிரகாஷ்

பாலின் சுவையாலும் தரத்தாலும் வாடிக்கையாளர்கள் அதிகமானதால, வாடகைக்கு இடம்பிடிச்சு விரிவுபடுத்தினோம். தினமும் சராசரியா 150 லிட்டர் வரை பால் பயன்படுத்துறோம். லீவு நாள்கள், விசேஷ நாள்கள்ல 200 லிட்டருக்கு மேல பால் ஓடும்.

சுத்தமான கறவைப்பால்தான் வாங்குவோம். பாலில் ஒருதுளிகூட தண்ணி சேர்க்காம, கறந்த ஒரு மணிநேரத்துல பண்ணையில் இருந்து கடைக்கு வந்துடும்.

பாம்பே பாதாம் பால் கடை
பாம்பே பாதாம் பால் கடை

அதை அப்படியே அடுப்பில் ஏற்றிடுவோம். பாதாம் பாலில் கலருக்காக குங்குமப்பூத் தூள் பயன்படுத்துகிறோம். இது, ராஜஸ்தானில் பிரத்யேகமாகத் தயார் செய்யப்படுது. கொதிச்சு வர்ற பாலுல உடைத்த பாதாம், முந்திரி, பிஸ்தாவைத் தூவிக் கிளறிக்கிட்டே இருப்போம். பால் சுண்டி பாதாம் பால் தயாராயிடும். கடைசியில சிறிதளவு முழு பாதாம் பருப்பை சேர்த்துப் போட்டு வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறோம்.

தினமும் மாலை 4 மணிக்கு பாதாம் பால் விற்பனையை ஆரம்பிச்சுடுவோம். அதிகாலை 2 மணி வரைகூட பால் விற்பனையாகும். குழந்தைகள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள்னு எல்லாத் தரப்பிலும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்காங்க.

பாதாம் பால்
பாதாம் பால்

அதனால தரத்திலும் சுவையிலும் நாங்க குறை வைக்கிறதில்லை. எங்ககிட்ட கலப்படம்ங்கிறதே கிடையாது. கவனமாக இருப்பதால்தான் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்குது.

அதனாலேயே, நாங்க ரொம்ப நாளா விலையையும் உயர்த்தலை. எங்க பணியாளர்களோட பொறுமைக்குணமும் எங்க வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். ஆரம்பத்தில் 2 பேர்தான் வேலை பார்த்தாங்க. இப்போ 8 பேர் வேலை பார்க்கிறாங்க.

பாதாம் பாலை ருசித்துக் கொண்டிருந்த மதன்குமாரிடம் பேசினோம். நான் வாரத்துல மூணு நாள் இங்க வந்து காலையில லெஸ்ஸி, ஈவ்னிங்க்ல பாதாம்பால் சாப்பிட்ருவேன். இங்க இருக்கிற 'டேஸ்ட்' வேற எந்தக் கடையிலயும் கிடைக்காது.

பாதாம் பால் ருசிக்கும் இளைஞர்கள்
பாதாம் பால் ருசிக்கும் இளைஞர்கள்

கலப்படமே இல்லாம இருக்குறதுனாலயும், கறவை பாலுல தயாரிக்கிறதுனாலயும் அடிக்கடி வரத் தோணுது. முக்கியமா சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குறனால பிரண்ட்ஸ் கூட சேந்து அரட்டையடிக்க நல்ல இடமாவும் இருக்குது. இப்போ கொரோனானால கூட்டமா இருக்க முடியல" என்றார்.

திருச்சி வரும் மக்கள், மிஸ் பண்ணக்கூடாதது இந்த பாம்பே பாதாம்பால்!