Published:Updated:

கேரளா ஃப்யூஷன் ரெசிப்பி

சரஸ்வதி விஸ்வநாதன், தொகுப்பு: ஸ்ரீலோபாமுத்ரா

பிரீமியம் ஸ்டோரி
கேரளா ஃப்யூஷன் ரெசிப்பி
கேரளா ஃப்யூஷன் ரெசிப்பி

கேரள மாநிலம் திருச்சூரில் வசிக்கும் தமிழ்ப் பெண் சரஸ்வதி விஸ்வநாதன். 108 உணவு வகைகளை ஒரு மணி நேரத்தில் சமைத்து சாதனை படைத்தவர். Sachu’s Kitchen முகநூல் பக்கத்தை நிர்வகிப்பவர். சமையற்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர். சாக்லேட் அவல் இலை அடை, நேந்திரம்பழம் கட்லெட், சாக்லேட் அச்சப்பம் உட்பட வித்தியாசமான, சுவையான பல ஃப்யூஷன் ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார்.

கேரளா ஃப்யூஷன் ரெசிப்பி
கேரளா ஃப்யூஷன் ரெசிப்பி
  சரஸ்வதி விஸ்வநாதன்
சரஸ்வதி விஸ்வநாதன்
கேரளா ஃப்யூஷன் ரெசிப்பி
கேரளா ஃப்யூஷன் ரெசிப்பி

சாக்லேட் அவல் இலை அடை

தேவையானவை:

  • அவல் - ஒரு கப்

  • சாக்லேட் சிரப் - ஒரு கப்

  • அரைத்த தேங்காய் - ஒரு கப்

  • வெண்ணெய் - 2 டீஸ்பூன்

  • அரிசி மாவு - ஒரு கப்

  • வெந்நீர் - 2 கப்

  • வாழையிலை - தேவைக்கேற்ப

  • நெய் - 5 டீஸ்பூன்

  • தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

சாக்லேட் அவல் இலை அடை
சாக்லேட் அவல் இலை அடை

செய்முறை:

அரிசி மாவில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து, வெந்நீரைச் சிறிது சிறிதாகத் தெளித்து, கெட்டியாகப் பிசையவும். இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.

ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, சாக்லேட் சிரப் ஊற்றி, அதில் அரைத்த தேங்காயைச் சேர்க்கவும். குறைந்த தீயில் நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். இதனுடன் அவல் சேர்த்துக் கிளறி, மூன்று நான்கு நிமிடங்களுக்குக் குறைந்த தீயில் வேகவிடவும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கவும். வாழையிலையைப் பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் நெய் தடவி, மாவு உருண்டையை இலையின் நடுவில் வைத்து கைகளால் மாவைப் பரப்பிவிடவும். மாவின் ஒரு பாதியில் சாக்லேட் அவல் கலவையை வைத்து இலையை மூடவும். இவ்வாறு அனைத்து இலைகளிலும் செய்யவும்.

கேரளா ஃப்யூஷன் ரெசிப்பி

இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இந்த இலை அடைகளை அடுக்கிவைத்து ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வேகவிடவும். சூப்பரான சாக்லேட் அவல் இலை அடை ரெடி.

குறிப்பு:

பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் பண்பு சிவப்பு அவலுக்கு உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிஸ்தா பத்திரி

தேவையானவை:

  • அரிசி மாவு - ஒரு கப்

  • பொடித்த சர்க்கரை - கால் கப்

  • பிஸ்தா எசென்ஸ் - கால் டீஸ்பூன்

  • தண்ணீர் - ஒன்றே கால் கப்

  • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

  • துருவிய சாக்லேட் - தேவைக்கேற்ப

பிஸ்தா பத்திரி
பிஸ்தா பத்திரி

செய்முறை:

ஒரு தவாவில் அரிசி மாவைக் குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் வறுக்கவும். ஒரு பெரிய கடாயில் தண்ணீர், வெண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிடவும். வறுத்த அரிசி மாவு, பொடித்த சர்க்கரை, பிஸ்தா எசென்ஸ் சேர்க்கவும். மாவு வேகும் வரை தொடர்ந்து கலக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும். சூடு ஆறியதும், எண்ணெய் தடவப்பட்ட கைகளால் பிசைந்துகொள்ளவும். சிறிதளவு அரிசி மாவு எடுத்து உருட்டி வட்ட வடிவில் சப்பாத்தி போல் மெலிதாக தேய்த்துக்கொள்ளவும். இதுதான் பத்திரி. இப்போது தவாவை சூடாக்கி, பத்திரியைப் போட்டு, 30 விநாடிகள் குறைந்த தீயில் இருபுறமும் பழுப்பு நிறமாகாமல் வேகவைக்கவும். பத்திரி கடினமாக மாறும் வரை அதிக நேரம் சமைக்க வேண்டாம். அடுப்பிலிருந்து எடுத்து துருவிய சாக்லேட் உடன் பரிமாறவும்.

உலகில் சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் அரிசி.

சாக்லேட் பத்திரி

தேவையானவை:

  • அரிசி மாவு - ஒரு கப்

  • கோகோ பவுடர் - கால் கப்

  • பொடித்த சர்க்கரை - கால் கப்

  • தண்ணீர் - ஒன்றே கால் கப்

  • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

  • துருவிய சாக்லேட் - தேவைக்கேற்ப

சாக்லேட் பத்திரி
சாக்லேட் பத்திரி

செய்முறை:

ஒரு தவாவில் அரிசி மாவைக் குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் வறுக்கவும். ஒரு பெரிய கடாயில் தண்ணீர், வெண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிடவும். வறுத்த அரிசி மாவு, கோகோ பவுடர், பொடித்த சர்க்கரை சேர்க்கவும். மாவு வேகும் வரை தொடர்ந்து கலக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும். சூடு ஆறியதும், எண்ணெய் தடவப்பட்ட கைகளால் பிசைந்துகொள்ளவும். சிறிதளவு அரிசி மாவு எடுத்து உருட்டி, வட்ட வடிவில் சப்பாத்தி போல் மெலிதாக தேய்த்துக்கொள்ளவும். இதுதான் பத்திரி. இப்போது தவாவை சூடாக்கி, பத்திரியைப் போட்டு, 30 விநாடிகள் குறைந்த தீயில் இருபுறமும் பழுப்பு நிறமாகாமல் வேக வைக்கவும். பத்திரி கடினமாக மாறும் வரை அதிக நேரம் சமைக்க வேண்டாம். அடுப்பிலிருந்து எடுத்து துருவிய சாக்லேட் உடன் பரிமாறவும்.

கி.மு 4500-க்கு முன்பே ஆசியாவில் நெல் சாகுபடி செய்யப் பட்டிருக்கிறது.

கூர்க்கை செஷ்வான் ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை:

  • பாஸ்மதி அரிசி - ஒரு கப்

  • தண்ணீர் - 3 கப்

  • கூர்க்கை (சிறுகிழங்கு) - 100 கிராம் (தோல் சீவி, நறுக்கவும்)

  • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

செஷ்வான் சாஸ் தயாரிக்க:

  • காய்ந்த மிளகாய் - 10

  • பூண்டு - 10 பல்

  • வெங்காயம் (சின்ன சைஸ்) - 6 (நறுக்கவும்)

  • இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)

  • செலரி இலைகள் - 2 டீஸ்பூன்

  • வினிகர் - ஒரு டீஸ்பூன்

  • சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

  • மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

  • சோயா சாஸ் - அரை டீஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

அலங்கரிக்க:

  • நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு

கூர்க்கை செஷ்வான் ஃப்ரைடு ரைஸ்
கூர்க்கை செஷ்வான் ஃப்ரைடு ரைஸ்

செய்முறை

செஷ்வான் சாஸ் செய்யக் கொடுத்துள்ள காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து 30 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைக்கவும். பிறகு காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை மற்ற பொருள்களுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து பேஸ்ட்டாக்கிக்கொள்ளவும்.

கூர்க்கை, பாஸ்மதி அரிசியை செஷ்வான் சாஸில் 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து, சூடாக்கி ஊறவைத்த அரிசி - கூர்க்கை கலவையைச் சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும். அரிசிக் கலவையில் 3 கப் கொதிக்க வைத்த நீர் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். கடாயை மூடி, மிதமான தீயில் வேகவைத்து இறக்கவும். நறுக்கிய வெங்காயத்தாள் கொண்டு அலங்கரிக்கவும். வினிகர், தக்காளி சாஸ், பச்சை மிளகாய் சாஸ் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

சிறுகிழங்கு கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

நேந்திரம்பழம் கட்லெட்

தேவையானவை

  • பழுத்த நேந்திரம்பழம் - 2

  • அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்

  • மைதா - 4 டீஸ்பூன்

  • நெய் - 3 டீஸ்பூன்

  • முந்திரி - 20

  • உலர்திராட்சை - 20

  • அரைத்த தேங்காய் - ஒரு கப்

  • சர்க்கரை - ஒன்றேகால் கப்

  • தேன் - கால் கப்

  • ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • பிரெட் தூள் (bread crumbs) - ஒரு கப்

  • பால் - 2 டீஸ்பூன் (மாவு பிசைய)

  • மைதா - அரை கப்

  • பால் - கால் முதல் அரை கப் (மைதா கரைசல் தயாரிக்க)

  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

நேந்திரம்பழம் கட்லெட்
நேந்திரம்பழம் கட்லெட்

செய்முறை:

பழுத்த நேந்திரம்பழத்தைத் தோலுடன் சேர்த்து ஆவியில் வேகவைத்து எடுத்துத் தோலை உரித்து, நன்றாக மசித்துக்கொள்ளவும். இத்துடன் அரிசி மாவு, 4 டீஸ்பூன் மைதா சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கி முந்திரி, திராட்சையை வறுக்கவும். அரைத்த தேங்காய், சர்க்கரை, தேன் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். அத்துடன் வாழைப்பழம் - அரிசி மாவு கலவையைச் சேர்த்து நன்கு கலந்து தீயில் இருந்து நீக்கவும். இந்தக் கலவையிலிருந்து சிறிதளவு எடுத்து கட்லெட் போல தட்டவும்.

பால், மைதா இரண்டையும் கலந்துகொள்ளவும். அதில் கட்லெட்டுகளைத் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டவும். ஒரு கடாயில் எண்ணெ யைச் சூடாக்கவும். கட்லெட்டுகளைப்போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரிக்க வும். சுவையான நேந்திரம்பழம் கட்லெட்டுகள் தயார்.

குறிப்பு: தவாவில் சிறிதளவு எண்ணெய்விட்டு கட்லெட்டுகளை இருறமும் சுட்டும் எடுக்கலாம்.

நேந்திரம்பழம் கேரளத்திலும், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் அதிகம் விளைகிறது.

பலா சாக்லேட் கிண்ணத்தப்பம்

தேவையானவை:

  • அரிசி மாவு - ஒரு கப்

  • கோகோ பவுடர் - கால் கப்

  • சர்க்கரை - கால் கப்

  • பலாப்பழ ப்யூரி - ஒரு கப்

  • முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப்

  • ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • நெய் - ஒரு டீஸ்பூன்

அலங்கரிக்க:

  • நறுக்கிய பலாப்பழம் - தேவையான அளவு

பலா சாக்லேட் கிண்ணத்தப்பம்
பலா சாக்லேட் கிண்ணத்தப்பம்

செய்முறை:

பலாப்பழத்தை ஒரு பிளெண்டரில் அரைத்து வைக்கவும் (தோசை மாவுப் பதத்தில் இருக்க வேண்டும்). கோகோ பவுடர், சர்க்கரை, தேங்காய்ப்பால் மற்றும் அரிசி மாவு, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை நன்றாகக் கலக்கவும். அரிசி மாவு - கோகோ பவுடர் கலவையில் அரைத்து வைத்த பலாப்பழம் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளவும்.

ஒரு தட்டில் நெய் தடவி மாவுக் கலவையை ஊற்றவும். இதை ஆவியில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேகவைக்கவும். பலா சாக்லேட் கிண்ணத்தப்பம் தயார்.

சூடு ஆறிய பின்னர் அதை நீங்கள் விரும்பிய வடிவங்களில் வெட்டவும். நறுக்கிய பலாப்பழம் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

பலா இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கூர்க்கை பூண்டு ஊறுகாய்

தேவையானவை:

  • கூர்க்கை (சிறுகிழங்கு) - 500 கிராம்

  • பூண்டு - 100 கிராம்

  • காய்ந்த மிளகாய் - 10 முதல் 15 வரை

  • கடுகு - ஒரு டீஸ்பூன்

  • புளி - சிறிய எலுமிச்சை அளவு

  • தேங்காய் எண்ணெய் - 6 டீஸ்பூன்

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

அலங்கரிக்க:

  • பூண்டு - சில பற்கள்

  • காய்ந்த மிளகாய் - 2

கூர்க்கை பூண்டு ஊறுகாய்
கூர்க்கை பூண்டு ஊறுகாய்

செய்முறை:

கூர்க்கையை நன்கு சுத்தம் செய்து, பொடி யாக நறுக்கி தண்ணீரில் போடவும். 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி, கூர்க்கை யைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இதற்கிடையில் காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, உப்பு, கடுகு மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதை வதக்கிய கூர்க்கையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். மீதமுள்ள

3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து, ஊறுகாயிலிருந்து எண்ணெய் பிரிக்கும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கி வறுத்த பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் கொண்டு அலங்கரிக்கவும்.

பூண்டுச் செடிகள் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை.

சாக்லேட் உண்ணியப்பம்

தேவையானவை:

  • மைதா மாவு - ஒரு கப்

  • சர்க்கரை - அரை கப் (பொடித்தது)

  • ரவை - ஒரு கப்

  • அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

  • கோகோ பவுடர் - கால் கப்

  • ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

  • சமையல் சோடா - கால் டீஸ்பூன்

  • உப்பு - ஒரு சிட்டிகை

  • தண்ணீர் - தேவையான அளவு

  • எண்ணெய் - தேவையான அளவு

சாக்லேட் உண்ணியப்பம்
சாக்லேட் உண்ணியப்பம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, ரவை மற்றும் கோகோ பவுடர் சேர்த்து, அத்துடன் பொடித்த சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி, சமையல் சோடா மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஓரளவு கெட்டியாகக் கலந்துகொள்ளவும்.

பின்னர் பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் விட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்தெடுத்தால், சாக்லேட் உண்ணியப்பம் அப்பம் ரெடி!

இந்திய ஏலக்காய் உற்பத்தியில் 60 சதவிகிதம் கேரளாவிலேயே நடைபெறுகிறது.

டூட்டி ஃப்ரூட்டி நெய்யப்பம்

  • பச்சரிசி - ஒரு கப்

  • பனஞ்சர்க்கரை - முக்கால் கப்

  • ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

  • நெய் - 4 டீஸ்பூன்

  • கோதுமை மாவு - 2 டீஸ்பூன்

  • டூட்டி ஃப்ரூட்டி - கால் கப்

  • பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்

  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

டூட்டி ஃப்ரூட்டி நெய்யப்பம்
டூட்டி ஃப்ரூட்டி நெய்யப்பம்

செய்முறை:

பச்சரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அரிசியை வடித்து தண்ணீர் குறைவாக ஊற்றி மிக்ஸியில் சேர்த்து நைஸான மாவாக்கிக் கொள்ளவும். அரைத்த மாவுடன் பொடித்த பனஞ்சர்க்கரை, நெய், கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், டூட்டி ஃப்ரூட்டி, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளவும்.

கரைத்த மாவை ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு பணியாரக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில்விட்டு பொரித்து கருகாமல் எடுக்கவும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்தெடுத்தால், சூடான டூட்டி ஃப்ரூட்டி நெய்யப்பம் தயார்.

தாவர எண்ணெய்களில் காணப்படாத வைட்டமின் ஏ சத்து நெய்யில் மட்டுமே உள்ளது.

சாக்லேட் அச்சப்பம்

தேவையானவை:

  • அரிசி மாவு - கால் கப்

  • மைதா மாவு - ஒரு கப்

  • கோகோ பவுடர் - கால் கப்

  • சர்க்கரை - கால் கப்

  • தேங்காய்ப்பால் - முக்கால் கப்

  • உப்பு - ஒரு சிட்டிகை

சாக்லேட் அச்சப்பம்
சாக்லேட் அச்சப்பம்

செய்முறை:

அரை கப் தேங்காய்த் துருவலுடன் அரை கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து, அரைத்து, ஒரு பெரிய வடிகட்டியில் ஊற்றிப் பிழிந்து தேங்காய்ப்பால் எடுத்துவைத்துக்கொள்ளவும்.

அரிசி மாவு, மைதா மாவு, கோகோ பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சர்க்கரை, தேங்காய்ப்பால் சேர்த்துக் கரைக்கவும். தோசை மாவு போல கெட்டியாக கரைக்கவும். மாவை அச்சில் நனைத்து எடுக்கும்போது, சொட்டாமல் இருந்தால் நல்லது.

எண்ணெயைக் காயவைத்து, அதில் அச்சு முறுக்கு செய்யப் பயன்படுத்தும் அச்சை நன்றாக வைத்துச் சூடாக்கவும். கரைத்த மாவில் அச்சை முக்கால் பாகம் மட்டும் நனைத்து, சூடான எண்ணெயில் விட்டு, லேசாக ஆட்டவும். சில நொடிகளில் அச்சிலிருந்து முறுக்கு பிரியும். சத்தம் அடங்கும் வரை பொரித்து எண்ணெயிலிருந்து வடித்து எடுக்கவும். ருசிகரமான சாக்லேட் அச்சப்பம் தயார்.

குறிப்பு:

  • மிதமான தீயில் பொரிக்க வேண்டும். சூடு குறைந்தால் மட்டும் தீயை அதிகமாக வைக்கவும்.

  • அச்சை விட்டு முறுக்கு சில நேரங்களில் பிரியாது. அப்போது ஒரு ஃபோர்க் அல்லது குச்சி வைத்து எடுத்துவிடலாம்.

  • ஒவ்வொரு முறையும் அச்சை சூடுபடுத்திக்கொள்ளவும்.

  • தேவைக்கு அதிகமாக தேங்காய்ப்பாலோ, சர்க்கரையோ சேர்த்தால் எண்ணெயில் பொரிக்கும்போது முறுக்கு உடைந்துவிடும் இந்தப் பலகாரம் செய்ய, பொறுமை மிகவும் அவசியம்.

தேங்காயில் கொழுப்பு தவிர இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், மக்னீசியம், பொட்டாசியம் சத்துகளும் காணப்படுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு