Published:Updated:

மில்லட் ஸ்வீட்ஸ்

இந்த இனிப்பு வகைகள் குழந்தைகளும் விரும்பும் வகையில் அமைந்தவை என்பதால், நல்லதொரு உணவுப்பழக்கத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்த முடியும்.

பிரீமியம் ஸ்டோரி

தீபாவளிக்கு விதவிதமான இனிப்பு வகைகளைச் செய்தோம். கொண்டாட்டம் என்பதால் ருசிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அடுத்தது ஆரோக்கியம்தானே? அதற்குக் கைகொடுக்கக் காத்திருக்கிறது, சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் ஜெ.கலைவாணி வழங்கும் மில்லட் ஸ்வீட்ஸ் ரெசிப்பி.

மில்லட் ஸ்வீட்ஸ்
மில்லட் ஸ்வீட்ஸ்

இந்த இனிப்புகளில் எண்ணெய் இல்லை; வனஸ்பதி இல்லவே இல்லை. மைதா இல்லை; இன்னபிற செயற்கைச் சுவையூட்டிகளும்கூட இடம்பெறவில்லை. ஆனால், உடலுக்கு வலு அளித்து ஆரோக்கியம் கூட்டும் ஏராளமான உட்பொருள்கள் உண்டு.

  ஜெ.கலைவாணி
ஜெ.கலைவாணி

இந்த இனிப்பு வகைகள் குழந்தைகளும் விரும்பும் வகையில் அமைந்தவை என்பதால், நல்லதொரு உணவுப்பழக்கத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்த முடியும். சிறப்பான சிறுதானியங்களை தினசரி மெனுவில் சேர்த்து நலம் பெற வாழ்த்துகள்!

ராகி நட்ஸ் உருண்டை

தேவையானவை:

 • ராகி மாவு - ஒரு கப்

 • வெல்லம் - முக்கால் கப்

 • வறுத்த வேர்க்கடலை - கால் கப்

 • முந்திரி - 8 (ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)

 • ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

 • உப்பு - கால் டீஸ்பூன்

 • நெய் - 2 டேபிள்ஸ்பூன்

 • எள் - அலங்கரிக்க தேவையான அளவு

ராகி நட்ஸ் உருண்டை
ராகி நட்ஸ் உருண்டை

செய்முறை:

ராகி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு, மென்மையாகவும் சிறிதளவு கெட்டியாகவும் அடைதட்டும் பதத்துக்குப் பிசைந்துவைத்துக்கொள்ளவும். பின்பு, அதை உருண்டைகளாகப் பிடித்து விரல்களால் அடைதட்டிக்கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லைக் காயவிட்டு அடையைப் போட்டு, நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடு ஆறிய பிறகு கைகளால் சிறு துண்டுகளாக்கவும் (கொஞ்சம் சூடு இருக்க வேண்டும்). பின்பு மிக்ஸியில் வெல்லம், ஏலக்காய்த்தூள், வேர்க்கடலை, ராகி அடை அனைத்தையும் சேர்த்து ரவை பதத்துக்கு அரைக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து, ஒன்றிரண்டாகப் பொடித்த முந்திரி சேர்த்து, கைகளில் நெய் தொட்டுக்கொண்டு உருண்டை பிடித்து, எள் தூவி அலங்கரித்துச் சாப்பிடக்கொடுக்கவும். மிகவும் சத்தான உருண்டை இது.

குறிப்பு:

பாதாம் பருப்பு சேர்த்தும் செய்யலாம். வறுத்த வேர்க்கடலையாக இருந்தாலும் அரைப்பதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை வறுத்துக்கொள்ள வேண்டும்.

ஆரியம், ராகி, கேப்பை... இவையெல்லாம் கேழ்வரகின் வேறு பெயர்களே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கம்பு இனிப்புருண்டை

தேவையானவை:

 • கம்பு - கால் கப்

 • பச்சைப்பயறு - ஒரு கப்

 • வெல்லம் - அரை கப்

 • தேங்காய்த் துருவல் - அரை கப்

 • வறுத்த வேர்க்கடலை - கால் கப்

 • ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

 • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

கம்பு இனிப்புருண்டை
கம்பு இனிப்புருண்டை

செய்முறை:

கம்பு, பச்சைப்பயறு ஆகியவற்றை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் வறுத்த வேர்க்கடலையை மீண்டும் சூடேற்றி வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் கம்பு, பச்சைப்பயறு, வறுத்த வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு சுற்று அரைத்துவிட்டு, பின்பு வெல்லத்தைச் சேர்த்து அரைக்க வேண்டும். ரவை பதம் அல்லது துகள்களாக அரைத்து (நைஸாக அரைக்க வேண்டாம்) எடுக்க வேண்டும். வெல்லம் அனைத்துடன் கலந்து சுருண்டு வரும். கைகளில் நெய் தொட்டுக்கொண்டு இதை உருண்டைகளாகச் செய்யவும். குச்சியில் குழந்தைகளுக்குப் பிடித்த பிங்க் கலர் ரிப்பனால் போவ் செய்து இணைத்து, அந்தக் குச்சியை கம்பு உருண்டையில் செருகி வித்தியாசமாகக் கொடுக்க, குழந்தைகள் இரண்டு நிமிடங்களில் காலி செய்துவிடுவார்கள்.

இது சத்தும் சுவையும் நிறைந்தது. எல்லா காலத்திலும் சாப்பிடலாம். கம்பு, பச்சைப்பயற்றின் குளிர்ச்சித் தன்மையைக் கட்டுப்படுத்தி உடலில் சத்துகளைச் சேர்க்கும்.

உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் பாதிக்கு மேல் இடம்பெறுவது கம்புதான்.

கம்பு லாலிபாப்

தேவையானவை:

 • கம்பு - ஒன்றரை கப்

 • நாட்டு வெல்லம் - கால் கப்

 • வேர்க்கடலை - கால் கப்

 • முந்திரி, பாதாம் - தலா 7

 • பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 10

 • ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

அலங்கரிக்க:

 • டூத்பிக் மற்றும் ஜெம்ஸ் - தேவைக்கேற்ப

கம்பு லாலிபாப்
கம்பு லாலிபாப்

செய்முறை:

வெறும் வாணலியில் கம்பு சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்துக்கொள்ளவும். பின்பு அத்துடன் நாட்டு வெல்லம், வேர்க்கடலை, முந்திரி, பாதாம், பேரீச்சம்பழம், ஏலக்காய்த்தூள் அனைத்தையும் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். மாவு மென்மையாக மெழுகு போன்று வரும். கைகளில் லேசாகத் தண்ணீரோ அல்லது நெய்யோ தொட்டு சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்து, பின்பு வட்ட வடிவில் தடையாகத் தட்டி அதில் டூத்பிக் நுழைத்து, ஜெம்ஸ் ஒட்டவைத்து, 10 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுத்து, சாப்பிடக்கொடுங்கள்.

கம்புவின் விளைச்சல் காலம் மூன்று முதல் நான்கு மாதங்கள்.

வரகரிசி அப்பம்

தேவையானவை:

 • வரகரிசி - ஒரு கப்

 • வாழைப்பழம் - 2

 • பாகு வெல்லம் - அரை கப்

 • ஏலக்காய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

 • உப்பு - ஒரு சிட்டிகை

 • சமையல் சோடா - ஒரு சிட்டிகை

 • நெய் - கால் கப்

வரகரிசி அப்பம்
வரகரிசி அப்பம்

செய்முறை:

வரகரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து அத்துடன் வாழைப்பழம், பாகு வெல்லம் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், உப்பு, சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் நெய்விட்டு மாவை ஊற்றி மூடி வேகவிட்டு, பின்பு திறந்து திருப்பிப்போட்டு பொன்னிறமாக எடுக்கவும். வரகரிசி அப்பம் ரெடி. இதை நீளமான குச்சியில் கோத்து வித்தியாசமாகப் பரிமாறலாம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

வரகரிசியில் இரும்புச்சத்து, தாதுக்கள், கால்சியம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன.

பனிவரகு வெந்தய இனிப்புருண்டை

தேவையானவை:

 • வெந்தயம் - கால் கப்

 • பனிவரகு - கால் கப்

 • கறுப்பு எள் - அரை கப்

 • வெல்லம் - அரை கப்

 • ஏலக்காய் - ஒன்று

பனிவரகு வெந்தய இனிப்புருண்டை
பனிவரகு வெந்தய இனிப்புருண்டை

செய்முறை:

வெந்தயத்தை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். பனிவரகையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு அதே வாணலியில் எள் சேர்த்துத் தீய்ந்துவிடாமல், நன்றாக வெடித்து வாசம் வரும்வரை கிளறி வறுக்க வேண்டும். அனைத்தும் மிதமான சூட்டில் இருக்கும்போதே மிக்ஸியில் அரைக்க வேண்டும். வறுத்த வெந்தயம், பனிவரகு, வறுத்த எள், ஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து இரண்டு சுற்று அரைத்துக்கொண்டு, பின்பு வெல்லம் சேர்த்து அரைக்க, அந்தச் சூட்டில் வெல்லம் அரைபட்டு சுருண்டு வரும். அந்தப் பதத்தில் சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்துவைக்க எளிதாக இருக்கும். இந்த உருண்டையை தினம் ஒன்று காலையில் சாப்பிட்டுவர, மூட்டுவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மிகவும் சத்தான மருந்து உருண்டை இது.

பனிவரகு 65 நாள் களிலேயே மகசூல் கொடுத்துவிடும்.

சாமை சத்துருண்டை

தேவையானவை:

 • சாமை - ஒரு கப்

 • வெல்லம் - அரை கப்

 • ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

 • தண்ணீர் - 2 கப்

 • தேங்காய்த் துருவல் - கால் கப்

 • உப்பு - ஒரு சிட்டிகை

சாமை சத்துருண்டை
சாமை சத்துருண்டை

செய்முறை:

சாமை அரிசியை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து ரவை போல பொடித்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து அதில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டுக் கொதிக்கவிடவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த சாமை அரிசி ரவை, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துகொண்டு, கொதிக்கவிட்ட வெல்லத் தண்ணீரை சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதைக் கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடித்துவைத்து, தேங்காய்த் துருவலால் அலங்கரித்துச் சாப்பிடவும்.

எலும்புகளுக்கு இடையிலுள்ள தசைகளை வலுப்பெறச் செய்யும் தன்மை சாமைக்கு உண்டு.

குதிரைவாலி இனிப்பு அச்சு

தேவையானவை:

 • குதிரைவாலி அவல் - ஒரு கப்

 • தேங்காய்த் துருவல் - ஒரு கப்

 • வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்

 • பொட்டுக்கடலை - அரை கப்

 • வெல்லம் - ஒன்றேகால் கப்

 • வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)

 • ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

 • வறுத்த முந்திரி - அலங்கரிக்கத் தேவையான அளவு

குதிரைவாலி இனிப்பு அச்சு
குதிரைவாலி இனிப்பு அச்சு

செய்முறை:

வெறும் வாணலியில் குதிரைவாலி அவல், தேங்காய்த் துருவல், வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு வெல்லத்தைப் பொடித்துப்போட்டு ஒரு கம்பி பதம் வரும்வரை காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த மாவு, ஏலக்காய்த்தூள், வறுத்த வெள்ளை எள் சேர்த்துக் கலந்துகொண்டு அதில் வடிகட்டிய வெல்ல நீரை சுடச்சுட ஊற்றிக் கிளறவும் (உருண்டைப் பிடிக்கும் பதத்துக்குத் தேவையான அளவுக்கு மட்டும் வெல்ல நீரை சேர்க்கவும்). மாவைக் கலந்து உருண்டை பிடித்துக்கொள்ளவும். உருண்டையை வட்ட வடிவ அச்சில் அழுத்தி வைத்து முந்திரி பதித்து, பிறகு எடுத்துப் பரிமாறவும்.

பழங்காலந் தொட்டே தமிழர் உணவில் குதிரைவாலி மிக முக்கிய பங்கு வகித்தது.

தினை பீட்ரூட் அல்வா

தேவையானவை:

 • தினை - கால் கப்

 • பீட்ரூட் - 4

 • நாட்டுச் சர்க்கரை - அரை கப்

 • ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • நெய் - கால் கப்

 • முந்திரி, திராட்சை - தலா 10

தினை பீட்ரூட் அல்வா
தினை பீட்ரூட் அல்வா

செய்முறை:

பீட்ரூட்டைத் தோல் நீக்கி சீவி, மையாக அரைத்துக்கொள்ளவும். தினையைக் கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். அதில் பீட்ரூட் விழுதைச் சேர்த்து மூடி வேகவிடவும். தினையும் பீட்ரூட்டும் கலந்து நன்றாக வெந்து வர வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் ஊற்றிக்கொள்ளலாம். தினையும் பீட்ரூட்டும் சேர்ந்து வெந்து தண்ணீர் குறைந்ததும் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இன்னொரு வாணலியில் நெய்விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து, பீட்ரூட் அல்வாவுடன் சேர்த்துக் கலக்கவும் (நெய்யையும் சேர்க்கவும்). அல்வா சுருண்டு வரும் வரை அடுப்பைக் குறைத்து வைத்துக் கிளறி இறக்கவும்.

தினை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா.

தினைமாவுப்பொடி

தேவையானவை:

 • தினைமாவு - ஒரு கப்

 • தேன் - கால் கப்

 • உலர்திராட்சை - 10

 • முந்திரி - 8 (ஒன்றிரண்டாகப் பொடித்தது)

 • நெய் - 4 டேபிள்ஸ்பூன்

தினைமாவுப்பொடி
தினைமாவுப்பொடி

செய்முறை:

வாணலியில் நெய்விட்டு முந்திரி சேர்த்து லேசாகக் கிளறி, பின்னர் திராட்சை சேர்க்கவும். திராட்சை பந்துகள் போல் ஆகும்போது உடனே தினைமாவைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்கவும். அந்தச் சூட்டிலேயே தேன் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க, ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் மாவு உதிரியாக வரும். சுடச் சுட சாப்பிடக் கொடுக்கவும்.

இதை பாட்டிலில் அடைத்துவைத்து விருப்பப்படும்போதும் சாப்பிடலாம்.

கி.மு 6000 காலகட்டத்தி லேயே தினை சீனாவில் பயிரிடப் பட்டிருக்கிறது.

கம்பு அவல் தேன்மிட்டாய்

தேவையானவை:

 • கம்பு அவல் - ஒரு கப்

 • பொட்டுக்கடலை - அரை கப்

 • சுக்குப் பொடி - அரை டேபிள்ஸ்பூன்

 • கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன்

 • தேங்காய்த் துருவல் - ஒரு கப்

 • வறுத்த வேர்க்கடலை - அரை கப்

 • தேன் - தேவைக்கேற்ப

கம்பு அவல் தேன்மிட்டாய்
கம்பு அவல் தேன்மிட்டாய்

செய்முறை:

கம்பு அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு அதே வாணலியில் எள்ளை வறுத்து எடுத்துக்கொள்ளவும். மிக்ஸியில் வறுத்துவைத்த அனைத்தையும் போட்டு அரைத்து, சுக்குப்பொடி சேர்த்து மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு லேசாக ஆறவிடவும். பின்பு சூடு இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாகத் தேன்விட்டு பிசைந்து, ஹார்டின் வடிவ அச்சில் அழுத்தி வைத்து, ஃப்ரீசரில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்க, கம்பு அவல் தேன்மிட்டாய் ரெடி.

குறிப்பு: இதை உங்களுக்கு விருப்பமான வடிவ அச்சில் வைத்தும் செய்யலாம்.

40-க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவாகப் பயன்படும் தானியம் கம்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு