பிரீமியம் ஸ்டோரி

ட்சத்திர ஹோட்டல்களில் பன்னாட்டு உணவுகளை ருசித்திருந்தாலும்கூட, நம் கிராமிய உணவுகளின் சுவையே நம்மில் பலரையும் ஈர்க்கும். அதனால்தான் நட்சத்திர ஹோட்டல்களிலும்கூட இப்போது கிராமிய உணவுத் திருவிழாக்கள் மிகுந்த வரவேற்புடன் நடத்தப்படுகின்றன.

கிராமத்து விருந்து
கிராமத்து விருந்து
 சரஸ்வதி அசோகன்
சரஸ்வதி அசோகன்

கிராமிய உணவுகளில் இடம்பெறும் ஒவ்வோர் உணவுக்கும் ஒரு கதை உண்டு; தனிச்சுவை உண்டு; அந்த மண்ணுக்கே உரிய மகத்துவமும் அதில் உண்டு. அத்தகைய அருமையான உணவுகளில் குறிப்பிடத் தக்கவற்றைத் தேர்ந்தெடுத்து, அசலான கிராமத்து விருந்து படைக்கிறார், Sarasus Samayal யூடியூப் சேனல் சமையற்கலைஞரான கரூரைச் சேர்ந்த சரஸ்வதி அசோகன்.

கிராமிய மணம் அப்பார்ட்மென்ட்களிலும் பரவட்டும்!

சௌசௌ கடலைக்கூட்டு

தேவையானவை:

 • சௌசௌ (பெங்களூரு கத்திரிக்காய்) - ஒன்று (சதுர வடிவில் நறுக்கவும்)

 • வறுத்த வேர்க்கடலை - 100 கிராம் (தோல் நீக்கவும்)

 • சின்ன வெங்காயம் - 10 (நறுக்கவும்)

 • தக்காளி - ஒன்று (நறுக்கவும்)

 • சாம்பார் பொடி - சிறிதளவு

 • கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

வறுத்து அரைக்க:

 • மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • மிளகு - 5

 • காய்ந்த மிளகாய் - 2

சௌசௌ கடலைக்கூட்டு
சௌசௌ கடலைக்கூட்டு

செய்முறை:

வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண் டாக உடைத்துவைக்கவும். வறுக்கக்கொடுத்த பொருள்களை வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய சௌசௌ சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு சாம்பார் பொடி, மஞ்சள்தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்துப் புரட்டி தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். காய் நன்கு வெந்து, நல்ல கிரேவி பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: வேகவைக்கும்போது மூடி போட்டு அடுப்பைக் குறைத்து வேகவிடவும். குக்கரில் வைத்தால் ஒரு விசில்விட்டு இறக்கி சுண்ட வைக்கவும்.

செளசெள விதைத்த 5 - 6 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். காய்களை 2 - 4 வாரங்கள் வரை சாதாரண வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

களி - கடலைச் சட்னி

தேவையானவை - களி செய்ய:

 • கேழ்வரகு மாவு - ஒரு கப்

 • தண்ணீர் - தேவைக்கேற்ப

கடலைச் சட்னிக்கு:

 • வறுத்த வேர்க்கடலை - 200 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 5

 • புளி, வெல்லம் - சிறிதளவு

 • உப்பு - தேவைக்கேற்ப

களி - கடலைச் சட்னி
களி - கடலைச் சட்னி

செய்முறை:

ஒரு கப் மாவுக்கு ஒரு கப் தண்ணீர்விட்டு மாவைக் கெட்டியாகக் கரைத்துவைக்கவும். பிறகு அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் மாவுக்கு மூன்று கப் தண்ணீர் வைத்துக் கொதிக்கவிடவும். பின் அடுப்பைக் குறைத்து கரைத்த கேழ்வரகு மாவுக் கலவையைச் சிறிது சிறிதாக சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். கையில் தண்ணீரை நனைத்துக்கொண்டு தொட்டுப்பார்த்தால் கையில் களி ஒட்டாமல் வரும்போது அடுப்பைக் குறைத்து, ஒரு மூடியைப் போட்டு ஐந்து நிமிடங்களுக்குப் பின் இறக்கவும் (குக்கரிலும் செய்யலாம்).

வறுத்த வேர்க்கடலையைத் தோல் எடுத்து, காய்ந்த மிளகாய், புளி, வெல்லம், உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர்விட்டு ஊற்றி அரைத்து எடுத்து, கொழகொழப்பாகக் கரைக்கவும். களியுடன் தொட்டுச் சாப்பிட சுவையோ சுவை!

குறிப்பு: சட்னியில் உப்பு இருப்பதால் களிக்கு உப்பு தேவையில்லை.

குடலுக்கு வலிமை அளிக்கும் தன்மை கேழ்வரகுக்கு உண்டு.

எள்ளு சாதம்

தேவையானவை:

 • சாதம் - ஒரு கப் (200 கிராம் அரிசி அளவு)

 • கறுப்பு எள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன்

 • சீரகம் - அரை டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - சிறிதளவு

 • கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

எள்ளு சாதம்
எள்ளு சாதம்

செய்முறை:

சாதத்தை உதிர் உதிராக வடித்தெடுத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு ஆறவிடவும். பிறகு ஒரு வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து எள் சேர்த்து வெடித்ததும் இறக்கி ஆறவைத்துப் பொடித்துக்கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும் காய்ந்த மிளகாயை (தேவைக்கேற்ப) கிள்ளிப்போடவும். இதனுடன் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து உதிராக வைத்துள்ள சாதத்தையும் போட்டு, தீயைக் குறைத்துவைத்து, அரைத்துவைத்துள்ள எள்ளுப்பொடி சேர்த்துக் கலந்து, சாதம் நன்கு சூடேறியதும் இறக்கிப் பரிமாறவும்.

மருத்துவ மூலிகையான எள், இந்தியா முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது.

கொள்ளு சாதம்

தேவையானவை:

 • பொன்னி அரிசி - 200 கிராம்

 • கொள்ளு - 50 கிராம்

 • கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • கறிவேப்பிலை - சிறிதளவு

 • நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

அரைக்க:

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • மிளகு - அரை டீஸ்பூன்

 • சின்ன வெங்காயம் - 6 (தோலுரிக்கவும்)

 • கறிவேப்பிலை - சிறிதளவு

 • பச்சை மிளகாய் - 2

 • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 • பூண்டு - 6 பல்

கொள்ளு சாதம்
கொள்ளு சாதம்

செய்முறை:

கொள்ளுவை அரை மணி நேரம் ஊறவைத்து குக்கரில் சேர்த்து இரண்டு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். அரிசியை 15 நிமிடங்கள் ஊறவிட்டுக் களையவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும். பிறகு குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த பொருள்களையும் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய கலவையில் மஞ்சள்தூள், உப்பு, வேகவைத்த கொள்ளு சேர்க்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றும்போது கொள்ளு வேக வைத்த தண்ணீரையும் அளந்து ஊற்றிக் கொதி வரும்போது அரிசியைச் சேர்க்கவும். குக்கரை மூடி வேகவிட்டு இறக்கவும். கமகம கொள்ளு சாதம் ரெடி.

குறிப்பு: ஒரு பங்கு அரிசிக்கு மூன்று பங்கு தண்ணீர் விடலாம். விருப்பப்பட்டால் இறக்கியவுடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துப் புரட்டலாம்.

கொள்ளு தென்தமிழகத்தில் `காணம்’ என்றழைக்கப் படுகிறது. ‘முதிரை’ என்ற பெயரும் இதற்கு உண்டு.

சுரைக்காய் தோசை

தேவையானவை:

 • சுரைக்காய் - ஒரு கப் (நறுக்கியது)

 • பச்சரிசி, புழுங்கலரிசி - தலா 100 கிராம்

 • துவரம்பருப்பு - 50 கிராம்

 • சீரகம், சோம்பு - தலா அரை டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

கலக்க:

 • பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு

 • மஞ்சள்தூள் - 2 சிட்டிகை

சுரைக்காய் தோசை
சுரைக்காய் தோசை

செய்முறை:

பச்சரிசி, புழுங்கலரிசி, துவரம்பருப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவிட்டுக் களைந்து சுரைக்காய், சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு சற்றே கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த கலவையில் கலக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துக் கலக்கி அடை மாவு பதத்துக்குக் கரைக்கவும். மாவை தோசைக்கல்லில் தோசைகளாக ஊற்றி எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும்

குறிப்பு: மாவை மெல்லிதாக ஊற்றாமல் சற்று கனமாக ஊற்றி எடுக்கவும்.

உலகில் மனிதனால் முதன்முதலில் பயரிடப்பட்ட தாவரங்களில் சுரைக்காயும் ஒன்று.

மிளகுக் குழம்பு

தேவையானவை - அரைக்க:

 • மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்

 • சீரகம் - அரை டீஸ்பூன்

 • துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - 2

 • பெருங்காயம் - சிறிதளவு

 • கறிவேப்பிலை - 4 டீஸ்பூன்

குழம்புக்கு:

 • புளி - எலுமிச்சை அளவு

 • கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • பூண்டு - 10 பல்

 • வெல்லம் - சிறிதளவு

 • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 • நல்லெண்ணெய் - தேவையான அளவு

 • உப்பு - தேவைக்கேற்ப

மிளகுக் குழம்பு
மிளகுக் குழம்பு

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை இளம் சிவப்பாக வறுத்து இறுதியில் மிளகு சேர்த்து அடுப்பை அணைத்து ஆறவைத்துப் பொடி செய்துகொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு பூண்டு சேர்த்து நன்கு வதக்கி பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து புளியைக் கரைத்து ஊற்றவும். இதனுடன் அரைத்துவைத்துள்ள மிளகுக் கலவைப் பொடி, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கிரேவி பதம் வந்ததும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு, இறுதியாக வெல்லம் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: சாதத்துக்கு மிகவும் ருசியாக இருக்கும். காரத்துக்கேற்ப தேவையான அளவு மிளகு சேர்க்கலாம்.

பூத்து, காய்த்து, படர்ந்து வளரும் கொடி வகையைச் சேர்ந்த தாவரமே மிளகு.

கிராமிய இனிப்பு உருண்டை

தேவையானவை:

 • பொட்டுக்கடலை - அரை கிலோ

 • பொடித்த வெல்லம் - கால் கிலோ

 • தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

 • கறுப்பு எள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

 • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

கிராமிய இனிப்பு உருண்டை
கிராமிய இனிப்பு உருண்டை

செய்முறை:

பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சலித்து எடுத்து வைக்கவும். வெல்லத்தை வெந்நீரில் போட்டு கொதிக்கவிட்டு (வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர்விடவும்) வடித்து, அடிகனமான பாத்திரத்தில் ஊற்றிக் கம்பிப்பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி தேங்காய்த் துருவல், எள்ளைத் தனித்தனியே வறுத்து மாவில் சேர்த்து ஏலக்காய்த்தூளும் சேர்க்கவும். இதில் வெல்லப் பாகை சிறிது சிறிதாக ஊற்றிக் கரண்டிக் காம்பால் புரட்டி, பின்னர் கையில் நன்கு பிசைந்து மீதமுள்ள நெய் ஊற்றி உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

குறிப்பு: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். தேங்காய்த் துருவலைத் தவிர்க்க நினைப்பவர்கள் போடாமலும் செய்யலாம். 20 நாள்கள் வரை கெடாது.

பொட்டுக் கடலையில் புரதமும் வைட்டமின் சத்துகளும் நிறைந்துள்ளன.

ராகி பணியாரம்

தேவையானவை:

 • ராகி மாவு (கேழ்வரகு மாவு) - 200 கிராம்

 • உளுந்து - 50 கிராம்

 • வெந்தயம் - அரை டீஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

ராகி பணியாரம்
ராகி பணியாரம்

செய்முறை:

உளுந்து, வெந்தயத்தைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, தேவையான உப்பு சேர்த்து அரைத்த உளுந்து மாவைக் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்கவிடவும். மாவைப் பணியாரங்களாக ஊற்றி எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் திருப்பிவிட்டு எடுக்கவும். தேங்காய்ச் சட்னி, காரச் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பு: இதே மாவைத் தோசையாகவும் ஊற்றலாம். விருப்பப்பட்டால் தாளித்துக்கொட்டி வெங்காயம் சேர்த்தும் தோசை, பணியாரம் செய்யலாம்.

கேழ்வரகில் உள்ள இரும்புச்சத்து ரத்தச் சோகையைக் குணப்படுத்த உதவும்.

பாசிப்பருப்புத் துவையல்

தேவையானவை:

 • பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு

 • பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப

 • தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

 • கறிவேப்பிலை - சிறிதளவு

 • சின்ன வெங்காயம் - 4 (தோலுரிக்கவும்)

 • பூண்டு - 2 பல்

 • உப்பு - தேவைக்கேற்ப

பாசிப்பருப்புத் துவையல்
பாசிப்பருப்புத் துவையல்

செய்முறை:

பாசிப்பருப்பை இளம் சிவப்பாக வறுத்து அத்துடன் மேற்கூறிய பொருள்கள் அனைத்தும் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். இதை இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம். விருப்பப்பட்டால் தாளிக்கலாம்.

குறிப்பு: இந்தச் சட்னியை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவதாக இருந்தால், பச்சை மிளகாய்க்குப் பதில் காய்ந்த மிளகாயுடன் சிறிதளவு புளி சேர்த்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டி யாக அரைத்தெடுத்துக் கொள்ளலாம்.

புரதச்சத்து, வைட்டமின்கள், கால்சியம், நார்ச்சத்து ஆகியவை பாசிப்பருப்பில் நிரம்பியுள்ளன.

கொள்ளு அடை

தேவையானவை - அரைக்க:

 • கொள்ளு - 100 கிராம்

 • பச்சரிசி - 100 கிராம்

 • துவரம்பருப்பு - 100 கிராம்

 • பாசிப்பருப்பு - 50 கிராம்

 • சோம்பு - சிறிதளவு

 • காய்ந்த மிளகாய் - தேவைக்கேற்ப

 • உப்பு - தேவையான அளவு

கலக்க:

 • பெரிய வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கப்

 • கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

 • தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்பிள்ஸ்பூன்

கொள்ளு அடை
கொள்ளு அடை

செய்முறை:

கொள்ளு, பச்சரிசி, துவரம்பருப்பு, பாசிப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். அரைத்துவைத்த மாவில் கலக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து அடை மாவு பதத்துக்குக் கலக்கவும். தோசைக் கல்லில் மாவை ஊற்றி, எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் கொள்ளு மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது.

கீரை பருப்பு சாதம்

தேவையானவை:

 • அரிசி - 400 கிராம்

 • பாசிப்பருப்பு - 100 கிராம்

 • மணத்தக்காளிக்கீரை - ஒரு கப்

 • பெரிய வெங்காயம் - ஒன்று

 • தக்காளி - 2

 • பச்சை மிளகாய் - 2 (நடுவில் கீறியது)

 • சாம்பார் பொடி - தேவைக்கேற்ப

 • கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • நெய் - ஒரு டீஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

 • அரைக்க (ஒன்றிரண்டாக):

 • சீரகம் - 2 டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - சிறிதளவு

 • பூண்டு - 7 பல்

கீரை பருப்பு சாதம்
கீரை பருப்பு சாதம்

செய்முறை:

அரிசி, பருப்பை 15 நிமி டங்கள் ஊறவிடவும். கீரையை நறுக்கிவைக்கவும். ஒரு குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து, வதங்கும்போதே ஒன்றிரண்டாக அரைத்த கலவையைச் சேர்க்கவும். பிறகு சாம்பார் பொடி, கீரை, மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றி, அரிசி பருப்பு இரண்டையும் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து நெய் சேர்த்துப் புரட்டிப் பரிமாறவும்.

குறிப்பு: அகத்திக்கீரை, புளிச்சகீரை தவிர்த்து எல்லாக் கீரையிலும் செய்யலாம். லஞ்ச் பாக்ஸுக்கு ஏற்ற ரெசிப்பி.

தொண்டை பிரச்னைகளுக்கு மணத்தக் காளிக்கீரை நல்ல நிவாரணம் அளிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு