Published:Updated:

நாரத்தை தீயல் I கடாரங்காய் ஊறுகாய் I சாத்துக்குடி ரசம் - வீக்எண்ட் ரெசிப்பீஸ்

vitamin c foods

கோடை கொளுத்தத் தொடங்கியிருக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலுக்கு உதவும் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள்தான் அவசியம். எலுமிச்சை, சாத்துக்குடி, நார்த்தங்காய், கடாரங்காய் என வைட்டமின் சி சத்து நிறைந்த காய், கனி சமையல் இந்த வார வீக் எண்டுக்கு.

நாரத்தை தீயல் I கடாரங்காய் ஊறுகாய் I சாத்துக்குடி ரசம் - வீக்எண்ட் ரெசிப்பீஸ்

கோடை கொளுத்தத் தொடங்கியிருக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலுக்கு உதவும் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள்தான் அவசியம். எலுமிச்சை, சாத்துக்குடி, நார்த்தங்காய், கடாரங்காய் என வைட்டமின் சி சத்து நிறைந்த காய், கனி சமையல் இந்த வார வீக் எண்டுக்கு.

Published:Updated:
vitamin c foods

கொரோனா பயத்திலிருந்து கொஞ்சம் மீள ஆரம்பிக்கிற நிலையில் கோடை கொளுத்தத் தொடங்கியிருக்கிறது. அம்மை தொடங்கி, ஹீட் ஸ்ட்ரோக் வரை கோடையால் வரும் பிரச்னைகளையும் எதிர்கொண்டாக வேண்டும். என்னதான் செய்வது?

பழங்கள் காய்கறிகளில் நிறைந்து ஆரோக்கியம் காக்கும் விட்டமின் C...!
பழங்கள் காய்கறிகளில் நிறைந்து ஆரோக்கியம் காக்கும் விட்டமின் C...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நோய் எதிர்ப்பாற்றலுக்கு உதவும் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள்தான் தீர்வு. எலுமிச்சை, சாத்துக்குடி, நார்த்தங்காய், கடாரங்காய் என வைட்டமின் சி சத்து நிறைந்த காய், கனி சமைத்து இந்த வார வீக் எண்டுக்கு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாரத்தை தீயல்

தேவையானவை:
* நாரத்தங்காய் அல்லது பழம் - ஒரு கப் (விதை நீக்கி துண்டுகளாக நறுக்கியது)
* சிறிய மாங்காய் - ஒன்று
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கவும்)
* மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4 (இரண்டாகக் கீறவும்)
* மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
* மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் - தலா அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிதளவு
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கரைத்துக்கொள்ளவும்)
* நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

நாரத்தை தீயல்
நாரத்தை தீயல்

செய்முறை:

மாங்காயின் கொட்டையை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், நாரத்தங்காய் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். நறுக்கிய மாங்காயையும் சேர்த்து வதக்கி, சோம்புத்தூளையும் சேர்த்து மேலும் வதக்கவும். பின்னர் புளிக்கரைசலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். இந்தக் கலவையை நன்கு கிளறி குறைந்த தீயில் சிறிது நேரம் மூடிபோட்டு வேகவிட்டு எடுக்கவும். எண்ணெய் நன்கு பிரிந்து அனைத்தும் வெந்து சுருள வரும்போது அடுப்பை நிறுத்தவும். நாரத்தை தீயல் ரெடி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடாரங்காய் உருளை பாத்

தேவையானவை:
* கடாரங்காய் - ஒன்று
* சின்ன உருளைக்கிழங்கு - 100 கிராம்
* பச்சரிசி சாதம் அல்லது பாஸ்மதி அரிசி சாதம் - ஒன்றரை கப்
* நெய் - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயம் - சிறிதளவு
* சோம்பு, பட்டை - சிறிதளவு
* இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் - 4
* வெந்தயம் - அரை டீஸ்பூன்
* பொடித்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன்
* கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
* கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
* மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
* மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
* எண்ணெய், உப்பு - சிறிதளவு

கடாரங்காய் உருளை பாத்
கடாரங்காய் உருளை பாத்

செய்முறை:

உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் இரண்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடித்து எடுத்துக்கொள்ளவும். கடாரங்காயை இரண்டாக நறுக்கிப் பிழிந்து சாறெடுத்து விதைகள் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் மீதமுள்ள இரண்டு மிளகாய், சோம்பு, பட்டை, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் கடாரங்காய் சாறு ஊற்றி, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.

பிறகு அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் வடித்த சாதம், நெய், பொடித்த வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்துப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். வறுத்துப் பொடித்துவைத்துள்ள மிளகாய் - பெருங்காயம் - வெந்தயப் பொடியை மேலே தூவிக் கிளறிப் பரிமாறவும்.

சாத்துக்குடி ரசம்

தேவையானவை:
* சாத்துக்குடிச்சாறு (விதைகள் நீக்கியது) - அரை கப்
* கறிவேப்பிலை - சிறிதளவு
* மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* வெந்தயம் - அரை டீஸ்பூன்
* துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
* மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் - 2
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாகக் கீறவும்)
* கொத்தமல்லித்தழை - சிறிதளவு
* பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
* புளிக்கரைசல் (நீர்க்கக் கரைத்தது) - ஒரு கப்
* மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
* எண்ணெய், உப்பு - தேவையான அளவு

சாத்துக்குடி ரசம்
சாத்துக்குடி ரசம்

செய்முறை:

தனியா, வெந்தயம், துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.

அதனுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறவும். பிறகு புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு, இதன்மேல் கொத்தமல்லி தூவி, அடுப்பை நிறுத்தும் சமயம் சாத்துக்குடிச்சாறு ஊற்றி அடுப்பை அணைக்கவும். சுவையான சாத்துக்குடி ரசம் ரெடி. இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சூப் மாதிரியும் சூடாகப் பருகலாம்.

லெமன் மின்ட் பாப்சிகல்

தேவையானவை:


* எலுமிச்சைப்பழம் - 6
* கரும்புச்சாறு - ஒரு கப்
* இஞ்சிச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
* சப்ஜா விதை - 2 டீஸ்பூன் (தண்ணீரில் பதினைந்து நிமிடங்கள் ஊறவைக்கவும்)
* புதினா இலை - ஒரு டேபிள்ஸ்பூன்
* சர்க்கரை - கால் கப்
* உப்பு - ஒரு சிட்டிகை
* பாதாம் பிசின் - 10 கிராம் (தண்ணீரில் ஆறு மணி நேரம் ஊறவைக்கவும்)
* மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
* கலர் சுகர் பால்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்.

நாரத்தை தீயல் I கடாரங்காய் ஊறுகாய் I சாத்துக்குடி ரசம் - வீக்எண்ட் ரெசிப்பீஸ்

செய்முறை:

எலுமிச்சைப்பழத்தை இரண்டாக நறுக்கிப் பிழிந்து விதைகள் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும். இதைப் பெரிய பாத்திரத்தில் ஊற்றி இதனுடன் தேவையான தண்ணீர் விட்டுக்கொள்ளவும். பிறகு கரும்புச்சாறு, இஞ்சிச்சாறு, உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை ஆகியவற்றை இதனுடன் சேர்த்து மிக்ஸியில் ஓர் ஓட்டு ஓட்டி எடுத்துக்கொள்ளவும்.பின்னர் இதில் புதினா இலை, ஊறிய பாதாம் பிசின், சப்ஜா விதை, சுகர் பால்ஸ் போட்டுக் கலக்கவும். பாப்சிகல் மோல்டில் இதை ஊற்றி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்.

பிறகு இதன் பின்புறம் ஜஸ் குச்சி செருகி மீண்டும் 6 முதல் 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து மோல்டிலிருந்து எடுத்துச் சாப்பிடவும். உடனடி புத்துணர்ச்சி தரும் பாப்சிகல் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism