Published:Updated:

மில்லட் மிக்ஸ் ரெசிப்பிகள்

மில்லட் மிக்ஸ் ரெசிப்பிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மில்லட் மிக்ஸ் ரெசிப்பிகள்

சாமையுடன் பருப்பு கலந்தும், தினையுடன் கருப்பட்டி சேர்த்தும் கம்புடன் முந்திரியைக் கலந்தும் என்று எத்தனை எத்தனை சுவைதான் நம் பாரம்பர்ய சிறுதானியங்களில்!

``சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்... குடும்பத்தினர் அனைவரும் விரும்பிச் சாப்பிட வேண்டும் - இதுதானே நம் நோக்கம்? பொதுவாகச் சிறுதானியத்தை அப்படியே சமைத்துக் கொடுத்தால்... `தினமும் இதேதானா?’ என்கிற கேள்வி எழும். ஆகவே, ஓர் ஐடியா... வரகு, சாமை, குதிரைவாலி, தினை, சோளம், கேழ்வரகு, பனிவரகு ஆகியவற்றை எந்தெந்த உணவுகளுக்குள் புகுத்திக்கொடுத்தால் சுவையும் மணமும்கூடி சாப்பிடத் தூண்டும்தானே? சாமையுடன் பருப்பு கலந்தும், தினையுடன் கருப்பட்டி சேர்த்தும் கம்புடன் முந்திரியைக் கலந்தும் என்று எத்தனை எத்தனை சுவைதான் நம் பாரம்பர்ய சிறுதானியங்களில்! கூடவே இந்த உணவுகளுக்குத் துணை நிற்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள நெல்லிக்காய் ரசம், துளசி - தேன் பானம் ஆகியவையும் ஆரோக்கியத்தைத் தரும். பரிமாறும்போது பாராட்டுகளும் நிச்சயம்’’ என்று கூறும் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் ஜெ.கலைவாணி, வித்தியாசமான சுவையில் வழங்கும் ரெசிப்பிகள் இங்கே!

மில்லட் மிக்ஸ் ரெசிப்பிகள்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கம்பு பீர்க்கங்காய்த் தோல் துவையல்

தேவையானவை:

 • பீர்க்கங்காய் - ஒன்று

 • கம்பு - 2 டேபிள்ஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - 2

 • உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன்

 • இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)

 • புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

 • உப்பு - தேவையான அளவு

 • நல்லெண்ணெய் - சிறிதளவு

மில்லட் மிக்ஸ் ரெசிப்பிகள்

செய்முறை:

பீர்க்கங்காயின் தோலை மட்டும் சீவி எடுத்து, கழுவி சுத்தப்படுத்தித் துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் நறுக்கிய பீர்க்கங்காய்த் தோல் துண்டுகளை நல்லெண்ணெய்விட்டு சுருள வாட்டி எடுக்கவும். பின்னர் அதே வாணலியில் கம்பு, உளுந்து, புளி, இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வாட்டி எடுக்கவும். ஆறவிட்டு, அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துத் துவையலாக அரைக்கவும்.

இதை இட்லி, தோசையுடன் பரிமாறலாம். சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

குறுந்தொகை, அகநானூறு, சிலப்பதிகாரம், குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, ஐங்குறுநூறு, நற்றிணை உட்பட பல்வேறு இலக்கியங்களிலும் இடம்பிடித்திருக்கிறது பீர்க்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சௌசௌ சோளம் சாலட்

தேவையானவை:

 • நறுக்கிய சௌசௌ - அரை கப்

 • சோளம் - கால் கப் (வேகவைக்கவும்)

 • கேரட் - பாதி (நறுக்கவும்)

 • தயிர் - அரை கப்

 • மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை

 • உப்பு - ஒரு சிட்டிகை

 • நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

மில்லட் மிக்ஸ் ரெசிப்பிகள்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில், நறுக்கிய சௌசௌ, கேரட், வேகவைத்த சோளம் சேர்க்கவும். அதில் உப்பு, தயிர் கலந்து, அதன் மீது மிளகுத்தூள் தூவி, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: இந்த அளவு ஒருவருக்கு மட்டுமே. வீட்டினரின் தேவை கருதி அளவைக் கூட்டி அனைவரும் சாப்பிடலாம். மிளகுத்தூள் மற்றும் உப்பு இல்லாமல் பச்சைக் காய்கறிகளை அதன் சுவை அறிந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

நன்கு வளர்ந்த ஒரு செளசெள கொடியிலிருந்து ஆண்டுக்கு 25 - 30 கிலோ காய்கள் கிடைக்கும்.

துளசி தேன் பானம்

தேவையானவை:

 • துளசி இலைகள் - 10

 • தேன் - 2 டீஸ்பூன்

 • தண்ணீர் - ஒரு டம்ளர்

மில்லட் மிக்ஸ் ரெசிப்பிகள்

செய்முறை:

துளசி இலைகளைச் சிறிய உரலில் இடித்து வைத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் இடித்த துளசி இலைகளைச் சேர்த்து தேன் கலந்து பருகவும்.

துளசிச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை.

முளைவிட்ட கம்பு வெந்தய வெங்காய ராய்த்தா

தேவையானவை:

 • முளைவிட்ட கம்பு - கால் கப்

 • முளைவிட்ட வெந்தயம் - கால் கப்

 • தயிர் - அரை கப்

 • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • பச்சை மிளகாய் - பாதியளவு (நறுக்கவும்)

 • உப்பு - தேவையான அளவு

மில்லட் மிக்ஸ் ரெசிப்பிகள்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முளைவிட்ட கம்பு, முளைவிட்ட வெந்தயம், தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.

குறிப்பு:

தயிருக்குப் பதில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்தும் சாப்பிடலாம்.

100 கிராம் கம்பில் 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.

லெட்யூஸ் ஸ்பிரிங் ஆனியன் மிக்ஸ்

தேவையானவை:

 • லெட்யூஸ் இலைகள் - 2

 • வெள்ளரிக்காய் - பாதி (தோல்சீவி வட்டமாக நறுக்கவும்)

 • பேபி கார்ன் - ஒன்று (நறுக்கவும்)

 • தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 • வெங்காயம் - பாதியளவு (பொடியாக நறுக்கவும்)

 • பெரிய நெல்லிக்காய் - பாதியளவு (சீவவும்)

 • நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 • உப்பு - ஒரு சிட்டிகை

மில்லட் மிக்ஸ் ரெசிப்பிகள்

செய்முறை:

ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் லெட்யூஸ் இலைகள் வைத்து அதன்மீது வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், பேபி கார்ன், நெல்லிக் காய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலந்து சாப்பிடவும். தேவைப்பட்டால் எலுமிச்சைச்சாறு 2 சொட்டுகள் விட்டுச் சாப்பிடலாம். சுவை கூடும்.

லெட்யூஸ் இலைகளை இரவு நேரத்தில் சாலட்டாக்கிச் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

சாமை மைசூர் பருப்பு பாத்

தேவையானவை:

 • சாமை அரிசி - ஒரு கப்

 • மைசூர் பருப்பு - ஒரு கப்

 • புளிக்கரைசல் - ஒரு கப் (பெரிய நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்துக்கொள்ளவும்)

 • சின்ன வெங்காயம் - அரை கப் (தோலுரிக்கவும்)

 • நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய், சௌசௌ, கேரட், குடமிளகாய் மற்றும் பச்சைப் பட்டாணி (சேர்த்து) - ஒரு கப்

 • எண்ணெய், நெய் - சிறிதளவு

 • உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 • கடுகு - ஒரு டீஸ்பூன்

 • வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு

 • பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • நெய் - ஒரு டீஸ்பூன்

 • வறுத்துப் பொடிக்க:

 • காய்ந்த மிளகாய் - 10

 • தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்

 • கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

 • சோம்பு - ஒரு டீஸ்பூன்

 • எள் - ஒரு டீஸ்பூன்

மில்லட் மிக்ஸ் ரெசிப்பிகள்

செய்முறை:

வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். சாமை அரிசியுடன் மைசூர் பருப்பைச் சேர்த்துக் கழுவி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். மைசூர் பருப்பை இரண்டு விசில் விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.

குக்கரில் சிறிதளவு எண்ணெய்விட்டு சின்ன வெங்காயம் மற்றும் காய்கள் அனைத்தையும் சேர்த்துக் கிளறி வேகவிட்டு, வறுத்துப் பொடித்துவைத்துள்ள பொடியையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு அதில் சாமை அரிசி வெந்தவுடன், மைசூர் பருப்பு சேர்த்துக் கலந்து புளிக்கரைசல் மற்றும் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்பு கலந்து மூடிவைத்து நான்கு விசில் வரும் வரை வேகவிடவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கடுகு, வேர்க்கடலை, பெருங்காயத்தூள் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதை குக்கரில் உள்ள சாதத்துடன் சேர்த்துக் கலக்கவும். வெங்காய ராய்த்தா மற்றும் அப்பளத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: காய்கறி இல்லாமலும் செய்யலாம். சுவையும் நன்றாக இருக்கும்.

காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியைப் போக்கும் தன்மை சாமைக்கு உண்டு.

நெல்லிக்காய் ரசம்

தேவையானவை:

 • நெல்லிக்காய் – 2

 • புளி – நெல்லிக்காய் அளவு

 • துவரம்பருப்பு வேகவைத்த

 • நீர் – ஒரு கப்

 • இஞ்சி – அரை இன்ச் துண்டு

 • ரசப்பொடி – ஒரு டீஸ்பூன்

 • உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

 • நெய் அல்லது எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

 • கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - ஒன்று

 • ரசப்பொடி தயாரிக்க:

 • சீரகம் – ஒரு டீஸ்பூன்

 • வறுத்த வெந்தயம், பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன்

 • தனியா – 2 டீஸ்பூன்

 • மிளகு – ஒரு டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் – 2

 • கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

 • இவை எல்லாவற்றையும் காயவைத்து, கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

மில்லட் மிக்ஸ் ரெசிப்பிகள்

செய்முறை:

இஞ்சியைத் தோல் சீவி துருவிக்கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கரைத்து தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். நெல்லிக்காய், இஞ்சியை மிக்ஸியில் விழுதாக அரைத்து, புளித் தண்ணீருடன் சேர்த்து தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் ரசப்பொடி கலந்து, பருப்புத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். வாணலியில் நெய்/எண்ணெய்விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து கொதிக்கும் ரசத்தில் சேர்த்துக் கலந்து இறக்கிப் பரிமாறவும்.

நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது மற்ற பழங்களில் உள்ளதை விடவும் அதிகம்.

கம்பு பருப்புப்பொடி வரகு சாதம்

தேவையானவை

 • வரகு சாதம் - ஒரு கப்

 • நல்லெண்ணெய் அல்லது நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • வறுத்துப் பொடிக்க:

 • கம்பு - 2 டேபிள்ஸ்பூன்

 • துவரம்பருப்பு - அரை கப்

 • காய்ந்த மிளகாய் - 8

 • கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

 • பூண்டு - 4 பல்

 • பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

 • சீரகம் - அரை டீஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

மில்லட் மிக்ஸ் ரெசிப்பிகள்

செய்முறை:

வாணலியைச் சூடாக்கி கம்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், பூண்டு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். சூடாக வடித்த வரகு சாதத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் பருப்புப் பொடி சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய்விட்டு சாப்பிடவும்.

குறிப்பு:

தேவைப்பட்டால் கடலைப்பருப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கொள்ளு சேர்த்தும் பருப்புப் பொடி அரைக்கலாம்.

வரகின் தோலை சரியாக நீக்காவிட்டால் தொண்டையில் ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

கம்பு அவல் முந்திரி பாத்

தேவையானவை:

 • கம்பு அவல் - 2 கப்

 • வறுத்த வேர்க்கடலை - அரை கப்

 • சோம்பு - அரை டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 • காய்ந்த மிளகாய் - 6

 • பூண்டு - 2 பல்

 • முந்திரி - 5

 • தேங்காய் (விரல் நீளத் துண்டுகள்) - 4

 • எள் - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

மில்லட் மிக்ஸ் ரெசிப்பிகள்

செய்முறை:

கம்பு அவலை அலசி ஊறவைக்கவும்.

5 நிமிடங்களுக்குள் எடுத்து தண்ணீரை வடிகட்டி உலரவைக்கவும். வாணலியில் வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், பூண்டு, முந்திரி, தேங்காய்த் துண்டுகள், எள் அனைத்தையும் சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்து, ஆறவிட்டு மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். பின்பு அதில் கம்பு அவல் சேர்த்து 2 நிமிடங்கள் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து, அரைத்த பொடியைச் சேர்த்துக் கிளறி, இறக்கி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

அவல் அதிகமாக ஊறிவிட்டால் குழைந்து போகும்.

3 - 4 மாதங்களில் விளைச்சல் தரும் கம்பு, அனைத்து வகை மண்ணிலும் விளையும் தன்னையுடையது.