Published:Updated:

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

ஸ்பைருலினா ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்பைருலினா ஸ்பெஷல்!

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

இது மருந்தல்ல... உணவு!

``ஸ்
பைருலினா என்பது பச்சையும் நீலமும் கலந்த ஒரு பாசி வகை. இது பொடியாகவும் கிடைக்கும். மாத்திரை வடிவிலும் கிடைக்கும். இதற்கு உலக அளவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏன் தெரியுமா?

ஸ்பைருலினாவில் நல்ல புரதம், பி காம்ப்ளக்ஸ், ஏ, இ வைட்டமின்கள், குளோரோஃபில், தாதுகள் உட்பட பல அத்தியாவசியமான சத்துகள் அடங்கியுள்ளன. இவை நோய் எதிர்ப்புத் திறனை நமது உடலுக்கு அளிக்கும். தினமும் உட்கொள்வது இளமைத் தோற்றத்தைப் பராமரிக்க உதவும்.

இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். குறிப்பாக டிரைகிளிசரைடு எனும் கொழுப்பு அதிகமாகாமல் தடுக்கும். கேன்சர் வராமல் தடுக்கும் காரணிகளும் இதில் உள்ளன. உடலைச் சுறுசுறுப்பாக வைக்கும் தன்மையும் ஸ்பைருலினாவுக்கு உண்டு.

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

இது ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் என்கிற நோய் வலி எதிர்ப்புக் காரணிகளை உருவாக்கும். எடை அதிகமாகாமல் காக்கும். இத்தனையும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்பதால் பலரும் இதை மாத்திரை வடிவில் தினமும் உட்கொள்கிறார்கள். இது மருந்து அல்ல; ஒரு சத்து மிகுந்த உணவு என்பது மிகச் சிறப்பு’’ என்று ஹெல்த்தியான தகவல்களோடு சுவையான ரெசிப்பிகளையும் அளிக்கிறார் நளமகாராணி மல்லிகா பத்ரிநாத்.

ஒரு முக்கியமான விஷயம்... இதைச் சமைக்க இயலாது. உணவின் சுவை மாறும். கடைசியாக சேர்க்கலாம். முன்பே பச்சை நிறமாக உள்ள உணவானால், அதோடு சேர்க்க முடியும். கீரை வகைகள், கொத்தமல்லி, புதினா போன்றவற்றை உபயோகித்து சில செய்முறைகளைச் செய்தால் சுவையான உணவாக மாற்ற முடியும்.

ஸ்பைருலினா பேரீச்சை லாலிபாப்

தேவையானவை:

 பேரீச்சை (கொட்டை நீக்கியது) - 100 கிராம்
 பாதாம் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
 தேங்காய் பவுடர் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
 கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்
 ஸ்பைருலினா பவுடர் - ஒரு டீஸ்பூன்

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

செய்முறை:
பேரீச்சையை நறுக்கி, வேண்டுமென்றால் சிறிதளவே தண்ணீர் தெளித்து ஒரு வாணலியில் போட்டுச் சூடாக்கவும். மெத்தென்று ஆனதும் அடுப்பை அணைத்து மசிக்கவும். அதோடு மற்ற பொருள்களைச் சேர்த்து மசித்துக் கலந்து, சிறிய உருண்டைகள் செய்யவும். பல் குத்தும் குச்சியைச் செருகி வைக்கவும்.

ஸ்பைருலினா கார பிஸ்கட்

தேவையானவை: -

ஒன்றாகச் சேர்த்து சலிக்க:
 கோதுமை மாவு - 200 கிராம்
 பொடித்த சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
 ஸ்பைருலினா பொடி - ஒரு டீஸ்பூன்
 உப்பு - ஒரு டீஸ்பூன் (தலைதட்டி)
மற்ற பொருள்கள்:
 வெண்ணெய் - 80 கிராம்
 பச்சை மிளகாய் - ஒன்று
(விதை நீக்கி, நறுக்கியது)
 இஞ்சித் துருவல் - விரும்பும் அளவு
 மிகமிகப்  பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
 லேசாகப் புளித்த கட்டித் தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

செய்முறை:
வெண்ணெயை ஒரு கிண்ணத்தில் போட்டு லகுவாகும் வரை குழைக்கவும். அதோடு ஒன்றாகச் சேர்த்து சலித்தவற்றைச் சேர்த்து, தயிர், இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து சப்பாத்தி மாவு போல திரட்டவும். கால் அங்குல கன சப்பாத்தி போல இட்டு மேலே முள் கரண்டியால் குத்தவும்.

விருப்பமான வடிவங்களில் பிஸ்கட் கட்டரின் உதவியால் வெட்டவும். பின்னர் 180 டிகிரி செல்ஷியஸ் உஷ்ணநிலையில் முன் சூடு (ப்ரீ ஹீட்) செய்த அவனில் (oven) வைத்து ‘பேக்’ செய்யவும். 20 நிமிடங்களில் தயாராகும்.

ஸ்பைரல் ஸ்பைருலினா ரொட்டி

தேவையானவை:
 மைதா மாவு - ஒன்றரை கப்
 இளம்சூடான பால் -
அரை கப்
 வெண்ணெய் - 2 டீஸ்பூன்
 ஸ்பைருலினா பொடி -
ஒரு டீஸ்பூன்
 வெந்தயக்கீரை அரைத்த விழுது - சிறிதளவு
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

செய்முறை:
வெந்தயக்கீரையைச் சிறிதளவே தண்ணீர்விட்டு நைஸாக அரைக்கவும். மைதா மாவுடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு பிசிறி இரண்டாகப் பிரிக்கவும். ஒரு பகுதியில் இளம்சூடான பால் சேர்த்து வெண்மை நிற மாவாகப் பிசையவும். மற்றொரு பகுதியில் வெந்தயக்கீரை விழுதுடன் ஸ்பைருலினா பொடியைக் கலந்து மாவு பிசையவும்.

எல்லா மாவையும் சம அளவு உருண்டைகள் செய்து நீளவாக்கில் உருளையாக்கவும். நீள உருளைகளில் ஒரு வெண்மை, ஒரு பச்சையை ஒன்றுசேர்த்து நீளவாக்கில் வைத்து கடிகாரம் போல சுருள் செய்யவும். கனமான ரொட்டியாகத் திரட்டி, சூடான தோசைக்கல்லில் எண்ணெய்விட்டுச் சுட்டெடுக்கவும்.

அன்னாசி ஸ்பைருலினா இரண்டடுக்கு ஸ்மூத்தி

தேவையானவை:
 நன்கு பழுத்த அன்னாசி - 3 ஸ்லைஸ்
 கெட்டியான முதல் தேங்காய்ப்பால் - கால் கப்
 தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்
 நாட்டுச் சர்க்கரை - சிறிதளவு
 சப்ஜா விதை - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஸ்பைருலினா பவுடர் - ஒரு டீஸ்பூன்
 வறுத்த பருப்பு வகைகள் - விரும்பும் அளவு

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

செய்முறை:
அன்னாசிப்பழத்தை வெட்டி சிறிதளவே நாட்டுச் சர்க்கரை தூவி குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும். நன்கு ஆறியதும் அதோடு தேன், தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் கெட்டியான கூழ் போலாக்கவும். சப்ஜா விதையை அரை மணி நேரம் முன்பே தண்ணீரில் ஊறவைக்கவும்.

ஊறிய பின்னர் அதோடு தேவைப்படும் அளவு ஸ்பைருலினா பொடியைக் கலக்கவும். ஓர் அழகான கண்ணாடி டம்ளரில் முதலில் சப்ஜா விதை, பிறகு அன்னாசி கலவை என மாற்றி மாற்றி லேயராக நிரப்பவும். வறுத்த பருப்புகளால் மேலே அலங்கரிக்கவும்.

ஸ்பைருலினா மினி பிரெட் பைட்ஸ்

தேவையானவை:
 புதிய பிரெட் - 6 ஸ்லைஸ் (ஓரம் நீக்கவும்) 
 புதினா சட்னி - விரும்பும் அளவு
 கேரட் துருவல் - 50 கிராம்
 சீஸ் - 2 க்யூப் (துருவவும்)
 மசித்த பனீர் - சிறிதளவு
 ஸ்பைருலினா பொடி - 3 கிராம்
 மிளகுத்தூள் - விரும்பும் அளவு
 வெண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

செய்முறை:
பிரெட்டின் இரண்டு புறமும் வெண்ணெய் பூசவும்.  புதினா சட்னியுடன் ஸ்பைருலினா பொடியைக் கலந்து பிரெட்டின் ஒருபுறம் பூசவும். கேரட் துருவலுடன் மசித்த பனீர், மிளகுத்தூள் கலந்து, சீஸ் துருவலையும் சேர்த்துக் கலக்கவும்.

பிரெட்டின் ஓரங்களை வெட்டி, பிறகு நான்காக ஒரே அளவில் நறுக்கவும். சட்னி பூசிய பிரட்டின் மீது கேரட், சீஸ் துருவல் கலவையை வைத்து, மிளகுத்தூள் தூவி மேலே ஒரு ஸ்லைஸ் வைத்து மூடவும். நன்றாக அமுக்கி நான்காக வெட்டவும்.

ஸ்பைருலினா எள் வேர்க்கடலை சிக்கி

தேவையானவை:
 வறுத்த எள் - அரை கப்
 கொரகொரப்பாக பொடித்த
வறுத்த வேர்க்கடலை - அரை கப்
 பழுப்பு (பாலிஷ் செய்யாத) சர்க்கரை - ஒரு கப்
 நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
 ஸ்பைருலினா பவுடர்
(தலைதட்டி) - ஒரு டீஸ்பூன்

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

செய்முறை:
ஒரு அடிகனமான வாணலியில் சர்க்கரையோடு நெய் சேர்த்து, சர்க்கரை கரைந்து பொன்னிறமாக வரும் வரை மிதமான தணலில் வைக்கவும். அதில் எள், வேர்க்கடலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
அதோடு ஸ்பைருலினாவையும் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு நெய் தடவிய சப்பாத்திக் கல்லின் மீது போட்டு சப்பாத்திக் குழவியால் விரைவாக கால் அங்குல கனத்துக்கு உருட்ட வேண்டும். இளம்சூடாக இருக்கும்போதே துண்டுகளாக்கவும்.

ஸ்பைருலினா கேக்

தேவையானவை: -

ஒன்றாகச் சேர்த்து சலிக்க:
 மைதா மாவு (தலை தட்டி) -
ஒரு கப் (100 கிராம்)
 பேக்கிங் பவுடர், சமையல் சோடா -
தலா அரை டீஸ்பூன்
 ஸ்பைருலினா பொடி - ஒரு டீஸ்பூன்
குழைப்பதற்கு:
 வெண்ணெய் - 50 கிராம்
 பொடித்த நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப்
ஒன்றாகக் கலக்க:
 பொடித்த ஓட்ஸ் - கால் கப்
 கட்டித் தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
 கடைந்த பாலேடு - அரை கப்
மற்ற பொருள்கள்:
 பால் - சிறிதளவு
 வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
 நறுக்கிய பாதாம் பருப்பு - விரும்பும் அளவு

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

செய்முறை:
பொடித்த ஓட்ஸ், கட்டித் தயிர், கடைந்த பாலேடு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும். உலர்ந்த கிண்ணத்தில் வெண்ணெயை முதலில் நன்கு குழைத்து, பின்னர் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக லகுவாகும் வரை குழைக்க வேண்டும்.

அதோடு ஒன்றாகச் சேர்த்து சலித்த மாவு, ஓட்ஸ், கலவை, வெனிலா எசென்ஸ், சிறிதளவு பால் சேர்த்து நன்றாகக் குழைக்கவும். இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய சிறிய கப் கேக் மோல்டில் பாதியளவு வரை ஊற்றி, மேலே நறுக்கிய பாதாம் பருப்பை அலங்காரமாக வைத்து, 10 நிமிடங்கள் முன் சூடு  (ப்ரீ ஹீட்) செய்த அவனில் (oven), 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்து 30 நிமிடங்கள் `பேக்’ செய்யவும்

ஸ்பைருலினா புளியோதரை

தேவையானவை:
 பச்சரிசி சாதம் - ஓர் ஆழாக்கு
 புளி - பெரிய எலுமிச்சை அளவு (கரைக்கவும்)
 காய்ந்த மிளகாய் - 5
 பச்சை மிளகாய் - 3
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 வறுத்த எள்ளின் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
 வெந்தயம், மிளகு (வறுத்துப் பொடித்தது) - விரும்பும் அளவு
 ஸ்பைருலினா பொடி - ஒன்றரை டீஸ்பூன்
 நல்லெண்ணெய் - இரண்டரை டேபிள்ஸ்பூன்
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு:
 கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி - தேவையான அளவு

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

செய்முறை:
புளியை ஊறவைத்துக் கெட்டியாகக் கரைக்கவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி காய்ந்த மிளகாயைக் கருகும் வரை வறுத்து பெருங்காயத்தூள், புளிக்கரைசல் சேர்க்கவும். புளிக்கரைசல் நன்கு கொதிக்கும்போது முழு பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுண்டும் வரை வைக்கவும். உப்பு, ஸ்பைருலினா பொடி சேர்த்துக் கலக்கவும்.

புளிக்காய்ச்சல் தயார். ஆறிய சாதத்தின் மீது எள்ளுப் பொடி, வெந்தய - மிளகுத்தூள், புளிக்காய்ச்சல் சேர்த்துப் பிசிறவும். மீதி உள்ள எண்ணெயில் தாளிக்கும் பொருள்கள் சேர்த்து வறுபட்டதும் புளியோதரையில் சேர்த்து நன்கு கலக்கவும். ஸ்பைருலினாவின் வாடை தெரியாது. சுவையுடன் இருக்கும். சிறிதே பச்சை நிறம் கலந்தாற்போல இருக்கும்.

ஸ்பைருலினா கார மஃபின்ஸ்

தேவையானவை:
 முழு கோதுமை மாவு - 250 கிராம்
  பால் பவுடர், பேக்கிங் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
  சமையல் சோடா - முக்கால் டீஸ்பூன்
  ஸ்பைருலினா பொடி - ஒன்றரை டீஸ்பூன்
  ஓட்ஸ் - ஒரு கப்
  தண்ணீர் - ஒன்றே கால் கப்
  குடமிளகாய் - 25 கிராம்
(மிக மிக பொடியாக நறுக்கியது)
  காய்ந்த மிளகாய் - விருப்பத்துக்கேற்ப (பொடித்துக் கொள்ளவும்)
  உப்பு, வெண்ணெய் - தேவையான அளவு
  பொடித்த சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

செய்முறை:
இளம்சூடான தண்ணீரில் ஓட்ஸைக் கலந்து ஊறவைக்கவும். வெண்ணெயைத் தனியாகக் குழைத்தப் பின்னர், சர்க்கரையைச் சேர்த்து லகுவாகக் குழைக்கவும். அத்துடன் சலித்த கோதுமை மாவு, ஊறவைத்த ஓட்ஸ் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள  அனைத்துப் பொருள்களையும் சேர்த்து லேசாக கலந்து கொள்ளவும். இதை மஃபின்ஸ் மோல்டுகளில் பாதி அளவு நிரப்பவும். இதை 180 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் முன் சூடு (ப்ரீஹீட்) செய்த அவனில் (oven) 10 நிமிடங்கள் வைத்து ‘பேக்’ செய்து எடுத்து பரிமாறவும்.

ஸ்பைருலினா ஸ்பெஷல் மோர்

தேவையானவை:
 லேசான புளிப்புள்ள தயிர் - 2 டம்ளர்
 புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி அரைத்த விழுது - விரும்பும் அளவு
 ஸ்பைருலினா பொடி - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - 3 சிட்டிகை
 எலுமிச்சைப்பழம் - ஒன்று
 உப்பு - தேவையான அளவு

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

செய்முறை:
அரைத்த விழுதோடு தண்ணீர்விட்டுக் கலந்து வடிகட்டவும். அதோடு தயிர், உப்பு, ஸ்பைருலினா பொடி, பெருங்காயத்தூள் கலந்து, மிக்ஸியில் சேர்த்து, மிக்ஸியை விட்டு விட்டு இயக்கவும்.  கடைசியில் எலுமிச்சைப் பழம்  பிழிந்து கலக்கவும். சிறிய டம்ளர்களில் ஊற்றிப் பரிமாறவும்.

ஸ்பைருலினா ஆலு பாலக் கறி

தேவையானவை:

 சிறிய உருளைக்கிழங்கு - 150 கிராம்
 பாலக்கீரை - ஒரு கட்டு
 தக்காளி, வெங்காயம் - தலா 2 (நறுக்கவும்)
 உரித்த பூண்டு - 7 பல்
 ஸ்பைருலினா பொடி - 10 கிராம்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஸ்பைருலினா ஸ்பெஷல்!

செய்முறை:
சிறிய உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து, தோலுரித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு பூண்டு, வெங்காயம், தக்காளியை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கி எடுக்கவும். சிறிது எண்ணெயில் கழுவிய பாலக்கீரையை வதக்கி எடுக்கவும். வதக்கிய எல்லாவற்றையும் நன்கு அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், அரைத்த விழுது, உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் இறக்கி, பிறகு ஸ்பைருலினா பொடி சேர்க்கவும். உருளைக்கிழங்கைக் கலந்து பரிமாறவும்.

பரிமாறுவதற்கு முன்பு ஸ்பைருலினா பொடி சேர்த்துக் கலக்கவும். விரும்பினால் வறுத்த முந்திரி சேர்த்து சுவை கூட்டலாம்.

படங்கள்: ப. சரவணகுமார், ப.பிரியங்கா