அஞ்சறைப் பெட்டி: துவரம்பருப்பு... ஆரோக்கியத்தை வாங்க உதவும் விலைமதிப்பில்லா பொற்காசு!

துவரம்பருப்பை `டயட்டீஷியன்களின் ஃபேவரைட்' என்று சொல்லலாம். சமச்சீர் உணவுகளின் பட்டியலில் துவரையின் சேர்மானம் அவசியம் இருக்கும்.
பொற்காசுகளைப் போல குவிந்து கிடக்கும் துவரம்பருப்பின் உள்ளே பொதிந்து கிடக்கும் பலன்கள் ஏராளம். புரதச்சத்துக் குறைபாடு அதிகம் உள்ள மக்களிடம், தாய்போல புரதத்தை ஊட்டி, நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் நேசக்காரர், நமது துவரம் பருப்பு.
அகழ்வாராய்ச்சியில் கி.மு 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த துவரையின் படிமங்கள் இந்தியப் பகுதிகளில் கிடைத்திருக்கின்றன. துவரையை அதிக அளவில் விளைவிப்பது இந்தியாதான். இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்ற துவரை, காலப்போக்கில் அடிமை வணிகம் மூலம் அமெரிக்கப் பகுதிகளுக்குள் நுழைந்திருக்கிறது.
துவரம்பருப்பை `டயட்டீஷியன்களின் ஃபேவரைட்' என்று சொல்லலாம். சமச்சீர் உணவுகளின் பட்டியலில் துவரையின் சேர்மானம் அவசியம் இருக்கும். சுடச்சுட இட்லியை வயிற்றுக்குள் ரசித்து அனுப்ப, துவரம்பருப்பு சாம்பாரே பிரதானம். வயிற்றுக்குக் கெடுதல் செய்யாமல், உடலுக்கு வலுவூட்டும் சிறப்பு துவரம்பருப்புக்கு உண்டு.

துவரம்பருப்பை லேசாக வறுத்து, துவையலாகச் செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால், செரிமான சக்தி அதிகரித்து உடலுக்கு பலம் கொடுக்கும். வறுத்த துவரம்பருப்பைத் தூளாக்கி, நெய் அல்லது நல்லெண்ணெய்விட்டுக் குழைத்து, சாதத்துடன் ஆரம்ப தொடு உணவாகச் சாப்பிடலாம்.
டிரப்டோஃபேன், லைசின், மிதியோனைன் போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் துவரம்பருப்பின் மூலம் நமக்குக் கிடைக்கும். கஜானின், கஜானோன், டானின்கள், டெர்பினாய்டுகள் என நலம்பயக்கும் வேதிப்பொருள்கள் துவரையில் அங்கம் வகிக்கின்றன. குழந்தைப்பேற்றுக்கு தயாராகும் மகளிர், கொஞ்சம் கூடுதலாகவே துவரம் பருப்பு சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதிலுள்ள நார்ச்சத்து மலத்தை இளக்குவதுடன், ரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.
சீன மருத்துவத்தில், துவரம்பருப்பை உறக்கத்தை ஏற்படுத்தவும் வலிநிவாரணியாக வும் பயன்படுத்துகின்றனர். படுக்கைப் புண்கள் மற்றும் காயங்களை விரைந்து குணமாக்கும் தன்மை துவரம்பருப்புக்கு இருப்பதாக ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளன. சிறுநீரகக் கற்களை வெளியேற்றுவதுடன், சிறுநீரகப் பாதை தொற்றுகளை அழிக்கும் வல்லமையும் துவரைக்கு இருக்கிறது. `சிக்கிள் செல் அனீமியா’ நோயில் உண்டாகும் குறிகுணங்களின் தீவிரத்தைக் குறைக்க, துவரம்பருப்பில் உள்ள வேதிப்பொருள்களின் செயல்பாடுகுறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. நோய்க்கிருமிகள் தாக்கும்போது, நமது உடல் வீரியத்துடன் எதிர்த் தாக்குதல் நடத்த துவரம்பருப்பின் கனிமச்சத்துகள் துணை நிற்கும்.
காச்சி, ஆடகி, சுராட்டம், யவை, மிருத்தாலகம் எனப் பல பெயர்களைக் கொண்டது துவரை. இனிப்புச் சுவையுடன் உடலுக்கு குளிர்ச்சியையும் உரத்தையும் துவரை வழங்கும். கி.மு 4-ம் நூற்றாண்டு காலகட்ட புத்த இலக்கியங்கள், துவரையை ‘ஆடகி’ எனும் பெயரால் குறிப்பிடுகின்றன.
நீண்ட நாள் காய்ச்சலால் அவதிப்படுபவர் களுக்கு அரிசி நொய், துவரம்பருப்பு சேர்ந்த கஞ்சி, சிறந்த காம்பினேஷன். `மெலிந்தாரைத் தேற்றும் கொழுந்துவரை யாயினீ கொள்…’ என்ற அகத்தியரின் பாடல், பத்தியத்துக்கான உணவு துவரை என்று அதன் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது. உடல் மெலிந்து தோற்றமிழந்து காணப்படுபவர்களை விரைவாகத் தேற்ற துவரை போதும் என்கிறது சித்த மருத்துவம்.
துவரம்பருப்பில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து, ரொட்டி போல சுட்டு சாப்பிடும் வழக்கம் மத்திய இந்தியப் பகுதிகளில் அதிகமாக இருந்திருக்கிறது. இயற்கையான துவரையின் இனிப்பும் நாட்டுச்சர்க்கரையின் இனிப்பும் சேர்ந்த இந்தச் சிற்றுண்டி, உடலை வளர்க்கும்.
இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதி களில் கிடைத்த கறுப்புத் துவரை பற்றிய பதிவு, 17-ம் நூற்றாண்டு நேரத்தில் கிடைத்திருக்கிறது.
துவரம்பருப்பை பல காய்களுடன் சேர்த்து உருவாக்கப்பட்ட ஹூலி (Huli) எனும் உணவு ரகத்தை, நோய் நீக்கும் மருந்தாகப் பயன்படுத்திய வைத்தியக் குறிப்புகள் 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிடைத்திருக்கின்றன. பொரித்த துவரம்பருப்புடன் மேலும் சில பருப்பு வகைகளைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு ரகத்தைப் பற்றி `மனசல்லோசா’ நூல் குறிப்பிடுகிறது. காரம் நாவைத் துளைக்கும் அளவுக்கு அரிசி - துவரம்பருப்பு சாதத்தைப்(Bisi-bele-huli-anna) பற்றி, பழைமையான கர்நாடக நூல்களின் மூலம் அறிய முடிகிறது.
குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டத்தைச் சிறப்பாக அவர்களுக்குக் கடத்த, ஊட்டச்சத்து பானங்கள் தேவையில்லை, நம்முடன் பன்னெடுங்காலமாக ஒட்டி உறவாடும் துவரம்பருப்பு போன்ற புரதக்கூறுகள் போதும். சிறுதானியங்களுடன் துவரம்பருப்பைச் சேர்த்து தயாரிக்கப்படும் சத்துமாவுக் கலவை, குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு.
பெருமளவில் புரதச்சத்துகொண்ட துவரம்பருப்பு, சிறுவர், சிறுமியர் மற்றும் இளம்பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைக் குணப்படுத்தி, தசைகளுக்கு வலிமை கொடுக்கும். துவரம்பருப்பை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கிடைக்கும் சாற்றுடன் தூதுவளை, உப்பு, புளி, பனங்கற்கண்டு சேர்த்து மருத்துவ பானமாக குடித்தால் உடலில் தங்கிய கபம் விலகும். துவரம்பருப்பை அரைத்து கொதிக்கவைத்துக் கிளறி, வீக்கங்களில் வைத்துக் கட்டலாம். பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து, பச்சைப்பயறு சேர்ந்து உடலுக்கு வலு கொடுக்கும் பஞ்சமுட்டிக் கஞ்சிக் கூட்டணியில், துவரம்பருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

துவரையிலிருந்து பருப்புகளைப் பிரித்து, ஈரமான செம்மண்ணில் நன்றாகப் புரட்டி எடுத்து வெயிலில் உலர்த்தி, பிறகு தோல் நீக்கி உடைத்து துவரம்பருப்பைப் பெறுவதே, பாரம்பர்ய முறை. செம்மண் கட்டிய துவரைக்குக் கூடுதல் இனிப்புச் சுவை கிடைக்கும் என்பது பாரம்பர்ய குறிப்பு. சமீபகாலமாக இந்த வழக்கம் சிதைக்கப்பட்டு, பெரிய ஆலைகளில் அதிக வெப்பத்தில் துவரை உடைக்கப்பட்டு மூட்டைகளில் அடைக்கப்படு கிறது. குடோன்களில் உள்ள அவற்றை புழு, பூச்சிகள் அரிக்காமலிருக்க, மூட்டைகளுக்கு நடுவே மாத்திரைகள் வைக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. நமக்குத் தெரிந்த ஊர்களில், நமது கண்முன் துவரை விளைந்த காலம் போய், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து துவரம்பருப்பு இறக்குமதி செய்யப்படும் சூழல் இப்போது உருவாகிவிட்டது.
துவரம் பருப்பு... ஆரோக்கியத்தை வாங்க உதவும் விலைமதிப்பில்லா பொற்காசுகள்!
துவரம்பருப்பு ரசம்: துவரம் பருப்பை ஊறவைத்த தண்ணீரில் மிளகு, பூண்டு, சீரகம் சேர்த்துக் கொதிக்கவைத்து ரசம் தயாரிக்கப்படும். அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று மந்தம் விரைவில் விலகும். அசைவ உணவுகள், செரிப்பதற்குக் கடினமான உணவு வகைகள், மந்தத்தை உண்டாக்கும் உணவுகள் போன்றவற்றால் ஏற்படும் செரிமானத் தடங்கலுக்கு துவரம்பருப்பு ரசம் எளிமையான உணவாகும். இதன் மருத்துவ குணத்தைக் கருத்தில்கொண்டு, துவரம் பருப்பு ரசத்தின் மகிமையை உணர்த்தும் தனிப்பாடல், தேரையர் குணவாகடம் எனும் சித்த மருத்துவ நூலில் இடம்பிடித்துள்ளது.
தேங்காய்ப்பால் துவரம்பருப்பு சாம்பார்: வாழைக்காய், முருங்கைக் காய், பீன்ஸ், முந்திரியை தேங்காய்ப் பாலில் கலந்து தேங்காய் எண்ணெய், புளித்த தயிர் சேர்த்து சமைக்கப்படும் சுவைமிக்க சாம்பார், கேரள ஸ்பெஷல். வயிற்றுப்புண்களைக் குணப்படுத்தவும் மலத்தை முறையாக வெளித்தள்ளவும் இந்த தேங்காய்ப்பால் துவரம்பருப்பு சாம்பார் உதவும்.
பிலாவ் (Pelau): மேற்கிந்தியத் தீவுகளின் `டிரினிடாட் மற்றும் டொபேகோ’ பகுதிகளில் பிரசித்திபெற்ற உணவு இது. கோழித் துண்டுகள், அரிசி, துவரம்பருப்பு, தேங்காய்ப்பால், பூசணி மற்றும் பல்வேறு காய் ரகங்களுடன் (தேவைக்கேற்ப) ஏலம், கிராம்பு, சீரகம், தனியா போன்றவற்றுடன் அடர்காபி நிறத்தில் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படும் உணவு வகை இது.
பருப்பு மருந்து: நீருள்ள மண்பானை யில் துவரம்பருப்பைச் சேர்த்து, கொஞ்சம் மஞ்சள், ஒரு கரண்டி நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்க்கவும். சிறிது பெருங்காயம் சேர்த்து வேகவைத்தால், சுவையும் ஊட்டமும் நிறைந்த பருப்பு மருந்து தயார். இந்தப் பருப்பு மருந்தை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். மலத்தை முறையாக வெளியேற்றுவதுடன், தசைகளுக்கு வலிமைதரும் உணவு இது.