Published:Updated:

ரெஸ்டாரன்ட் ஸ்பெஷல் நான்-வெஜ்

தனுஜா தர்மேந்திரகுமார்

பிரீமியம் ஸ்டோரி

ரெஸ்டாரன்டுகளுக்குச் செல்லும்போதெல்லாம் நம்மில் பலரும் `நான்’ ஆர்டர் செய்வதுண்டு. காரணம்... வீட்டில் அதைச் செய்ய முடியாதது என்பதுதான். சப்பாத்தி மட்டுமே செய்யத் தெரியும் என்றிருந்தவர்கள்கூட, இப்போது வீட்டிலேயே பராத்தா வகைகள் செய்து அசத்துகிறார்கள். அடுத்தது `நான்’தானே? அதை அமர்க்களமாகச் செய்ய ஈஸி ரெசிப்பி அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் தனுஜா தர்மேந்திரகுமார்.

நான்-வெஜ்
நான்-வெஜ்
தனுஜா தர்மேந்திரகுமார்
தனுஜா தர்மேந்திரகுமார்

அது மட்டுமல்ல.. உணவகங்களில் மட்டுமே இதுவரை ருசி பார்த்த சிறப்பு உணவுகளான ஹனி கார்லிக் சிக்கன், தவா ஃபிஷ் ஃப்ரை, மொஹல் மட்டன் கிரேவி, ஷாஹி முட்டை கறி, கிரிஸ்பி இறால் வறுவல், மலாய் டங்ரி கபாப் ஆகியவற்றையும் சுவைபட அழகிய படங்களுடன் செய்து காட்டியிருக்கிறார் தனுஜா. போனஸாக குழந்தைகள் விரும்பும் சிக்கன் நக்கட்ஸ், சண்டே ஸ்பெஷல் அயிட்டமான ஹைதராபாத் தம் மட்டன் பிரியாணி ஆகியவையும் உண்டு.

புரட்டாசிதான் போய்விட்டதே... இனி அடி தூள்தான்!

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நான்

தேவையானவை:

  • மைதா மாவு - 3 கப் + 3 டீஸ்பூன்

  • உப்பு - கால் டீஸ்பூன்

  • சர்க்கரை - கால் டீஸ்பூன்

  • பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்

  • தயிர் - கால் கப்

  • எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்

  • வெதுவெதுப்பான நீர்  - கால் கப்

  • வெள்ளை எள் / கருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்

  • வெண்ணெய் - 2 டீஸ்பூன்

  • பச்சை மிளகாய் (நறுக்கியது) - ஒரு டீஸ்பூன்

  • கொத்தமல்லித்தழை (நறுக்கியது) - சிறிதளவு

  • கல் உப்பு - ஒரு டீஸ்பூன்

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நான்
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நான்

செய்முறை:

மூன்று கப் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கி ஒரு பாத்திரத்தில் தயிருடன்  சேர்த்துப் பிசையவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சேர்க்கவும். தேவைக்கேற்ப சிறிது சிறிதாக வெதுவெதுப்பான நீரை சேர்த்து ஒரு மென்மையான மாவாகப் பிசையவும். இந்த  மாவு சப்பாத்தி மாவு போல் இருக்க வேண்டும். ஆனால், கையில் ஒட்டக் கூடாது. மிச்சமிருக்கும் அரை டீஸ்பூன் எண்ணெயை இதன் மேல் பூசி ஒரு மூடி போட்டு பாத்திரத்தை மூடவும். மூன்று மணி நேரம் கழித்து இந்த சப்பாத்தி மாவை மூன்று டீஸ்பூன் மைதா மாவு சேர்த்து மறுபடியும் பிசையவும். இந்த மாவை நான்கு பாகங்களாக்கவும். கையில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து அதிகம் அதை  அழுத்தாமல் லேசாக ஒற்றைக் கையால் பிசையவும் பந்துபோல் உருட்டக் கூடாது.இதை 15 நிமிடங்கள் மூடி போட்டு வைக்கவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் வெண்ணெய், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கல் உப்பு, கருஞ்சீரகம்/வெள்ளை எள் சேர்த்துக் கலந்து வைக்கவும். பிடியுள்ள கனமான ஒரு இரும்பு சப்பாத்திக்கல்லைச் சூடாக்கவும். லேசாக சப்பாத்தி போல் மாவைத் திரட்டவும். அதைக் கல்லின் மீது போடுவதற்கு முன் தண்ணீர் தெளித்து பிறகு சப்பாத்தியைப் போடவும். சப்பாத்தியின் மேல் லேசாக ஆள்காட்டி விரலால் அழுத்தவும். இது புள்ளி புள்ளி போல் இருக்கும். ஆனால், லேசாக அழுத்தினால் போதும். ஒருபக்கம் வெந்ததும் மறுபக்கம் சப்பாத்தி கல்லையே திருப்பி தீயின் மேல் காட்டவும். பிரவுன் கலர் புள்ளிகள் வந்தபிறகு கல்லிலிருந்து எடுத்து, அதன் மீது வெண்ணெய்க் கலவையைத் தேய்க்கவும். சூடான தந்தூரி நான் தயார்.

கடல் நீர் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பைக் கொண்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹனி கார்லிக் சிக்கன்

தேவையானவை:

  • போன்லெஸ் சிக்கன் அல்லது சிக்கன் பிரெஸ்ட் - அரை கிலோ

  • இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

  • தேன் - 5 டேபிள்ஸ்பூன்

  • டொமேட்டோ கெட்சப் - 4 டேபிள்ஸ்பூன்

  • சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்

  • தண்ணீர் - 4 டேபிள்ஸ்பூன் 

  • சோயா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

  • மிளகாய்த்தூள் / மிளகாய் ஃபிளேக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்

  • தண்ணீர் - அரை கப் 

  • முட்டை - ஒன்று

  • பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்  

  • கான்ஃப்ளார் - அரை கப்

  • மைதா மாவு - முக்கால் கப்

  • மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

ஹனி கார்லிக் சிக்கன்
ஹனி கார்லிக் சிக்கன்

செய்முறை: சோயா சாஸ், மிளகாய்த்தூள் / மிளகாய் ஃபிளேக்ஸ், தேன், சர்க்கரை, 4 டேபிள்ஸ்பூன் தண்ணீர், டொமேட்டோ கெட்சப் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை அடித்து ஊற்றி,  கான்ஃப்ளார், மைதா மாவு, பேக்கிங் பவுடர், அரை கப் தண்ணீர் சேர்த்து, 10  நிமிடங்கள் ஊற வைக்கவும். இதனுடன் சிக்கன் துண்டுகள், மிளகுத்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து 10  நிமிடங்கள் ஊறவைக்கவும்.

ஒரு பானில் (pan) எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சிக்கன் கலவையைப் போட்டு லேசாக பொன்னிறமானதும் இதை ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும். ஐந்து நிமிடங்கள் கழித்து மறுபடியும் சிக்கனைப் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.  

ஒரு பானில் தேன் கலவையை ஊற்றவும். இந்த சாஸ் கெட்டியாகும் வரை  அல்லது ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். இதில் பொரித்தெடுத்த சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்கு கலக்கவும். வெள்ளை எள்ளைத் தூவிப்  பரிமாறவும்.

இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி என்ற பெயர் தோன்றியது.

தவா ஃபிஷ் ஃப்ரை

தேவையானவை:

  • வஞ்சரம் (Seer fish) - 3 அல்லது 4 துண்டுகள் (அல்லது வவ்வால் - pomfret)

  • மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டேபிள்ஸ்பூன்  

  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

  • மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

  • இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

  • கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்

  • கொத்தமல்லித்தழை -  2 டேபிள்ஸ்பூன்

  • எலுமிச்சைச்சாறு - தேவைக்கேற்ப

  • கரம் மசாலாத்தூள் (விருப்பப்பட்டால்) - சிறிதளவு

  • தண்ணீர் - சிறிதளவு

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தவா ஃபிஷ் ஃப்ரை
தவா ஃபிஷ் ஃப்ரை

செய்முறை:

மீன் துண்டுகள்மீது கத்தியால் கீறல் போடவும். எண்ணெய், கொத்தமல்லித்தழை தவிர மற்ற எல்லா பொருள்களையும் சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து பேஸ்ட் ஆக்கவும். மீன் துண்டுகளின் மேல் இருபுறமும் தடவவும்.

30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு தவாவில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மீன் துண்டுகளை இரண்டு புறமும் பொன்னிறமாகும்வரை, சிறிது பர்னிங் எஃபெக்ட் (burning effect) அதாவது கருக்கும் தன்மை வரும்வரை வைத்து எடுத்து, கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

பச்சை மிளகாயைவிடச் சிவப்பு மிளகாயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.

ஹைதராபாத் தம் மட்டன் பிரியாணி

தேவையானவை:

  • மட்டன் - ஒரு கிலோ

  • பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ (அரிசி பழையதாகவும் நீளமாகவும் இருக்க வேண்டும்)

  • பெரிய வெங்காயம் - 8  (நீளவாக்கில் நறுக்கவும்)

  • தக்காளி - 6 (பொடிப் பொடியாக நறுக்கவும்)

  • இஞ்சி விழுது - ஒன்றரை டேபிள்ஸ்பூன் +கால் டீஸ்பூன்

  • பூண்டு விழுது - ஒன்றரை டேபிள்ஸ்பூன் + கால் டீஸ்பூன்

  • பட்டை - 4  துண்டுகள்

  • வால் மிளகு - கால் டீஸ்பூன்

  • ஏலக்காய் - 3 அல்லது 4 (பச்சை மற்றும் கறுப்பு)

  • சோம்பு - ஒரு டீஸ்பூன்

  • கிராம்பு - ஒரு டீஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 10

  • பிரியாணி இலை - 4

  • கெட்டித் தயிர் - அரை கப்

  • எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்

  • குங்குமப்பூ - 2 சிட்டிகை

  • பால் - ஒரு டேபிள்ஸ்பூன்  

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

  • ஸ்பெஷல் கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • வறுத்த வெங்காயம் - ஒரு கப்  

  • புதினா - ஒரு கட்டு

  • கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு

  • நெய் - 6 டேபிள்ஸ்பூன்  

  • எண்ணெய் - அரை கப்

  • உப்பு - தேவையான அளவு

தம் போடுவதற்கு:

  • நெய் - அரை டீஸ்பூன்

  • அடுப்புக்கரி துண்டுகள் - தேவையான அளவு

  • பிசைந்த கோதுமை மாவு - சிறிதளவு

ஹைதராபாத் தம் மட்டன் பிரியாணி
ஹைதராபாத் தம் மட்டன் பிரியாணி

செய்முறை: மட்டனை நன்றாகக் கழுவி அத்துடன் உப்பு, தயிர், கால் டீஸ்பூன் இஞ்சி விழுது, கால் டீஸ்பூன் பூண்டு விழுது, சிறிதளவு புதினா இலை, கொத்தமல்லி இலை, சிறிதளவு வெங்காயம் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு குக்கரில் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து இதை நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

குங்குமப்பூவைப் பாலில் ஊறவைக்கவும். பாஸ்மதி அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

பிரியாணி செய்வதற்காக ஓர் அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். இதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். பட்டை, வால் மிளகு, சோம்பு, கிராம்பு, ஏலக்காய்,  பிரியாணி இலை தாளிக்கவும். நீளவாக்கில் நறுக்கிய  வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பொன்னிறமானதும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின்பு, அதில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் இஞ்சி விழுது, ஒன்றரை டேபிள்ஸ்பூன் பூண்டு விழுதைச் சேர்க்கவும் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்கு வதங்கியதும் கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், பச்சை மிளகாய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், ஸ்பெஷல் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.

வேகவைத்த மட்டன் துண்டுகளை இந்த மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.

ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் என்ற அளவுக்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். (மட்டன் வேகவைத்த  நீரையும் தண்ணீருக் குப் பதிலாகச் சேர்த்துக்கொள்ளலாம்) நன்கு கொதித்ததும் ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும். மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும் அவ்வப்போது லேசாக கிளறவும். முக்கால் பதத்துக்கு வெந்ததும் எலுமிச்சைச்சாற்றைச் சுற்றி ஊற்றவும். குங்குமப்பூவை ஒருபக்கமாக சேர்த்துக்கொள்ளவும். இது கலர் கொடுக்கும்.

ஒரு கிண்ணத்தில் கணகண என எரியும் கரித்துண்டுகளைப் போட்டு ஒரு டீஸ்பூன் நெய்யை அதன்மேல் விட்டு, முக்கால் வெந்த பாஸ்மதி அரிசியின் நடுவே வைத்து தட்டு போட்டு இறுக்க மூடிவிடவும். இதை `ஸ்மோக்கிங் டெக்னிக்’ என்று சொல்வார்கள். பிசைந்துவைத்திருக்கும் சப்பாத்தி மாவால் அந்தப் பாத்திரத்தை சீல் செய்துவிடவும்.

ஒரு தோசை தவாவை அடுப்பின் மேல் வைத்து அதன் மேல் இந்தப் பாத்திரத்தை வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை நிறுத்திவிடவும் பாத்திரத்தின் மேலும் எரியும் கரித்துண்டுகளைப் பரப்பிவிடவும். 15 நிமிடங்கள் கழித்து பாத்திரத்தை மெதுவாகத் திறந்து லேசாகக் கிளறி, வறுத்த வெங்காயம் தூவி சுடச்சுட பரிமாறவும்.

ஹைதராபாத் மட்டன் பிரியாணி தயார்.

குறிப்பு: ஸ்பெஷல் கரம் மசாலாத்தூள் செய்முறை அடுத்த பக்கத்தில் `மொஹல் மட்டன் கிரேவி’ ரெசிப்பியில் கொடுக்கப்பட்டுள்ளது

உலகின் டாப் வெங்காய உற்பத்தியாளர்கள்: சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பாகிஸ்தான்.

மொஹல் மட்டன் கிரேவி

தேவையானவை:

  • மட்டன் - அரை கிலோ

  • வெங்காயம் - 2

  • பச்சை மிளகாய் - 2

  • சிவப்பு மிளகாய் (காஷ்மீரி மிளகாய்) - 2

  • தயிர் - ஒரு கப்

  • இஞ்சி விழுது - அரை டேபிள்ஸ்பூன்

  • பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்

  • ஏலக்காய் (பச்சை மற்றும் கறுப்பு)  - 4

  • பிரியாணி இலை - 2

  • மராட்டி மொக்கு - ஒன்று

  • கிராம்பு - 4

  • பட்டை - 4 துண்டுகள்  

  • சோம்பு - அரை டீஸ்பூன்

  • சீரகம் - அரை டீஸ்பூன்

  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

  • கசகசா - 2 டீஸ்பூன்

  • நெய் - 2  டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

  • எண்ணெய் - கால் கப்

  • ஸ்பெஷல் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

மொஹல் மட்டன் கிரேவி
மொஹல் மட்டன் கிரேவி

செய்முறை: முதலில் ஒரு வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் காஷ்மீரி மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து அரைத்துக்கொள்ளவும். மட்டன் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள், தயிர், வெங்காய விழுதைச் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு குக்கரில் நெய்விட்டு அதில் நறுக்கிய ஒரு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் மட்டன் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும்..

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு, பிரியாணி இலை, சீரகம், கசகசா, மராட்டி மொக்கு  நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, இதில் வேகவைத்த மட்டனைச் சேர்த்து வதக்கவும் (நீர் சேர்க்காமல் வதக்க வேண்டும்). இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு ஸ்பெஷல் கரம் மசாலாவைச் சேர்த்து அத்துடன் தண்ணீரையும் சேர்த்து, தேவையான கிரேவி வரும் வரை வதக்கவும். புதினா வையோ, கொத்தமல்லியையோ அலங்கரிக்க பயன்படுத்தலாம்.

ஸ்பெஷல் கரம் மசாலாத்தூள் செய்முறை: சம அளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு. பிரியாணி இலை, காஷ்மீரி மிளகாய், சிவப்பு  மிளகாய், மல்லி, கசகசா, மிளகு, மராட்டி மொக்கு, ஜாதிபத்ரி, கால் டீஸ்பூன் ஜாதிக்காய்பொடி, மாசிக்காய் பொடியை வெறும் கடாயில் வறுத்து ஆறிய பிறகு பொடி செய்யவும்.

தயிரில் புரதம், கால்சியம், ரிபோஃப்ளவின், வைட்டமின் பி6 மற்றும் பி12 ஆகிய சத்துகள் உள்ளன.

ஷாஹி முட்டை கறி

தேவையானவை:

  • அவித்த முட்டைகள் - 4

  • நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்

  • பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

  • பச்சை மிளகாய் - ஒன்று

  • நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

  • ஃப்ரெஷ் கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • கஸூரி மேத்தி - ஒரு டீஸ்பூன்  

  • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்  

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

  • கொத்தமல்லி - சிறிதளவு

  • புராசஸ்டு சீஸ் (processed cheese) - 2 கியூப்

  • உப்பு - தேவைக்கேற்ப

ஷாஹி முட்டை கறி
ஷாஹி முட்டை கறி

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் இந்த விழுதை நன்கு வதக்கவும். தயிரை நன்றாக அடித்து பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும். சிறிது நேரம் வதக்கிய பிறகு இதனுடன் கஸூரி மேத்தி, கரம் மசாலாத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

கால் கப் தண்ணீர் சேர்த்து இந்தக் கலவையை நன்கு கொதிக்கவிடவும். பத்து நிமிடங்கள் கொதித்த பிறகு, அவித்த முட்டைகளை வெட்டி இந்தக் கலவையில் சேர்க்கவும். இதனுடன் சாட் மசாலாத்தூள் சேர்த்து, கொத்தமல்லி இலையும் சேர்த்து நன்கு கிளறவும். ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றி அலங்கரிக்கவும். சீஸைத் துருவி சேர்க்கவும். ஷாஹி முட்டை கறி தயார்.

முட்டையில் ஏ முதல் ஈ வரை ஐந்து வைட்டமின்களும் அடங்கியுள்ளன.

சிக்கன் நக்கட்ஸ்

தேவையானவை:

  • சிக்கன் பிரெஸ்ட் - 250 கிராம்

  • கான்ஃப்ளார் - கால் கப்

  • மைதா - அரை கப்

  • மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

  • முட்டை - ஒன்று

  • பிரெட் தூள் (bread crumbs) - அரை கப்  

  • சீஸ் - கால் கப்

  • மோர் - கால் கப் (அல்லது வினிகர்) - 2 டீஸ்பூன்

  • எண்ணெய், உப்பு -  தேவையான அளவு

சிக்கன் நக்கட்ஸ்
சிக்கன் நக்கட்ஸ்

செய்முறை:

சிக்கன் பிரெஸ்ட்டை வினிகர் அல்லது மோர் சேர்த்து நேரம் அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஊறவைத்த சிக்கன் பிரெஸ்ட்டில் உள்ள தண்ணீரைப் பிழிந்துவிடவும். பிறகு மிக்ஸியில் போட்டு கீமா செய்துகொள்ளவும். அத்துடன் உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீஸ், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசையவும். 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். கார்ன்ஃப்ளார் சிறிதளவு சேர்த்து கட்லெட் போல் ஷேப் செய்யவும். முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளவும். ஒரு தட்டில் பிரெட் தூளைப் பரப்பி வைக்கவும். மைதா - கார்ன்ஃப்ளார் கலவையை  ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.

முதலில் மைதா - கார்ன்ஃப்ளார் கலவையில் கட்லெட்டைப் புரட்டி எடுக்கவும். பிறகு முட்டைக் கலவையில் கட்லெட்டைப் புரட்டி எடுக்கவும். பின்னர்  பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். பத்து நிமிடங்கள் இதை அப்படியே வைக்கவும். எண்ணெயைச் சூடாக்கவும். கட்லெட்டுகளைப் பொரித்தெடுக்கவும். சூடான, சுவையான சிக்கன் நக்கட்ஸ் ரெடி.

பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப மிளகை கருமிளகு, வெண்மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகையாகப் பிரிக்கலாம்.

கிரிஸ்பி இறால் வறுவல்

தேவையானவை:

  • இறால் (மீடியம் சைஸ் அல்லது

  • ஜம்போ சைஸ்) - அரை கிலோ

  • இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

  • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு

  • அரிசி மாவு அல்லது கான்ஃப்ளார் - 2 டீஸ்பூன

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கிரிஸ்பி இறால் வறுவல்
கிரிஸ்பி இறால் வறுவல்

செய்முறை:

இஞ்சி - பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு, அரிசி மாவு அல்லது கான்ஃப்ளார் ஆகியவற்றை ஒன்று சேர்த்துக் கலக்கவும். இதில் இறாலைப் புரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு பானில் (pan) எண்ணெயைச் சூடாக்கி இறாலை மிதமான சூட்டில் வறுத்தெடுக்கவும் . கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.

மூலிகையாகக் கருதப்படும் மஞ்சள் ஒரு பூண்டு வகைச் செடியே.

மலாய் டங்ரி கபாப்

தேவையானவை:

  • சிக்கன் லெக்பீஸ் - 4

  • துணியில் வடிகட்டிய தயிர் (Hung curd) - 100 கிராம்

  • ஃப்ரெஷ் க்ரீம் - 5 டேபிள்ஸ்பூன்

  • இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

  • நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

  • வெள்ளை மிளகுத்தூள் -  2 டீஸ்பூன்

  • எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்

  • கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • முட்டை - ஒன்று

  • வெண்ணெய் - சிறிதளவு

  • உப்பு - தேவைக்கேற்ப

மலாய் டங்ரி கபாப்
மலாய் டங்ரி கபாப்

செய்முறை: லெக் பீஸில் கத்தியால் கீறல் போடவும். அத்துடன் எலுமிச்சைச் சாறு, உப்பு இரண்டையும் சேர்த்துப் புரட்டி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு கிண்ணத்தில் வடிகட்டிய தயிர், ஃப்ரெஷ் க்ரீம், கார்ன்ஃப்ளார், வெள்ளை மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதில் சிக்கன் லெக்பீஸை 30 நிமிடங்கள் மறுபடியும் ஊறவைக்கவும். இந்தக் கலவையை ஃப்ரிட்ஜில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வைக்கவும். பின்பு அரை மணி நேரம் வெளியில் வைக்கவும்.

இதை ஒரு அவனில் (oven) 15 நிமிடங்கள் 180 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும்.

`அவன்’ இல்லாதவர்கள் காஸ் அடுப்பின் மீது ஒரு தவாவை வைத்து சிறிதளவு வெண்ணெயைத் தடவி இந்த சிக்கனை ஐந்து நிமிடங்கள் மூடி போட்டு வேகவிட்டு, பின்னர் பத்து நிமிடங்கள் என இரண்டு புறமும் நன்கு தவாவின் மேல் வேகவிடவும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு வயர் ரேக்கின் (புல்கா செய்யும் ஸ்டீல் வயர் கம்பி தவா) மீது வைத்து ஐந்து நிமிடங்கள் இருபுறமும் தீயின் மேல் காட்டவும். இது ஒரு தந்தூரி  பர்னிங் தன்மையைக் கொடுக்கும். இதன் மேல் வெண்ணெயைத் தடவவும். இதைப் புதினாச் சட்னி, தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.

இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழைமையானவை எனக் கருதப்படுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு