ரெசிப்பிஸ்
Published:Updated:

இஸ்லாமியத் திருமண விருந்து!

திருமண விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
திருமண விருந்து

சஃபீனா

இஸ்லாமியத் திருமண விருந்து!

ஸ்லாமிய உணவு என்றாலே எல்லோருக்கும் பிரியாணிதான் சட்டென்று நினைவுக்கு வரும். பிரியாணியையும் தாண்டி ருசியில் பட்டையைக் கிளப்பும் சைவ, அசைவ உணவுகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக வேறெங்குமே சாப்பிடக் கிடைக்காத பிரத்யேக உணவு வகைகள் இஸ்லாமியத் திருமணங்களில் பரிமாறப்படுவது வழக்கம்.

காலை நேரத்தில் திருமணம் என்றால் கறிச்சோறு, குருமா, தால்ச்சா... இரவில் நடக்கும் திருமணம் என்றால் பரோட்டா, முர்தபா, நெய்ச் சோறு என்று ஒவ்வோர் உணவு வகையும் கலக்கல் ரகமாக இருக்கும். திருமணங்கள் வீடுகளுக்குள்ளேயே நடக்க ஆரம்பித்திருக்கும் இந்த லாக் டௌன் நாள்களில், இஸ்லாமியத் திருமண உணவுகளின் ரெசிப்பி களை பிரத்யேகமாக நமக்குத் தருகிறார் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தைச் சேர்ந்த சஃபீனா.

வெள்ளை குருமா

தேவையானவை:

 • மட்டன் அல்லது சிக்கன் - அரை கிலோ

 • தயிர் - முக்கால் கப்

 • பெரிய வெங்காயம் - ஒன்று

 • நறுக்கிய தக்காளி – ஒன்று

 • பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (காரத்துக்கேற்ப)

 • பட்டை – ஒன்று

 • ஏலக்காய் – ஒன்று

 • கொத்தமல்லி, புதினா - சிறிதளவு

 • எண்ணெய் - 5 டீஸ்பூன்

 • நெய் – 2 டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - மூன்று சிட்டிகை

 • எலுமிச்சை - ஒன்று (சாறு எடுக்கவும்)

 • வெள்ளை மிளகுத்தூள் - 4 டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

 • அரைக்கத் தேவையானவை:

 • தேங்காய்த்துருவல் - அரை கப்

 • முந்திரிப்பருப்பு - 10

 • பாதாம்பருப்பு - 15

வெள்ளை குருமா
வெள்ளை குருமா

செய்முறை:

முதலில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றுடன் தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். மட்டன் அல்லது சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைக்கவும். சிக்கன் சுலபமாக வெந்துவிடும் என்பதால் தனியாக வேகவைக்க வேண்டாம். மட்டனாக இருந்தால் அதை குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும்.

குக்கரில் அல்லது பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றிச் சூடாக்கவும். இதில் பட்டை, ஏலக்காய், வேகவைத்த மட்டன் அல்லது சிக்கன் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தயிர், அரைத்த மசாலா, வெள்ளை மிளகுத்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். கலவை நன்கு வதங்கி எண்ணெய் மேலே வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பின்னர் கலவையை நன்கு கிளறி கொத்தமல்லி, புதினா இலைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் தாம்பத்ய வாழ்வியல் ஒப்பந்தமானது இஸ்லாமில் நிக்காஹ் என்றழைக்கப்படுகிறது.

தாளிச்ச சாதம் (நெய்ச் சோறு)

தேவையானவை:

 • பாஸ்மதி அரிசி – கால் கிலோ

 • நெய் – 100 கிராம்

 • பட்டை - 3 துண்டுகள் (சிறியது)

 • கிராம்பு - 4

 • ஏலக்காய் - 2

 • பிரியாணி இலை - ஒன்று

 • இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

 • பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்)

 • தயிர் - கால் கப்

 • கறிவேப்பிலை - ஒரு கொத்து

 • கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கொத்து

 • முந்திரிப்பருப்பு - 10

 • பாதாம்பருப்பு - 5 (விருப்பமெனில்)

 • உப்பு – தேவையான அளவு

தாளிச்ச சாதம்
தாளிச்ச சாதம்

செய்முறை:

முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு ஆகிய இரண்டையும் 15 நிமிடங்கள் ஊறவைத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வடித்துக்கொள்ளவும். அடுப்பில் குக்கரைவைத்து நெய்விட்டு சூடாக்கவும். அதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். பின்னர் அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தயிர் மற்றும் அரைத்துவைத்த முந்திரி, பாதாம் விழுதைச் சேர்க்கவும். பின்னர் இதனுடன் ஊறவைத்து வடித்து வைத்த அரிசியைப் போட்டுக் கிளறவும். இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் என்கிற விகிதத்தில் தேவையான தண்ணீரைச் சேர்க்கவும். பின்னர் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடவும். கலவையை இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். சுவையான நெய்ச் சோறு தயார்.

இஸ்லாமிய மணமகன் அவரின் நண்பர்கள், உறவினர்களுக்கு திருமணத்தை முன்னிட்டு கட்டாயம் அளிக்க வேண்டிய விருந்தின் பெயர் `வலிமா’.

தால்ச்சா

தேவையானவை:

 • துவரம்பருப்பு - 2 டம்ளர்

 • புளி - எலுமிச்சை அளவு

 • பட்டை – ஒன்று

 • கிராம்பு - 2

 • நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் - 2

 • நறுக்கிய தக்காளி - 2

 • நறுக்கிய பச்சை மிளகாய் - 3

 • கத்திரிக்காய் - 3

 • செளசெள - ஒன்று (சிறியது)

 • உருளைக்கிழங்கு - 2

 • வாழைக்காய் -2

 • மாங்காய் – ஒன்று (சிறியது)

 • மட்டன் - கொழுப்பு மற்றும் எலும்புடன் கூடிய 10 துண்டுகள்

 • இஞ்சி - பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன்

 • துருவிய தேங்காய் - கால் கப் (விழுதாக அரைக்கவும்)

 • கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – எல்லாம் சேர்ந்து ஒரு கைப்பிடி

 • மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • சிக்கன் அல்லது மட்டன் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 • எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

தால்ச்சா
தால்ச்சா

செய்முறை:

கத்திரிக்காய், செளசெள, உருளைக்கிழங்கு, வாழைக்காய், மாங்காய் ஆகிய காய்களை நடுத்தர அளவில் நறுக்கிக்கொள்ளவும். குக்கரில் மட்டன் துண்டுகளைப் போட்டு அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து விசில் விட்டு வேகவைத்துக் கொள்ளவும். பருப்பை நன்கு கழுவி குக்கரில் 3 டம்ளர் தண்ணீர்விட்டு இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். புளியை தனியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்துக் கிளறவும். பின்னர் இதில் நறுக்கிவைத்த காய்கறிகள், வேக வைத்த மட்டன் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். காய்கறிகளின் நிறம் மாறி அவை நன்றாக வதங்கியவுடன் கரைத்து வைத்த புளி, வேகவைத்த பருப்பு, தேவையான அளவு உப்பு, அரைத்த தேங்காய் விழுதை அதில் சேர்க்கவும். அத்துடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கலவை நன்றாகக் கொதித்தவுடன் அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா தூவி அடுப்பை அணைத்து விடவும். சூடான சுவையான தால்ச்சா ரெடி.

தங்கம் அல்லது பணமாக இஸ்லாமிய மணமகன் மணமகளுக்கு அளிக்கும் திருமண அன்பளிப்பு மஹர் என்று கூறப்படுகிறது. மணமுறிவு ஏற்பட்டாலும்கூட இதனை மணமகன் திருப்பிக் கேட்க கூடாது என்றே வழியுறுத்தப்படுகிறது.

முர்தபா

மேல்மாவு தயாரிக்க தேவையானவை:

 • மைதா – அரை கிலோ

 • நெய் - 50 கிராம்

 • சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்

 • உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு

 • உள்ளடம் (மசாலா பூரணம்) செய்ய தேவையானவை:

 • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2

 • பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று

 • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

 • பொடியாக நறுக்கிய கேரட் - 2

 • பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒன்று

 • வேகவைத்த பச்சைப்பட்டாணி - அரை கப்

 • கொத்தமல்லி, புதினா - சிறிதளவு

 • இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

 • கொத்திய ஆட்டிறைச்சி - கால் கிலோ

 • முட்டை - 2

 • மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • மட்டன் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

 • மஞ்சள்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

 • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

முர்தபா
முர்தபா

மேல்மாவு செய்முறை:

மைதா மாவுடன் தேவையான உப்பு, சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். பின்னர் அதில் நெய்யைக் காய்ச்சி ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஊறவிடவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி அதில் எண்ணெயைத் தடவி வைக்கவும்

உள்ளடம் (மசாலா பூரணம்) செய்முறை:

முட்டைகளை நன்றாக அடித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடாக்கி அடித்த முட்டைகளை தோசை போல ஊற்றவும். பின்னர் தோசைக்கரண்டி கொண்டு நன்றாகக் கொத்தி உதிர் உதிராக எடுத்துக்கொள்ளவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி முதலில் பொடியாக நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இரண்டும் பாதி அளவு வெந்ததும் அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் கரம் மசாலாத்தூள், மட்டன் மசாலாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேகவைத்த பச்சைப்பட்டாணி, கொத்திய இறைச்சி, அரைத்துவைத்த இஞ்சி - பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும். பிறகு இதில் கொத்திவைத்த முட்டைக் கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு கொத்தமல்லி, புதினா இலைகளைச் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைத்து உள்ளடத்தை ஆற விடவும்.

முர்தபா செய்முறை:

ஓர் உருண்டை மாவை எடுத்து அதை மெல்லியதாகத் திரட்டி அதன் நடுவில் செய்து வைத்திருக்கும் உள்ளடத்தைச் சிறிது வைக்கவும். பின்னர் மாவை மேலும், கீழும் மற்றும் இரண்டு பக்கவாட்டுப் பகுதிகளிலும் மடக்கி சதுரமாக செய்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அவற்றை வெறும் தவாவில் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வாட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். கடைசியாக மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி வாட்டி வைத்த இந்த முர்தபாக்களைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பழைய தஞ்சை மாவட்டங்களில் புளியானம் என்று கூறப்படுவது புளி ரசம். மீன் ஆனம் என்பது மீன் குழம்பு. தேத்தண்ணி என்பது தேநீர்.

மட்டன் கறி ஆனம்

தேவையானவை:

 • மட்டன் – அரை கிலோ

 • பட்டை - 2 துண்டு

 • கிராம்பு - 2

 • ஏலக்காய் - ஒன்று

 • பிரியாணி இலை - ஒன்று

 • பெரிய வெங்காயம் - 3

 • நறுக்கிய தக்காளி – 2

 • நறுக்கிய உருளைக்கிழங்கு -2

 • கீறிய பச்சை மிளகாய் - 2

 • இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

 • தயிர் - கால் கப்

 • துருவிய தேங்காய் - கால் கப்

 • முந்திரி – 10

 • கொத்தமல்லி, புதினா - சிறிதளவு

 • மல்லித்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

 • மட்டன் மசாலாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

 • மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

மட்டன் கறி ஆனம்
மட்டன் கறி ஆனம்

செய்முறை:

தேங்காய், முந்திரி ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துவைத்து கொள்ளவும். மட்டனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, சிறிதளவு இஞ்சி - பூண்டு விழுது மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேகவைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், தக்காளி, வேகவைத்த மட்டன், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் இதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மட்டன் மசாலாத்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

கலவையை ஐந்து நிமிடங்கள் வதக்கிய பிறகு, இதனுடன் கால் கப் தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கு வேகும் வரை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும் பின்னர் இதனுடன் அரைத்த தேங்காய் - முந்திரி விழுது மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விடவும். இறுதியாக மேலே சிறிதளவு கொத்தமல்லி, புதினா சேர்த்து அலங்கரிக்கவும்.

குறிப்பு:

இதே செய்முறையை கோழி இறைச்சியிலும் செய்யலாம். ஆனால் கோழி இறைச்சியை முன்பே குக்கரில் வேகவைக்கத் தேவையில்லை. வதக்கும்போது அப்படியே சேர்க்கலாம்.

பரங்கிப்பேட்டை பகுதிகளில் பீர்னீ என்கிற ரவை பாயசம் விருந்துகளில் பரிமாறப்படுவது வழக்கம்.

வட்டலப்பம்

தேவையானவை:

 • கெட்டியான தேங்காய்ப்பால் - ஒரு கப்

 • முட்டை - 6

 • வெள்ளை சர்க்கரை - 300 கிராம்

 • பாதாம் - 10

 • முந்திரி - 10

 • பிஸ்தா - 10

வட்டலப்பம்
வட்டலப்பம்

செய்முறை:

முதலில் முட்டைகளை உடைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் வெள்ளை சர்க்கரையைச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து அதை வடிகட்டிக் கொள்ளவும். பாதாம் மற்றும் பிஸ்தாவைத் தோல் நீக்கி எடுத்து முந்திரியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்பு வடிகட்டி வைத்த முட்டைக் கலவையில் அரைத்த விழுது, தேங்காய்ப்பால் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் தடவி அதில் இந்த கலவையை ஊற்றி மூடி போட்டு வைக்கவும்.

அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்தக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து அதன் மேலேயும் ஒரு மூடி போட்டு மிதமான தீயில் 30 நிமிடங்கள் வேகவிடவும். 30 நிமிடங்கள் கழித்து இதை ஒரு குச்சியைக் கொண்டு குத்தி பார்க்கவும். கலவை குச்சியில் ஒட்டவில்லையென்றால் கலவை நன்றாக வெந்துவிட்டது என்று அர்த்தம். பின்னர் இதை இறக்கி ஆறவிடவும். கலவை ஆறிய பின்பு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்

குறிப்பு:

விருப்பத்துக்கேற்ப இனிப்புச் சுவையைக் கூட்டவும் குறைக்கவும் செய்யலாம்.

பழைய தஞ்சை மாவட்டங்களில் முட்டை, சீனி, தேங்காய்ப்பால் போன்றவற்றைச் சேர்த்து நன்கு அடித்து பின் வேகவைத்து செய்யப்படும் விசேஷ பண்டம் வட்டலப்பம்.

சீனி தோவை

தேவையானவை:

 • வெள்ளை சர்க்கரை (சீனி) - ஒரு கப்

 • தண்ணீர் - 2 கப்

 • உப்பு - ஒரு சிட்டிகை

 • பட்டை - ஒன்று

 • ஏலக்காய் - 2

 • தயிர் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சூடாக்கி அதில் வெள்ளை சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை கரைய ஆரம்பித்ததும் அதில் 2 கப் தண்ணீர், பட்டை, ஏலக்காய், சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தண்ணீர் ஒரு கப் அளவுக்கு வற்றியதும் அடுப்பை அணைத்து விடவும். பிறகு இந்த சீனிக்கலவையை ஆறவைக்கவும். கலவை ஆறியவுடன் தயிர் சேர்க்கவும். சீனி தோவை தயார்.

இந்த சீனி தோவையைத் தக்காளிப் பச்சடி, சிறிது எலுமிச்சைச்சாறு, வாழைப்பழம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

கத்திரிக்காய் பச்சடி, உருளைக்கிழங்கு (ஆட்டு ஈரலுடன்), இனிப்பு, ரசம், இவற்றுடன் இறைச்சி ஆகிய ஐந்து தனித்தனி உணவுகளின் கலவையையே ஐந்து கறிச்சோறு என்று அழைக்கப்படுகிறது.
சீனி தோவை, தக்காளிப் பச்சடி
சீனி தோவை, தக்காளிப் பச்சடி

தக்காளிப் பச்சடி

தேவையானவை:

 • தக்காளி - 5 (விதைகளை நீக்கி நறுக்கவும்)

 • வெள்ளை சர்க்கரை – ஒரு தக்காளிக்கு

 • 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை என்கிற அளவில் எடுத்துக்கொள்ளவும்

 • நெய் - 2 டேபிள்ஸ்பூன்

 • பட்டை - ஒரு துண்டு

 • கிராம்பு - 2

 • ஏலக்காய் - ஒன்று

 • முந்திரி - 10

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் விதையில்லாத தக்காளி துண்டுகளுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரிப்பருப்பு, நெய் ஆகியவற்றைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். தக்காளி சிறிது வெந்ததும் சர்க்கரையை இதனுடன் சேர்த்து சர்க்கரை நன்றாகக் கரையும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். பச்சடி ரெடி. விருப்பப்பட்டால் இந்தத் தக்காளிப் பச்சடியுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்தும் சாப்பிடலாம்.

நால்வர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய அகலமான பாத்திரத்துக்கு ஸஹன் என்று பெயர். பரங்கிப்பேட்டை, நாகூர், முத்துப்பேட்டை, அதிராம்பட்டணம், மல்லிப்பட்டணம் போன்ற ஊர்களில் திருமண விருந்துகளில் இது இடம்பெறும்.

ஜாளர்

தேவையானவை:

 • மைதா - 500 கிராம்

 • தண்ணீர் - 250 மில்லி

 • தேங்காய்ப்பால் - 250 மில்லி

 • பெருஞ்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

 • நெய் - 100 மில்லி

ஜாளர்
ஜாளர்

செய்முறை:

மைதாவை கட்டி இல்லாமல் சல்லடையால் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் தண்ணீர், தேங்காய்ப்பால், பெருஞ்சீரகத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துவைத்துக் கொள்ளவும்.

இந்த மாவுக் கலவையை மூன்று அல்லது நான்கு துளையிட்ட ஜாளர் குவளையில் ஊற்றிக் கொள்ளவும். தோசைக்கல்லில் சிறிது நெய் தடவி சூடாக்கி ஜாளர் குவளையில் எடுத்துக்கொண்ட மாவை ஜிலேபி சுற்றுவது போல் தோசைக்கல் முழுவதும் சுற்றவும். ஜாளர் வெந்ததும் தோசை திருப்பியைக் கொண்டு கிழியாமல் எடுக்கவும். பின்னர் இதை நான்காக மடித்துப் பரிமாறவும்.

குறிப்பு:

மைதா மாவுக்குப் பதிலாக கோதுமை மாவிலும் இதைச் செய்யலாம்.

அரிசி மாவுடன் சிறுபருப்பு, சர்க்கரை சேர்த்து வேகவைத்துச் செய்யப்படும் இனிப்புக் கொழுக்கட்டையும் சில இஸ்லாமிய விருந்துகளில் இடம்பெறுகிறது.

கடற்பாசி ஸ்வீட்

தேவையானவை:

 • கடற்பாசி (சைனா கிராஸ்) – ஒரு கைப்பிடி அளவு

 • தண்ணீர் - 500 மில்லி

 • வெள்ளை சர்க்கரை - 250 கிராம்

 • உப்பு – ஒரு சிட்டிகை

கடற்பாசி ஸ்வீட்
கடற்பாசி ஸ்வீட்

செய்முறை:

தண்ணீருடன் உப்பு ஒரு சிட்டிகை சேர்த்துக் கலக்கவும். பின்னர், இதில் கடற்பாசியைச் சேர்த்து, மிதமான தீயில் கடற்பாசி நன்கு கரையும் வரை கொதிக்க விடவும் . கடற்பாசி தண்ணீரில் நன்கு கரைந்த பிறகு அதில் வெள்ளை சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை நன்றாகக் கரைந்ததும், தேவைப்பட்டால் வாசனைக்காக ஒரு துளி பன்னீர் சேர்க்கலாம். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு கலவையைக் கீழே இறக்கவும். அகலமான பாத்திரத்தில் இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்டப்பட்ட கலவை நன்றாக உறைந்ததும் சிறு துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல விருப்பத்துக்கேற்ப இனிப்புச் சுவையைக் கூட்டவும் குறைக்கவும் செய்யலாம்.

உலர வைக்கப்பட்ட மாசிக் கருவாட்டை நொறுக்கி, அத்துடன் மிளகாய் பொடி சேர்த்து தூளாக்கி, வெங்காயம், எலுமிச்சையோடு, சோறு, ரசத்துடன் சேர்த்து சாப்பிடுவது மலேசியா, மாலத்தீவுகளில் பிரபலம்.