பிரீமியம் ஸ்டோரி
ரம்ஜான் சிறப்பு உணவுகள்

புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. இறைவனின் அருளைப் பெறவேண்டி நோன்பிருக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரம்ஜான் பண்டிகை மிக மிக முக்கியமானது. அன்பை மட்டுமல்லாது ருசியான உணவு வகைகளையும் இந்த நன்னாளில் பரிமாறிக்கொள்வது வழக்கம். இதோ அப்படிப்பட்ட ரம்ஜான் சிறப்பு உணவு வகைகளை எல்லோரும் செய்துபார்த்து ருசிக்கும் வகையில் எளிமையான செய்முறைக் குறிப்புகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் ஷபானா.

ரமலான்
ரமலான்

நோன்புக் கஞ்சி

தேவையானவை:

 • பச்சரிசி அல்லது பாஸ்மதி அரிசி – அரை கப்

 • பாசிப்பருப்பு – கால் கப்

 • எண்ணெய் - 2 டீஸ்பூன்

 • நெய் - 2 டீஸ்பூன்

 • நறுக்கிய வெங்காயம் – ஒன்று

 • இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

 • நறுக்கிய பச்சை மிளகாய் - 4

 • நறுக்கிய தக்காளி - ஒன்று

 • கிராம்பு - 3

 • ஏலக்காய் - 3

 • பட்டை - ஒரு துண்டு

 • சீரகம் – ஒரு டீஸ்பூன்

 • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • தேங்காய்ப்பால் – ஒரு கப்

 • கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் - சிறிதளவு

 • மட்டன் கீமா – 100 கிராம்

 • உப்பு – தேவையான அளவு

நோன்புக் கஞ்சி
நோன்புக் கஞ்சி

செய்முறை:

அரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒன்றாகச் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு கையால் பல முறை நன்கு நசுக்கி ஒன்றிரண்டாக உடைக்கவும். அதன்பின்னர் அதிலுள்ள தண்ணீரை வடித்துவிட்டு அரிசி, பருப்பை மட்டும் எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துச் சூடாக்கவும். பின்னர் அதில் பட்டை, கிராம்பு. ஏலக்காய், சீரகம் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். இத்துடன் மட்டன் கீமாவைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அத்துடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினாவையும் சேர்க்கவும். பின்னர் அரிசி, பாசிப்பருப்புக் கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி அதில் மூன்று கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும். குக்கரை மூடி நான்கு விசில் வரும்வரை வேகவிடவும். குக்கரின் ஆவி இறங்கிய பின்னர் மூடியைத் திறந்து வெந்த கலவையுடன் மிளகுத்தூளைச் சேர்க்கவும். பிறகு இத்துடன் தேங்காய்ப்பால் ஒரு கப் சேர்த்துக் கிளறவும். கடைசியாக மீண்டும் இந்தக் கலவையை அடுப்பில் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

சைவ உணவுப்பழக்கம் கொண்ட வர்கள் மட்டன் கீமாவுக்குப் பதிலாக சில கேரட் துண்டுகள் சேர்த்து இந்தக் கஞ்சியைத் தயாரித்து உண்ணலாம்.

நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை அதிகாலையில் நோன்பு ஆரம்பிக்கும் முன் உட்கொள்வது, உடலை நீர்ச்சத்துடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹலீம்

தேவையானவை:

 • வெங்காயம் - 5

 • எலும்பில்லாத சிக்கன் அல்லது மட்டன் - அரை கிலோ

 • இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 • மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 • தயிர் - 100 கிராம்

 • எலுமிச்சை – ஒன்று (சாறு எடுக்கவும்)

 • கொத்தமல்லி, புதினா இலை – ஒரு பிடி

 • நறுக்கிய பச்சை மிளகாய் - 6

 • கரம் மசாலாத்தூள் – 3 டீஸ்பூன்

 • கிராம்பு - 5

 • ஏலக்காய் - 3

 • சீரகம் - அரை டீஸ்பூன்

 • பட்டை - 2

 • நெய் - 5 டீஸ்பூன்

 • சம்பா ரவை - 100 கிராம்

 • உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன்

 • மசூர்பருப்பு - 2 டீஸ்பூன்

 • பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன்

 • கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

 • பாஸ்மதி அரிசி -2 டீஸ்பூன்

 • பாதாம் – 5

 • முந்திரி - 15

 • எண்ணெயில் பொரித்த வெங்காயத் துண்டுகள் – சிறிதளவு

 • எண்ணெய் - தேவையான அளவு

 • உப்பு - தேவையான அளவு

ஹலீம்
ஹலீம்

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் சிக்கனை எடுத்து இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத் தூள், தயிர், எலுமிச்சைச்சாறு, நறுக்கிய பச்சை மிளகாய், ஒன்றரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், உப்பு, சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் 2 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் நெய்விட்டு சூடாக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் கிராம்பு, ஏலக்காய், சீரகம், பட்டை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் ஒரு மணிநேரம் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து வதக்கவும். பிறகு இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கிளறி குக்கரை மூடி இரண்டு விசில் வரும்வரை வேகவிட்டு பின்னர் அடுப்பை அணைக்கவும்.குக்கரில் ஆவி அடங்கியவுடன் மூடியைத் திறந்து வெந்த சிக்கன் கலவையில் இருக்கும் ஏலக்காய், கிராம்பு, பட்டை போன்ற மசாலாப் பொருள்களை வெளியே எடுத்து விடவும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில் உள்ள சிக்கனைக் கிளறவும்.

மற்றுமொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு சூடாக்கி அதில் உளுத்தம்பருப்பு, மசூர்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, பாஸ்மதி அரிசி, பாதாம் மற்றும் முந்திரியை ஒன்றாகச் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனை மிக்ஸியில் ரவை போலப் பொடித்துக்கொள்ளவும். சம்பா ரவையை நன்றாகக் களைந்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மிக்ஸியில் அரைத்துவைத்த இந்தப் பொடியையும் சேர்க்கவும். பிறகு இதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். குக்கரின் ஆவி அடங்கியவுடன் மூடியைத் திறந்து கலவையை நன்கு மசித்துக் கொள்ளவும். பின்னர் இக்கலவையுடன் வேகவைத்த சிக்கன் கலவையைச் சேர்க்கவும். பின்னர் இதில் ஒன்றரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், மீதமுள்ள நெய் மற்றும் சிறிதளவு பொரித்த வெங்காயம், புதினா, கொத்தமல்லி, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து குறைவான தீயில் கலவையைக் கைவிடாமல் நன்கு கிளறவும்.கலவை மிகவும் இறுக்கமாக இருந்தால் தேவையான அளவுக்கு வெந்நீர் சேர்த்தும் கிளறலாம். கடைசியாக கலவை கிரேவி பதத்துக்கு வந்ததும் கீழே இறக்கி எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பரிமாறவும்.

ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, அத்திப்பழம், அவகேடோ (பட்டர் ஃப்ரூட்) போன்ற பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

நெய் சாதம்

தேவையானவை:

 • நெய் - 4 டீஸ்பூன்

 • முந்திரி - 15 முதல் 20 பருப்புகள்

 • உலர் திராட்சை - 50 கிராம்

 • பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்)

 • பிரியாணி இலை - 2

 • பட்டை - 2

 • அன்னாசிப்பூ - ஒன்று

 • லவங்கம் - 4

 • ஏலக்காய் - 3

 • இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு

 • பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்)

 • பாஸ்மதி அரிசி – அரை கிலோ

 • கொத்தமல்லி – சிறிதளவு

 • உப்பு - தேவையான அளவு

நெய் சாதம்
நெய் சாதம்

செய்முறை:

அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து வாணலியைச் சூடாக்கவும். பின்னர் அதில் சிறிது நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதேபோல ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி அதை அதே நெய்யில் மொறுமொறுவென பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு நெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ, இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய் போன்றவற்றை வதக்கவும். பின்னர் அதில் நறுக்கிய மற்றொரு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்பு ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். அரிசி மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விடவும். (இரண்டு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்கிற அளவு சரியானது). பிறகு தேவையான உப்பைச் சேர்த்துக் கிளறிவிடவும். பின்பு குக்கரை மூடி இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். குக்கரைத் திறந்த பின்பு அதில் வறுத்த முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை மற்றும் பொன்னிறமாக வறுத்து வைத்திருக்கும் வெங்காயத்தைச் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளை மேலே தூவி அழகு செய்தால் சுவையும் மணமும் நிறைந்த நெய் சாதம் தயார்.

பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றுக்கோளாறுகளைத் தவிர்க்க உதவும்.

ரஸ்க் அல்வா

தேவையானவை:

 • ரஸ்க் – 20 துண்டுகள்

 • நெய் - 200 கிராம்

 • முந்திரிப்பருப்பு - 10

 • உலர் திராட்சை – 10

 • காய்ச்சிய பால் – ஒன்றரை கப்

 • சர்க்கரை – ஒரு சிறிய கப்

 • ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

ரஸ்க் அல்வா
ரஸ்க் அல்வா

செய்முறை:

ரஸ்க்கைச் சிறிது சிறிதாக உடைத்துக் கொள்ளவும். பின்பு இவற்றை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மிதமான தீயில் கடாயை வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் அதே கடாயில் ரஸ்க் பொடியைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதில் பாலைச் சேர்த்து ரஸ்க், பாலோடு கலந்து கெட்டியாகும்வரை கிளறவும். பின்னர் இதோடு சர்க்கரை சேர்த்து அது கரையும்வரை நன்கு கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் மீதமிருக்கும் நெய்யை ஒவ்வொரு ஸ்பூனாகச் சேர்த்துச் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் இந்தக் கலவை வாணலியில் ஒட்டாமல் திரண்டுவரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பின்னர் இதனுடன் வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சையைச் சேர்த்தால் சுவையான ரஸ்க் அல்வா தயார்.

குறிப்பு:

ரஸ்க்கைப் பொடித்த பிறகு அது கப்பில் எவ்வளவு அளவு இருக்கிறதோ அதற்கேற்ப பால் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒரு கப் பொடித்த ரஸ்க்குக்கு ஒன்றரை கப் பால் சேர்க்க வேண்டும்.

ஓட்ஸ், கோதுமை, பருப்பு வகைகள், ஆளி விதை போன்ற மெதுவாக செரிமானமாகும் உணவுகளை நோன்புக் காலத்தில் சேர்த்துக்கொள்வது நல்லது.

பாதாம் சர்பத்

தேவையானவை:

 • பாதாம்பருப்பு - 10 முதல் 15 வரை (குறைந்தது 5 மணி நேரம் ஊறவைக்கவும்)

 • பால் – ஒரு லிட்டர்

 • சோள மாவு - 2 டீஸ்பூன்

 • கிர்ணி விதைகள் - 2 டீஸ்பூன்

 • பால் பவுடர் – ஒரு டீஸ்பூன்

 • துண்டு துண்டாக நறுக்கிய பாதாம் பருப்பு - 5

 • சர்க்கரை – 5 டீஸ்பூன்

 • சர்பத் சிரப் - 4 டீஸ்பூன்

 • சப்ஜா விதைகள் - 2 டீஸ்பூன் (தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்)

 • ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

பாதாம் சர்பத்
பாதாம் சர்பத்

செய்முறை:

ஊறவைத்த பாதாமை தோல் நீக்கி விழுதாக அரைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி பின்பு அடுப்பை சிம்மில் வைத்து அரைத்த பாதாமை பாலுடன் சேர்த்துக் கிளறவும். பிறகு சோள மாவு, ஏலக்காய்த்தூள், கிர்ணி விதைகள், நறுக்கிய பாதாம் துண்டுகள், பால் பவுடர் மற்றும் சர்க்கரையையும் இதனுடன் ஒவ்வொன்றாகச் சேர்த்து 12 நிமிடங்கள் வரை நன்றாகக் கிளறவும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி கலவையை நன்றாக ஆறவிடவும். இப்போது அதில் சப்ஜா விதைகள் மற்றும் சர்பத் சிரப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். குளிர்ச்சியும் ஆரோக்கியமும் தரும் பாதாம் சர்பத் ரெடி. இதை அப்படியே பருகலாம் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றும் குடிக்கலாம்.

பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மக்னீசியம், சர்க்கரை போன்றவை அதிக அளவில் உள்ளன.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு