மட்டன் உலர்த்தியது, கவுனி அல்வா, தஞ்சாவூர் கோழிக்கறி... மோடி - ஜின்பிங் விருந்தின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!

தக்காளி ரசம் முதல் கவுனி அல்வா வரை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பாரம்பர்ய உணவு வகைகள் பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டு பரிமாறப்பட்டன. அவற்றிலிருந்து சில ஸ்பெஷல் ரெசிபிக்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார், செஃப் ராம் பிரகாஷ்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்பால் புதுப்பொலிவு பெற்றது மாமல்லபுரம். வேஷ்டி சட்டை, பாரம்பர்ய கலை நிகழ்ச்சி எனத் தமிழர்களின் பண்புகளை மீண்டும் ஒருமுறை உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இவர்களின் சந்திப்பில், மிகவும் முக்கிய இடம்பெற்றது... தென்னிந்திய உணவு விருந்து. தக்காளி ரசம் முதல் கவுனி அல்வா வரை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பாரம்பர்ய உணவு வகைகள் பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டு பரிமாறப்பட்டன. அவற்றிலிருந்து சில ஸ்பெஷல் ரெசிபிக்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார், செஃப் ராம் பிரகாஷ்.


மட்டன் உலர்த்தியது!
இது மிகவும் பிரபலமான மலபார் உணவு வகை. தமிழகத்திலும் பெரும்பாலான இடங்களில் செய்கிறார்கள்.
தேவையான பொருள்கள்:
வேகவைக்க:
மட்டன் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி - ஒரு இன்ச், பொடியாக நறுக்கியது
வெங்காயம் - ஒரு கப்
மற்ற பொருள்கள்:
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு - 1/2 பழம்
செய்முறை:
வேகவைக்கவேண்டிய பொருள்களைச் சேர்த்து, இரண்டு கப் தண்ணீருடன் மட்டனை நன்கு வேகவைக்கவும். குக்கரில் வேகவைப்பதென்றால் 4 முதல் 6 விசில் வரை இருக்கலாம். பிறகு, தாளிப்புப் பொருள்களைச் சூடான எண்ணெயில் சேர்த்து, வெங்காயம் நன்கு வதங்கியவுடன், வேகவைத்த மட்டன் கலவையைச் சேர்க்கவும். தண்ணீர் நன்கு வற்றியதும் உப்பு, மிளகுத்தூள், துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்துவிடவும். இறக்குவதற்கு முன், விதைகள் நீக்கிய எலுமிச்சை சாற்றைப் பிழிந்துவிடவும். தக்காளி சேர்க்காததால், புளிப்புச் சுவைக்காக எலுமிச்சை சாறு சேர்க்கப்படுகிறது. மட்டன் நன்கு வெந்ததும் சூடாகப் பரிமாறலாம்.
கறிவேப்பிலை மீன் வறுவல்!
இதற்கு வஞ்சரம், பாறை, வாவல், நெத்திலி போன்ற மீன் வகைகளைப் பயன்படுத்தலாம். வஞ்சரம் மீனுக்கான ரெசிப்பி இதோ.
தேவையான பொருள்கள்:
வஞ்சரம் - நான்கு துண்டுகள்
ஊறவைக்க:
எலுமிச்சை - ஒன்று
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
உலர் வறுவல் மசாலாப் பொருள்கள்:
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
மற்ற பொருள்கள்:
இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
செய்முறை:
முதலில் வஞ்சிரம் மீனைச் சுத்தம் செய்து, வட்ட வடிவில் வெட்டி, ஊறவைக்கும் பொருள்களைச் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். உலர் வறுவல் மசாலாப் பொருள்களை நன்கு வறுத்து, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த மசாலாவோடு ஊறவைத்த மீன் துண்டுகளைப் பிரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி.

தஞ்சாவூர் கோழிக்கறி!
இது குறைந்த நேரத்தில் மிகவும் சுலபமாகச் செய்யக்கூடிய நம் பாரம்பர்ய ரெசிப்பி.
தேவையான பொருள்கள்:
ஊறவைப்பதற்கு:
கோழி - 1/2 கிலோ
தயிர் - 4 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மசாலாப் பொருள்கள்:
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - ஒரு இன்ச் அளவு
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
பட்டை - 3
தாளிக்க:
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தக்காளி - 2
மற்ற பொருள்கள்:
கரம் மசாலா - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
செய்முறை:
ஊறவைப்பதற்கான பொருள்கள் அனைத்தையும் நன்கு கலந்து, அரை மணிநேரம் ஊறவைக்கவும். மசாலாப் பொருள்களைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தாளிப்புப் பொருள்களைச் சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அரைத்து வைத்த மசாலாவைச் சேர்க்கவும். மசாலா தக்காளியுடன் சேர்ந்து வதங்கியதும், கரம் மசாலா மற்றும் ஊறவைத்த சிக்கனைச் சேர்க்கவும். இடையில் தண்ணீர் சேர்க்கக்கூடாது. சிக்கன் நன்றாக வெந்ததும், கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துப் பரிமாறலாம்.
கவுனி அல்வா!
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான அரிசி வகை கவுனி. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இந்த வகை அரிசியைப் பலரும் மறந்துவிட்டார்கள். இந்த வகை அரிசி முதன்முதலில் சீன அரசவையில்தான் பரவலாக இருந்தது. காலப்போக்கில் சாமான்ய மக்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர். கவுனியில் இட்லி, தோசை, பிரியாணி போன்ற உணவு வகைகளைச் சமைக்கலாம். அதில் அல்வா மிகவும் பிரபலம்.
தேவையான பொருள்கள்:
கவுனி அரிசி - 2 கப்
நெய் - 1 கப்
தேங்காய்ப்பால் - 2 கப்
கருப்பட்டி - 2 கப்
ஏலக்காய், முந்திரி, திராட்சை - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி 6 மணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும். அரிசியுடன் தேவையான அளவில் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து, மைய அரைத்து, அதிலிருந்து பால் எடுத்துக்கொள்ளவும். பாலின் அளவிற்குச் சமமாகத் தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும். இரண்டு கப் கவுனி பாலுக்கு, இரண்டு கப் அளவிற்குக் கம்பி பதத்தில் இருக்கும்படி கருப்பட்டி பாகு தயாரித்துக்கொள்ளவும்.. இதற்கு அரை கிலோ கருப்பட்டி தேவைப்படலாம்.
சூடான பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் கவுனி மற்றும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து நன்கு கலந்துவிடவும். திடமான பதத்திற்கு வந்ததும், கருப்பட்டி பாகு, ஏலக்காய் மற்றும் சிறிதளவு நெய் சேர்க்கவும். இரண்டு கப் கவுனி பாலுக்கு ஒரு கப் வரை நெய் சேர்க்கலாம். சேர்க்கப்பட்ட நெய் நன்கு திரண்டு வரும்போது வறுத்தெடுத்த முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.