சர்வதேச அளவில் இன்று, 'உலக உணவு தினம்' கொண்டாடப்பட்டுவருகிறது. அனைவருக்கும் தேவை உணவு, ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் உலக உணவு தினத்தன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்த ஆண்டு, பட்டினி இல்லாத உலகம் #ZeroHungerWorld என்ற ஹேஷ்டேக்குடன்கூடிய செய்தி பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது. இதில், உலகமயமாக்கல், நகரமயமாக்கல் காரணமாக உணவுப் பழக்க வழக்கங்கள் பெரிதும் மாற்றம் கண்டுள்ளன. ஆரோக்கியமான உணவு உட்கொள்வது குறைந்துகொண்டே வர, இன்ஸ்டன்ட் உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஒருபுறம் உணவுப் பழக்கங்கள் மாறினாலும், மறுபுறம் பல லட்சம் மக்கள் ஒருவேளை உணவின்றித் தவித்துவருவது கவலையான நிதர்சனம்.
ஒவ்வோர் ஆண்டும், சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி மையம் சார்பில், 'உலகப் பட்டினி குறியீட்டு தரவரிசை' வெளியிடப்படும். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட 117 நாடுகளில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. கணக்கெடுக்கப்பட்ட நாடுகளிலி ருந்து, குறைந்த பாதிப்புடைய நாடுகள் முதல் அதிக பாதிப்புடைய நாடுகளாக வரிசைப்படுத்தப்பட்டன. இதில், அதிக பாதிப்புள்ள கடைசி 20 நாடுகளுக்குள் இருக்கும் இந்தியாவில், அதிக மக்கள் பசியால் வாடுவதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பட்டினி இல்லாத உலகத்தை உருவாக்கிடுவோம்' என்ற விழிப்புணர்வு அழைப்பு மட்டுமல்லாது, 'அனைவருக்கும் உணவு' என்ற நிலை உருவாக வேண்டும் என்பதை ஐநா வலியுறுத்துகிறது. "நம்முடைய செயல் ஒவ்வொன்றும் எதிர்கால நன்மைக்கானது. பட்டினி இல்லாத உலகை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.