Published:Updated:

மேற்கு மாம்பலம் ‘மாமா தோசைக் கடை!’

மாமா தோசைக் கடை
பிரீமியம் ஸ்டோரி
மாமா தோசைக் கடை

கலப்படம் இல்லாத, அதிக காரம் இல்லாத 18 வகை தோசைகள் இங்கு பிரபலம்.

மேற்கு மாம்பலம் ‘மாமா தோசைக் கடை!’

கலப்படம் இல்லாத, அதிக காரம் இல்லாத 18 வகை தோசைகள் இங்கு பிரபலம்.

Published:Updated:
மாமா தோசைக் கடை
பிரீமியம் ஸ்டோரி
மாமா தோசைக் கடை

மேற்கு மாம்பலம் விநாயகா தெரு. நீளமான தெருவின் ஓரிடத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் வெளிச்சம். அந்தத் தொகுப்பு வீட்டு வாசலோரம் ஒரு தள்ளு வண்டி, முன்பக்கம் சிறிய போர்டு, சுற்றிலும் மொய்க்கும் கூட்டம். அதுதான் ஸ்ரீபாரதி ஈவ்னிங் டிபன் சென்டர். செல்லமாக... ‘மாமா தோசைக் கடை’. இங்கே தோசை வகைகள் மட்டுமே கிடைக்கும்.

கலப்படம் இல்லாத, அதிக காரம் இல்லாத 18 வகை தோசைகள் இங்கு பிரபலம். தொட்டுக்கொள்ள இரண்டு வகைச் சட்னிகளுடன் சாம்பார்.

மாமா தோசைக் கடை
மாமா தோசைக் கடை

மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 வரை கடை இயங்குகிறது. திங்கள் ராகி தோசை, செவ்வாய் கம்பு தோசை, புதன் கோதுமை தோசை, வியாழன் மிளகு தோசை, வெள்ளி பெசரெட், சனி நவதானிய தோசை என, அந்தந்தக் கிழமைக்கான ஸ்பெஷல் தோசைகள் கிடைக்கின்றன. ஞாயிற்றுக் கிழமை விடுமுறை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அப்பாவுக்கு இப்போ 82 வயசு. தன்னோட 75 வயசு வரைக்கும் இந்தக் கடையை நடத்தினார். அவருக்கு அடுத்து இப்போ நான் கடை நடத்துறேன். சின்ன வயசுல இருந்து பல ஹோட்டல்கள்ல மாஸ்டரா வேலை செஞ்சேன். கேட்டரிங் வேலைக்குப் போவேன். அதுல கிடைச்ச அனுபவத்துலதான் இந்தக் கடையை வெற்றிகரமா நடத்திட்டு வர்றேன்” என்கிறார் மாமா என வாடிக்கையாளர்களால் அழைக்கப்படும் ரவிச்சந்திரன்.

மாமா தோசைக் கடை
மாமா தோசைக் கடை

தள்ளுவண்டியில் வலப்பக்கம் தண்ணீர்ப் பாத்திரம். இடப்பக்கம் துண்டு. தோசையை ஊற்றியதும் ஒருமுறையும் எடுத்ததும் ஒருமுறையும் என அடிக்கொரு தடவை கை கழுவித் துடைத்துக்கொள்கிறார். “வயசானவங்களுக்கு, சின்ன பிள்ளை களுக்குத் தோசைகள் வாங்கிட்டுப் போறாங்க. அதனால, என் சமையலும் இடமும் எப்பவும் சுத்தமா இருக்கிற மாதிரி பார்த்துப்பேன்” என்கிறார் மாமா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமையலில் இவர் இன்னும் சில கொள்கை களைக்கொண்டிருக்கிறார். கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் பொருள்களைத் தொடுவதேயில்லை. முடிந்தளவுக்கு வெங்காயத்தைத் தவிர்க்கிறார். “விலை கூட்டிட்டதால கொஞ்ச நாளா வெங்காய தோசையும் போடுறதில்லை” என்கிறார்.

மாமா தோசைக் கடை
மாமா தோசைக் கடை

கடை திறந்ததும் மாலை 6 மணிக்குத் தொடங்குகிற கூட்டம் இரவு 9 மணி வரை தொடர்கிறது. அந்த மூன்று மணி நேரம் மாமா யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசுவ தில்லை. ஒரு சிலிண்டர், இரண்டு அடுப்புக் கல்கள்... மாறி மாறி வேலை நடக்கிறது. யாருக்கு முன்பாக யார் வந்தார், யார் நின்று கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் சரியாகக் கணக்கு வைத்துக்கொள்கிறார்.

மாமா தோசைக் கடை
மாமா தோசைக் கடை

தோசை சுடுவது, தட்டுகளில் சப்ளை செய்வது, பணம் வாங்குவது என ஒற்றை ஆளாகப் பறக்கிறார். ``உதவி ஆள்கள் வைத்துக்கொள்ளலாமே’’ எனக் கேட்டோம். “ஆள்களை நம்பி என்னுடைய அனுபவத்துல நிறைய ஏமாந்துட்டேன். இனியும் ஏமாறத் தயாராயில்லை. என்னால முடிந்தளவுக்கு நானே எல்லாத்தையும் செய்துக்குவேன்” என்கிறார் திடமாக.

``தோசையில் இன்னும்கூட வேற வெரைட்டீஸ் எல்லாம் செய்யலாமே’’ என்றோம். “அப்படியில்லை. பனீர் தோசைலாம்கூட போடலாம். ஆனா, விலை கூடுதலா வைக்க வேண்டிவரும். அவ்வளவு விலை கொடுத்துச் சாப்பிட எல்லாராலயும் முடியாதே. அதான் எதெதுலாம் ஒரே விலையில் (₹40) வைக்க முடியும்னு யோசிச்சு இந்த லிஸ்ட் ரெடி செஞ்சோம்” என்கிறார்.

தோசை
தோசை

இவர் மனைவி சாந்தி, இந்தக் கடைக்கும் சேர்த்து இவருக்கு உற்ற துணை. மாமா, அதிகாலையில் சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவார். அது முதல் காய்கறிகள் வெட்டி, சைடிஷ் சமைத்துத் தருவது வரை, சாந்தியின் பங்கு.

“பூர்வீகம் கும்பகோணம். எங்க இரண்டு பேர் வீட்டு ஆள்களும் சமையலில் கைதேர்ந்தவங்க. நேர்மையும் உழைப்பும் இருந்தாதான் தொழிலில் ஜெயிக்க முடியும். இதே தோசைகளைத்தான் நாங்களும் சாப்பிடுறோம். அதனால, கஸ்டமர்களை ஏமாத்தினா நாங்க சாப்பிடுறது செரிக்காது. இருக்கிற காலத்துல, நம்மால முடிந்ததைச் செய்யணும். நாங்க ஆரோக்கியத்தைக் கொடுக்கணும்னு நினைக்கிறோம், அதைச் செய்துட்டும் இருக்கோம்” என்கிறார் சாந்தி.

தரமான சமையல், சரியான விலை என பொறுப்பான வியாபாரம் நடத்துகிற இவரிடம் வருமானம் பற்றிக் கேட்டோம். “போதுமான வருமானம் இருக்கு. வாடகை வீடுதான். பசங்க கனபாடிகள். பத்தாவது வரைக்கும் படிச்சாங்க. வேத உபந்யாசங்கள் கத்துக்கிறாங்க. செலவு அதிகமில்லாததால வருமானத்துக்குள்ள வாழ்க்கை நடத்த முடியுது. அதனால என்ன... நல்ல மனுஷங்களைச் சம்பாதிச்சிருக்கோமே, அதுபோதும். வேலையில கஷ்டம் ஒண்ணும் இல்லை. ஈடுபாட்டோடு வேலை செஞ்சா நிம்மதியா இருக்கலாம்” என்கிறார் நம்பிக்கையோடு.

கோடம்பாக்கத்திலிருந்து வந்த கல்லூரி மாணவி காயத்ரி, “ஃபிரெண்ட்ஸ் வாட்ஸ்அப்ல ஷேர் பண்ணுனாங்க. அதான் சாப்பிட வந்தேன். பூண்டு தோசை, செம! அடுத்து என் ஃபிரெண்ட்ஸையும் கூட்டிக்கிட்டு வருவேன்” என்றார் குதூகலமாக.

மனைவி, மகன், மகள் ஆகியோரோடு கைக்குழந்தையையும் தூக்கிக்கொண்டு தாம்பரத்திலிருந்து வந்திருந்தார் மணிகண்டன். “நண்பர்கள் சொன்னதால ஆசையா தேடிவந்தோம். ஆளுக்கு இரண்டு வெரைட்டீஸ் சாப்பிட்டோம். ரொம்பப் பிரமாதம். இது, வீட்டுச் சமையலேதான்” என்றார் மகிழ்ச்சியோடு.

டாக்டர் ஒருவர் பெசன்ட் நகரிலிருந்து மெனக்கெட்டு வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்கிறார்.

“மாமா, நேத்து வந்து நின்னு பார்த்தேன். வழக்கம் போல ஒரே கூட்டம், திரும்பி வந்துட்டேன். இன்னிக்கு எப்படியாச்சும் வாங்கிடணும்னு இருந்து வாங்கிச் சாப்பிட்டேன். நேத்துவிட்டதை இன்னிக்குப் பிடிச்சிட்டேனே” எனச் சொல்லி மகிழ்ந்தார், பக்கத்து வீதிக்காரர்.

“சீக்கிரம் வந்தா 30, 40 பேர் கூட்டமா நிக்கிறாங்க. லேட்டா வந்தா தீர்ந்து போயிடுது. எப்படித்தான் சாப்பிடுறது” என சின்ன சிரிப்போடு அலுத்துக்கொண்ட ஒருவருக்குச் சிரிப்பையே பதிலாகத் தந்தார், மாமா.

``வாடிக்கையாளர்களோடு பழக்கம் எப்படி?’’ என்றோம். “எல்லோரும் எனக்கு உறவுகள்தான். நான் வாய்திறந்து பேசாம லேயே என்னைப் புரிஞ்சிக்கிற தினசரி வாடிக்கையாளர்கள், குழந்தைக்காக தோசை வேணும்னு சொல்லி ரொம்ப நேரமா நின்னு வாங்கிக்கிட்டுப் போற அம்மாக்கள், இவங்கல்லாம்தான் என்னோட தொழிலை உயிருள்ளதா ஆக்குறாங்க” என உணர்ச்சிவசப்படுகிறார் மாமா.

வாங்கிச் சாப்பிடுவது ஒருபுறம் இருக்கட்டும், மொறுமொறுப்பும் கமகம வாசனையுமாக மாமா தோசை சுடுவதை கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வராத பசியும் வந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism