லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அஞ்சறைப் பெட்டி: பாதாம்... வலிமைக்கான ஆதாரம்!

பாதாம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாதாம்

பேரீச்சம்பழத்துடன் பாதாம் பருப்பு அற்புதமான காம்போவாக மேலை நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது.

கெட்டியான ஓட்டுக்குள் சுழன்றாடும் ஆரோக்கிய கிலுகிலுப்பை பாதாம் பருப்பு. அபரிமிதமான சுவையுடன் உடலுக்கு வன்மை கொடுக்கும் பாதாம் பருப்பு, பலத்துக்கு அஸ்திவாரம்.

கசப்புச் சுவைகொண்ட பாதாம் பருப்பு ரகங்கள் இருந்தாலும், இனிப்புச் சுவை நிறைந்த ரகங்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மத்திய ஐரோப்பா மற்றும் மேற்காசிய பகுதிகளே பாதாம் பருப்பின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அக்பர் காலத்தில் பாதாமின் பயன்பாடு மிக அதிகமாக இருந்ததுடன் அதன் விலையும் உச்சத்தில் இருந்திருக்கிறது. பணத்துக்கு மாற்றாகப் பாதாம் பயன்படுத்தப்பட்டது என 16-ம் நூற்றாண்டு வரலாறு சொல்கிறது. பல்வேறு கலாசாரங்களில் பாதாமுக்கு உயரிய மதிப்பு இருந்திருக்கிறது.

கிறிஸ்தவர்களின் புனிதநூலான விவிலியத்தில் பலமுறை பாதாம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பயன்பாட்டுக்காக வளர்க்கப்பட்ட பாதாம் பற்றிய வெண்கலக்காலக் குறிப்புகள் 5,000 ஆண்டு களுக்கு முன்பே கிடைத்திருக்கிறது. எகிப்து நாட்டில் மன்னர் துத்தகாமின் கல்லறையில் பாதாம் இருந்ததற்கான அடையாளத்தை அகழ்வாராய்ச்சி நிரூபித்துள்ளது. தேநீர், பால், பர்பி எனப் பல்வேறு உணவு ரகங்களில் பழங்காலம் முதல் பாதாம் நீக்கமற இடம்பிடித்துள்ளது. பச்சையாகவோ, வறுத்தோ, இனிப்பு முலாம் பூசியோ, மாவாகவோ, பசையாகவோ பாதாம் பருப்பை உலக அளவில் மக்கள் பயன்படுத்துகின்றனர். கேக், பிஸ்கட், ஐஸ்க்ரீம் வகைகள் என அனைத்திலும் பாதாமின் சேர்மானம் பல மடங்கு சுவையைக் கூட்டும்.

பாதாம்
பாதாம்

அதிக புளிப்புத்தன்மையுள்ள உணவுகளுக்குக் கொஞ்சம் உப்புச் சுவை கொடுத்து சமன் செய்ய, உப்பில் மூழ்கச் செய்த பாதாம் பருப்பு மிக முக்கிய சிற்றுண்டி ரகமாக மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. பேரீச்சம்பழத்துடன் பாதாம் பருப்பு அற்புதமான காம்போவாக மேலை நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது.

பொடித்த பாதாம் பருப்பு மாவை பல்வேறு சிற்றுண்டிகள் செய்ய கிரேக்க நாட்டில் அடிப்படைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். கடலுப்பு கலந்த பாதாம் பருப்பு, இரான் நாட்டுக் கடை வீதிகளில் `சகேழ் பாதாம்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான சிறப்பு மற்றும் ஊட்ட உணவு தயாரிக்க பாதாம் பருப்பை இரான் நாட்டில் உபயோகிக்கின்றனர். பாதாம் பருப்பிலிருந்து உருவாக்கப்படும் பாதாம் வெண்ணெயும் பல நாட்டுச் சிற்றுண்டிகளில் தவழ்ந்துகொண்டிருக்கிறது. குழந்தைகள் சிறப்பாக உடல் வளர்ச்சி பெறவும் அவர்களது நினைவுத் திறனை அதிகரிக்கவும் பாதாம் பருப்பு சேர்ந்த இயற்கையான சத்து பானங்கள் மற்றும் சத்து உணவுகள் மெனுவில் இடம்பெற வேண்டும்.

நாற்பதுகளில் நடைபோடும் அன்பர்கள் தின்பண்டமாக எண்ணெய், காரம், இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதைவிட தினசரி சில பாதாம் பருப்புகளை மென்று சுவைத்து ரசித்து உண்ணலாம். இளமையை நீண்ட வருடங்கள் தக்கவைப்பதற்கான ரகசியம் பாதாம் பருப்பில் ஒளிந்திருக்கிறது. பாதாம் பருப்பும் பேரீச்சம்பழமும் சேர்ந்த காம்போ அசாத்திய சக்தி தரும். பாதாம் கலந்த முந்திரி, திராட்சை பாயசம், கூடுதல் சுவையுடன் பலம் தரக்கூடியது. பாதாம் பருப்பைப் பொடித்து தேன் அல்லது வெல்லத்தில் கலந்து சுவைக்கும் வழக்கமும் பரவலாக இந்தியாவில் இருந்தது.

மொகலாயர் காலம் முதல் புகழ்பெற்று விளங்கும் ஆற்காடு மக்கன்பேடாவின் ருசிக்கத்தூண்டும் சுவைக்கு அதில் சேரும் பாதாம் பருப்பையே முக்கியக் காரணமாகக் குறிப்பிடுகின்றனர். மொகலாய அரசர்களின் விருப்பமான தின்பண்டங்கள் பெரும்பாலானவற்றில் பாதாம் பருப்பு இடம் பிடித்திருந்தது.

நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பைக் குறைக்கும் மாயம் பாதாமுக்கு உண்டு. தொடர்ந்து பாதாம் பருப்பு சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கின்றன ஆய்வு முடிவுகள். பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கிய உணவுப்பொருள் பட்டியலில் பாதாம் பருப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. பாதாம் பருப்பைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மைகொண்ட பாதாம், பல்வேறு நோய்கள் உருவாக முட்டுக்கட்டையாக இருக்கும். வீரியத்தை அதிகரிக்கும் மருத்துவ இளகங்களில் பாதாம் பருப்பின் சேர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது.

பழங்கள், காய்கறி வகைகளில் உள்ள ஃபிளேவனாய்டுகள் பாதாம் பருப்பில் நிறைந்திருக்கின்றன. கொட்டை வகைகளுக்கே உரித்தான தாவர ஸ்டீரால்களுக்கும் பாதாம் பருப்பில் குறைவில்லை. ரிபோஃப்ளாவின், வைட்டமின் இ, தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகச் சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம் என நம்முன் இருக்கும் சத்துக் களஞ்சியம் பாதாம் பருப்பு. நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். புரதம் மற்றும் கொழுப்புச் சத்து உடலை வளர்க்க உறுதுணையாக இருக்கும்.

பாதாம் பருப்பைத் தண்ணீரில் ஊறவைத்து அரைத்து குங்குமப்பூ, நெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் உதவியுடன் தயாரிக்கப்படும் பாதாம் அல்வா, அதன் சுவையால் மெய்மறக்கச் செய்யும். குங்குமப்பூவின் நிறத்தைச் செயற்கையாக உருவாக்க, பாதாம் அல்வாவில் எந்தவித செயற்கைச் சுவையூட்டிகளோ, நிறமூட்டிகளோ இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இனிப்புச் சுவையுடன் உடலுக்குக் குளிர்ச்சி தரும் பாதாம் பிசினுக்கு இருமல் மற்றும் கழிச்சலைக் குறைக்கும் குணம் உள்ளது. வறட்டு இருமலுக்கு பாதாம் பிசினை சிறிது எடுத்து வாயில் அடக்கிக் கொள்ளலாம். பாதாம் பிசின் பொடி, கருவேலம் பிசின், கோதுமை மாவு தலா 4 கிராம் எடுத்து, 12 கிராம் வெல்லம் சேர்த்து இருமல் மற்றும் கழிச்சலை நிறுத்தும் மருந்தாக, சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

தேவையற்ற மற்ற செலவினங்களைக் குறைத்து, பாதாம் பருப்புக்குச் செலவு செய்வதன் மூலம், ‘வைத்தியருக்குக் கொடுப்பதை வணிகருக்குக் கொடு…’ எனும் பழமொழியின் உண்மையை உணரலாம். பாதாம் சேர்ந்தது எனக் குறிப்பிடப்படும் செயற்கை வணிகச் சத்து பானங்களுக்குப் பதிலாக, நேரடியாக பாதாம் பருப்பை மென்றோ, பொடித்தோ பயன்படுத்தலாம். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் பல்வேறு பானங்களில் பாதாம் பருப்பின் சத்து சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வெயில் காலங்களில் வெப்பத்தைக் குறைக்க உதவும் `பாதாம் சர்பத்’ பிரபலம். நம் நாட்டில் சிற்றுண்டி தயாரிக்க பாதாம் சீவல்களும் அதிகம் பயன்படுகின்றன.

பாதாம்
பாதாம்

பாதாமிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பால், ’லாக்டோஸ் இண்டாலரன்ஸ்’ (பாலில் உள்ள குறிப்பிட்ட சர்க்கரையைச் செரிக்க முடியாத நிலை) பிரச்னை உள்ளவர்களுக்கான சிறந்த மாற்றாகப் பரிந்துரைக்கப்படுகிறது. கோதுமை சார்ந்த குளூட்டன் ஒவ்வாமை இருப்பவர்கள், சிற்றுண்டி தயாரிக்க பாதாம் மாவை மாற்றாகப் பயன்படுத்தலாம். கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் பாதாம் பால் பானங்களில், செயற்கை சேர்மானங்கள் அதிகம் இருக்கும் என்பதால் கவனம் தேவை.

பாதாம் எண்ணெயிலிருந்து உருவாக்கப்படும் வெண்ணெய் மற்றும் பால், இனிப்பு மற்றும் சிற்றுண்டி ரகங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் அரிதாகச் சிலருக்கு பாதாம் பருப்பு ஒவ்வாமை குறிகுணங்களை உண்டாக்கலாம். ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக பாதாம் பருப்பைச் சாப்பிடக் கூடாது.

பாதாம் பருப்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய், சருமத்துக்குப் பொலிவு தரும் தொக்கண எண்ணெயாகப் பயன்படுவது குறிப்பிடத்தக்கது. தேகத்துக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு சோப்பு ரகங்களில் பாதாம் எண்ணெயின் சேர்மானம் இருப்பதையும் கவனிக்கலாம். பாதாம் எண்ணெயில் ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள், லினோலயிக் அமிலம், பால்மிடிக் அமிலங்களும் நிறைந்துள்ளன.

பாதாம்… வலிமைக்கான ஆதாரம்!

முசெலி (Museli): ஓட்ஸ், பாதாம் பருப்பு மற்றும் சில கொட்டை வகைகள், உலர் மற்றும் ஃப்ரெஷ் பழத்துண்டுகளை நன்றாகக் கலக்க வேண்டும். பாதாம் பால், பசும்பால், திராட்சை ரசம், மாதுளை ரசம் ஆகிய நீர்ப் பொருள்களுடன் மேலே சொன்ன கலவையைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்துச் சாப்பிட்டால் ஊட்டங்களை அள்ளித்தரும். சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி பகுதிகளில் புகழ்பெற்ற சிற்றுண்டி ரகம் இது.

நவ்காட் (Nougat): வறுத்து உடைத்த பாதாம் பருப்பு, பிஸ்தா, வால்நட் மற்றும் சில பழ வகைகளை தேன் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும். சவைத்துச் சாப்பிடும் சாக்லேட் போல தயாரிக்கப்படும் சிற்றுண்டி வகைதான் `நவ்காட்’. 10-ம் நூற்றாண்டுக் காலத்தில் பாக்தாத் பகுதியில் கிடைத்த நூலில் நவ்காட் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

நோஹ் (Noghl): சர்க்கரையைத் தண்ணீர் மற்றும் பன்னீரில் கொதிக்கவைத்து பாகு காய்ச்ச வேண்டும். இந்தப் பாகினை வறுத்த பாதாம் பருப்புகளின்மீது பூசினால் கிடைப்பதே ஆரோக்கிய நொறுவையான நோஹ். இரான் மற்றும் ஆப்கன் பகுதியில் இந்த முலாம் பூசப்பட்ட பாதாம் மிகவும் பிரபலம். திருமண நிகழ்ச்சிகளில் இந்த பாதாம் பருப்பை மணமக்கள்மீது தூவும் வழக்கம் இரான் மக்களுக்கு இருந்தது.

பாதாம் காபி: பொடித்த பாதாம் பருப்புப் பொடி, லவங்கப்பட்டைப் பொடி, கார்ன் ஸ்டார்ச் ஆகியவற்றைப் பாலில் கலந்து கொதிக்கவைத்துத் தயாரிப்பதே பாதாம் காபி. இது, சவுதி அரேபியாவின் பெருமை.

செல்லவ் (Sellou): பாதாம் பருப்பை அரைத்துப் பசையாக்கி அதனுடன் அரிசி மாவு, தேன், ஆலிவ் ஆயில், வெண்ணெய், சோம்பு, வெந்தயம், எள், லவங்கப்பட்டை ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் இனிப்புச்சுவைமிக்க நொறுவை ரகம் இது. நீண்ட நாள் கெடாமலிருக்க நிறைய ஊட்டங்களைச் சுமந்துகொண்டிருக்கும் இந்த நொறுவை, மேல்நாடுகளில் பலரது ஃபேவரைட்.