ரெசிப்பிஸ்
Published:Updated:

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்

சமையற்கலைஞர் செஃப் யஷ்வந்த்

தினமும் சாப்பிடுவதற்கு விதவிதமாகக் கேட்கிறார்கள். ஆனால், “கொளுத்தும் வெயிலால், கொட்டும் வியர்வையில் கிச்சனில் சேர்ந்தாற்போல அரைமணி நிற்க முடியவில்லை. இதில் எங்கே பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது?” என்று அங்கலாய்க்கும் அம்மாக்களுக்காக பதினைந்தே நிமிடங்களில் எளிதில் செய்யக்கூடிய ஹெல்த்தி ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளை இங்கே தந்திருக்கிறார் இளம் சமையற்கலைஞர் செஃப் யஷ்வந்த். அப்புறமென்ன... விதவிதமாகச் சமைத்து தூள் கிளப்பலாமே!

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!
15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

அவல் கொழுக்கட்டை

தேவையானவை:

சிவப்பு அவல் – ஒரு கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு

ஊறவைத்த கடலைப்பருப்பு –

ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பமெனில்)

ஊறவைத்த கறுப்பு உளுந்து –

ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பமெனில்)

உப்பு – தேவையான அளவு

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

செய்முறை:

சிவப்பு அவலைச் சுத்தம் செய்து தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து மஸ்லின் துணியைப் பயன்படுத்தி தண்ணீரைப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அவலுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, ஊறவைத்த கடலைப்பருப்பு, ஊறவைத்த உளுத்தம்பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் இவற்றைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

பட்டை தீட்டப்படாத சிவப்பரிசி யில் இருந்து தயாரிக்கப்படுவதால், வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் சிறந்தது.

கிரிஸ்பி கார்ன் ஃப்ரை

தேவையானவை:

ஸ்வீட் கார்ன் – ஒரு கப்

சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன்

மைதா – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – பொரிப்பதற்கு

காஷ்மீர் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு – தேவைக்கேற்ப

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

செய்முறை:

ஸ்வீட் கார்ன் முத்துகளைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் வேகவைத்து தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். சிறிதளவு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சோள மாவு,ஒரு டீஸ்பூன் மைதா மற்றும் சிறிது உப்பு சேர்த்து பேஸ்ட் போலக் கலக்கவும். இதை வேகவைத்துள்ள ஸ்வீட் கார்ன் முத்துகளுடன் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். பின்னர் இந்த ஸ்வீட் கார்ன் கலவையை மீதமுள்ள சோள மாவில் புரட்டி எடுக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி சோள மாவில் புரட்டி எடுத்த ஸ்வீட் கார்ன்களை லேசான பொன்னிறம் வரும்வரை பொரித்தெடுக்கவும். பின்னர் பொரித்த இந்த ஸ்வீட் கார்னின் மேல் காஷ்மீர் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் மற்றும் உப்பு தூவி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

ஸ்வீட் கார்னை சோள மாவில் புரட்டும்போது ஸ்வீட் கார்னில் அதிகப்படியாக ஒட்டியிருக்கும் சோள மாவை நீக்கிவிட்டு பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.

ஸ்வீட் கார்னில் கணிசமான அளவுக்கு நார்ச்சத்து காணப்படுகிறது. வைட்டமின் சி, பி6, இரும்பு, பொட்டாசியம் சத்துகளும் இதில் உண்டு.

ஹனி கோபி

தேவையானவை:

காலிஃப்ளவர் – ஒரு கப் (உதிர்க்கவும்)

சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன்

மைதா – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – பொரிக்க

பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம் -

ஒரு டேபிள்ஸ்பூன்

வினிகர் – ஒரு டீஸ்பூன்

சோயா சாஸ் – 2 டீஸ்பூன்

தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்

வெங்காயத்தாள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

செய்முறை:

காலிஃப்ளவரை சூடான தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு பின்பு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு டீஸ்பூன் சோள மாவு, ஒரு டீஸ்பூன் மைதா, சிறிதளவு உப்பு, தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்துகொள்ளவும். பின்னர் இதை காலிஃப்ளவரில் சேர்த்து நன்கு பிசிறிக்கொள்ளவும். பின்னர் இதை மீதமிருக்கும் சோள மாவில் நன்கு புரட்டி சூடான எண்ணெயில் லேசான பொன்னிறம் வரும்வரை பொரித்தெடுக்கவும்.

ஒரு பானில் சிறிது எண்ணெய்விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் வினிகர், சோயா சாஸ் மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு பொரித்த காலிஃப்ளவரை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் தேனைச் சேர்த்து நன்கு கிளறி கலவையை இறக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை மேலே தூவி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: சோள மாவில் காலிஃபிளவரைப் புரட்டும்போது தேவைக்கு அதிகமாக ஒட்டியிருக்கும் சோள மாவை நீக்கிவிட்டு பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.

காலிஃப்ளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மசாலா மேட் ஆங்கிள்ஸ்

தேவையானவை:

அரிசி மாவு – ஒரு கப்

தண்ணீர் – அரை கப்

காஷ்மீர் மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

செய்முறை:

தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். அரிசி மாவில் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கலவையை சப்பாத்தி மாவுப் பதத்துக்குக் கலந்து சப்பாத்தி வடிவத்தில் தேய்த்துக்கொள்ளவும். ஒரு முட்கரண்டியால் சப்பாத்தியை ஆங்காங்கே துளையிடவும். அப்போதுதான் பொரிக்கும்போது குமிழ்கள் வராது.

பின்னர் இந்த சப்பாத்தியை சிறிய, சிறிய முக்கோண வடிவங்களாக நறுக்கிக்கொள்ளவும். பின்பு இவற்றை சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்தவற்றின் மேல் உப்பு, காஷ்மீர் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.

காஷ்மீர் மிளகாய் குறைந்த அளவு காரமும் நல்ல சிவப்பு நிறமும் கொண்டது. இதை நிறத்துக்காகவும் எக்ஸ்பிரஸ் சமையலுக்கும் பயன்படுத்தலாம்.

ஓட்ஸ் அண்டு டேட்ஸ் லட்டு

தேவையானவை:

ஓட்ஸ் – ஒரு கப்

கொட்டை நீக்கிய பேரீச்சை – அரை கப்

ஐசிங் சுகர் – ஒரு டேபிள்ஸ்பூன்

காய்ச்சிய பால் – 3 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

செய்முறை:

அடுப்பைக் குறைவான தீயில்வைத்து ஓட்ஸை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். பேரீச்சையைப் பொடியாக நறுக்கி, பொடித்த ஓட்ஸுடன் சேர்க்கவும். பின்னர் இதனுடன் ஏலக்காய்த்தூள், ஐசிங் சுகர் மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு பாலை இக்கலவையில் சேர்த்து ரவா லட்டு பிடிப்பதைப் போல உருண்டைகளாகப் பிடிக்கவும். லட்டுககளை பொடியாக நறுக்கிய பேரீச்சைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.

ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் ஓட்ஸ் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது.

பழ தோசை

தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கப்

வாழைப்பழம் – 2

பொடித்த வெல்லம் - 100 கிராம்

உப்பு – ஒரு சிட்டிகை

நெய் – தேவையான அளவு

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

பொடியாக நறுக்கிய உலர்பழங்கள் – 50 கிராம்

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

செய்முறை:

பொடித்த வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் நன்கு கரைத்து எடுத்துக்கொள்ளவும். வாழைப்பழங்களை நன்கு மசிக்கவும். பின்னர் இதனுடன் கோதுமை மாவு, உப்பு, கரைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து இட்லி மாவுப் பதத்தைவிட சற்று கெட்டியான மாவுப் பதத்துக்குக் கலந்துகொள்ளவும்.பின்னர் மாவை கரண்டியால் நன்கு அடித்துக்கலக்கவும். ஒரு பானில் இம்மாவை ஊற்றி தோசையாக ஊற்றவும். அதன்மீது சிறிது உலர்பழங்களைத் தூவவும். தோசை பொன்னிறமாக மாறியதும் திருப்பிப்போட்டு நெய்விட்டுச் சுட்டெடுக்கவும்.

பஞ்சாப் கோதுமையில் க்ளூட்டன் புரதம் அதிகமாக இருப்பதால் பிசைந்த மாவு நன்கு நெகிழும் தன்மையுடன் இருக்கும். அதனால் சப்பாத்தியும் நன்கு வரும்.

சம்பா ரவை கருப்பட்டிக் கேசரி

தேவையானவை:

சம்பா ரவை – ஒரு கப்

கருப்பட்டி – 400 கிராம் (பொடித்தது)

நெய் – 150 மில்லி

முந்திரி - 20 கிராம்

உலர்திராட்சை – 20 கிராம்

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

தண்ணீர் – அரை லிட்டர்

உப்பு – ஒரு சிட்டிகை

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

செய்முறை:

அடுப்பைக் குறைவான தீயில் வைத்து சம்பா ரவையை வெறும் வாணலியில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பானில் 75 மில்லி நெய்விட்டு சூடாக்கி அதில் முந்திரி, உலர் திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் இருக்கும் அதே நெய்யில் வறுத்த சம்பா ரவையைப் போட்டு மேலும் ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு வறுக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் பொடித்த கருப்பட்டியைப் போட்டு மிதமான தீயில் இக்கலவையைக் கைவிடாமல் கிளறவும். பிறகு இதில் மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி கலவை அல்வா பதத்துக்கு வந்தவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும்.

ரத்தத்தைச் சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும் தன்மை கருப்பட்டிக்கு உண்டு.

தேங்காய்ப்பால் கொழுக்கட்டை

தேவையானவை:

அரிசி மாவு – அரை கப் + ஒரு டேபிள்ஸ்பூன்

தண்ணீர் – கால் கப் + ஒரு கப்

தேங்காய்ப்பால் – ஒரு கப்

வெல்லம் – 100 கிராம்

உப்பு – சுவைக்கேற்ப

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

துருவிய தேங்காய் – அலங்கரிக்க

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

செய்முறை:

கால் கப் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அரை கப் அரிசி மாவில் இந்தத் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மென்மையாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த மாவை சீடை வடிவில் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி தனியாக எடுத்துவைக்கவும். பொடித்த வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து தனியாக வைக்கவும். பின்னர் மீதமிருக்கும் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் மாவு உருண்டைகளைச் சேர்த்து மாவு உருண்டைகள் வேகும்வரை கொதிக்கவிடவும். பிறகு இதனுடன் கரைத்துவைத்துள்ள அரிசி மாவைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.பின்னர் இதில் வெல்லம், ஏலக்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். பின்னர் இதில் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். தேங்காய்த் துருவலால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

இந்திய துணைக்கண்டத்தில் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக வெல்லம் தயாரிக்கப்படுகிறது.

தேங்காய்ப்பால் திரட்டு

தேவையானவை:

தேங்காய்ப்பால் – ஒரு கப்

அரிசி மாவு – 100 கிராம்

பொடித்த கருப்பட்டி – 400 கிராம்

உப்பு – ஒரு சிட்டிகை

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

தண்ணீர் – 350 மில்லி

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

செய்முறை:

பொடித்த கருப்பட்டியை 100 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை குலாப்ஜாமுன் சிரப் பதத்துக்கு வந்தவுடன் கீழே இறக்கி தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் அரிசி மாவு, 250 மில்லி தண்ணீர் மற்றும் அரை கப் தேங்காய்ப்பால் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அடுப்பைக் குறைவான தீயில் வைத்து இக்கலவையைக் கைவிடாமல் கிளறி கொதிக்கவிடவும். கலவையானது அல்வா பதத்துக்கு வந்தவுடன் மீதமிருக்கும் தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். பிறகு இதனுடன் கருப்பட்டி சிரப், ஏலக்காய்த்தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

உடலின் உள் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல... சரும ஆரோக்கியத் துக்கும் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உறுதி அளிக்கும் சிறப்பு தேங்காய்ப் பாலுக்கு உண்டு.

ஹாட் சில்லி பிரெட்

தேவையானவை:

சாண்ட்விச் பிரெட் – 5

பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன்

சிறிய சதுரங்களாக நறுக்கிய குடமிளகாய் – ஒரு டேபிள்ஸ்பூன்

வினிகர் – ஒரு டீஸ்பூன்

சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

நறுக்கிய வெங்காயத்தாள் – அலங்கரிக்க

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

செய்முறை:

பிரெட்டைச் சிறிய சிறிய சதுரங்களாக நறுக்கி ஒரு ஃப்ரை செய்யும் பானில் உலர் டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பானில் எண்ணெய்விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இதனுடன் மிளகாய்த்தூள், சோயா சாஸ், வினிகர் மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கிளறவும். பின்னர் இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை பச்சை வாசனை போக நன்கு கொதிக்கவிடவும். பின்னர் இதில் உலர் டோஸ்ட் செய்த பிரெட் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வெங்காயத்தாள் தூவி சூடாகப் பரிமாறவும்.

இந்திய உணவில் மட்டுமல்ல... சீன உணவு வகைகளிலும் இஞ்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

டோஸ்டு பொட்டேட்டோஸ்

தேவையானவை:

உருளைக்கிழங்கு – 3

பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய குடமிளகாய் – ஒரு டேபிள்ஸ்பூன்

வினிகர் – ஒரு டீஸ்பூன்

சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

தக்காளி கெட்சப் – 2 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்

மைதா – ஒரு டீஸ்பூன்

வெங்காயத்தாள் – அலங்கரிக்க

உப்பு, எண்ணெய்– தேவையான அளவு

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

செய்முறை:

உருளைக்கிழங்குகளைச் சுத்தம் செய்து தோல் சீவி விரல் வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு டீஸ்பூன் சோள மாவு, ஒரு டீஸ்பூன் மைதா மாவு, தேவையான உப்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல கலந்துகொள்ளவும். பின்னர் இந்த உருளைக்கிழங்குத் துண்டுகளுடன் தயாரித்து வைத்துள்ள சோள மாவு - மைதா மாவு பேஸ்ட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை மீதமிருக்கும் சோள மாவில் புரட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

ஒரு பானில் எண்ணெய்விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் தக்காளி கெட்சப், சோயா சாஸ், வினிகர், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சிறிது தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். கலவையைப் பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும். ஒரு டீஸ்பூன் சோள மாவை தனியாக எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து அதைக் கொதிக்கும் இந்தக் கலவையில் சேர்த்துக் கிளறவும். பின்னர் பொரித்து வைத்துள்ள உருளை துண்டுகளை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வெங்காயத்தாள் தூவி சூடாகப் பரிமாறவும்.

உலகின் பஞ்சத்தைப்போக்கும் உணவுப்பொருள்களில் உருளைக் கிழங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

வாழைக்காய் மிளகு சிப்ஸ்

தேவையானவை:

வாழைக்காய் – 2

மிளகுத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

செய்முறை:

வாழைக்காய்களை நன்கு கழுவி தோல் நீக்கி வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி நறுக்கிய காய்களை நன்கு பொரித்தெடுக்கவும். பின்னர் பொரித்த சிப்ஸின் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி நன்கு குலுக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் வைத்துப் பயன்படுத்தவும்.

எலும்புகளின் வலுவுக்கும் வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துகள் வாழைக்காயில் உள்ளன.

வெல்லம் அவல் கொழுக்கட்டை

தேவையானவை:

வெள்ளை அவல் – ஒரு கப்

பொடித்த வெல்லம் - அரை கப்

தண்ணீர் – அரை கப்

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

துருவிய தேங்காய் – ஒரு கப்

உப்பு – ஒரு சிட்டிகை

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!

செய்முறை:

அவலை கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் குறைவான தீயில் வைத்து வெல்லம் கரைந்து தண்ணீருடன் நன்கு சேரும்வரை வைத்திருந்து இறக்கவும். பின்னர் ஒரு பவுலில் கொரகொரப்பாக அரைத்த அவல், வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காய் மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து மென்மையான மாவாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

வெள்ளை அவலில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன.