ரெசிப்பிஸ்
Published:Updated:

அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்

அழகு சேர்க்கும் உணவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அழகு சேர்க்கும் உணவுகள்

அழகுக் கலை நிபுணர் வசுந்தரா

வெயில் காலம் வந்தாலே சருமப் பிரச்னைகளும் கூடவே வர ஆரம்பித்துவிடும். இந்த நேரத்தில் சருமத்தை முறையாகப் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக வெயில் காலங்களில் உடல் சூட்டைத் தணிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி நாம் சாப்பிடுகிற உணவானது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சருமத்துக்கு நன்மை தருவதாகவும் இருக்க வேண்டும். உடல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்குக் கைகொடுக்கும் சூப்பர் உணவுகளை இதோ உங்களுக்காகத் தருகிறார் அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்
அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்

பனீர் டிக்கா மசாலா

தேவையானவை:

பனீர் - 100 கிராம்

வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று

தயிர் - ஒரு கப்

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் - 2 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்

கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – அரை டீஸ்பூன்

அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்

செய்முறை:

பனீர், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். குடமிளகாய் இருந்தால் அவற்றையும் பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். தயிரில் சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எண்ணெய், எலுமிச்சைச்சாறு, கடலை மாவு எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு கலந்துகொள்ளவும். இந்தக் கலவையில், தேவையான உப்பு மற்றும் நறுக்கிவைத்த பனீர், வெங்காயம், தக்காளி, குடமிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்துக் கலந்து குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும்.

கிரில் செய்வதற்குப் பயன்படுத்துகிற நீளமான குச்சியை எடுத்துக்கொள்ளவும். அதில் கலவையில் ஊறவைத்த பனீர், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக மாறி மாறி செருகவும். ஒரு தவாவைச் சிறிது வெண்ணெய் தடவிச் சூடாக்கவும். பின்னர் இந்த பனீர் ஸ்டிக்கை தவாவில் வைக்கவும். இதன் ஒவ்வொரு பக்கத்தையும் மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும்.

பனீரில் குறைந்த அளவு கொழுப்பே உள்ளது. ஆனால், புரதச்சத்து அதிகம். சரும ஆரோக்கியத்துக்குப் புரதம் மிகவும் நல்லது. தக்காளியும் வெங்காயமும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டவை. வெங்காயத்தில் சல்ஃபர் அதிகம் இருப்பதால் கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது.

ஆனியன் அண்டு ஜீரா ரைஸ்

தேவையானவை:

பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்)

சீரகம் - 2 டீஸ்பூன்

இஞ்சி – ஒரு துண்டு

பூண்டு - 2 பற்கள்

பச்சை மிளகாய் – ஒன்று

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

நெய் – ஒரு டீஸ்பூன்

நறுக்கிய முந்திரி துண்டுகள் - சிறிதளவு

உலர் திராட்சை - சிறிதளவு

உப்பு – ஒரு டீஸ்பூன்

அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்

செய்முறை:

பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, 10 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய், நெய்விட்டு சூடாக்கி அதில் நறுக்கிய முந்திரிப்பருப்பையும் உலர் திராட்சையையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். அதே எண்ணெய், நெய்யில் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் விழுதாக அரைத்து அதை வதக்கிய வெங்காயத்தோடு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதனுடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்துக் கிளறவும். பிறகு இதில் தேவையான உப்பு மற்றும் ஒன்றே முக்கால் கப் தண்ணீர் சேர்த்து கலவையை அவ்வப்போது கிளறி வேகவிடவும். தேவைப்பட்டால் குக்கரில் வேகவைக்கலாம். வெந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

வெங்காயம், சீரகம் சேர்த்துச் செய்யப்படும் இந்த ஜீரா ரைஸ் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இந்த உணவில் கால்சியம், வைட்டமின்கள் உள்ளன. அதுமட்டு மல்லாமல் சீரகம், இஞ்சி, பூண்டு ஆகியவை செரிமானத் துக்கு மிகவும் நல்லது. சருமத்தைப் பாதுகாக்கும்.

தால் மக்கானி

தேவையானவை:

கறுப்பு உளுந்து – ஒரு கப்

நறுக்கிய பெரிய வெங்காயம் - 2

நறுக்கிய தக்காளி - 3

இஞ்சி – ஒரு துண்டு

பூண்டு – 3 பற்கள்

பச்சை மிளகாய் – ஒன்று

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு – ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்

செய்முறை:

கறுப்பு உளுந்தை முதல்நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். அதிலிருந்து இரண்டு குழிக்கரண்டி உளுந்தைத் தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெயையும் வெண்ணெயையும் விட்டு சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்து வதக்கி எடுக்கவும். பிறகு கலவை கொஞ்சம் ஆறியதும் அதை விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த விழுதை எண்ணெய், வெண்ணெய் உள்ள வாணலியில் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். பின்பு இதில் வேகவைத்த உளுந்தைக் கலந்து கொள்ளவும். அடுத்து, தனியாக எடுத்து வைத்திருக்கும் இரண்டு குழிக்கரண்டி உளுந்தை நன்கு மசித்து இக்கலவையுடன் சேர்க்கவும். அப்போதுதான் கலவை நன்கு சேர்ந்துவரும். இதில் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான தால் மக்கானி ரெடி. ஆனியன் அண்டு ஜீரா ரைஸுக்கேற்ற சைடிஷ் இது.

உளுந்தில் புரதம் நிறைந்துள்ளதால் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு, கூந்தலுக்கும் சருமத்துக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.

மேங்கோ லஸ்ஸி

தேவையானவை:

மாம்பழச் சதை - ஒரு கப்

தயிர் – ஒரு கப்

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – கால் டீஸ்பூன்

ஐஸ் க்யூப்கள் - 2

திராட்சை – சிறிதளவு

அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்

செய்முறை:

தயிரை மத்தால் கடைந்துகொள்ளவும். அதில் சர்க்கரை, சீரகத்தூள், ஐஸ் க்யூப்கள், திராட்சை சேர்த்துக் கலந்துகொள்ளவும். பின்னர் மாம்பழச் சதையை லேசாக மிக்ஸியில் அரைத்து தயிர்க் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். பிறகு மொத்தத்தையும் மத்தால் நன்கு கடைந்தால் மேங்கோ லஸ்ஸி தயார்.

மாம்பழம் தயிரோடு சேரும்போது சூடு உட்பட எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தைப் பாதுகாக்கும்.

தஹி போஹா

தேவையானவை:

அவல் – ஒரு கப்

வெந்நீர் – ஒரு கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி - சிறிதளவு

இஞ்சி – ஒரு துண்டு (துருவவும்)

தயிர் – முக்கால் கப்

மாதுளை முத்துகள் - சிறிது

உப்பு – தேவைக்கேற்ப

அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்

செய்முறை:

அவலை வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்தெடுத்துக் கொள்ளவும். தயிரை நன்றாக அடித்து அதில் நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் ஊறவைத்த அவலை இதில் சேர்த்துக்கொள்ளவும். இதன்மீது கொத்தமல்லி, மாதுளை முத்துகளைத் தூவிப் பரிமாறவும். இதை மதிய உணவோடு சேர்த்தும் சாப்பிடலாம்.

உடல் சூட்டைத்தணிக்கும் திறன் கொண்ட தஹி போஹா, சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.