Published:Updated:

1 கோடி சப்ஸ்க்ரைபர்கள், டைமண்ட் பட்டன், ரூ.10 லட்சம் நிவாரண நிதி... அசத்தும் வில்லேஜ் குக்கிங் குழு!

வில்லேஜ் குக்கிங் குழு
வில்லேஜ் குக்கிங் குழு ( DIXITH )

வில்லேஜ் குக்கிங் சேனல் தற்போது 1 கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கடந்துள்ளதால், யூடியூப் நிறுவனம் டைமண்ட் பட்டன் கொடுத்து கௌரவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியிலிருக்கிறது சின்னவீரமங்கலம் என்ற குக்கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கடந்த 2018ல் வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்தனர். இதற்காக புதுக்கோட்டையைச் சுற்றிலும் உள்ள அழகான கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அந்த இடங்களுக்குச் சென்று சமையல் செய்து அதனை வீடியோவாக எடுத்துத் தொடர்ந்து பதிவிட்டனர். வயல் நண்டு, ஈசல் வறுவல் என மண்மணம் மாறாத கிராமத்துச் உணவுகளைச் சமைத்து பார்ப்பவர்களை கவர்ந்து இழுத்தனர். சமையலோடு சேர்த்து அந்த இளைஞர்களின் வெகுளித்தனமான பேச்சும் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்க சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயரத் துவங்கியது.

வில்லேஜ் குக்கிங் சேனல் தற்போது 1 கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கடந்துள்ளதால், யூடியூப் நிறுவனம் டைமண்ட் பட்டன் கொடுத்து கௌரவித்துள்ளது.
வில்லேஜ் குக்கிங்
வில்லேஜ் குக்கிங்

இப்போது லேட்டஸ்ட் சாதனையாக, சேனல் துவங்கப்பட்ட 3 ஆண்டுகளில் 1கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கடந்த முதல் தமிழ் யூடியூப் சேனல் என்கிற பெருமையையும் பெற்றிருக்கின்றனர். இதைக் கொண்டாடி அவர்கள் வெளியிட்ட யூடியூப் வீடியோவும் இன்ஸ்டன்ட் ஹிட். அதோடு, தங்களுக்கு யூடியூப் மூலம் கிடைத்த வருமானத்தில் ரூ.10லட்சத்தை கொரோனா நிவராண நிதிக்காக கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்திருக்கின்றனர்.

வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவினரிடம் பேசினோம், "எங்க குழுவுல மொத்தம் 6 பேரு. நாங்க 6 பேருமே சொந்தக்காரங்க. சேனல் ஆரம்பிச்சப்போ எதிர்பார்த்த அளவுக்கு பார்வையாளர்கள் வரல. எட்டு மாசம், 20-க்கும் மேற்பட்ட வீடியோக்கள். ஆனாலும் எதிர்பார்த்த வியூஸ் வரல. கையில் இருந்த காசு எல்லாம் செலவாகிருச்சு. எப்படி அடுத்தக்கட்டத்துக்கு சேனலை கொண்டுப் போகப்போகிறோம்கிற கவலை இருந்துச்சு. அதே நேரத்தில் முயற்சியை மட்டும் கைவிடலை.

வில்லேஜ் குக்கிங் சேனல் டீம்
வில்லேஜ் குக்கிங் சேனல் டீம்

அதுவரைக்கும் அடுப்படிக்குள் முடங்கி சமையல் செஞ்சிக்கிட்டு இருந்த நாங்க, இயற்கையைத் தேடி வெளியே போக ஆரம்பிச்சோம். போகிற போக்கில் வயல் நண்டு, குளத்து மீன் சமையல் என நம் கிராமத்து உணவுகளை சமைக்க ஆரம்பிச்சோம். அதோடு, கிராமத்தின் அழகிய வயல்வெளிகள், நீரோடை, வண்டுகளின் ரீங்காரத்தையும் காட்சிப்படுத்தினோம். அதன் பிறகு ஒவ்வொரு வீடியோக்களும் ஹிட் அடிக்க ஆரம்பிச்சது. கிடு,கிடுன்னு பார்வையாளர்கள் கூட ஆரம்பிச்சாங்க. 1லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் வந்திட்டாங்க. அப்போ யூடியூப் வெண்கல பட்டன் அனுப்பி வச்சாங்க. அது ரொம்ப ஊக்கமா இருந்துச்சு.

அதற்கப்புறம், பார்வையாளர்கள் கூடக் கூட எங்களுக்கு லட்சங்களில் வருமானம் வர ஆரம்பிச்சது. எங்களைப் பொறுத்தவரை உழைப்புக்கு மீறிய வருமானமாகத் தான் பார்த்தோம். அந்த வருமானத்தில் ஒரு பகுதியை ஆதரவற்றோர்களுக்கு கொடுக்க நினைத்தோம். வருமானம் இல்லாத வரைக்கும் குறைவாக சமைத்து நாங்களே சாப்பிட்டோம். அதற்கப்புறம் பெருசா சமச்சு, அந்தச் சாப்பாட்டை ஆதரவற்றோர் இல்லங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சோம். அதோட அவங்களுக்குத் தேவையானது உதவிகளையும் செய்தோம்.அடுத்தடுத்து வீடியோக்கள் ஹிட் அடிக்க சில மாதங்களில் 10லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் வந்தனர். யூடியூப்ல கோல்ட் பட்டன் கொடுத்தனர்.

வில்லேஜ் குக்கிங் டீம் ராகுல் காந்தியுடன்
வில்லேஜ் குக்கிங் டீம் ராகுல் காந்தியுடன்

இதற்கிடையில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திடீர்னு எங்களை எங்க இடத்துக்கே வந்து சந்திச்சாரு. உலகம் முழுவதும் நாங்க பிரபலம். ஆனா, எங்க ஊர்க்காரங்களுக்கு நாங்க என்ன செய்யுறோம்னே தெரியாது. வேலை வெட்டி இல்லாம கூட்டாஞ்சோறு ஆக்கி சமைச்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறாங்கன்னு தான் நினைச்சிக்கிட்டு இருந்தாங்க. ஆனா, ராகுல்காந்தி அண்ணன் சந்திப்புக்கு அப்புறம் எல்லாமே மாறியிடுச்சு. அவரு எங்களோட சேர்ந்து சாப்பிட்ட விஷயத்தை நியூஸ் சேனல்கள் டிவியில போட, அப்ப தான் எங்கள பத்தி ஊர்க்காரங்களுக்கு தெரிய வந்துச்சு. இந்திரா காந்தி அம்மாவோட பேரனுக்கே சமச்சிப் போட்ட பயலுவன்னு ஊரே தூக்கி வச்சி எங்களைக் கொண்டாடுறாங்க.

உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்காங்க. 1கோடி பேரை சப்ஸ்க்ரைபர்களாக பெற்ற முதல் தமிழ் யூடியூப் சேனல்னு எல்லாரும் எங்களைப் பாராட்டுறாங்க. மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எல்லாத்துக்கும் காரணம் எங்களோட பார்வையாளர்கள் தான். அவங்களோட அன்பால தான் எங்களுக்கு யூடியூப்போட டைமண்ட் பட்டன் கிடைச்சிருக்கு. எங்களுக்கு இந்த வருமானம், அங்கீகாரம் கிடைக்க செய்தது நம் மக்கள் தான். மக்கள் இந்த கொரோனா காலகட்டத்தில் ரொம்பவே சிரமப்படுறாங்க.

வில்லேஜ் குக்கிங் குழு - கொரோனா நிதி
வில்லேஜ் குக்கிங் குழு - கொரோனா நிதி

யூடியூப் வருமானத்துல கிடைத்த ரூ.10 லட்சத்தை மக்களுக்கு கொடுக்கணும்னு நெனச்சோம். அதுபடியே கொரோனா நிவாரண நிதிக்கு முதலமைச்சர்கிட்ட கொடுத்தோம். உழைக்காம சம்பாதிக்க எத்தனையோ அழைப்புகள் வந்துச்சு, அது எதையும் நாங்க எதிர்பார்க்கலை. இதுவரைக்கும் வருமானத்துக்குன்னு சொல்லி எதையும், செயற்கையாக மாத்தலை. இனியும் அதை மாத்த மாட்டோம். தொடர்ந்து இந்தப் பாதையில பயணிக்கணும்" என்கிறார்கள் குரலில் மகிழ்ச்சி பொங்க.

அடுத்த கட்டுரைக்கு