Published:Updated:

சுவையில்லை, மணமில்லை... எகிப்து வெங்காயத்தில் என்னதான் பிரச்னை?

`எகிப்து’ வெங்காயம்
`எகிப்து’ வெங்காயம்

இல்லத்தரசிகளும் ஹோட்டல் உரிமையாளர்களும் வெங்காயம் இல்லாமல் சமையலில் அவஸ்தைப்பட்டனர். மீடியாக்கள் வெங்காயமில்லாத சமையல் செய்வதெப்படியென வகுப்பெடுத்தன. சென்னையில் அதிகளவில் விற்பனையாகும் பக்கோடாவில் கடலைமாவு அதிகமிருந்தது இப்போதுதான்.

சாப்ளின் சொல்வார் நான், ஒரு பார்க், ஒரு போலீஸ்காரர் இருந்தால் போதும் என்னால் ஒரு நகைச்சுவையான திரைப்படத்தைத் தர முடியுமென்று. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு இவை மூன்று மட்டும் இருந்தால் போதும், விதவிதமான சமையல் வகைகளைச் செய்து என்னால் அசத்த முடியுமென்று நம் அம்மா சொல்வார்.

அப்படிப்பட்ட வெங்காயம் கடந்த இரண்டு மாதங்களாக நம் நாட்டையே பாடாய்ப் படுத்தி எடுக்கிறது. இத்தனைக்கும் வெங்காய ஏற்றுமதியில் இந்தியாவுக்குத்தான் உலக அளவில் முதலிடம்.

Onion
Onion

பருவகாலத்தில் ஏற்பட்ட கோளாறு. பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்த மழை, பெய்யக்கூடாத அறுவடை நேரத்திலும் மகாராஷ்டிராவில் பெய்து கெடுத்தது. விளைவு, அறுவடைக்குக் காத்திருந்த வெங்காயம் வயலிலேயே அழுகிப்போனது. விவசாயிகள் மகசூலை இழந்து தவிக்கின்றனர். பலர் கடந்த ஆண்டின் விலை வீழ்ச்சியால் சாகுபடியையே கைவிட்டனர். வெங்காயத்தின் பற்றாக்குறை நாடு முழுவதும் பேசு பொருளானது.

இல்லத்தரசிகளும் ஹோட்டல் உரிமையாளர்களும் வெங்காயம் இல்லாமல் சமையலில் அவஸ்தைப்பட்டனர். மீடியாக்கள் வெங்காயமில்லாத சமையல் செய்வதெப்படியென வகுப்பெடுத்தன. சென்னையில் அதிகளவில் விற்பனையாகும் பக்கோடாவில் கடலைமாவு அதிகமிருந்தது இப்போதுதான்.

மக்களின் தவிப்பை உணர்ந்த அரசு, எகிப்திலிருந்து 2,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் எகிப்து வெங்காயம் வந்து சேர்ந்தது. ஆனால், நல்ல மெரூன்கலரிலிருக்கும் அந்த வெங்காயத்தை வியாபாரிகளும் பொது மக்களும் வாங்க மறுக்கின்றனர். குறைவான அளவிலேயே விற்பனையாகியுள்ளது.

`எகிப்து’ வெங்காயம்
`எகிப்து’ வெங்காயம்
தமிழகம், மத்தியப் பிரததேசம், உத்தரப் பிரதேசம்... வெங்காய மூட்டைகள் கொள்ளை!

எகிப்து வெங்காயத்துக்கும் இந்திய வெங்காயத்துக்கும் என்ன வித்தியாசம் என ஆய்வில் இறங்கினோம்.

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கச் செயலாளர் சௌந்தரராஜனிடம் பேசினோம்.

''எகிப்து வெங்காயம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 டன் என்ற அளவில் வந்திருக்கிறது. எகிப்து வெங்காயம் அளவில் மிகப் பெரியதாகவும் மூன்றே வெங்காயங்கள் ஒண்ணே கால் கிலோவுக்கும் இருக்கிறது. சராசரியாக ஒரு வெங்காயம் 400 கிராம் என்ற அளவில் இருக்கிறது. தோல் சீவிய பீட்ரூட்டைப் போலிருக்கும் இந்த வெங்காயம், மணமற்றும் சுவையற்றும் இருக்கிறது. சற்றுக் கடினத்தன்மையுடனும் இருக்கிறது.

இதனால் மக்கள் இதை விரும்பி வாங்குவதில்லை. ஒருமுறை வாங்கியவர்கள் மறுமுறை வாங்குவதில்லை. குடும்பத்தலைவிகள் தினமும் இரண்டு வெங்காயம் என ஒரு கிலோ வாங்கினால், நான்கு நாள்களுக்காவது பயன்படுத்துவார்கள். இது அளவில் பெரிதாக இருப்பதும் ஒரு காரணம்.

Soundararajan
Soundararajan

இவற்றையெல்லாம்விட நம்முடைய விவசாயிகளை ஊக்கப்படுத்தக்கூடிய அளவிலான காரியங்களை அரசாங்கம் செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு கிடங்குகள் பெருமளவில் இல்லை. வெளிநாடுகளில் விளைபொருள்களைப் பாதுகாப்பதற்கு பலவிதமான பண்டக சாலைகளும் கிடங்குகளும் இருக்கின்றன.

அவற்றில் விளைபொருள்களைப் பாதுகாத்து வைத்திருந்து மீண்டும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், மக்கள் தொகை மிகுதியாக இருக்கும் நம் நாட்டில் அத்தகைய வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன.

உற்பத்தியாகும் காய்கறிகளில் மூன்றில் ஒரு பகுதி அழுகிப்போய் உரிய விலை கிடைக்காமல் வீணாவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. விளை பொருள்களை பதனிட்டோ உரிய முறையில் பாதுகாத்து வைத்தோ நமக்கு பற்றாக்குறையான நேரத்தில் நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெங்காயத்தை இறக்குமதி செய்வதால், இடைத்தரகர்களுக்கும் லாரிக்காரர்களுக்கும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும்தான் லாபமே தவிர, விவசாயிகளுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை. வியாபாரிகளுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் பெரிய அளவில் லாபம் இல்லை.

எகிப்து வெங்காயம்
எகிப்து வெங்காயம்

ஒரு கிலோ வெங்காயம் 90 ரூபாய்க்கு கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகிறது. இதைச் சில்லறை விற்பனையில் 110 ரூபாய்க்கோ 120 ரூபாய்க்கோ விற்கிறார்கள். ஆனாலும், பெரிதாக விற்பனையாகவில்லை 30 டன் வந்த வெங்காயத்தில் 5 டன் வரை விற்பனையாகியுள்ளது இதுதான் இன்றைய நிலவரம்'' என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பியிடம் பேசினோம்.

''எகிப்து நாட்டு விவசாயத்துக்கும் இந்திய விவசாயத்துக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. பாலைவனமாக இருந்தாலும் பைப் வழியாகத் தண்ணீரைக் கொண்டு வந்து விவசாயத்துக்கு ஸ்பிரிங்லர் நீர்ப்பாசன முறை (தெளிப்பு நீர்ப் பாசன முறை) மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அங்குள்ள பாலை நிலம், மணற்பாங்கானது.

இந்த நிலத்தில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாது. ஸ்பிரிங்லர் முறையில் விவசாயம் செய்வதால். வெங்காயம் உருளைக்கிழங்கு கேரட் போன்ற பொருள்கள் அதிகளவில் விளையும். இவற்றுக்கு தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும். ஆனால், நிலத்தில் தண்ணீர் தேங்கக்கூடாது. அதற்கு ஏற்ற வகையில் அங்குள்ள மண் வாகு இருக்கிறது.

எகிப்து வெங்காயம், நம்ம ஊர் வெங்காயம்போல் சுவையாக இருக்காது. அதற்குக் காரணம் மண்ணின் வாகுதான் ஒவ்வொரு மண்ணிலும் விளையும் பொருள்களுக்கு ஒவ்வொரு வித்தியாசமான சுவை உண்டு. அக்ரோ கிளைமேட் ஜோன்ஸ் (விவசாய பருவ கால மண்டலம்) என்று சொல்வார்கள்.

Thuran nambi
Thuran nambi

உலக அளவில் உள்ள மண் வளத்தைக் கொண்டும் தட்ப வெப்ப நிலையைக்கொண்டும் நிலப்பரப்பைப் பிரித்து வைத்திருக்கிறார்கள். 620 மண்டலங்கள் உலகம் முழுவதும் உள்ளன. அதனால் ஒரு மண்ணில் விளையும் பொருள் இன்னொரு மண்ணில் விளையும்போது நல்ல பலனைத் தராது.

நம் ஊர் வெங்காயத்தை அங்குசென்று பயிரிட்டால் அதுவும் சுவையற்ற மணமற்றதாகவே மாறிப்போகும். இது நிலம் மற்றும் பருவநிலை சார்ந்த விஷயம். உதாரணமாக, பொள்ளாச்சியில் குடிக்கும் இளநீர் சுவையாக இருக்கும். இதே இளநீர் இந்தோனேசியாவில் அரை லிட்டர் கூடுதலாக ஒன்றரைலிட்டர் இருக்கும். ஆனால், அந்த இளநீர் சப்பென்று இருக்கும். எந்தவிதச் சுவையும் அதில் இருக்காது. பாசுமதி அரிசி பஞ்சாபிலும் ஹரியானாவிலும் விளையும்போது உள்ள மணம் நம் தமிழகத்தில் விளையும்போது இருப்பதில்லை. அதைப்போலத்தான் எகிப்து வெங்காயம்.

இயற்கை அந்தந்தப் பகுதியில் பிறந்த மக்கள், உயிரினங்கள், விலங்குகள், பறவைகள் எல்லாவற்றுக்கும் அந்தந்தப் பகுதியின் தட்பவெட்ப நிலைக்கேற்ப ஒரு விதமான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்து அளித்திருக்கிறது. அங்கு கிடைக்கக்கூடிய உணவுகளை ரசித்து ருசித்து வாழ்ந்து இருக்கும்வரை உடல் ஆரோக்கியத்துக்கு எந்தப் பிரச்னையும் வருவதில்லை. மாறாக மாற்று உணவுகளை அந்தப் பிரதேசத்தில் விளையாத வேறு உணவுகளை நாம் சாப்பிடும்போதுதான் உடலில் பிரச்னை வருகிறது. இதைத்தான் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

எகிப்து வெங்காயம்
எகிப்து வெங்காயம்
`எகிப்து வெங்காயம் மக்களுக்குப் பிடிக்கல!' - காரணம் கூறும் வியாபாரிகள்

எகிப்திலும் ஆப்பிள் விளைவிக்கிறார்கள். நம் சிம்லா ஆப்பிளின் சுவையில் பத்தில் ஒரு பங்குகூட இருக்காது, வெள்ளரிக்காய் போல் நறுக் நறுக்கென்று லேசான தித்திப்புடன் இருக்கும். பாலைவனத்தில் பயிர் செய்து அவர்கள் வேறு விதமான வாழ்க்கை வாழ்கிறார்கள் அது நம்ம ஊர் உணவுக் கலாசாரத்துக்கு பொருந்தி வராது'' என்றார் தூரன் நம்பி.

`உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லை’ என்னும் வாழ்க்கையின் நிலையில்லா தத்துவத்தை உணர்த்தும் வெங்காயம், நம்மை உரிமையுடன் அழவும் வைத்துவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் ராஜஸ்தான் வெங்காயம் வரப்போகிறதென்கிறார்கள். அதையும்தான் ஒரு கை பார்ப்போமே!

அடுத்த கட்டுரைக்கு