Published:Updated:

முருங்கை ரெசிப்பி

முருங்கை ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
முருங்கை ரெசிப்பி

சாம்பார், கறி தாண்டி முருங்கையில் என்ன செய்ய முடியும்? தாராளமாகச் செய்யலாம் ஏராளம்!

முருங்கை ரெசிப்பி

சாம்பார், கறி தாண்டி முருங்கையில் என்ன செய்ய முடியும்? தாராளமாகச் செய்யலாம் ஏராளம்!

Published:Updated:
முருங்கை ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
முருங்கை ரெசிப்பி

முருங்கைக்கு முக்கியத்துவம் இல்லாத சமையலறை உண்டோ? சமையலறையில் மட்டுமல்ல... திரைப்படங்களில்கூட முருங்கைக்காய் ஜோக்குகள் மிகப் பிரபலம்.

தென்னிந்திய உணவுகளில் - அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு உணவுகளில் முருங்கைக்காய் இடம்பெறாத நாள்கள் மிகக் குறைவு. ஹோட்டல் சாம்பாரில் பெரும்பாலும் இடம்பெறும் காய் முருங்கைதானே?

வீக்கத்தைக் குறைக்கும், எலும்புகளை வலுவாக்கும், புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும், மூளை ஆரோக்கியத்துக்கு உதவும், கல்லீரலுக்கு நல்லது... இப்படி முருங்கைக்காயின் மருத்துவப் பலன்களின் பட்டியல் முருங்கைக்காயைப் போலவே மிக நீளம்.

முருங்கை ரெசிப்பி

சாம்பார், கறி தாண்டி முருங்கையில் என்ன செய்ய முடியும்? தாராளமாகச் செய்யலாம் ஏராளம்! சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் மீனா சுதிர் வழங்கும் முருங்கைக்காய், முருங்கையிலை ரெசிப்பிகள் மிகச் சுவையானவை... சத்தானவை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முருங்கைக்காய் சூப்

தேவையானவை:

 • முருங்கைக்காய் - ஒரு கப் (2 இன்ச் துண்டுகளாக நறுக்கியது)

 • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் சீவி நறுக்கவும்)

 • காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப்

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப

முருங்கை ரெசிப்பி

செய்முறை:

குக்கரில் வெண்ணெய்விட்டு சூடாக்கி முருங்கைக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து, மிதமான தீயில் 2 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து மூன்று விசில் வரும் வரை வேகவிடவும். குக்கரில் பிரஷர் அடங்கியதும் கலவையை எடுத்து உருளைக்கிழங்கு, வெங்காயம், முருங்கைக்காய் (கத்தியால் வழித்தெடுத்தெடுத்த சதைப் பகுதி மட்டும்) ஆகியவற்றுடன் பால், ஒன்றரை கப் தண்ணீர் கலந்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, வடிகட்டியால் வடிகட்டவும்.

அடி ஆழமான நான்-ஸ்டிக் பானில் (pan) வடிகட்டிய கலவையுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, மிதமான தீயில் 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும் (இடையிடையே கிளறவும்).

சூப்பை சூடாகப் பரிமாறவும்.

இலங்கை, தாய்லாந்து, தைவான், பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்காவில் முருங்கை அதிக அளவில் பயிரிடப் படுகிறது. வழியாக மற்ற நாடுகளுக்குப் பரவியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முருங்கைக்காய் கறி

தேவையானவை:

 • முருங்கைக்காய் - 4

 • உருளைக்கிழங்கு - 2

 • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • பூண்டு - 4 - 5 பல்

 • தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

 • சீரகம் - அரை டீஸ்பூன்

 • தக்காளி - ஒன்று

 • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 • தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்

 • பச்சை மிளகாய் - ஒன்று

 • கடுகு - அரை டீஸ்பூன்

 • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

 • தண்ணீர் - தேவையான அளவு

முருங்கை ரெசிப்பி

செய்முறை:

தக்காளி, பூண்டு, தேங்காய்த் துருவல், சீரகம் ஆகிய வற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். நறுக்கிய முருங்கைக்காய், தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்குடன் சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிட்டு தனியே வைக்கவும். வேகவைத்த தண்ணீரைக் கொட்டிவிட வேண்டாம்.

கடாயில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அரைத்துவைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். பிறகு உப்பு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மீதமுள்ள மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். பச்சை வாசனை போய், மசாலா ரெடியானதும் வேகவைத்த முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்க்கவும். வேகவைத்த தண்ணீரையும் தேவையான அளவு சேர்க்கவும். மூடிபோட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும். கிரேவி மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது; மிகவும் நீர்த்தும் இருக்கக் கூடாது. அந்தப் பதத்தில் இறக்கிப் பரிமாறவும்.

இந்தியாவில் ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முருங்கையின் விளைச்சல் அதிகம்.

முருங்கைக்காய் ரசம்

தேவையானவை:

 • முருங்கைக்காய் - ஒன்று

 • துவரம்பருப்பு - அரை கப்

 • தக்காளி - 2

 • புளி - சிறிய எலுமிச்சை அளவு

 • பச்சை மிளகாய் - ஒன்று

 • ரசப்பொடி - ஒரு டீஸ்பூன்

 • கொத்தமல்லி இலை - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

 • எண்ணெய் - 2 டீஸ்பூன்

 • நெய் - ஒரு டீஸ்பூன்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - ஒன்று

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

முருங்கை ரெசிப்பி

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் சேர்த்து 5 விசில் வரை வேகவைக்கவும். புளியை வெந்நீரில் ஊறவைக்கவும். முருங்கைக்காயைக் கழுவி, 1 - 2 இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். தக்காளி மென்மையானதும் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு மூடி போட்டு சில நிமிடங்கள் வேகவிடவும். இப்போது ஒரு கப் தண்ணீர் சேர்த்து முருங்கைக்காய் வேகும் வரை கொதிக்கவிடவும். புளியைக் கரைத்து இதனுடன் சேர்த்து, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ரசப்பொடி, கொத்தமல்லி இலை சேர்த்து, தேவையான நீர்விட்டு கடாயை பாதி அளவு மூடியால் மூடி கொதிக்கவிடவும். ரசம் கொதிக்கும்போதே மற்றொரு கடாயில் எண்ணெய், நெய்விட்டு சூடாக்கி கடுகு சேர்த்து, வெடித்ததும் சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். தாளிப்பை ரசத்தில் சேர்த்து இறக்கவும்.

முருங்கையை ரசமாகவோ, சாற்றாகவோ உட்கொண்டால் முகப்பரு மற்றும் சில சருமப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

முருங்கைக்காய் ஊறுகாய்

தேவையானவை:

 • முருங்கைக்காய் - 500 கிராம் (கழுவி, ஒரு இன்ச் துண்டுகளாக நறுக்கவும்)

 • புளி - 125 கிராம்

 • மிளகாய்த்தூள் - 100 கிராம்

 • பூண்டு - 40 கிராம் (கொரகொரப்பான விழுதாக அரைக்கவும்)

 • வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • கடுகு - ஒரு டீஸ்பூன்

 • சீரகம் - அரை டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - 2

 • கறிவேப்பிலை - சிறிதளவு

 • எண்ணெய் - 200 மில்லி

 • உப்பு - தேவைக்கேற்ப

முருங்கை ரெசிப்பி

செய்முறை:

புளியைக் கெட்டியாகக் கரைத்து விழுதை எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி, நறுக்கிய முருங்கைக்காயை 5 - 7 நிமிடங்கள் வறுக்கவும். முருங்கைக்காய் நிறம் மாறியதும் எடுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் வறுத்த முருங்கைக்காய், புளி விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பூண்டு விழுது, வெந்தயப் பொடி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

முருங்கைக்காயை வறுத்த அதே எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, முருங்கைக்காய் கலவையில் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். சுத்தமான, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும். இந்த ஊறுகாயை 3 - 4 நாள்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.

இமயமலை அடிவாரப் பகுதிகளில்தான் முருங்கை முதலில் தோன்றியது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் வழியாக மற்ற நாடுகளுக்குப் பரவியது.

முருங்கையிலை தட்டை

தேவையானவை:

 • சுத்தம் செய்த முருங்கையிலை - கால் கப்

 • அரிசி மாவு - ஒரு கப்

 • உளுத்த மாவு (வறுத்து அரைத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன்

 • பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 • வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - சிறிதளவு

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

முருங்கை ரெசிப்பி

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்றாகச் சேர்க்கவும். 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி இதனுடன் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர்விட்டு மாவாகப் பிசைந்துகொள்ளவும். மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி சிறிய பூரி வடிவில் தட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி தட்டைகளைப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

இப்போது ஒரு மீட்டர் நீளத்துக்கு வளரக்கூடிய முருங்கை ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

முருங்கைக்கீரை வடை

தேவையானவை:

 • கடலைப்பருப்பு - ஒரு கப்

 • முருங்கைக்கீரை (இலைகளை உருவி எடுக்கவும்) - 2 கப்

 • வெங்காயம் (பெரியது) - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 • பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

 • பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கவும்)

 • சீரகம் - அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

 • அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

முருங்கை ரெசிப்பி

செய்முறை:

கடலைப்பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் முருங்கையிலை, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, நன்கு சூடானதும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொன்னிறமாக, மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். சட்னி அல்லது டீயுடன் பரிமாறவும்.

பழங்காலத்திலிருந்தே முருங்கை மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

முருங்கையிலை அடை

தேவையானவை:

 • முருங்கையிலை - ஒரு கப்

 • துவரம்பருப்பு - முக்கால் கப்

 • பாசிப்பருப்பு - அரை கப்

 • புழுங்கல் அரிசி - கால் கப்

 • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 • காய்ந்த மிளகாய் - 2

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

முருங்கை ரெசிப்பி

செய்முறை:

துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, புழுங்கல் அரிசியைக் கழுவி, 2 - 3 மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும்.

பிறகு ஊறவைத்தவற்றுடன் காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். மாவைப் பெரிய பாத்திரத்தில் சேர்த்து, இதனுடன் நறுக்கிய வெங்காயம், முருங்கையிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். தவாவை சூடாக்கி, மாவைத் தோசை போல வார்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

முருங்கையிலையில் வைட்டமின்கள் பி, சி, கே, பீட்டா கரோட்டின், மாங்கனீஸ் மற்றும் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.

முருங்கையிலை பாட்டீஸ்

தேவையானவை:

 • முருங்கையிலை - 2 கப்

 • வெங்காயம் (மீடியம் சைஸ்) - 2 (பொடியாக நறுக்கவும்)

 • தேங்காய்த் துருவல் - ஒரு கப்

 • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது - 2 டேபிள்ஸ்பூன் (4 பூண்டு பல் சேர்த்தது)

 • புளி விழுது (புளியைக் கெட்டியாக கரைத்து எடுத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன்

 • கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்

 • அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

முருங்கை ரெசிப்பி

செய்முறை:

முருங்கையிலைகளைக் கழுவி சுத்தம் செய்யவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அதனுடன் முருங்கையிலையையும் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருள்கள் அனைத்தையும் (அரிசி மாவு, எண்ணெய் நீங்கலாக) சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டி கட்லெட் வடிவில் தட்டிக்கொள்ளவும். இதுதான் பாட்டீஸ். தவாவைச் சூடாக்கி சிறிதளவு எண்ணெய்விட்டு, அடுப்பை மிதமான தீயில்வைத்து, செய்துவைத்த பாட்டீஸை அரிசி மாவில் புரட்டிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும். புதினா - கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும். இதை தால் ரைஸுடன் சைடிஷாகவும் பரிமாறலாம்.

முருங்கைக்கீரைக்கு ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பண்பு உண்டு.

முருங்கையிலை ராகி ரொட்டி

தேவையானவை:

 • ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப்

 • முருங்கையிலை - ஒரு கப்

 • காய்ந்த மிளகாய் - 3

 • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 • கடுகு - அரை டீஸ்பூன்

 • சீரகம் - அரை டீஸ்பூன்

 • தேங்காய்த் துருவல் - கால் கப்

 • எண்ணெய், உப்பு, சுடுநீர் - தேவையான அளவு

முருங்கை ரெசிப்பி

செய்முறை:

முருங்கையிலைகளைக் கழுவி சுத்தம் செய்யவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் முருங்கையிலை சேர்த்து, அது சுருங்கி நிறம் மாறும் வரை வதக்கவும். பிறகு அடுப்பை அணைத்து கலவையை ஆறவிடவும்.

ராகி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். உப்பு, முருங்கையிலை கலவை, தேங்காய்த் துருவலை அதனுடன் சேர்த்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு கலந்துகொள்ளவும். இதனுடன் வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, மென்மையான மாவாக வரும் வரை பிசைந்துகொள்ளவும். இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். பட்டர் பேப்பர் அல்லது வாழையிலையில் உருண்டையை வைத்து அடை போல தட்டிக்கொள்ளவும்.

தவாவை சூடாக்கி சிறிதளவு எண்ணெய்விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்ததைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

வளரும் நாடுகளில் முருங்கையிலை ஊட்டச்சத்து உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

முருங்கையிலை ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை:

 • சாதம் - 2 கப்

 • முருங்கையிலை - ஒரு கப்

 • பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

 • பொடியாக நறுக்கிய கேரட் - கால் கப்

 • பொடியாக நறுக்கிய குடமிளகாய் - அரை கப்

 • கிரீன் சில்லி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

 • சோயா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

 • டொமேட்டோ கெட்சப் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

முருங்கை ரெசிப்பி

செய்முறை:

பானில் (pan) எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கேரட் சேர்த்து, சிறிதளவு உப்பு தூவி கேரட் மிருதுவாகும் வரை வதக்கவும். இதனுடன் முருங்கையிலையைச் சேர்த்துக் கிளறி சில நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் நறுக்கிய குடமிளகாய், சோயா சாஸ், கிரீன் சில்லி சாஸ், டொமேட்டொ கெட்சப் சேர்த்துக் கலக்கவும். காய்கறிகள் நன்கு வெந்தவுடன் சாதம், சிறிதளவு உப்பு சேர்க்கவும். அனைத்துப் பொருள்களும் ஒன்று சேரும் விதத்தில் லேசாக டாஸ் செய்யவும். முருங்கையிலை ஃப்ரைடு ரைஸ் தயார்.

‘முரி’ என்றால் ஒடிதல். எளிதில் ஒடியக்கூடிய கிளைகளைக் கொண்டதால், `முருங்கை’ என்று பெயர் வந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism