பிரீமியம் ஸ்டோரி

ள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்குச் சாப்பிட என்ன கொடுக்கலாம் என அம்மாக்கள் மண்டையைப் பிய்த்துக்கொள்வார்கள் தினமும். உருளைக்கிழங்கு பஜ்ஜி, உளுந்து போண்டா எனப் பார்த்துப் பார்த்துச் செய்துவைத்திருப்பார்கள். நக்கெட்ஸ், சீஸ் பால்ஸ், டிக்கி எனக் குழந்தைகளின் சாய்ஸ் வேறாக இருக்கும். வேறுவழியின்றி அவர்கள் கேட்பதை வெளியில் வாங்கித் தந்து, குழந்தைகளின் பசியாற்றுவார்கள் அம்மாக்கள்.

வெரைட்டி ஸ்நாக்ஸ்
வெரைட்டி ஸ்நாக்ஸ்
 ஹேமலதா
ஹேமலதா

ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்வதொன்றும் அவ்வளவு சவாலான வேலையெல்லாம் இல்லை. கொஞ்சம் பிளானிங்கும் தேவையான பொருள்களின் ஸ்டாக்கும் இருந்தால் குழந்தைகளே அதிசயிக்கும் வகையில் வெரைட்டியாகச் செய்துகொடுத்து அசத்திவிடலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் ஹேமலதா. அப்படியான ஸ்நாக்ஸ்களின் செய்முறைகள் உங்களுக்காக!

டிரை ஃப்ரூட்ஸ் லட்டு
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு

டிரை ஃப்ரூட்ஸ் லட்டு

தேவையானவை:

 • பேரீச்சம்பழம் - ஒரு கப்

 • பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்

 • வால்நட் - அரை கப்

 • உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்

 • முந்திரி, பிஸ்தா - தலா 2 டேபிள்ஸ்பூன்

 • ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்

 • கசகசா - ஒரு டீஸ்பூன்

 • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும் பெரிய அளவு கொண்ட மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். பின்பு லட்டுகளாகப் பிடிக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெப்பர் பனீர்
பெப்பர் பனீர்

பெப்பர் பனீர்

தேவையானவை:

 • பனீர் - 200 கிராம்

 • நறுக்கிய குடமிளகாய் - அரை கப்

 • பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • இஞ்சி, பூண்டு (நறுக்கியது) - தலா ஒரு டீஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பனீரை சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு அதில் வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். கடைசியாக உப்பு, மிளகுத்தூள், பனீர் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கோபி வடை
கோபி வடை

கோபி வடை

தேவையானவை:

 • கடலைப்பருப்பு - ஒரு கப்

 • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

 • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

 • காலிஃப்ளவர் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து பின்பு கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, காலிஃப்ளவர் (கோபி), உப்பு சேர்க்கவும். பிறகு, மாவை எண்ணெயில் வடைகளாகச் சுட்டெடுக்கவும்.

கடலைப்பருப்பில் உள்ள வைட்டமின் சி-யும் இதர தாதுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

ஃபலாஃபெல்
ஃபலாஃபெல்

ஃபலாஃபெல்

தேவையானவை:

 • வெள்ளை (அ) கறுப்புக் கொண்டைக்கடலை - ஒரு கப்

 • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

 • கொத்தமல்லித்தழை - அரை கப்

 • எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

 • சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக்கடலையை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து அரைக்கவும். பின்பு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கொண்டைக்கடலையை விரைவாக வேகவைப்பதற்காகச் சிலர் சமையல் சோடா சேர்ப்பார்கள். இதனால் அதிலுள்ள தயாமின் வைட்டமினை இழக்க நேரிடும்.

ஆனியன் ரிங்க்ஸ்
ஆனியன் ரிங்க்ஸ்

ஆனியன் ரிங்க்ஸ்

தேவையானவை:

 • பெரிய வெங்காயம் - 2

 • சோள மாவு, மைதா - தலா அரை கப்

 • ஒரிகானோ பவுடர் - ஒரு டீஸ்பூன்

 • சில்லி ஃப்ளேக்ஸ் - அரை டீஸ்பூன்

 • கார்ன் ஃப்ளேக்ஸ் - அரை கப்

 • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை வட்டமாக நறுக்கவும். பின்பு சோள மாவு, மைதா, ஒரிகானோ பவுடர், உப்பு, மஞ்சள்தூள், சில்லி ஃப்ளேக்ஸ் இவற்றுடன் தண்ணீர்விட்டுக் கலக்கவும். பிறகு வெங்காயத்தை இதில் தோய்த்து, நொறுக்கிய கார்ன் ஃப்ளேக்ஸில் புரட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கோபி பக்கோடா
கோபி பக்கோடா

கோபி பக்கோடா

தேவையானவை:

 • காலிஃப்ளவர் - ஒரு கப்

 • கடலை மாவு - அரை கப்

 • அரிசி மாவு, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - தலா கால் கப்

 • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

 • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காலிஃப்ளவரைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், காலிஃப்ளவர் (கோபி) சேர்த்து, எண்ணெயில் பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கவும்.

பனீர் பாப்பர்ஸ்
பனீர் பாப்பர்ஸ்

பனீர் பாப்பர்ஸ்

தேவையானவை:

 • பனீர் - 200 கிராம் (துருவவும்)

 • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

 • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 • மைதா - 4 டீஸ்பூன்

 • கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன்

 • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 • மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 • கார்ன்ஃப்ளேக்ஸ் - அரை கப்

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துருவிய பனீர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு, மைதா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைக் கலந்து சிறு உருண்டைகளாக்கவும். பின்பு, கார்ன்ஃப்ளார், மீதமுள்ள மைதா, சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து, உருண்டைகளை இதில் தோய்த்து நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸில் புரட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கோபி 65
கோபி 65

கோபி 65

தேவையானவை:

 • கடலை மாவு, மைதா மாவு, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - தலா 2 டேபிள்ஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • ரெட் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை

 • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • கோபி (காலிஃப்ளவர்) - ஒரு கப்

 • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: கோபி, எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி மாவுப் பதத்தில் கலக்கவும். பின்பு அதில் காலிஃப்ளவரைத் தோய்த்து, எண்ணெயில் பொரிக்கவும்.

பீட்ரூட் டிக்கி
பீட்ரூட் டிக்கி

பீட்ரூட் டிக்கி

தேவையானவை - டிக்கி செய்ய:

 • பீட்ரூட் (துருவியது) - ஒரு கப்

 • வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒன்று

 • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • சீரகத்தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்தூள்), மல்லித்தூள் (தனியாத்தூள்), சாட் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன்

 • பிரெட் தூள் - அரை கப்

 • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

 • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கரைக்க:

 • கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன்

 • மைதா - 2 டீஸ்பூன்

 • உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் - சிறிதளவு

செய்முறை:

டிக்கி செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் (பிரெட் தூள், எண்ணெய் நீங்கலாக) ஒன்றாகக் கலக்கவும். பின்பு, ஒரு சிறு கிண்ணத்தில் கரைக்கக்கொடுத்துள்ள கார்ன்ஃப்ளார், மைதா, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கலந்துகொள்ளவும்., மேலே உள்ள கலவையை சிறு டிக்கிகளாகச் செய்து, கலந்துவைத்துள்ள மாவில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு.

வெஜ் நக்கட்ஸ்
வெஜ் நக்கட்ஸ்

வெஜ் நக்கட்ஸ்

தேவையானவை:

 • நறுக்கிய பீன்ஸ், கேரட் - தலா ஒரு கப்

 • பச்சைப் பட்டாணி - அரை கப்

 • உருளைக்கிழங்கு (வேகவைத்தது) - 2

 • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

 • மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • தனியாத்தூள் - அரை டீஸ்பூன்

 • சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 • சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 • ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - அரை டீஸ்பூன்

 • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 • பிரெட் தூள் - அரை கப்

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கரைக்க:

 • மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்

 • கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்

 • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

 • தண்ணீர் - சிறிதளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். பின்பு, அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்க்கவும். கடைசியாக இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

கரைக்கக்கொடுத்துள்ள கார்ன்ஃப்ளார், மைதா, மிளகுத்தூள், உப்பு இவற்றுடன் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். பின்பு, காய்கறிக் கலவையை சதுர வடிவில் செய்து மாவில் தோய்த்து பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் சுட்டெடுக்கவும்.

ரத்தச் சோகை நீங்க பீன்ஸ் சாப்பிடுவது பயன்தரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு