Published:Updated:

பரிமாற மட்டுமல்ல... விசாரணைக்கும் `எந்திரன்!’ எப்படி இருக்கிறது `ரோபோட் 2.0' ஹோட்டல்?

பரிமாற மட்டுமல்ல... விசாரணைக்கும் `எந்திரன்!’ எப்படி இருக்கிறது `ரோபோட் 2.0' ஹோட்டல்?
பரிமாற மட்டுமல்ல... விசாரணைக்கும் `எந்திரன்!’ எப்படி இருக்கிறது `ரோபோட் 2.0' ஹோட்டல்?

``OMR, கோயம்பத்தூர், போரூர்னு மூணு இடத்துல இந்த ரோபோ உணவகம் இருக்கு. இடத்துக்கு ஏற்றதுபோல மெனு தயார் செஞ்சிருக்கோம். இங்க போரூர்ல இந்தியன், Indo-Chinese மற்றும் Indo-Thai உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்திருக்கோம்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`பேரர்! ஒரு நாட்டுக்கோழி சூப், ரெண்டு சீரகச்சம்பா மட்டன் பிரியாணி, ஒரு பிளேட் சிக்கன் லாலிபாப். ம்ம்ம்... இப்போதைக்கு இதுகொண்டு வாங்க. மீதியை அப்புறமா சொல்லுறேன்' போன்ற வசனங்களெல்லாம் இங்கே சொல்ல முடியாது. உங்கள் இருக்கையில் இருக்கும் போன் டேப்களை (Tab) எடுத்து, வேண்டிய உணவு வகைகளை ஆர்டர் செய்தால் போதும், சுடச்சுடத் தயாரான உணவுகளுடன் விறுவிறுவென உங்கள் இருக்கையை நோக்கி வந்துவிடுவார்கள் இந்தப் பெண் ரோபோக்கள். அம்மிக்கல் டு மிக்ஸி, ஆட்டுக்கல் டு கிரைண்டர் என மனிதர்களின் வேலையை எளிமையாக்கியது இயந்திரங்கள்தான். ஆனால், உணவை எடுத்துச் செல்வதற்கும் `புது எந்திரன்களை' இறக்கியிருக்கின்றது சென்னை போரூரில் உள்ள ரோபோ உணவு விடுதியான `ரோபோட்.'

உணவகத்தினுள் நுழைந்தவுடன், நம்மை வரவேற்பதும் ஒரு பெண் ரோபோதான். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரவேற்கும் ரோபோவிடம், உணவகம் குறித்து எழும் சந்தேகங்களைக் கேட்டுக்கொள்ளலாம். நாங்கள் சென்றதும் `வெல்கம்’ என வரவேற்றது ஒரு ரிஷப்சன் ரோபோ. உரையாடலை முடித்துவிட்டு, எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்றது. டஸ்கி லைட்டிங், மெல்லிசை, சுற்றியும் மாடர்ன் ரோபோ ஓவியங்கள் என மிகவும் மென்மையான சுற்றுச்சூழல். இதே பிரமிப்புடன் மேஜை மேலிருந்த டேப்லெட்டை எடுத்து மெனுவிலுள்ள 'மேன்ச்சோ சிக்கன் சூப்', 'டைனமைட் உருளை', 'ஹனி கார்லிக் ஸ்குவிட்', 'சிக்கன் லாலிபாப்' ஆர்டர் செய்துவிட்டு, இந்த உணவகத்தின் பொது மேலாளரான கைலாஷிடம் பேசினோம்.

`` `ரோபோ தீம்' தேர்வு செய்ததுக்கான காரணம் என்ன?’’

``எதுலயும் புதுமையாகப் பண்ணனும்னு ஆசை எல்லோருக்கும் இருக்கும். அப்படிதான் எங்களுக்கும் இருந்துச்சு. நிறைய தீம் யோசிச்சோம். ஆனா, ரோபோ தீம் இதுவரைக்கும் இந்தியாவுல இல்லை. ரிஸ்க் எடுத்து பண்ணலாம்னு இறங்குனதுதான். முதல் உணவகம் OMR-ல ஆரம்பிச்சது. ரோபோட்டும் நல்லா சப்போர்ட் பண்ணுது. மக்களுக்கும் ரொம்பப் பிடிச்சிருக்குங்கிறதால அப்படியே டெவலப் பண்ணிட்டோம்.’’

ஆர்டர் செய்த உணவு வகைகளைக் கையில் ஏந்தியபடி வெள்ளை மற்றும் நீல நிற மிடுக்கான பெண் ரோபோ எங்கள் மேஜையை நோக்கி வந்தடைந்தது. உணவு வகைகளை எடுத்துச் சுவைத்துக்கொண்டே... ``இதில் என்ன மாதிரி சவால்கள் இருக்கு?’’ என்றோம்.

``எங்களுக்கு ரோபோடிக்ஸ் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. அதுவே பெரிய சவால்தான். பிசினஸ் பற்றி கத்துக்கிட்டு வந்தாலும், ரோபோவை கையாளுறது பற்றி தெளிவில்லாமதான் இருந்தோம். ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்துச்சு. ஆனால், அனுபவம் மூலமா நிறைய கத்துக்கிட்டோம்" என்றார் கைலாஷ்.

சீனா மற்றும் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரோபோக்கள், செம்ம ஸ்மார்ட். இவர்கள் பயணிக்கும் வழியில் யாராவது குறுக்கே நின்றால், வழிவிடச் சொல்லி நம்மிடம் கேட்கும். இங்கு மொத்தம் ஏழு ரோபோக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்பில்லானது.

சில்லி கார்லிக் ஃபிரைடு ரைஸ் மற்றும் கோல்டன் நூடுல்ஸ் போன்றவற்றை ஆர்டர் செய்துவிட்டு, மேலும் உரையாடலைத் தொடர்ந்தோம்.

``வருங்கால திட்டம் என்ன?’’

``நிறைய புதுசு புதுசா மக்களுக்குப் பிடிச்சதுபோல புதுமையான பல விஷயங்களைக் கொடுக்கணும். எல்லாம் கொஞ்சம்கொஞ்சமா செயல்படுத்தணும். இப்போதைக்கு மக்களோட உரையாடுற `ரிசப்ஷன் ரோபோ' கொண்டுவந்திருக்கோம். ரெகுலர் கஸ்டமர்னா, உங்க முகத்தை அடையாளம் வெச்சு உங்க பேர் சொல்லி வரவேற்கும். இப்படி புதுமைகளைக் கொடுத்துட்டே இருப்போம்.’’

``இங்கே என்ன Cuisine தேர்வு செஞ்சிருக்கீங்க?’’

``OMR, கோயம்பத்தூர், போரூர்னு மூணு இடத்துல இந்த ரோபோ உணவகம் இருக்கு. இடத்துக்கு ஏற்றதுபோல மெனு தயார் செஞ்சிருக்கோம். இங்க போரூர்ல இந்தியன், Indo-Chinese மற்றும் Indo-Thai உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்திருக்கோம். குழந்தைகளுக்குப் பிடிச்ச மாதிரி ஏராளமான உணவு வகைகள் இருக்கு.’’

உரையாடல் முடிவதற்குள் உணவு வகைகள் அனைத்தும் வந்தடைந்தன. அவற்றின் மணமும் ருசியும் ஃபர்ஸ்ட் க்ளாஸ். இறுதியாக, இளநீர் ஐஸ்க்ரீம் மற்றும் ரெட் வெல்வெட் ப்ரவுனி சாப்பிட்டுவிட்டு, இந்த உணவகத்தின் ஹீரோவான ரோபோக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு கிளம்பினோம். ரோபோட் உணவகம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், சுவையும் பக்கா. ஆனால், விலைதான் கொஞ்சம் அதிகம்.

ரேட்டிங்:

சுவை - 4/5
சுற்றுச்சூழல் - 3.5/5
சேவை - 4/5
தரம் - 4/5
ப்ரெசென்ட்டேஷன் - 3.5/5

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு